சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, September 25, 2004
டெக்னாலஜி வேகம்..
டெக்னாலஜி எப்பொழுதும் வேகம்தான்.

இன்று என் கஸின் பிரதரிடமிருந்து மெயில் வந்திருக்கிறது. அடுத்தது எதில் கான்ஸண்ட்ரேட் செய்ய வேண்டும் என்று கேட்டு!

ம்.. ஒரு பக்கம் பார்த்தால், சின்னச் சின்ன பையன்களாக இருந்தவர்கள் கூட இப்பொழுது ஜாவா, இஜேபி -ல வேலை செய்யறேன், மேல படிச்சுகிட்டிருக்கேன் சொல்றப்போ... இங்க சவுதியில இருந்து என்னத்தை கத்துக்கிட்டிருக்கோம்னு ஒரு வருத்தம் வருது...

சென்னையில் இருந்த போது, எனக்கு முழுக்க முழுக்க டெக்னாலஜி பிரண்ட்ஸ் மட்டும்தான். அடுத்தது என்ன கத்துக்கணும், எது டாப்ல இருக்கு, எந்த மார்க்கெட் பூம்? எந்தெந்த கம்பெனி நல்லா செஞ்சுகிட்டிருக்காங்க. என்னென்ன பிராடக்ட் வந்துகிட்டிருக்கு. இது மட்டும்தான் என்னோட கவனமா இருந்தது. DQ Week, PC Quest, Express Computer இப்படி ஒரு மேகஸின் விடாமல் படித்துக் கொண்டிருப்பேன். (What you want to be? என்று ஒரு கேள்வி MCA சமயத்தில் கிளாஸில் கேட்கப்பட்ட போது, I want to be a computer journalist என்று சொல்லி அசரடித்தது ஏனோ ஞாபகம் வருகிறது.:-) இதெல்லாம் சும்மா... நிஜமாகவே அப்படி ஒரு ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் நிறையவே தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்... அப்படிப்பட்ட நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அது இரண்டையுமே நான் இன்னும் செய்யவில்லை.)

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று இப்பொழுது டாப்-ல் இருப்பது எது? அடுத்தது எதில் கான்ஸண்ட்ரேட் செய்ய வேண்டும்.
இப்பொழுதைக்கு ஜாவா ஏரியாவில் கான்ஸட்ரேட் செய்யும் ஒருவருக்கு தேவையான சில தகுதிகளாக கருதப்படுபவை...

1) network knowlege
2) OS - UNIX and Windows
3) Content Management Systems (Vignette, Interwoven, Open Market, etc.))
4) JavaScript HTML coding ability
5) Oracle PL/SQL and SQL or Sybase
6) BEA WebLogic/WebShpere Configuration and Administration
7) Java, JSP, Servlets, EJB, JMS, JDBC
8) Web Services
9) Design Patterns, including MVC
10) XML,
11) Open Sources - Struts, Velocity, Tiles
12) Souce Safe - Rational clearcase or CVS or PVCS or MS source safe.

அடுத்தது எந்த மார்கெட் பூம் -ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள்? என்பதற்கு எனக்கு கிடைத்த தகவல்: BioInformatics.

படிக்க வேண்டிய விசயங்கள், கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் தலைக்கு மேல் இருக்கின்றன. இனி, நேரம் ஒத்துழைக்கும்போது.... வலைப்பதிவு!
posted by சாகரன் @ 9/25/2004 10:58:00 AM   6 comments
Thursday, September 23, 2004
டபுள் ட்ரீட்!
கலைக்குழுக்கள் இல்லாத வெளிநாடு வாழ் தமிழினமா?

ரியாதில் உள்ள கலைக்குழுக்கள் பற்றிய என் கண்ணோட்டத்தையும் எழுதினால் என்ன என்று தோன்றுகிறது.

கவனிக்க. வழக்கம் போல இங்கும் குழு அல்ல குழுக்கள் உண்டு! இதன் காரணம் பல இருந்தாலும், அடிப்படை உணர்வுப் புரிதல்களாலான பிரச்சனைகளாக இருக்குமோ என்று தோன்றினாலும், வேறு விதக் கண்ணோட்டத்தில் இதைப் பார்ப்பது நல்லது. அது, தமிழ் கலாச்சார வளர்ச்சியில் அல்லது குழந்தைகளின் திறமைகளை அல்லது சுற்றி இருக்கும் தமிழ் சார்ந்த திறமையாளர்களை ஊக்குவிப்பது என்ற கண்ணோட்டம்.

இன்னொரு விடயம், இங்கு இந்திய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஒரே இடம் இந்தியத் தூரதரக கலையரங்கம் மட்டும்தான். அதன் கொள்ளளவும் கம்மி. அதை விட்டால், அடுத்தபடியாக ஏதேனும் வில்லா-வைத் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். (ஆந்திர நண்பர்கள் அப்படித்தான் செய்வது வழக்கம்). ஆனால் அதில் ஒன்றும் சுகமில்லை. ஒரு கெட்-டு-கெதர் போலப்போய்விடும். ரியாத் முழுக்க பரவியிருக்கும் தமிழர்கள் ஏராளம். ஒரு குழுவில் இல்லாமல் பல குழுக்கள் இருந்தால் தான் இந்த நிகழ்ச்சிகளில் ஆட்களின் இடப்பற்றாக்குறையைச் சமன் செய்ய முடியும்.

கண்டிப்பாக எதிர்பார்க்கும் அளவிற்கு புரொபஷனிலிசமெல்லாம் எதுவும் இருக்காது. என்றாவது ஒரு நாள் ஒரு ஜாலிக்காகச் சென்று பார்க்கலாம் என்ற அளவில்தான் இருக்கும். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஒவ்வொரு குழுவும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும். பெரும்பாலான நிகழ்ச்சிகள் சினிமா சம்பந்தப்பட்டவை தான்.

நிறைய நடப்பது எது என்று கேட்டால், ஆர்கெஸ்ட்ரா ... அடுத்த படி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள். அதிலும் +10,+12 படிக்கும்
வயதிலிருக்கும் சில குழந்தைகளின் குரலைக் கேட்க வேண்டுமே... ஆஹா.. அப்படி ஒரு ஈடுபாட்டுடன் பாடுவார்கள். ஆடுவார்கள். இந்திய தூதரகத்தில் நடப்பதால், பர்தா போட வேண்டிய அவசியமில்லை.
(பேச்சுலர்ஸ் பாயிண்ட் ஆப் வியூல.. இந்தப் புரோக்ராம் வந்தாத் தான் இந்திய பிகர் பார்க்க முடியும் சொல்வாங்க :-))

ஆர்வக் கோளாறுகளையும் தவிர்க்க முடியாது. ஒரு நிகழ்ச்சியில், ஒரு மேடம் (குறைந்தது வயது 45+ க்கு மேல் இருக்கும்) , "சகலகலா வல்லவனே..." என்று இழுத்து இழுத்து பாட ஆரம்பித்த நேரம், இனியும் தாங்க முடியாது என்று விழுந்தடித்து ஓடி வந்தது நினைவிற்கு வருகிறது. அதே நேரத்தில் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வயதில் இப்படி ஒரு ஆர்வமா என்று...

எனக்குத் தெரிந்து, ரியாத்-ல் மூன்று குழுக்கள் உண்டு. இதில் எனக்குப் பிடித்த ஒரு குழு இட்ஃபா என்னும், "இந்திய தமிழ் கலைக்குழு" ( Indian Tamil Fine Arts Association, Riyadh). கொஞ்சமாவது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு.
ஒரு முறை நாடகம், ஒரு முறை பரதநாட்டியம் (ஒவ்வொரு பாட்டிற்கும் விளக்கமான முன்னுரை) என்று ஏதாவது வித்தியாசமாகச் செய்ய முயற்சி செய்வார்கள்.

சில வருடங்களுக்கு முன் கவிக்கோ. அப்துல் ரகுமான், ஹஜ் பயணம் வந்திருந்த போது, அவர் முன்னிலையில் ஒரு கவியரங்கமும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. வழக்கம் போல, சவுதி வாழ் தனியாளின் துயரங்கள் தாங்கிய கவிதை அப்படி ஒரு வரவேற்பை பெற்றது என்பதைச்
சொல்லவும் வேண்டுமா? :-)

*****

இன்றைய தினம், மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த இந்தக் குழுவின் "கிளாசிகல் இசை இரவு" கிளாசிக்காகவே இருந்தது.
இது இட்பா-வின் ஐந்தாவது கர்னாடக சங்கீத நிகழ்ச்சி... !!

ரியாத் போன்ற நகரத்தில், அதுவும் கர்னாடிக் மியூசிக் நிகழ்ச்சி வைப்பதென்பது நிரம்பவே தைரியம் தேவைப்படும் விசயம். தைரியம் என்பது நிகழ்ச்சியை நடத்துவதற்கல்ல... எத்தனை பேர் ரசிப்பார்கள் என்பதுதான் கேள்வியே! எப்பொழுதுமே இட்பா நிகழ்ச்சியென்றால் நிரம்பி வழியும் மண்டபம்... இன்று கொஞ்சம் காற்றோட்டமாகவே தான் இருந்தது. ஆனால்... ரசிகர்கள் ரசித்தது நிறைய. கர்னாடக சங்கீத நிகழ்ச்சி என்பதால் கொஞ்சமாவது ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே வந்திருந்தார்கள்!

இந்திய தூதரக முதல் செக்ரட்டரி திரு.நாராயணன் பற்றி கொஞ்ச நேரம் குழுவின் தலைவர் திரு ஜெயசீலன் அவர்கள் பேசினார்கள்.
அதில் சில முக்கியமான விபரங்களைச் சொன்னார்... இந்தியத்தூதரகத்தின் வேலைகள் ஏராளம். பாஸ்போர்ட் அப்ளைசெய்தால், அன்று மதியமே அல்ல்து அடுத்த நாளில் கொடுத்துவிடும் ஒரே நாடு ரியாத் இந்தியத் தூதரகம் மட்டுமே! (எவ்வளவு தூரம் உண்மை?!)

ஒரு நாளைக்கு சவுதியில் ஈஸ்டர்ன், செண்ட்ரல் ரீஜியன்களில் மட்டும் வெவ்வேறு காரணங்களுக்காக இறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நான்கு. அவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்பும் முழு
பொறுப்பையும், இந்தியத் தூதரகம் செய்து வருகிறது. இரவு எந்த நேரமானாலும் காண்டாக்ட் செய்யக்கூடிய ஒரு நபர் நாராயணன்... எக்ஸட்ரா... எக்ஸட்ரா.... திரு. நாராயணன் தமிழிலும் பேசினார். பேச்சைப்பார்த்தால் கன்னடக்காரர் போலத் தெரிந்தது.
(ம்... நான் சிறப்பு விருந்தினரா.. பத்ரி சொன்ன நபர் வருவாரோன்னு எதிர் பார்த்தேன்.. ம்ஹும்... அடுத்த புரோக்ராம்ல பார்க்கலாம்..)

எப்பொழுதேனும் மட்டுமே கேட்க முடிகின்ற, வர்ணங்களும், "ரார வேணு கோபா பாலா.." போன்ற பாடல்களும் குழந்தைகளால்
பாடப்பட்டன. குட்டிக் குட்டி மழலைகள் அதுவும் மிஞ்சிப்போனால் மூன்று வயதுடையவர்கள் கூட மேடையேறி உற்சாகமாகப் பாடல்கள் பாடினார்கள்.


திரு எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்... பாடிய பாடலகள் 'ஒன்ஸ் மோர்' கேட்க வைத்தன. குரலில் அப்படி ஒரு கம்பீரம், அனாயாசமாக உச்சத்ஸ்தாயியில் பாடினார். திரு.வாசு அவர்கள் பாடிய ராஜாஜியின் 'குறையொன்றுமில்லை..' பாடலும்... மிகவும் ரசிக்க வைத்தது... (இந்தப்பாடலைக் கேட்டாலே, எம்.எஸ் செட் செய்த ட்ரெண்டோ என்று நினைக்கத்தோன்றுகிறது. எல்லோரும் ஒரே மாதிரித்தான் பாடுகிறார்கள். ஏற்றம் இறக்கம் அத்தனையும். அதே நேரத்தில் மாற்றிப்பாடினால் பிடிக்குமா என்ற சந்தேகமும் வருகிறது!)


ரியாதைப் பொருத்த வரை, வெளி இடங்களிலிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ அழைத்து வந்து ஒரு பிரோக்ராம் செய்வதென்பது கடினமான விசயம்.

அப்படிப் பார்க்கும் போது, கலாசாரம் மறக்க விரும்பாத தமிழர்களின் இது போன்ற புரோக்ராம்கள்... சந்தோஷமான ஒன்றுதான். எங்கிருந்துதான் பிடித்தார்களோ இத்தனைக் கலைஞர்களை. பெரும்பாலானவர்களுக்கு கர்னாடக சங்கீதம், வெறும் கேள்வி ஞானம் மட்டுமே என்று சொல்லித்தான் பாடினார்கள். (எனக்கும் கூடத்தான் :-( ) நிகழ்ச்சியின் ஒரே ஒரு குறை என்றால், கீபோர்ட் தான்.... கொர கொரவென்ற சத்தம். அது இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் முக்கியப் பிண்ணணி, "வேணுகானமணி" புல்லாங்குழல் திரு. வேணுகோபால் அவர்களுடையது. இந்தியாவை விட்டு 14 வருடங்களுக்கு மேல் வெளிநாடுகளில் இருந்தாலும், ஆல் இந்திய ரேடியோவில் A கிரேடில் இருப்பவர். டிஸம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் பாடுபவர். வளரும் கலைஞராக ரெகக்னைஸ் செய்யப்படுபவர். "வேணுகானம்" என்ற சி.டி யை ரிலீஸ் செய்திருக்கிறார். ( இங்குள்ள குழந்தைகளை ட்ரெயின் செய்வது அவர்தான் போலும். விசாரிக்க வேண்டும். )

இன்று, 'டபுள் ட்ரீட்' தந்தார்.... அவரே வாய்ப்பாட்டும் பாடி, கூடவே புல்லாங்குழல் இசையும்! அதுவும் ஒரே நேரத்தில். திறமையை எங்கிருந்தாலும் தடை போட முடியாது!! வரும் டிசம்பர் 2004-ல் அவருடைய அடுத்த "டபிள் ட்ரீட்" சி.டி வெளியிடப்பட இருக்கிறது.

இன்றைய சங்கீத ட்ரீட் சுவையாகத் தான் இருந்தது. இடைவேளையில் கிடைத்த பொங்கல் வடையுடனும் சேர்த்து!
posted by சாகரன் @ 9/23/2004 11:59:00 PM   0 comments
Wednesday, September 22, 2004
பாஸ்போர்ட்....
பாஸ்போர்ட்...

இதை வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டுபவர்கள் அதிகம். அதிலும் சவுதியைப் பொருத்த மட்டில் இங்கு இது ஒரு கண்ட்ரோலிங் டாகுமெண்ட்.

வேலை செய்பவர்களின் பாஸ்போர்ட் கம்பெனிகளிடம் இருக்க வேண்டும் என்பது சவுதியில் ஒரு விதி தான் போலும்! ஸ்பான்ஸர்ஸ் என்று சொல்லப்படும் வேலை வாய்ப்புக் கம்பெனிகள், இந்தப் பாஸ்போர்டினை வைத்துக்கொண்டு இகாமா(Iqama) என்னும் குடியிருப்பு தாளினையோ அல்லது பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் காப்பியையோ தரும். இந்தப் பேப்பர்கள் இல்லாமல் இங்கு நடமாடுவதென்பது ரொம்பவே ரிஸ்கானது.

சவுதி அரேபியா வருவதில் ஏற்படும் நல்லது அல்லது தீயதுகளில் ஒன்று இந்த கவனக் குவிப்பு. சும்மா இருக்கும் போது கூட, பேண்டின் பின் பக்கம் உறுத்திக்கொண்டிருக்கும் பர்ஸ் மீது கவனம் இருக்கும். அது ஒரு தவிர்க்க முடியாத மனப்பழக்கம். இந்தப்பழக்கம் பல காலம் இருந்து விட்டபிறகு வேறு எங்கு சென்றாலும் கூட இந்த கவனப்படுதல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

சில வருடங்களுக்கு முன்னர் துபாய் சென்றிருந்தபோது, அங்கு பேசிய நண்பர் ஒருவர் சொன்னார்,


"சவுதிலேர்ந்து வந்ததினால, இன்னிக்கும் எப்ப பார்த்தாலும், பாக்கெட்ல பர்ஸ் இருக்கா, அதில பாஸ்போர்ட் இருக்காங்கற எண்ணம் உறுத்திகிட்டே இருக்கு. அதுவும் தவிர, சலா டைம் வந்துடப்போகுது கடையெல்லாம் மூடிடுவாங்க-ங்கற எண்ணம் கூட பல நேரம் வரும். ஏதோ ஒரு விதத்தில் அடிமையாக பழக்கப்பட்டுவிட்ட மாதிரி... முன்ன இருந்த சுதந்திரமான எண்ணம் தொலைஞ்சுடுச்சுங்கறமாதிரி ஒரு பீலிங்."
சவுதி அரேபியா, வோர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசனில் (WTO) இணையப்போவதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது நடக்குமா நடக்காதா என்பது சவுதி பிசினஸ் வட்டாரங்களின் முக்கியப் பேச்சுக்களில் ஒன்று! நம்ம ரேஞ்சுக்கு இந்தப் பேச்சுக்கள் புரியாவிட்டாலும், பாஸ்போர்ட் எல்லாம் இனிமேல் அவரவரிடமே இருக்க வேண்டும் என்பது WTO வின் கட்டளைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள். இந்த விசயம் எவ்வளவு தூரம் உண்மை என்பதுத் தெரியவில்லை.

சமீபத்தில் ஒரு சவுதி நண்பரின் பாஸ்போர்ட்டைப் பார்த்தேன். ஆச்சரியமான விசயம் என்னவென்றால் அதில் ஒரு சின்ன சிப்பும்( chip) இணைந்திருந்ததுதான்!! அனைத்து பழைய பாஸ்போர்ட்களையும் மாற்றி புதிய பாஸ்போர்ட்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் இருக்கும் இந்த சிப்-பில் அந்தந்த பாஸ்போர்ட் ஓனரின் முழு விபரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இனி போலிகள் நடமாடுவது தவிர்க்கப்படும் என்பது மட்டுமல்ல.. ஏர்போர்ட் பணிகளும் சுலபமாகும் என்கிறார்கள். எல்லாம் யூ.எஸ்-ஸின் கைங்கரியம்தான் என்று கேள்வி!!

பாஸ்போர்ட் - ஸ்பான்ஸரிடம் இருப்பது பற்றி, 'நம்ம கிட்ட இருக்கறதவிட, அங்க இருந்தா பத்திரமா இருக்குல்ல...' என்று எடுத்துக்கொள்வது ஒரு பக்கம் என்றாலும், இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது லேபர் கிளாஸ் என்று சொல்லப்படும் வேலையில் இருக்கும் நண்பர்களினுடையது!

சில மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர், என் வீட்டிற்கு எலக்ட்ரிக் வேலை செய்து கொடுத்தவர்... திருச்சிப் பக்கம். அவர் ரூமிற்குக் கூட பலமுறை சென்றதுண்டு. ஆல்-இன்-ஆல் அழகுராஜா. எலக்ட்ரிகலிருந்து.. டிஷ் ஆண்டெனா, பிளம்பிங்க், பெயிண்டிங் என்று எந்த வேலையும் செய்யக்கூடியவர்.

"வந்து 8 வருசம் ஆச்சுங்க.. முன்ன இருந்த மாதிரி இப்ப உள்ள கஃபில்(ஸ்பான்ஸர்) இல்லை. வர்ற ஜூன்ல இகாமா எக்ஸ்பைர் ஆகுது. போதும் போ-ன்னு கிளம்பிடலாம் இருக்கேன்" என்றார்.

"எப்படிங்க அது, உங்க ஸ்பான்ஸர் அலோ பண்ண வேண்டாமா?".

"அவன் என்னங்க சொல்றது. நானே போய் இகாமா இல்லைன்னு போலீஸ்ல மாட்டிகிட்டா அவங்களே அனுப்பி வச்சிடறாங்க. என்ன.. டிக்கெட்டுக்கு மட்டும் காசு எடுத்து வச்சிக்கணும்."

"பாஸ்போர்ட் கேட்டா?"

"அதுவும் தொலைஞ்சிடுச்சு சொல்லவேண்டியதுதான்!"


பி.கு


அந்த நண்பர் இப்பொழுது இந்தியாவில்....

****

இன்று ஒரு அவசரத் தேவையாக பாஸ்போர்ட் காப்பி தேவைப்பட்டது. வீட்டுக்குச் சென்று தேடினால் கிடைக்கவில்லை. சரி, ஸ்பான்ஸர் கிட்ட கேட்டு வாங்கலாம்னு போனா...

மதியம் 2:00 மணிக்கே அலுவலகம் திறந்திருந்தாலும், 'மாலை 4:30 மணிக்கு மேலத்தான் அந்த ஆள் வருவாரு.. நீங்க 4:30க்கு வாங்க' சொல்லிட்டாங்க.

சரின்னு, மறுபடி 4:30 க்கு போனேன்... அப்பவும் அவரைக் காணோம்!

உட்காரச்சொல்லி, மணி 5:20 க்கு மேலாகியும் வரவில்லை. பொறுக்க முடியாமல் ரிசப்சனில் சென்று விசாரித்தால், 'அந்த ஆள் 4 மணிக்கு வந்துட்டு உடனே கிளம்பி வெளியில போய்ட்டாரே... திரும்ப வருவாரான்னு தெரியாது'-ன்னு கேஷிவலா சொல்றாங்க!! (.. Grrr...)
posted by சாகரன் @ 9/22/2004 11:35:00 AM   3 comments
Tuesday, September 21, 2004
எ டே இன் லக்கி!
யுரேகா யுரேகா என்று சத்தமிடலாமா அல்லது சக்ஸஸ் சக்ஸஸ் என்று சிவாஜி பட ஆரம்பம்போல மெயில் அனுப்பலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்த நேரம் மணி 9-ஐத் தொட்டிருந்தது. என்னைத் தவிர அலுவலகத்தில் யாரும் இல்லை. (டெவலப்மெண்டில் நான் செய்த அப்கிரேடு ஒழுங்காக வேலை செய்வதுதான் அந்த சந்தோஷத்திற்கு காரணம்.. ஆனாலும் இருக்கிறது இன்னமும் மூன்று என்விராண்மெண்ட்கள்..!)

வீட்டில் யாரும் இல்லையென்பதால் பிரச்சனை இல்லைதான், ஆனால்... நேற்று செய்து வைத்த பதார்த்தங்களின் நிலை என்ன என்பது கொஞ்சம் குழம்பமாகத் தான் இருந்தது. அதற்கு பதிலாக போகும் வழியில் எங்கேனும் இறங்கி சாப்பிட்டுவிடலாமா என்ற யோசனையுடன் 'லக்கி' ரெஸ்டாரண்டை அணுகினேன்.

"ஹல்லோ... எப்படி இருக்கீங்க... வாங்க இங்க உட்காருங்க... "

என் அலுவலக நண்பர்கள் மூவர்.. பேர் தெரியாது.. ஆனால் எல்லாரையும் பார்த்திருக்கிறேன். சில நேரம் சில வார்த்தைகள் பேசியிருக்கிறேன். மூன்று பேருமே புதியவர்கள்.

இந்த ஊரில் இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று... அதிலும் முக்கியமாக எங்கள் அலுவலகத்தில். ஏதாவது ப்ராஜக்ட்க்காக எடுப்பார்கள்.. அது ஓடும் மூன்று மாதம் என்று சொல்லி மும்மூணு மாதங்களுக்குக் குறையாமல். அதற்குள் வேறு யாராவது எஸ்கேப் ஆகி வேறு யாராவது வந்து... இப்படி ஒரு தொடர்ச் சங்கிலி!

பக்கத்தில் இருந்த நண்பர் கேட்டார்... "உங்களுக்கு ஜெயராமன் தெரியுமா?"

அது என்னவோ தெரியவில்லை. இது வரை முன்னரே இரண்டு முறை இவரிடம் பேசியிருக்கிறேன். எப்பொழுதுமே ஜெயராமன் பற்றித்தான் விசாரிப்பார்.

ஜெயராமன், நான் சென்னையில் வேலை செய்த போது பழக்கமான ஒரு நண்பர். கொஞ்சம் சுவாரஸ்யமானவரும் கூட..

சுவாரஸ்யம் என்பது அவருடைய பேச்சுதான்! வாத்திமா, வடமா பதினேழு கிராமத்தினர் அது இது என்று ஏதேதோ அவர் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.

டிபிகல் அக்ரகாரத்து ஸ்டைல். வம்பு பேசுவதில் அப்படி ஒரு ஆர்வம். அவருடன் இருந்த தொடர்பு விட்டுப் போய் வருடங்கள் ஆகிறது. அப்படி தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்று பெரிதாக விரும்பமும் இல்லை.

நெருக்கமான நண்பர்கள் என்று நினைத்தவர்களே நினைவலையாகிப் போய்விட்ட கால மாற்றங்களில் இப்படி சில மாதப் பழக்கங்களை தொடர வேண்டுமானால் இன்னமும் கூடுதல் டச் வேண்டும். இவர் பெயர் எனக்கு ஞாபகம் இருப்பதே ஒரு விதத்தில் ஆச்சரியம் தான்! அதற்கு காரணம் அவருடைய சல சல பேச்சுத்தான் என்று நினைக்கிறேன்.

இரண்டு மாதமே பழகினாலும் இன்னமும் நினைவில் இருக்கும், தொடர்பில் இருக்கும் சில நண்பர்களும் உண்டு. அதில் ஒரு நண்பர் முக்கியமானவர். சுரேஷ் என்று பெயர்.

ஒரு கம்பெனி மூலம் சவுதிக்கு வந்து, வீடு தேடிக்கொண்டிருந்த போது, தெரிந்தவர் மூலமாக என் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். அப்பொழுது என் மனைவி குழந்தைப் பிறப்பிற்காக ஊருக்குச் சென்றிருந்த நேரம். நானும் பேச்சுத் துணைக்காச்சு... தெரிந்த இடத்திலிருந்து வேறு சொல்கிறார்கள் என்று ஓ.கே சொல்லிவிட்டேன்.

முதல் நாள் ஹலோ சொன்ன பிறகு நான் எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் அவராக வந்து பேச்சை ஆரம்பித்தார். அதுவும் எது பற்றி.., உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றி...! (இது ஒரு நல்ல ஐடியா... என்னங்க சவுதில வெயில் கொளுத்துது என்று புளித்துப் போன சப்ஜெக்டில் பேச்சை ஆரம்பிப்பதைவிட, அப்போதைய ஹாட் சப்ஜெக்ட் பேசுவது இன்னமும் சுவாரஸ்யம்..)

ஹ்ம்... கிரிக்கெட் பற்றி அவர் பேசிய அளவுக்கும் அவர் தெரிந்து வைத்திருந்த புள்ளி விபரம் அளவுக்கு நான் தெரிந்து கொண்டிருக்க மாட்டேன். அப்படி ஒரு அலசல். ஒவ்வொரு நாளும், ஒரு கால்குலேசன் போட்டு காட்டுவார்...

இந்த டீமை இவன் அடிச்சுடுவான், அந்த டீமை அவன் அடிச்சுடுவான். இது பார்மில இல்லை. அப்படி இப்படின்னு சொல்லி இந்தியா பைனல்ல கண்டிப்பா வந்துடுஙகறத ஆரம்பித்த போதே சொல்லிவிட்டார். ஒவ்வொரு முறையும் மேட்ச் முடிந்த பிறகு, அதற்கு ஒரு விமர்சனம்.. மறுபடி அவர் எழுதி வைத்திருந்த பேப்பரை எடுத்து ஒரு கால்குலேசன்....

நான் ஒன்று சொன்னால் அவர் அதற்கு பில்டப் கொடுத்து பேச ஆரம்பித்தாரென்றால்.. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியாது. அவ்வளவு பேசுவார். ஆனால் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

அவர் எழுதிய திகில் கதை என்று ஒரு நாள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர் அந்தக் கதையை எப்படி எழுதினார்... அடுத்து நடந்தது என்ன, அதன் அத்தியாயங்களின் தலைப்பு என்ன என்று போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார். நல்ல வேளை நாகேஷ் ரேஞ்சில் இல்லை. நான் கொஞ்சம் சீக்கிரமாவே முடிவு என்ன சொல்லுங்க சுரேஷ் என்று கேட்டு முடிக்க வைத்து விட்டேன். என்றாவது அவங்க வீட்டுக்கு வந்தா அந்தப் பிரதி தர்றதா கூட சொல்லியிருக்கிறார். இதற்காகவே அவர் வீட்டுக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனாலும் இப்படி சலசலவென்று பேசக்கூடிய துணை இங்கு கிடைப்பது அபூர்வம். சவுதியில் ஏனோ தெரியவில்லை; பேச்சு என்பது முத்துத் தெரித்தார்ப் போலத்தான் இங்குள்ள நண்பர்களிடமிருந்து வரும். சவுதியின் மயான அமைதி அதன் காரணமா? இல்லை... இங்கு வந்த பிறகு தனிமை பழக்கிவிட்ட கோலமா? தெரியவில்லை. ஆனால் நிறைய பேசுபவர்கள் இங்கு அதிகமில்லை என்பது மட்டும் நிச்சயம்.

அதிலும் நம்ம ஊர் மாதிரி, எதிராளி கேட்கிறானா இல்லையா என்பதைப் பற்றிக் கூடக் கவனிக்காமல் பேசுபவர்கள் ரொம்பவே கொஞ்சம்.
(அந்த கொஞ்ச பேரில் எங்க பி.எம்-மும் ஒருவர்! :-) எப்படித்தான் காலைல சீட்ல வந்து உட்கார்ந்த உடனேயே மனுசனுக்குப் பேசத்தோணுதோ...!!:-))

இங்கு இருந்த இரண்டு மாதத்தில் சுரேஷ் புரிந்து கொண்டதும், நடந்து கொண்டதும், ஏற்படுத்திய அலைகளும் நிறையவே சுவாரஸ்யமானவை. சவுதி அரேபியாவின் கம்பெனிகளின் நிலமை... பணம் எப்படி விளையாடுகிறது... இப்படி பல விசயங்கள் அவருடைய தொடர்பால் தெரியக் கிடைத்தது.

"நீங்க பேமிலியோட இருக்கீங்கலா?" - எதிர் சாரில இருக்கிற நண்பர் ஏதோ கேட்டார்...

"ஆமாங்க.. பேமிலி இங்கத்தான் இருக்காங்க. இப்ப ஊருக்கு போயிருக்காங்க. ஒன்றரை வயசுல ஒரு குழந்தையும் உண்டு" என்றேன்.

"நீங்க எங்க தங்கியிருக்கீங்க?" - இது நான்.

"பொலாரிஸ்(Polaris) குவார்டர்ஸ் தெரியும்ல.. அந்த புர்ஜ்மான் கடைக்கு எதுக்க..."

"ஹாங்..."

"அங்கத்தான். நீங்க கூட விஸ்வநாதனைப் பார்க்க வந்திருந்தீங்களே..."

"ம்..." (விஸ்வா-வை பார்க்க வந்தது குறித்து அவர் சொன்னதைக் கேட்க கொஞ்சம் ஆச்சரியம்தான்!)

போலாரிஸ் பேச்சுலர் குவார்டஸ் என்பது 'நத்திங்க் பட்' ஒரு வீடு தான். இங்குள்ள வீடுகளில் குறைந்தது மூன்று ரூம் ஒரு ஹால் உள்ள வீடாகப் பார்த்து அதில் ஒரு ரூமுக்கு இரண்டு பேர் வீதம் தங்க வைத்து விடுவார்கள். ஹாலில் ஒரு சுமாரான டி.வி யும், கிச்சனில் ஒரு பிரிஜ், கேஸ்ஸ்டவ்-வும், மற்றபடி ஒவ்வொரு ரூமிலும் இரண்டு பெட்களும் இருக்கும். இதற்காக மாதம் 500 ரியால் பிடித்துவிடுவார்கள். பெரும்பாலும் எனக்குத் தெரிந்து அத்தனை பொலாரிஸ் பேச்சுலர்களுக்கும் லக்கி, கூப்பர், மலாஸ், முகல், யூபி போன்ற ரெஸ்டாரண்ட்கள்தான் கதி. வீட்டில் சமைப்பதென்பது ரொம்பவே அபூர்வம்.

"அடுத்தது என்ன அண்ணே..." கேட்ட தம்பிக்கு(!) என்னை விடப் பத்து வயதாவது அதிகமாக இருக்கும்.

'...' என்று சொன்னபோது...

"அண்ணனுக்கு ரெண்டு இட்லிஈஈஈ.." என்று ராகமாக சவுண்டு விட்டு அடுத்த டேபிளில் இருந்த அண்ணனைக் கேட்க நகர்ந்தார்.

பில் கொடுக்க பணம் எடுத்தேன். ஆனால் அதற்குள் அந்த நண்பர்களில் ஒருவர் கொடுத்திருந்தார். எவ்வளவு என்று கேட்க சங்கடமாகத்தான் இருந்தது. அவர்களும் எங்கே நான் கேட்டு விடுவேனோ என்பது போல... முகம் பார்க்கத் தயங்கி வெளிநடக்க முயற்சித்தார்கள். அதில் காரணமும் இருக்கிறது... மிஞ்சிப் போனால் 3 அல்லது 4 ரியால் ஆகியிருக்கும். அது ஒரு காசே இல்லை. இதற்கு நான் கேட்டு அவர்களுக்கு அந்தப் பணத்தை கொடுக்க முயற்சிப்பது ஒரு வித சுணக்கத்தை உருவாக்கக்கூடும்...

நன்றி சொல்லிவிட்டுத் திரும்பும்போது...

என்றாவது ஒரு நாள் இவர்களை வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடவேண்டும் என்ற எண்ணம், ஒரு ஓரத்தில்...
posted by சாகரன் @ 9/21/2004 01:36:00 AM   2 comments
Sunday, September 19, 2004
IIS One View
வெப்சர்வர்களிலேயே கடியான ஒரு சர்வர் என்றால் அது மைக்ரோசாப்ட் ஐ.ஐ.எஸ்(IIS) ஆகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை. என்னவென்று கண்டுபிடிக்கவும் முடியாது. ரொம்பவும் படுத்திவிடும்.

எனக்குத் தெரிந்து இங்குள்ள இரண்டு சர்வர்களில் உள்ள பிரச்சனை, வருடக்கணக்காக இன்னமும் தீர்க்க முடியாமலேயே இருக்கிறது. ஒன்றில் இண்டக்ஸ் சர்வர் ஓடவில்லை. எத்தனை தடவை மானுவலாக போர்ஸ் பண்ணினாலும், ஏதோ ஓடுவது போல பாவ்லா காட்டிவிட்டு அப்புறம் நின்று விடும்.

இரண்டு, ஏ.எஸ்.பி(ASP) ப்ராப்ளம். டைம் டு டைம் திடீரென்று ஏ.எஸ்.பி கான்பிகரேசன்ஸ் காணாகப் போய்விடும். என்ன ரீசன் என்றே தெரியாது. மறுபடி சும்மா விண்டோஸ் டைரக்டரியில் செக்யூரிடி பக்கத்தை ஒரு பார்வை (வெறும் பார்வை மட்டுமே) பார்த்துவிட்டு ஒ.கே சொன்னால் போது உடனடியாக சரியாகிவிடுகிறது. அது ஓடும் இன்னுமொரு 20 நாட்கள்.

என்ன காரணம் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை...

இதெல்லாம் இரண்டு வருடங்களாக இருந்து வரும் பிரச்சனைகள்தான் என்றாலும்,
இரண்டு நாட்களாக நான் படும் பாடுதான் கடி..

vignette என்றொரு பிராடக்ட். Content Management Server. அந்த சாப்ட்வேர் முழுக்க முழுக்க எங்கள் டீமில் இருக்கிறது. அதன் அப்கிரேடு விசயமாக போனவாரக்கடைசியிலிருந்து சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். பல தடவை இன்ஸ்டால் செய்தாலும், முழு சிஸ்டமும் படுத்து விடும் அளவிற்கு ரொம்ப நேரம் ஹாங் ஆகிறது. அப்புறம் தான் கண்டிபிடித்தேன், IIS உடன் இணைப்பதற்கு முன்பு இது ஒகே. நல்ல வேகமாகவே கூட இருக்கிறது. ஆனால் இணைத்தவுடன் அவுட்.

IIS-ல் பிராப்ளம் என்றால் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்துவிட முடியுமா என்ன? ஏதோ சில ISAPI DLL -ல்கள் படுத்தும் பாடு...

அந்த சர்வரை தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு, அடுத்ததில் உள்ள வெப் சர்வருடன் லிங்க் கொடுத்த பிறகுதான் இன்ஸ்டலேசன் ஒரு முடிவுக்கு வந்தது!

இப்பவும் எனக்கு இந்த IIS- ஐப் பார்த்தால் நற.. நற என்று தான் இருக்கிறது :-)
posted by சாகரன் @ 9/19/2004 01:55:00 PM   3 comments
தன்னளவில் தனிஉலகம்
எப்பொழுதாவது நீங்கள் வேறு அடுத்தவர் வேறு என்று உணர்ந்திருக்கிறீர்களா? கண்டிப்பாக உணர்ந்திருப்பீர்கள்.

தனிமையிலும் நெருக்கமில்லாத இடங்களிலும், நெருக்கமில்லாதவர்களுடனும் கண்டிப்பாகத் தெரியும்.
ஆனால் மற்ற நேரங்களில்? உதாரணத்திற்கு வீட்டில் இருக்கும் போது... அல்லது நெருங்கின நண்பர்களுடன் இருக்கும் போது... இப்படிப்பட்ட நேரங்களில் எப்படி?

எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் இது எல்லோருக்குமே எல்லா நேரமுமே தோன்றுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நட்பு உறவு என்று இருந்தாலும் கூட, இந்த விலகல் மனப்பான்மையும் கூடவேதான் இருக்கிறது. பல நேரங்களில் உள்ளார்ந்த விசயமாக இருந்தாலும், சில நேரங்களில் தனித்து நமக்கே தெரிய நேரிடுகிறது.

இதில் பிரச்சனை என்ன வென்றால், நம்மைத் தவிர மற்றவர் மிகவும் சந்தோஷமாகவும் தன்னை மறந்து மகிழ்வாகவும் இருக்கிறார் என்று தோன்றுவதுதான்! :-)

இது உண்மையா? நாம் மட்டும் வித்தியாசமா? அடுத்தவரைப் போல ஒரு விசயத்தில் ஒன்றுவதில் நமக்கு ஏன் இப்படிப்பட்ட சந்தேகம்?

நான் பேசுவது, பொருளாதார நிலைகள் குறித்து அல்ல... வாழ்வின் தேடலில் வழிநடத்துதலில் முக்கியமாக இருக்கும் சந்தோஷத் தேடல் குறித்த ஒரு சிந்தனை.

இதற்கு ஒரு காரணம், நம் அளவில் நிம்மதியின்மை. அல்லது அமைதியின்மை. இதன் அடிப்படையாக நம்மைப் பற்றி நாம் எண்ணிக்கொண்டிருக்கும் அதீத மதிப்பு, அல்லது பெரியமனிச தோரணை என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதுதான் இந்த மெல்லிய பொறாமைக்கே அடித்தளமாக அமைகிறது!

பொறாமை என்பது நம்மில் உயர்ந்தவர்கள் மீதுதான் ஏற்படும் என்பது ஒரு தவறான அபிப்ராயம். உற்று கவனித்தால், எப்பொழுதெல்லாம் நம்மைவிட அடுத்தவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட சிறிய பொறாமை ஏற்பட்டே தீருகிறது!

*****

இங்க எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்... சின்னச் சின்ன விசயங்களைக் கூட சந்தோஷமா பேசுவாரு... இன்னிக்கி ப்ளாங்க் சி.டி வாங்கப்போனேன்... அங்க இந்த சி.டி பென் பிரீயா கிடைச்சுது அப்படிங்கறத ஒரு பெரிய விசயமா வேலை மெனக்கெட்டு போன் பண்ணி சந்தோசப்பட்டாரு.. என்கிட்ட மட்டும் இல்லை.. எங்க சர்கிளில் இருக்கறவங்களுக்கும் கூடச் சொன்னாரு கேள்விப்பட்டேன்...

எப்பவுமே அந்த நண்பர் இப்படித்தான்னு நாங்க பேசிக்கிட்டாலும், மனசுல ஒரு மூலையில இந்த விசயங்களைக்கூட எடுத்துக்கிட்டு சுவாரஸ்யமா சந்தோஷப்பட முடிகிறதே என்று ஒரு சிறு பொறாமை வரத்தான் செய்தது!
posted by சாகரன் @ 9/19/2004 01:50:00 AM   2 comments
Friday, September 17, 2004
கிருஷ்ணார்ப்பணம்!
'பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ?'

எம்.எஸ் -ன் குரலில் அடிக்கடி எங்கள் வீட்டில் ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று! காற்றினிலே வரும் கீதத்தைத் தாண்டி எனக்குப் பிடித்த பாடல். தலையாட்டும் ஒரு இசை நயம் அதில் இழையோடும்.

மீரா... எத்தனையோ தடவை பார்த்திருந்தாலும், மறுபடியும் பார்க்கும் போது கூட நெஞ்சைக் கொள்ளை கொள்ளத்தான் செய்கிறது. அந்த கேரக்டருக்கு எம்.எஸ் தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

இறை என்ற நம்பிக்கையின் மீது ஆழமான பற்றும் தீராத நினைவும் இருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு உருகி நடிக்க முடியும். அவர் கண்களில் தெரியும் எங்கோ ஓரிடத்தில் எப்பொழுதும் நினைப்பிருப்பது போன்ற மயக்கமான காந்தமும், குரலில் இருக்கும் நெகிழ்வான கம்பீரமும் வேறு யாருக்குமே நடிப்பு என்ற வகையில் இருந்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

நிறைய பேருக்கு பிரியமான கடவுள்கள் என்று பட்டியலிட்டால், முருகன்,பிள்ளையார், கண்ணன் இவர்கள் மூன்று பேர்தான் அதிகம் வருவார்கள் என்று நினைக்கிறேன்.

என்ன காரணமாக இருக்கக் கூடும்?

குழந்தைகளாக இருந்ததான கதைகளும், அவர்களது விளையாடல்களும் கேட்பவர் மனதிலும், நெருங்க முடியும் என்ற எண்ணத்தை உருவாக்குவதாலா?
இருக்கலாம். சுலபமானவர்கள், எளிதானவர்கள், நம்மவர்கள் என்ற நினைப்பு உடனடியாக ஏற்படுவது நியாயம்தானே!

கண்ணன் பாடல்கள் தமிழிசையில் தனியிடம் பிடித்தவை. எத்தனையோ புகழ்பெற்ற சினிமா பாடல்களும் உண்டு என்பதும் தெரியாத விசயமல்லவே!

'தீராத விளையாட்டுப் பிள்ளை...' - பாரதி பாடிய இந்தப்பாடல் முதல்வரியைக் கேட்டாலும் கூட போதும் அடுத்தவரி தானாகவே மனதில் ஓடும்!

'தாயே யசோதா' என்றொரு பாடல்... அதில் வரும் ஒரு வரியை வெகு சமீபத்தில்தான் கவனமாகக் கேட்க நேர்ந்தது. ரொம்பவே ரசித்தேன். ..
யசோதையிடம் புகார் சொல்ல வருகிறார்கள் அந்த கிராமத்து தாய்மார்கள். பலவிதத்தில் புகார் சொல்லிய பிறகு ஒரு புகாராக இதனையும் சொல்கிறார்கள்...

"அடியே யசோதா, பாலனல்லடி உன் மகன், ஜாலம் மிகப் புரிபவன். பாலன் என்று நினைத்து முகம் கொடுத்தால், மாலையிட்டவன் போல வாயில் முத்தமிடுகிறான்! நான்கு பேர்கள் பார்க்கச் சொல்ல வெட்கமாக இருக்கிறது!!"

****

இங்கே டி.ஆர்.டி (டி-ஐ ரி என்று எழுதுவார்கள்!) என்றொரு தொலைகாட்சி வந்தது. அதில் அடிக்கடி கண்ணன் கதை கொண்ட படம் ஒன்று போடுவார்கள். அவர்களிடம் வேறு டி.வி.டி இல்லையென்றால் இதனைப்போட்டு விடுவார்கள் போலும்! அருத பழசு. கட்டாகி கட்டாகி ஓடும். இந்த நாள் வரை அந்தப் படத்தின் பெயர் என்ன என்பது தெரியவில்லை. அதில் வரும் கம்சனும், கிருஷ்ணனின் நண்பர்களாக வருபவர்களும்தான் ரொம்ப சுவாரஸ்யம்..

கண்ணன் பிறந்த கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதையொட்டி எனக்கு ரொம்பவும் பிடித்த விசயம் என்று ஒன்றிருந்தால் அந்த நாளில் செய்யப்படும் தின்பண்டங்களும், வீடு முழுக்க போடப்படும் குட்டிக் குட்டி கால்களின் தடங்களும்தான் :-)

 

இங்கே சவுதியில் ஏது அதற்கெல்லாம் வழி?!


வீட்ல ஊருக்கு போயிருக்காங்கள்ல... இன்னிக்கு ஒரு மெயில் அனுப்பிருந்தாங்க. என்னன்னு பிரிச்சு பாத்தா...

"எங்க வீட்டுக்கு கிருஷ்ணர் வந்திருந்தாரு... இதோ பாருங்க" - சொல்லி படம் அனுப்பியிருக்காங்க... :-)

N/A


நான் வாசிச்சது எப்படி இருந்தது?

 N/A

பானைல வெண்ணை தருவாங்க சொன்னாங்களே?!
படத்தில் எங்கள் மகள்...!
posted by சாகரன் @ 9/17/2004 01:26:00 AM   8 comments
Tuesday, September 14, 2004
பேச்சுத்தமிழின் இனிமை!
புதுசு கண்ணா புதுசு. இப்போது கிளிஷேயாக அதிகம் பேர் வைக்கும் தலைப்பு. ஏனோ தெரியவில்லை, இந்தத் தலைப்பில் எந்தப் பதிவைக் கண்டாலும், அல்லது எந்த விசயத்தைக் கண்டாலும் நான் பார்க்கக்கூடச் செய்வதில்லை...

இங்கு சவுதியில் சன் டி.வி வருகிறது... ஆனால், எங்கள் வீட்டில் வருவதில்லை. சன் டிவிக்கான கார்ட் இங்கு இப்பொழுது கிடைப்பதில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன், தமிழ் ஹோட்டல்களில் கூட விற்கப்பட்டு வந்த இந்த கார்ட் தற்போது ஸ்டாக் இல்லை என்றோ அல்லது இனி வராது என்றோ சொல்லப்படுகிறது. சவுதியில் தமிழர்களிடையே சமீபத்திய ஹாட் டாக் என்று ஒன்று இருக்குமானால் அது இந்த விசயம்தான் என்று நினைக்கிறேன்.

ஜெயா மற்றும் ராஜ் டி.வி உள்ள கார்ட் ஒன்று மாதிரிக்காக நண்பர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்தேன். எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக. அதில் 24 மணி நேர தமிழ் சினிமா சேனல் ஒன்று இருக்கிறது. 'டான் சினிமா' என்று பெயர். குவாலிடி என்னமோ ரொம்ப சுமார்தான்.

நேற்று சும்மா டெஸ்ட் பண்ணலாம் என்று ஆரம்பித்த என்னை கிட்டத்தட்ட கட்டிப்போட்டுவிட்டது அதில் வந்த ஒரு படம்.

பழைய படங்கள் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சாதாரணமாக படம் பார்க்கும் போது
அந்தப்படத்தின் ஒட்டுமொத்த காட்சியமைப்பு, எந்தக் கோணத்தில் காட்டுகிறார்கள், பாத்திரப்படைப்பு, பாத்திரங்கள் நடிக்கும் விதம், அவர்களின் முகபாவங்கள் இப்படித்தான் என் எண்ணம் ஓடும். சமீபத்திய படங்கள் பலவற்றை.. 20 நிமிடங்களுக்கு மேல் நான் பார்ப்பதில்லை. அந்த இருபது நிமிடங்களில் படத்தின் சொதப்பல் நன்றாகப் புரிந்து விடும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை... எப்படி பேசினார்கள் எப்படி பழகினார்கள் என்பது போன்றவற்றை அறிந்து கொள்வதில் நிறையவே சுவாரஸ்யம் இருக்கிறது.
பேச்சுத் தமிழ் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கிறது என்பதை அழகாகக் காட்டுபவை அந்தப் படங்கள் மட்டுமே. அது மட்டுமே அல்லாமல் அதில் வரும் பாடல் காட்சிகள், நாடகம் போன்ற செட் போட்டு எடுத்தாலும், அந்த எண்ணத்தை மறக்கச் செய்யும் நடிகர்களின் ஒன்றிய நடிப்பு என்று எத்தனையோ விசயங்கள் இதில் உண்டு.

நேற்று இரவு பார்த்தப் படமும் அதில் எந்த விதத்திலும் குறைந்ததாகத் தெரியவில்லை. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் கூடத் திரும்பாமல் ஒன்றிப்பார்த்துக் கொண்டிருக்க வைத்தது.

நான் பார்க்க ஆரம்பித்த போது, ஒரு அண்ணனும் தங்கையும் நீளமான கிராமத்து ரோட்டினூடே மாட்டுவண்டியில் பாடிச்செல்லும் காட்சி ஆரம்பித்தது.... பாடல்களுடன் ஆரம்பித்தப்படம், ஒரு கல்யாண சீனில் வந்தது. முத்துராமன் அண்ணணாக நடித்து இருந்தார்... யப்பா... என்ன ஒரு வேகமான உற்சாகம்;தன் தங்கைக்கு தன் கையால் தான் பார்த்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கும் போது ஏற்படும் உற்சாகத்தை, அப்படி ஒரு அற்புதமான நடிப்பால் காட்டிக்கொண்டிருந்தார். தொடர்ந்து காட்சிகள் மாறி, சிறைசென்று... பின்னர் அவர் தங்கையை பகைவனின் மகனே மனம் முடிப்பது என்று காட்சிகள் நீண்டன. திரும்பிவந்த அண்ணன்; வீட்டினரின் தவறான கண்ணோட்டத்தால் மரணிக்கப்போகும் தங்கை; காப்பாற்றும் அண்ணன் இப்படி நிறையவே திருப்பங்களுடன் படம் சென்றது.

ரொம்பவே ரசித்துப் பார்க்க வைத்தது அதில் பேசப்பட்ட வசனங்களும் பாடல்களின் இனிமையும்தான். என்ன ஒரு சுவாரஸ்யமான வசனங்கள்... எல்லா பாத்திரங்களும் இயல்பான வசன நடை. பேச்சுத் தமிழ் கூட அழகாகத் தான் அப்பொழுது இருந்திருக்கிறது. இது போன்ற பழைய படங்களின் கொஞ்சம் திணறுகின்ற இடம் என்று சொன்னால் உணர்ச்சிகளைக் கொட்டும் இடம் மட்டும்தான். அது காதலாகட்டும், அல்லது சோகமாகட்டும்... அந்த இடங்களின் வசனங்கள் நிறையவே செயற்கையாகி விடுகின்றன. அப்படி இருந்தாலும் ரசிக்க முடிவதற்குக் காரணம் அந்த வசனங்களில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளும், உவமைகளும் அப்படி ஒரு ரசனையோடு எழுதப்பட்டு பேசப்படுவது!

ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் எந்த ஒரு கதையும் பெரிதாக இருப்பதில்லை. உணர்ச்சிகளினால் நகர்த்தப்பட்டு, சூழ்நிலையால் விளையாட்டுக்கு ஆளாக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கைதான் பெரிதும் கதையாக்க முடியும். சினிமா, நாடகம் போன்ற கதைகளில் இன்னமும் நிறையவே மாற்றங்கள் தேவைப்படும்.சாதாரணமாக மனிதர்களால் உணர்ச்சிகளை குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயலாகத் தான் காட்ட முடியும். வார்த்தையாகப் பகிர்ந்து கொள்ள முடியாது. நாடகத்திலிருந்து சினிமாவுக்கு மாறிய கால கட்டம் அல்லவா? அந்தக் காலத்துக் கதைகளிலும், உணர்வுகளை வார்த்தையாகப் பகிர்தலில் உள்ள கஷ்டம் அனுபவித்திருப்பார்கள் போலும்; அதனால்த் தான் நிறைய பேசி ஒரு குறிப்பிட்ட லெவல் தாண்டி அது பாட்டாக மாற்றப்படுகிறது. பாடல்கள் என்றால் சும்மா இல்லை. இனிக்கும் தமிழில் சுலபமான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட பாடல்கள். கதையின் போக்கிற்காகவே எழுதப்பட்ட ரசனைச் சிதறல்கள்.

இந்தப்படத்தில் நிறையவே பாடல்கள் இருந்தன என்றாலும், நான் முன்னரே கேட்டிருந்த பிரபலமான சில பாடல்கள்...

"அமுதும் தேனும் எதற்கு?.... .... தமிழ்போல செந்தேனாக நீ இனித்திடும் போது..."

"வாழ்க்கையே அலை போலே... "

நான் அதிகம் கேட்டிராத சில பாடல்களும் ரொம்பவே இனிமை... 

குழந்தையை வேறு ஒருவர் வளர்க்கக் கொடுத்துவிட்டு திரும்புகிறாள் தாய். அங்கு வேறு ஒரு தாய் குழந்தையை வைத்து பாடிக்கொண்டிருப்பதாக ஒரு காட்சி... இந்தப் பாடலுடன்...

"மண்ணுக்கு மரம் பாரமா?...
 மரத்துக்கு இலை பாரமா?
 கொடிக்கு காய்... பாரமா? 
 பெற்றெடுத்த தாய்க்கு... குழந்தை பாரமா?!"

முத்துராமன் ஒரு காட்சியில், சரோஜா என்ற பெண்ணின் அறையில் தனித்திருக்கும் போது, கிண்டலடிப்பார்...
"இந்தக் காட்சியில் காதல் வசனம் பேசி, பாட்டெல்லாம் பாட வேண்டாமா?:-)" என்று.

ம்... கருப்பு வெள்ளையிலேயே இதை சகஜமாக கிண்டல் அடித்திருக்கிறார்கள்!

திருவள்ளுவரின் குறளில் ஒரு கருத்து என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது!

மனைவி கணவனைப்பார்த்து கேட்கிறாள்... ஏன் இந்த (நெற்)கதிர் தலை குனிந்திருக்கிறது என்று!
அதற்கு கணவன் என்ன சொல்ல வேண்டும்?
அவள் கேட்பதற்கு பதிலாக உண்மையான காரணம் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது! அவளுக்குத் தெரியாததா என்ன?
அதனால் கணவன் சொல்கிறான்.... 'கண்ணே.. உன் முகப்பிரகாசம் கண்டு வெட்கிக் குனிந்திருக்கிறது' என்று!

எப்படி ஜிவ் வென்று இருந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு!!

காதல் காட்சிகளில் செயற்கைத் தனம் நிறையவே இருக்கிறது என்று தோன்றினாலும், கணவன் மனைவியிடையே புகழ்ச்சி என்பதும் முக்கியம் என்ற கருத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.

ம்... ஒரு பழைய படத்தினைப்பற்றி இப்படி எழுதியிருக்கிறேனே என்று எனக்கே தயக்கமாகத் தான் இருக்கிறது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. நான் தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்த நேரம், "கவுண்டமணி செந்தில்" டாப்பில் இருந்தார்கள். படிக்கும் காலத்தில் சினிமா பார்க்க எனக்கு அதிகம் வழி இல்லை.

இப்பொழுதும் கூட இந்தப்படத்தின் பெயர் என்ன என்பதோ, முத்துராமன், ராமசாமி தவிர்த்த வேறு யார் பேருமோ எனக்குத் தெரியவில்லை!

எனக்கு அடுத்த தலைமுறை இன்னமும் மோசமாக இருக்கப்போகிறது. சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் வித்தியாசம் தெரியாத 18 வயது கஸின் எனக்கு உண்டு!
posted by சாகரன் @ 9/14/2004 01:11:00 AM   5 comments
Monday, September 13, 2004
ப்ளாக்ஸ்பாட் வலைப்பதிவாளர்களுக்கு சில டிப்ஸ்....
இனிய நண்பர்களுக்கு,

சமீபத்தில் என்னுடைய தளத்தின் வண்ணம் மாறி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்...
உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பது தெரியவில்லை ஆனால் எனக்குப் பிடித்திருக்கிறது!

இங்கே சில விசயங்கள் செய்திருக்கிறேன். அதைச் சொல்வது மற்றவர்களுக்கும் உபயோகமாகும் என்று நண்பர் பரி சொல்லியதால், தமிழ்பிளாக்ஸ் யாகூ குருப்பில் ஒரு மடல் அனுப்பியிருந்தேன். அதன் சாராம்சம் இப்பொழுது தமிழில்...

Top Nav Bar

சமீபகாலமாக top nav bar என்று ஒன்றை பிளாக்ஸ்பாட் அமைத்திருக்கிறது. இதன் கலரை நீங்கள் மாற்றமுடியும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். template பக்கம் சென்று இதனை மாற்றிக்கொள்ள முடியும்.
நீங்கள் ஒரு வேளை என்னைப் போல லக்கியாக இருந்திருந்தால், இதனை நீக்கவும் கூட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் பிளாக்ஸ்பாட் ஆரம்பித்து ஒரு வருடமாவது ஆகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எதற்கும் செக் செய்து பாருங்கள் அதே டெம்ப்ளேட் பக்கத்தில்!

போரடிக்கும் ப்ளாக்ஸ்பாட் டெம்ப்ளேட்கள்!

ப்ளாக்ஸ்பாட் வழங்கும் டெம்ப்ளேட்கள் போரடிக்கிறதா? ஒரே விதமான டெம்ப்ளேட்கள் பார்க்க கடியாக இருக்கிறதா?!
ஆங்கில வலைப்பதிவாளர்கள் எத்தனை எத்தனையோ விதமாக கலக்கிக் கொண்டிருக்க நமக்கு மட்டும் ஏன் இந்த டீபால்ட் டெம்ப்ளேட்கள் என்று நினைக்கிறீர்களா? இதோ இந்தத் தளம் செல்லுங்கள்... ஏகப்பட்ட டெம்ப்ளேட்கள் கிடைக்கும்! முக்கியமான ஒன்று, மாற்றுவதற்கு முன்னர் உங்கள் டெம்ப்ளேட் ஒரு பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்...

கமெண்ட்ஸ்!

ஹாலோஸ்கேன் நல்ல கமெண்ட் சிஸ்டம்தான்... ஆனால் தமிழ் யூனிகோடிற்கு ஏற்புடையதாக இல்லை. நிறைய எழுத முடிவதில்லை. நிறைய எழுதுவதற்கு, பிளாகர் கமெண்ட்தான் உபயோகமானது. ஆனால் பிளாகர் கமெண்டில் ஒரு கடி... குறிப்பிட்ட பக்கத்தினை கிளிக் செய்து கமெண்ட் போஸ்ட் அல்லது பார்க்க வேண்டும் என்பது! கமெண்ட் கொடுப்பதே போர் என்று நினைப்பவர்களுக்கு, நாலு கிளிக் செய்து கமெண்ட் கொடுப்பது எவ்வளவு கடியாக இருக்கும்?!

முந்தைய கமெண்ட்கள் என்னென்ன என்பதைப் படிப்பதற்கு சுலபமான ஒரு வழி இருக்கிறது... இந்தப்பக்கம் சென்று பாருங்கள்...!!

இதையும் தவிர, கமெண்ட் பாக்ஸ் கூட நீங்கள் அதே பக்கத்தில் இணைத்துக்கொள்ள முடியும்... எப்படி? நான் பத்ரியில் வலைப்பதிவிலிருந்து இந்த ஐடியாவை எடுத்தேன்... அந்தக் கோடு உங்களுக்காக இதோ..!

மேலே உள்ள ஸ்கிரிப்டில் கமெண்ட் தருபவர் பிளாகரில் லாகின் ஆகியிருக்கவேண்டும்!
அதை விட இன்னும் சுவாரஸ்யமான ஒரு ஸ்கிரிப்ட், நண்பர் கொசப்பேட்டை குப்ஸாமி எடுத்து வுட்டிருக்காரு. அதையும் பார்த்துக்கங்க...! அதில் லாகின் ஆகியிருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை! ஹாலோஸ்கேன் போலவே வேலை செய்யும்!!

நீங்களும் திரட்டலாம்!!

தமிழ்மணம் திரட்டியின் பயன்பாட்டினை பார்த்திருப்பீர்கள்தானே? சுரதாவின் குடில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம்.
அதே போல, உங்கள் நண்பரின் வலைப்பூ, அல்லது உங்கள் விருப்பமான யாகூ குருப்பில் நடப்பது, அல்லது தமிழோவியம் தளத்தில் என்ன பேசப்படுகிறது இது போன்ற விபரங்களை நீங்களும் கூட உங்கள் வலைப்பூ-வில் இணைக்க முடியும்!
இதைச் செய்வதற்கு உங்களுக்கு தனி சர்வரோ.. அல்லது பி.ஹெச்.பி போன்ற மென்பொருளோ அவசியமில்லை!!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தத் தளத்திற்குச் சென்று உங்கள் விருப்பமான தளத்திற்கான ஜாவாஸ்கிரிப் இணைப்பை உருவாக்கி உங்கள் பூ-வில் கொடுக்க வேண்டியது தான்!

எடுத்துக்காட்டுக்காக தமிழோவியம் ஆர்.எஸ்.எஸ் பீட் இணைப்பை நான் அருகில் கொடுத்திருக்கிறேன். (CSS:NoBullets)

இங்கே சொல்லப்பட்டவை உங்களுக்கு முன்னரே தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தாலும், சொல்வதில் தவறில்லை என்று கருதியதால்.. இங்கு எழுதி வைக்கிறேன். மாதிரிக்கு என்னுடைய டெம்ப்ளேட் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அது இங்கே!

அன்புடன்,
சாகரன்.
posted by சாகரன் @ 9/13/2004 01:28:00 PM   3 comments
Sunday, September 12, 2004
TISSOT-என்றொரு வாட்ச்
TISSOT-என்றொரு வாட்ச். நண்பர் ஒருவருடன் இன்று பேசிக்கொண்டிருந்த போது கண்டேன். சுவிஸ் மேட்... நல்ல வெயிட். ரியால் மதிப்புப்படி சுமார் 1000+. இந்தியாவில் இன்னமும் அதிகம்;13 ஆயிரங்கள் இருக்கலாம். இந்தியாவில் இப்பொழுதெல்லாம் இந்த வாட்ச் கடைகள் நிறையவே இருக்கின்றன. 25000 மதிப்புள்ள வாட்சும் உண்டு. 2.5 லட்சம் மதிப்புள்ள வாட்சும் உண்டு என்று கேள்விப்பட்டேன். இவ்வளவு செலவு செய்து வாட்ச் வாங்க வேண்டுமா என்று நான் கேட்டுக்கொண்டிருந்த போது, வேறொரு நண்பரும் இணைந்து கொள்ள பேச்சு களை கட்டியது.

பயன்பாடு முக்கியமா, அல்லது கம்பீரம் முக்கியமா? வாட்ச் போன்றவற்றில் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது அவசியமா? என்பதில் ஆரம்பித்த விவாதம், வழக்கம் போல எங்கு முடிந்திருக்கும் என்பது பட்டிமன்ற முடிவு போல எல்லோருக்குமே தெரிந்ததுதான். இல்லையா? இருந்தாலும், சில பேச்சுக்கள் என் ஞாபகத்திற்காக...

"என் வாட்ச் என் டிரஸ் என்பது பார்த்து வரும் நட்பில் எனக்கு எந்த மரியாதையும் இல்லை. "

"இப்படிப்பட்ட விலையுயர்ந்த வாட்ச் நம் ஊருக்கு ஒத்து வராது, திருட்டு பயம் ஜாஸ்தி. "

"சில விசயங்களில் விலையுயர்ந்த பொருட்களின் பயன் சுமாரான விலையுள்ளவற்றிலேயே கிடைக்கும் போது என்ன அவசியம்? அடகு வைக்க வேண்டுமானால் உபயோகமாகலாம் :-)"

"முன்னர் மாதிரி செல்போனில் அது வேண்டும் இது வேண்டும் என்று தேடித்தேடி வாங்கியவர்கள் கூட... கடைசியில் அதிகம் உபயோகிப்பது பேசுவதற்காக மட்டுமே என்ற முடிவுக்கு வந்து, குறைந்த விலை நோகியா வாங்கி உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்... "

"பயன்பாட்டை மையமாக வைத்துத்தான் பொருட்கள். உபயோகிக்கப்படாத ஃப்யூச்சர்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அதற்காக செலவு செய்வதென்பது வீண்... "

இப்படி நிறையவே பேசினாலும், ஒன்றைச் சொல்ல வேண்டும். இது போன்ற விசயங்களில் எந்தப்பக்கம் மக்கள் ஜாஸ்தியோ அந்தப்பக்கம் தான் எடுபடும்.
இதற்கு காரணமும் இருக்கிறது. இந்தப்பேச்சுக்களுக்கு எந்த வித முகாந்திரமோ அல்லது விசய விருப்பமோ கிடையாது. சும்மா அந்த நேர சுவாரஸ்யத்திற்காக பேசப்படுபவை. பல நேர அரசியல் பேச்சுப்போல...!

பேசியதோ மூன்றே பேர். நானும் மற்றொருவரும் கேஷியோ வாட்ச் காரர்கள். பாவம் திஸ்ஸாட் நண்பர், அவருக்கு என்று ஒரு செட் இருக்கிறது; அதில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான் ரொம்ப சுலபமாக மூளைச் சலவை செய்துவிடுவார்கள். இந்த முறை தெரியாத்தனமாகத் தனியாக வந்து மாட்டிக்கொண்டார்...

"என்னம்மா இதெல்லாம் ஒரு வாட்சா? கேஷியோல்லாம் நாங்க சின்ன வயசுல கால்குலேட்டருக்குத்தான் யூஸ் பண்ணுவோம்"- என்று பந்தாவாக ஆரம்பித்தவர், கடைசியில் "எல்லாம் ஒரு ஆசைதான்" என்ற ரேஞ்சில் நிறுத்திவிட்டு எஸ்கேப்பினார்!!
posted by சாகரன் @ 9/12/2004 08:00:00 PM   6 comments
Saturday, September 11, 2004
உல்லாச(ம்) நாயகன்!
எப்பொழுதுமே இந்த தாதாக்களின் வாழ்க்கை, அது குறித்து அறிந்து கொள்வது என்பது ஒரு ஆர்வமான விசயமாகவே இருக்கிறது. மும்பை தாதாக்கள் பற்றிய பேச்சு வரும் போதும், அல்லது நம் ஊர் தாதாக்கள் பற்றிய செய்தி வரும் போதும், அவர் எப்படிப்பட்டவர் என்ற தெரிதலில் ஏற்படும் ஆர்வம் ஒன்றும் குறைவானதாக இருப்பதில்லை.

எங்கள் ஊரில், சில குழுமங்கள் உண்டு. ஏன், கல்லூரி நாட்களில் நான் இணைந்திருந்த குழுமத்திலும் அந்த தாதாக்கள் சார்பு உண்டு. எங்களூர் பக்கங்களில், சைக்கிள் வாடகைக்கு எடுக்கும் போது, யாராவது தெரிந்தவர் ஒருவர் சிபாரிசு செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் கொடுக்க மாட்டார்கள். எங்கள் ஊரிலாகட்டும் அல்லது பக்கத்து ஊர்களான திருவாரூர் போன்ற இடங்களிலாகட்டும், அவர் பெயரைச் சொன்னால் உடனடியாக இந்த வாடகை சைக்கிள் கிடைத்துவிடும். இதற்கு மட்டுமல்ல, வேறு எங்கு சென்று அவர் பெயரைச் சொன்னாலும், அதற்கு கிடைக்கும் மரியாதையே தனி! அப்படிப்பட்ட மதிப்புடைய ஒருவரை தாதா என்று அந்த பீரியடில் சொன்னால் சண்டைக்கு வந்திருப்பார்கள். ஆனால் இன்று, அப்படித்தான் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. அவர் தந்தை, பின்னர் அவர், பின்னர் அவர் தம்பிகள், மகன்கள் என்று அவர்கள் ராஜ்ஜியம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்படுகிறேன்.

தமிழ் சினிமாவிலும் சரி, தமிழ் புத்தகங்களிலும் சரி, இது குறித்த கதைகள் நிறையவே உண்டு. தமிழ் சினிமாவைப் பொருத்த வரை, தாதா என்ற விசயத்தை ஊறுகாயாக சில படங்கள் தொட்டுக்கொண்டாலும், பல படங்கள் சிறப்பான முறையில் வந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். பந்தா பண்ணும் வில்லன் தாதா அல்ல.. தாதா என்றால் அவருக்கு ஒரு தனி மதிப்பு இருக்க வேண்டும். நல்லவராக ஆனால், தன்னிடம் அடைக்கலம் அடைபவர்களுக்கு (அடிதடி) உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும், பெரிய பிசினஸ் ஆளாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் வந்த ஸ்பைடர்மேன் படம், வெற்றி பெரும் என்பதற்கான காரணமாக முன்வைக்கப்பட்ட விசயம், இது சாதாரண தனி மனிதன், அசாதரணமானவனாக மாறும் கதை என்பது. இந்த ஆசை பலருக்கு இருக்கும் ஒன்று! சக்திமான் என்ற டி.வி சீரியல் கூட இப்பொழுது ஞாபகம் வருகிறது. சூப்பர்ஹிட் பாட்சா-வில் ஆரம்பித்து முந்தைய நாயகன் வரை பல படங்கள் வெற்றிப்படங்களாக இருப்பதற்கு இந்த ஒரு வித இயல்பான ஆர்வத் தூண்டுதல் கூட காரணமாக இருந்திருக்கலாம்.

வீட்ல யாரும் இல்லையா..., நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று வைத்திருந்த "தி காட்பாதர்" திரைப்படம் மூன்று பாகங்களும், நேற்று முந்தினம் பார்த்து முடித்துவிட்டேன். (சும்மா இல்லை, ஓவ்வொரு பாகமும் 3 மணி நேரம்..! ஆனாலும் சுவாரஸ்யம்தான்!)
படம் பற்றி,
சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், "நாயகன் + உல்லாசம்".
posted by சாகரன் @ 9/11/2004 10:56:00 AM   4 comments
Wednesday, September 08, 2004
பேர் பட்ட பாடு!
எங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது பட்ட பாடு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அது ஒரு பெரிய ரிசர்ச்...

வீட்டில் குழந்தையின் நட்சத்திரப்படி, 'வ,வா,வி' -ல பெயர் ஆரம்பிக்வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். சரி என்று பெயர்களை யோசித்தால், எத்தனையோ பெயர்கள்... அதிலும் முக்கியமாக, 'வித்யா,விமலா,வனிதா,வாசுகி,..." அப்படி இப்படி என்று ஏகப்பட்ட பிரபலமான பெயர்கள்!!

இதில் வேடிக்கை என்னவென்றால்... ஆளாளுக்கு ஏதோ பெரிய பேர் கண்டுபிடித்துவிட்ட மாதிரி இரண்டு நாளும், மாற்றி மாற்றி அவங்க யோசிச்ச பேரை எல்லாம் என்கிட்ட வந்து சொல்லிகிட்டிருந்ததுதான்! இந்தப் பக்கம் போனா, அவங்க அப்பா வருவார், ".. , 'விஜயா' வைக்கலாங்க, நல்ல பேரு, விஜின்னு கூப்பிடலாம், அப்புறமா நியூமராலஜிபடி, மாத்திக்கணும்னாலும் முடியும்"

"வித்யா நல்ல பேர்டா...எனக்கு பிடிச்சிருக்கு... அதையே வச்சிடலாம்" - இது என் அம்மா...

"எதை வேணா, வைங்க இந்த வினிதா, கினிதா-ன்னு சினிமாகாரங்க பேர் மட்டும் வச்சிராதீங்க" - இது அவங்க அம்மா...

"'தன்யா'ங்கற பேர் வைங்க.. நல்ல பேர்.." - இது அவங்க பாட்டி

"உன் பெரிய பாட்டிதாண்டா மறுபடி பொறந்திருக்கா, அவ பேரையே வை.." - இது என்னோட பாட்டி

"மச்சி, நியூமராலஜி பார்க்கணும்னு தோணிச்சுன்னா, அதையும் பார்த்துடுடா.." - இது நண்பன்..

என் கஸின்ஸ் மட்டும் என்ன சும்மாவா? "அண்ணா, வர்ஷிணி, விஷ்ருதி" என்று அவர்களுக்குத் தெரிந்த பேர்களை எல்லாம் அடுக்கிக்கொண்டிருந்தார்கள்.

குழந்தை வெளியுலகுக்கு வந்து ஹலோ சொல்லி இரண்டு நாட்கள் ஆகப்போகிறது. பெயர் சொல்லிவிட்டால், நாங்களே பர்த் சர்டிபிகேட் வாங்கித்தருகிறோம் என்கிறார்கள் ஹாஸ்பிடலில். இல்லையென்றால், பர்த் சர்டிபிகேட்டிற்கு அலைய வேண்டி வரும்!

****

இருந்த, குழப்பத்தில், நியூமராலஜி ஒரு வேடிக்கை...

சரி, நியூமராலஜில ஏதாவது நல்ல பேர் மாட்டுதா பார்ப்போம் என்றால் யாரைப்புடிக்கிறது? யார் திறமையானவங்க? மறுபடி நண்பர் ஒருவர் போனில் வந்தார்..." நியூமராலஜி, நான் என் பொண்ணுக்கு, டி.நகர் பஸ்ஸ்டாண்ட் தாண்டி இருக்குமே அந்த செட்டியார் தங்க நகை கடை அங்கத்தான் பார்த்தேன்.."

டி-நகரில் பேருந்து நிலையம் பக்கத்தில் செட்டியார் நகை கடையா... எனக்கு சுற்றிச் சுற்றி அன்று பிளந்தவெயிலில் மண்டை காய்ந்தது தான் மிச்சம். அப்புறம் அங்க இங்க விசாரிச்சப்போ, "உம்மிடி-பங்காரு நாயக்கன்" கிடைத்தது. அங்க போனா, ரிசப்ஷனிஸ்ட்...
'இங்க போங்கண்ணு' ஒரு பக்கம் கை காட்டறாங்க...

அவங்க சொன்ன இடத்தில ஒரு க்யூ... "ஏங்க இங்க பேர் வக்கறதுக்கு......."

"இருங்க.. வெயிட் பண்ணுங்க.. இவ்வளவு பேர் இருக்காங்க இல்ல....."

ம்.... வேற என்ன பண்றது. இவர்தான் பேர் வைக்க ஹெல்ப பண்றவர் போல.. தலையை படிய வாரி, நெத்தியில நல்லா பெரிச்சா சந்தனம்லாம் வச்சிருக்காரு.. வெள்ளை சட்டை..

நேரம் ஓடி, என் முறை வந்த போது, விசயத்தை சொன்னேன். கேட்டுக்கொண்டவர், "சரி, அட் ரஸ் குடுங்க.. "

"எவ்வளோ ஆகும் சொல்லுங்க..."

"ஒரு சிட்டிங் 500, அடுத்த மாசம் இதே தேதியில வருவாங்க"...

"என்னது?!?"

"இங்க ஒருத்தவங்க, வருவாங்க... மாசத்தில 10,11 தேதியில் மட்டும் இருந்து சொல்வாங்க.. அதுக்கு புக்கிங்க்தான் இது... "

அடப்போங்கய்யா... நான் எஸ்கேப்..!

"உனக்கென்ன நாங்க நியூமராலஜி பாத்தா பேர் வச்சோம்.. " - அப்பா சொன்னது இப்ப இன்னமும் நன்றாக உரைத்தது!

****

அடுத்த கட்டம், இண்டர்நெட்.. இணையம் இருக்கும் போது கவலை ஏன்?! ஒரு ரவுண்ட் கூகிள்,யாஹூ,அல்டாவிஸ்டா உதவியால் ரவுண்டு அடித்தும் பார்த்தாகிவிட்டது. ஒன்றும் ஸ்ட்ரைக் ஆகவில்லை. லிஸ்ட் எடுத்து வைத்ததுதான் மிச்சம்.

மறுபடி ஒரு நண்பன் "டேய், அப்பா பேர்ல கொஞ்சம் அம்மாபேர் கொஞ்சம் இப்படி ரெண்டையும் கலந்து ஒரு பேர் வச்சா...நல்ல ராசியா இருக்கும்"

ம்.. சரி டிரை பண்ணலாம்.. என் பேர்ல முதலும், அவங்க பேர்ல கடைசியை எடுத்துப்போட்டா "கல்பனா"-னு வர்து, வச்சிடலாமா...

"இது என்ன அர்த பழசா இருக்கு.. இதெல்லாம் வேண்டாம்.. நான் இந்த காம்பினேஷன்லாம் ஏற்கனவே டிரை பண்ணிட்டேன்... வித்தியாசமா இருக்கணும்;அதுவும் 2-4 எழுத்துக்குள்ள இருக்கற மாதிரி பாரு.." - என் மனைவி. அவங்க சொல்லிட்டா அப்பீலேது! ரைட்... அடுத்த ரவுண்ட்...

இந்த புக்ஸ்லாம் படிச்சு படிச்சு, நமக்கு கொஞ்சம் ஐடியா இருந்துச்சா.. சரி
நாமளும் ஹிக்கின் பாதம்ஸ் போனா, ஏதாவது பிடிச்சிடலாம், நினைச்சு... அங்கப் போனேன்...

"குழந்தைகளுக்கான பெயர்கள்"- ஆண், பெண், இந்து முஸ்லீம் இப்படி அப்படின்னு நிறைய புத்தகங்களும் இருந்தன...

ஆனால், நாங்கள் எதிர்பார்த்த, அந்த வித்தியாசமானப் பெயர் மட்டும் மாட்டவில்லை.....

நமக்கு சுலபமாகப் படிக்க வருவது தமிழ் புத்தகம் தானே.. அதனால அந்தப் பக்கமே சுற்றிக்கொண்டிருந்தேன்.ஆனால் கடைசியாகக் கிடைத்ததென்னவோ ஆங்கிலப்புத்தகம்தான்! மேனகா காந்தி எழுதியது... அதில் இல்லாத பேரே இல்லை என்னும் அளவிற்கு.. டிக்ஷனரி மாதிரி!

அதிலேர்ந்து ஒரு பேர் தேடணும், ஹாஸ்பிடல்ல நைட் முழுக்க இரண்டு மூணு மணி நேரம், அலசி, ஒரு பத்து பேர் செலக்ட் பண்ணியாச்சு...

****

அடுத்தநாள், குடும்ப மீட்டிங்....

முதல் பேர் " வாமிகா" - 'இது நல்லா இல்லை.. வாமி...மாமின்னு கிண்டல் பண்ணுவாங்க..' - அவங்க அப்பா...
இரண்டாவது "வந்தியா" - 'இதுவும் நல்லா இல்லை.. வந்தியா போனியான்னு கிண்டல் பண்ணுவாங்க' - இது அவங்க அம்மா...

இப்படியே அந்த மீட்டிங், ஒரு ரேஞ்சில் நாங்கள் செலக்ட் பண்ணிய 9 பேரையும் நிராகரிக்க...

கடைசிப் பேர்... அட... எல்லாரும் ஒ.கே சொல்லிட்டாங்க!!!

அது......
"வர்ணிகா" - கலர்புல், சொக்கத்தங்கம் என்று அர்த்தம்!

பேர்லாம் வச்சு, ஒரு வழியா எல்லாம் முடிஞ்சப்புறம், எங்க மாமா சொல்றாரு "அது என்ன வர்ணிகா? வெரோனிகா மாதிரி இருக்கு!! :-) (கர்ர்ர்ர்... நல்ல வேளை மாமா மீட்டிங்க்ல இல்லை.. இருந்திருந்தா இந்தப் பேரும் காணாப் போயிருக்கும் :-))

இதுக்கு நடுவில, காலமான அவங்க பெரியம்மா, எங்க 'சுப்பு' பாட்டி, ரெண்டு பேர் பேரையும் சேர்த்து, சுபஹேமா-னு ஒரு இரண்டாவது பேர் வச்சதும், அப்புறம் பாட்டி அவங்க இஷ்டத்துக்கு தன்யானு பேர் வச்சதும்...

ஒரு வருசமா, எல்லாரும்,வச்ச எந்தப் பேரையும் சொல்லிக் கூப்பிடாம, பட்டாணி, பட்டுக்குட்டி, தங்கம், கண்ணம்மா இப்படி ஆயிரம் பேரைச் சொல்லி கூப்பிட்டுகிட்டிருக்கறதும்.....

வேற கதை! :-)
posted by சாகரன் @ 9/08/2004 08:43:00 PM   8 comments
Monday, September 06, 2004
ஸ்பெல்லிங் மிஸ்டேக்
சமீபத்தில் ஒரு பதிவில் எப்படி ஆங்கிலம் தெரியாமல் திணறினேன் என்பதைச் சொல்லியிருந்தேன். அப்புறம், விவேகானந்தா உதவியுடன், நன்றாக பேசக்கற்றுக்கொண்டு காலேஜுக்கு சென்றால், யாருமே ஆங்கிலத்தில் பேசவில்லை :-) எல்லாம் மச்சி, மாமுதான். கொஞ்ச காலத்தில் கற்றுக்கொண்டதும் மறந்து போய்விட்டது!!

இங்கு சவுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஆங்கில அறிவு என்பது ரொம்பவே குறைவாக இருக்கிறது. பேச்சில் மட்டும் குளறுபடி இல்லை. எழுத்தில் இன்னமும் குளறுபடி! இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதிலேயே...பாதி நேரம் போய்விடும்!! எழுத்தைப்பற்றி கேட்கவா வேண்டும்? ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கும். எனக்கு அதில் பிரச்சனை இல்லை. எனக்கே ஸ்பெல்செக்கர் இல்லாமல் ஒன்றும் ஓடாது :-) (ஏனோ, ஒரு நண்பர் ஞாபகம் வருகிறது..:-)) ஆனால் வாக்கிய அமைப்பில் இருக்கும் பிரச்சனைதான் கடியாக இருக்கிறது!

அதுவும் தவிர, ப்ரொபஷனிலிசம் என்றால் என்னவென்று கேட்பவர்கள்! பெரிய பதவி வேண்டும் என்ற எண்ணம் உண்டு ஆனால் அதற்கான தகுதிக்கு பாடுபட கொஞ்சம் தயங்குபவர்கள். இப்படி எத்தனையோ சொல்லலாம் என்றாலும், எல்லாரையும் குறை சொல்வதும் தவறு! திறமையான சவுதி நண்பர்களும் உண்டு இங்கு...

இன்று வந்த சில மெயில் படித்து கொஞ்சம் கடியாகித்தான் இப்படி எழுதி வைக்கிறேனே தவிர வேறொன்றுமில்லை....:-)
posted by சாகரன் @ 9/06/2004 05:19:00 PM   0 comments
பிரச்சனை
நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி' என்ற புத்தகத்தில், முதல் அத்தியாயத்திலேயே ஒரு கருத்து வரும்... அதாவது, பிரச்சனை என்பது ரிலேடிவ். ஒருவருக்கு பிரச்சனையாகத் தோன்றுவது அடுத்தவருக்கு ஒன்றுமே இல்லை. அப்படி இருக்கும் போது பிரச்சனையை எப்படி முக்கியமானதாகச் சொல்ல முடியும்?

ஒரு உதாரணம் கூட கொடுத்திருப்பார். கணக்கு வாத்தியார் மிகவும் கடினமான பிரச்சனையான கணக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக, ராமானுஜத்தை கூப்பிட்டு 'இந்த கணக்கை போடுப்பா பார்க்கலாம்' என்று சொல்லி ஒதுங்கிக்கொள்வாராம். கணித மேஜை ராமானுஜமோ இது என்ன விசயம்கறமாதிரி அனாயாசமாக அந்த கணக்கை வாத்தியாரே யோசிக்காத கோணத்தில் சுலபமாகப் போட்டு விடுவாராம்.

வாத்தியாருக்கு பிரச்சனையாகத் தெரிந்தது ராமானுஜத்திற்கு இல்லை! அதே நேரத்தில் வாத்தியாரின் பிரச்சனை ராமானுஜத்திற்கு விசயத்தை தள்ளி விடுவதுடன் முடிந்து விடுகிறது.

****

இன்று மாலை வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் பிரொடக்ஷனிலிருந்துப் போன்! ஒரு சிஸ்டம் டவுன்!
அர்ஜெண்டாக எல்லா சப்போர்ட் நண்பர்களையும் வீட்டுக்கு போகாமல் நிறுத்தி வைத்து, போய் பார்த்தால் பிரச்சனைக்கான காரணம் துத்தமாகப் புரிபடவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இன்னமும் பழைய லாக் கோப்புக்களை எடுத்து ஏதேதோ ஐடியா செய்து கொண்டிருந்தோம்.

அந்த பக்கமாக ஒரு நெட்வொர் ஆசாமி வந்தார். எனக்கு அவரைத் தெரியும். சாதாரணமாக...
"என்ன ஹசன், பிரொடக்ஷன் சைடு வந்திருக்கீங்க" - விசாரிச்சேன்.
ஏதோ சர்வர் அப்டேட்-க்காக வந்திருப்பதாகச் சொன்னார்.
அப்புறம் என்னைப்பற்றி கேட்க,
"எங்க போர்டல் சைட் டவுன் ஆயிடுச்சு ஹசன், விண்டோஸ் NTLM Auto லாகின் ஆகல... சாயந்தரம் 5 மணியிலேர்ந்து வொர்க் ஆகமாட்டேங்குது... அதான் எல்லாரும் பார்த்துகிட்டிருக்கோம்!"

கேஷுவலா... "அந்த domain central serverஐ நான் 5 மணிக்கே அப்கிரேட் பண்றதுக்காக டவுண் பண்ணிட்டேனே... எப்படி லாகின் ஆகும்?" சொல்லிட்டு சிரிக்கராப்ல... !!!

"ஏன்யா.. ஒரு மெயில் போடக்கூடாதா" கேட்டா, "சீக்கிரம் முடிஞ்சிடும் நினைச்சேன் கல்யாண்"-ங்கறாரு...

விட்டா போதும்னு கிளம்பி வந்தாலும், பிரச்சனைனு நினைச்சது எப்படி ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது யோசித்தால்....


posted by சாகரன் @ 9/06/2004 01:14:00 AM   5 comments
Sunday, September 05, 2004
கிங்டம் செண்டர் - ஒரு மீட்டிங்...
இன்று,

ஒரு மீட்டிங்கிற்காக முதல் முறை சவுதியின் உயர்ந்த கட்டிடமாகிய கிங்டம் செண்டர் சென்றிருந்தேன்...

வாவ்... என்ன அருமையான பில்டிங்... எப்படி இழைத்து வைத்திருக்கிறார்கள்...
ஆச்சரியமாக இருந்தது. மொத்தம் 99 ப்ளோர்கள்... மிக உயரமான பில்டிங்...
மேல் பக்கத்தில் வண்ண விளக்குகளின் மாற்றம்... உள்பக்கத்திலோ... தண்ணீர்களால் ஆன மேடை.. எப்பொழுதும் வழிந்து கொண்டிருக்கும் நீர் சலசல்கள்.. பவுண்டன்கள்.. 

எல்லா அறைகளுக்கும் கண்ணாடித் திரை.. குறைந்த பட்சம் ஒரு பக்கமாவது!

மீட்டிங் என்னமோ கடிதான்... வழக்கம்போல் பாதி மீட்டிங்கில் தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. கஷ்டப்பட்டு வேண்டுமென்றே கொஞ்சம் கவனமானேன். நிறைய மீட்டிங்குகள்.. அதிலும் தொடர் மீட்டிங்குகள் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பேசியதையே பேசித்தான் அறுக்கிறார்கள்..

இது வேண்டும் அது வேண்டும், இது முடியுமா என்பது பலமுறை டெக்னாலஜி ஆட்கள் பேசினால்தான் முடிவுக்கு வரும் விசயம்;ஆனால் அதுவே பிஸினஸுடன் இருந்தால் பெரும் குழப்பம்தான். எல்லாம் பல நேரங்களில் கனவுகள். ஒரு மீட்டிங் என்பது, தெளிவாக முன்னரே இதைத்தான் பேசப்போகிறோம் என்று யோசித்து, திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். இதற்கு யாராவது ஒருவராவது நிறையவே உழைக்க வேண்டும். இல்லையென்றால் நாமும் மீட்டிங் பேசினோம் என்பது போல ஏதாவது சொதப்பலாகத்தான் முடியும்.

என்னுடைய மீட்டிங் அறை... 16ம் மாடியில் இருந்தது. அங்கிருந்து ரியாத் .. இன்னமும் அழகு...
நான் மீட்டிங்கை கவனித்தேனோ இல்லையோ, அந்த வெயில் சாய்ந்த நேரம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியிருந்த ரியாத்தின் சுவர் படங்களின், சாலையில் தீப்பெட்டியாகச் செல்லும் வாகனங்களின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.

ஏனோ எனக்கு தஞ்சை சரபோஜி அரண்மனையின் மேலே இருந்து தஞ்சையைப் பார்த்த ஞாபகம் வந்தது...!

எதையுமே தூரத்திலிருந்து பார்த்தால்தான் அழகு போலும்..!
posted by சாகரன் @ 9/05/2004 01:20:00 PM   0 comments
Thursday, September 02, 2004
சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ்...!
சவுதி அரேபியாவிற்கு, முதலில் வர வேண்டும் என்றால் நீங்கள் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலமாகத்தான் விசா எடுக்க அனுப்ப வேண்டும்.
விசா எடுத்த பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்பது வேறு விசயம்...

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ்... ஒரு கிரேஸி ஏர்லைன்ஸ் என்பதாக நண்பர்கள் சொல்வார்கள். இதில் பணம் அதிகம் என்பது மட்டும் காரணம் இல்லை, சர்வீஸும் கம்மி.

இதெல்லாம் விட கொடுமை நினைத்த நேரத்திற்கு டிரிப்பை மாற்றுவது!
இன்று இரவு 12:30 மணிக்கு கிளம்புவதாக இருந்த ப்ளைட், காலை 4:45 க்கு மாற்றப்பட்டுவிட்டது. குழந்தைக்கு ஒ.கே. காலை வரை கொட்டம் அடித்தாலும் தூங்கி விடுவாள், ஆனால் அவங்களுக்குத்தான் கஷ்டம்..! இன்று இரவுத்தூக்கம் முழுசாகப் போச்...

ஆனாலும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில் பலர் டிராவல் செய்ய காரணம். அது மட்டும் தான் சென்னைக்கு டைரக்ட் சர்வீஸ் கொடுக்கிறது! மற்ற ஏர்லைன்ஸில் நீங்கள் வேறு எங்காவது ஒரு இடத்தில் இறங்கி மாற வேண்டும். குடும்பமாகச் செல்லுபவர்களுக்கு அது கடினம்.

அதுவும் தவிர, அடுத்த காரணம், பலருக்கு வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ, கம்பெனியே டிக்கெட் கொடுக்கும். அப்படி கம்பெனி டிக்கெட் தரும் போது, டைரக்ட் பிளைட்டில் டிராவல் பண்ணலாமே என்று நினைப்ப்வர்களும் உண்டு.

இதெல்லாம் இப்படி இருக்க, எப்பொழுதுமே இந்தியன் ஏர்லைனில் டிராவல் செய்யும் நண்பர்க்ள் நிறையவே உண்டு இங்கு... இந்தியப் பாசம் அல்ல, ஏர்லைன்ஸில் தரும், பீர் மற்றும் இத்தியாதி வகையராக்களில் உள்ள பாசம்!!
posted by சாகரன் @ 9/02/2004 12:03:00 AM   3 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER