சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, September 21, 2004
எ டே இன் லக்கி!
யுரேகா யுரேகா என்று சத்தமிடலாமா அல்லது சக்ஸஸ் சக்ஸஸ் என்று சிவாஜி பட ஆரம்பம்போல மெயில் அனுப்பலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்த நேரம் மணி 9-ஐத் தொட்டிருந்தது. என்னைத் தவிர அலுவலகத்தில் யாரும் இல்லை. (டெவலப்மெண்டில் நான் செய்த அப்கிரேடு ஒழுங்காக வேலை செய்வதுதான் அந்த சந்தோஷத்திற்கு காரணம்.. ஆனாலும் இருக்கிறது இன்னமும் மூன்று என்விராண்மெண்ட்கள்..!)

வீட்டில் யாரும் இல்லையென்பதால் பிரச்சனை இல்லைதான், ஆனால்... நேற்று செய்து வைத்த பதார்த்தங்களின் நிலை என்ன என்பது கொஞ்சம் குழம்பமாகத் தான் இருந்தது. அதற்கு பதிலாக போகும் வழியில் எங்கேனும் இறங்கி சாப்பிட்டுவிடலாமா என்ற யோசனையுடன் 'லக்கி' ரெஸ்டாரண்டை அணுகினேன்.

"ஹல்லோ... எப்படி இருக்கீங்க... வாங்க இங்க உட்காருங்க... "

என் அலுவலக நண்பர்கள் மூவர்.. பேர் தெரியாது.. ஆனால் எல்லாரையும் பார்த்திருக்கிறேன். சில நேரம் சில வார்த்தைகள் பேசியிருக்கிறேன். மூன்று பேருமே புதியவர்கள்.

இந்த ஊரில் இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று... அதிலும் முக்கியமாக எங்கள் அலுவலகத்தில். ஏதாவது ப்ராஜக்ட்க்காக எடுப்பார்கள்.. அது ஓடும் மூன்று மாதம் என்று சொல்லி மும்மூணு மாதங்களுக்குக் குறையாமல். அதற்குள் வேறு யாராவது எஸ்கேப் ஆகி வேறு யாராவது வந்து... இப்படி ஒரு தொடர்ச் சங்கிலி!

பக்கத்தில் இருந்த நண்பர் கேட்டார்... "உங்களுக்கு ஜெயராமன் தெரியுமா?"

அது என்னவோ தெரியவில்லை. இது வரை முன்னரே இரண்டு முறை இவரிடம் பேசியிருக்கிறேன். எப்பொழுதுமே ஜெயராமன் பற்றித்தான் விசாரிப்பார்.

ஜெயராமன், நான் சென்னையில் வேலை செய்த போது பழக்கமான ஒரு நண்பர். கொஞ்சம் சுவாரஸ்யமானவரும் கூட..

சுவாரஸ்யம் என்பது அவருடைய பேச்சுதான்! வாத்திமா, வடமா பதினேழு கிராமத்தினர் அது இது என்று ஏதேதோ அவர் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.

டிபிகல் அக்ரகாரத்து ஸ்டைல். வம்பு பேசுவதில் அப்படி ஒரு ஆர்வம். அவருடன் இருந்த தொடர்பு விட்டுப் போய் வருடங்கள் ஆகிறது. அப்படி தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்று பெரிதாக விரும்பமும் இல்லை.

நெருக்கமான நண்பர்கள் என்று நினைத்தவர்களே நினைவலையாகிப் போய்விட்ட கால மாற்றங்களில் இப்படி சில மாதப் பழக்கங்களை தொடர வேண்டுமானால் இன்னமும் கூடுதல் டச் வேண்டும். இவர் பெயர் எனக்கு ஞாபகம் இருப்பதே ஒரு விதத்தில் ஆச்சரியம் தான்! அதற்கு காரணம் அவருடைய சல சல பேச்சுத்தான் என்று நினைக்கிறேன்.

இரண்டு மாதமே பழகினாலும் இன்னமும் நினைவில் இருக்கும், தொடர்பில் இருக்கும் சில நண்பர்களும் உண்டு. அதில் ஒரு நண்பர் முக்கியமானவர். சுரேஷ் என்று பெயர்.

ஒரு கம்பெனி மூலம் சவுதிக்கு வந்து, வீடு தேடிக்கொண்டிருந்த போது, தெரிந்தவர் மூலமாக என் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். அப்பொழுது என் மனைவி குழந்தைப் பிறப்பிற்காக ஊருக்குச் சென்றிருந்த நேரம். நானும் பேச்சுத் துணைக்காச்சு... தெரிந்த இடத்திலிருந்து வேறு சொல்கிறார்கள் என்று ஓ.கே சொல்லிவிட்டேன்.

முதல் நாள் ஹலோ சொன்ன பிறகு நான் எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் அவராக வந்து பேச்சை ஆரம்பித்தார். அதுவும் எது பற்றி.., உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றி...! (இது ஒரு நல்ல ஐடியா... என்னங்க சவுதில வெயில் கொளுத்துது என்று புளித்துப் போன சப்ஜெக்டில் பேச்சை ஆரம்பிப்பதைவிட, அப்போதைய ஹாட் சப்ஜெக்ட் பேசுவது இன்னமும் சுவாரஸ்யம்..)

ஹ்ம்... கிரிக்கெட் பற்றி அவர் பேசிய அளவுக்கும் அவர் தெரிந்து வைத்திருந்த புள்ளி விபரம் அளவுக்கு நான் தெரிந்து கொண்டிருக்க மாட்டேன். அப்படி ஒரு அலசல். ஒவ்வொரு நாளும், ஒரு கால்குலேசன் போட்டு காட்டுவார்...

இந்த டீமை இவன் அடிச்சுடுவான், அந்த டீமை அவன் அடிச்சுடுவான். இது பார்மில இல்லை. அப்படி இப்படின்னு சொல்லி இந்தியா பைனல்ல கண்டிப்பா வந்துடுஙகறத ஆரம்பித்த போதே சொல்லிவிட்டார். ஒவ்வொரு முறையும் மேட்ச் முடிந்த பிறகு, அதற்கு ஒரு விமர்சனம்.. மறுபடி அவர் எழுதி வைத்திருந்த பேப்பரை எடுத்து ஒரு கால்குலேசன்....

நான் ஒன்று சொன்னால் அவர் அதற்கு பில்டப் கொடுத்து பேச ஆரம்பித்தாரென்றால்.. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியாது. அவ்வளவு பேசுவார். ஆனால் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

அவர் எழுதிய திகில் கதை என்று ஒரு நாள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர் அந்தக் கதையை எப்படி எழுதினார்... அடுத்து நடந்தது என்ன, அதன் அத்தியாயங்களின் தலைப்பு என்ன என்று போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார். நல்ல வேளை நாகேஷ் ரேஞ்சில் இல்லை. நான் கொஞ்சம் சீக்கிரமாவே முடிவு என்ன சொல்லுங்க சுரேஷ் என்று கேட்டு முடிக்க வைத்து விட்டேன். என்றாவது அவங்க வீட்டுக்கு வந்தா அந்தப் பிரதி தர்றதா கூட சொல்லியிருக்கிறார். இதற்காகவே அவர் வீட்டுக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனாலும் இப்படி சலசலவென்று பேசக்கூடிய துணை இங்கு கிடைப்பது அபூர்வம். சவுதியில் ஏனோ தெரியவில்லை; பேச்சு என்பது முத்துத் தெரித்தார்ப் போலத்தான் இங்குள்ள நண்பர்களிடமிருந்து வரும். சவுதியின் மயான அமைதி அதன் காரணமா? இல்லை... இங்கு வந்த பிறகு தனிமை பழக்கிவிட்ட கோலமா? தெரியவில்லை. ஆனால் நிறைய பேசுபவர்கள் இங்கு அதிகமில்லை என்பது மட்டும் நிச்சயம்.

அதிலும் நம்ம ஊர் மாதிரி, எதிராளி கேட்கிறானா இல்லையா என்பதைப் பற்றிக் கூடக் கவனிக்காமல் பேசுபவர்கள் ரொம்பவே கொஞ்சம்.
(அந்த கொஞ்ச பேரில் எங்க பி.எம்-மும் ஒருவர்! :-) எப்படித்தான் காலைல சீட்ல வந்து உட்கார்ந்த உடனேயே மனுசனுக்குப் பேசத்தோணுதோ...!!:-))

இங்கு இருந்த இரண்டு மாதத்தில் சுரேஷ் புரிந்து கொண்டதும், நடந்து கொண்டதும், ஏற்படுத்திய அலைகளும் நிறையவே சுவாரஸ்யமானவை. சவுதி அரேபியாவின் கம்பெனிகளின் நிலமை... பணம் எப்படி விளையாடுகிறது... இப்படி பல விசயங்கள் அவருடைய தொடர்பால் தெரியக் கிடைத்தது.

"நீங்க பேமிலியோட இருக்கீங்கலா?" - எதிர் சாரில இருக்கிற நண்பர் ஏதோ கேட்டார்...

"ஆமாங்க.. பேமிலி இங்கத்தான் இருக்காங்க. இப்ப ஊருக்கு போயிருக்காங்க. ஒன்றரை வயசுல ஒரு குழந்தையும் உண்டு" என்றேன்.

"நீங்க எங்க தங்கியிருக்கீங்க?" - இது நான்.

"பொலாரிஸ்(Polaris) குவார்டர்ஸ் தெரியும்ல.. அந்த புர்ஜ்மான் கடைக்கு எதுக்க..."

"ஹாங்..."

"அங்கத்தான். நீங்க கூட விஸ்வநாதனைப் பார்க்க வந்திருந்தீங்களே..."

"ம்..." (விஸ்வா-வை பார்க்க வந்தது குறித்து அவர் சொன்னதைக் கேட்க கொஞ்சம் ஆச்சரியம்தான்!)

போலாரிஸ் பேச்சுலர் குவார்டஸ் என்பது 'நத்திங்க் பட்' ஒரு வீடு தான். இங்குள்ள வீடுகளில் குறைந்தது மூன்று ரூம் ஒரு ஹால் உள்ள வீடாகப் பார்த்து அதில் ஒரு ரூமுக்கு இரண்டு பேர் வீதம் தங்க வைத்து விடுவார்கள். ஹாலில் ஒரு சுமாரான டி.வி யும், கிச்சனில் ஒரு பிரிஜ், கேஸ்ஸ்டவ்-வும், மற்றபடி ஒவ்வொரு ரூமிலும் இரண்டு பெட்களும் இருக்கும். இதற்காக மாதம் 500 ரியால் பிடித்துவிடுவார்கள். பெரும்பாலும் எனக்குத் தெரிந்து அத்தனை பொலாரிஸ் பேச்சுலர்களுக்கும் லக்கி, கூப்பர், மலாஸ், முகல், யூபி போன்ற ரெஸ்டாரண்ட்கள்தான் கதி. வீட்டில் சமைப்பதென்பது ரொம்பவே அபூர்வம்.

"அடுத்தது என்ன அண்ணே..." கேட்ட தம்பிக்கு(!) என்னை விடப் பத்து வயதாவது அதிகமாக இருக்கும்.

'...' என்று சொன்னபோது...

"அண்ணனுக்கு ரெண்டு இட்லிஈஈஈ.." என்று ராகமாக சவுண்டு விட்டு அடுத்த டேபிளில் இருந்த அண்ணனைக் கேட்க நகர்ந்தார்.

பில் கொடுக்க பணம் எடுத்தேன். ஆனால் அதற்குள் அந்த நண்பர்களில் ஒருவர் கொடுத்திருந்தார். எவ்வளவு என்று கேட்க சங்கடமாகத்தான் இருந்தது. அவர்களும் எங்கே நான் கேட்டு விடுவேனோ என்பது போல... முகம் பார்க்கத் தயங்கி வெளிநடக்க முயற்சித்தார்கள். அதில் காரணமும் இருக்கிறது... மிஞ்சிப் போனால் 3 அல்லது 4 ரியால் ஆகியிருக்கும். அது ஒரு காசே இல்லை. இதற்கு நான் கேட்டு அவர்களுக்கு அந்தப் பணத்தை கொடுக்க முயற்சிப்பது ஒரு வித சுணக்கத்தை உருவாக்கக்கூடும்...

நன்றி சொல்லிவிட்டுத் திரும்பும்போது...

என்றாவது ஒரு நாள் இவர்களை வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடவேண்டும் என்ற எண்ணம், ஒரு ஓரத்தில்...
posted by சாகரன் @ 9/21/2004 01:36:00 AM  
2 Comments:
  • At 6:38 AM, Anonymous Anonymous said…

    (21.9.2004) அன்பு said...

    பார்த்தீங்களா சாகரன்...
    நீங்க அங்க பேசினீங்களோ இல்லையோ. அதுபற்றி இங்க எங்களோட இவ்ளோ நேரம் பேசிட்டீங்களே... இதுதான் இங்க சிங்கையிலும், என்னிடமும் நடக்கிறது. சில தெரிந்தவர்கள், பேசுபவர்கள் அருகில் இருந்தாலும் - நான் அதிகம் பேசுவதில்லை. அதே நேரம், முகம்தெரியாதவர்களுடன் அல்லது நம் மனதையொத்தவர்களுடன் பேசுவதாக நினைத்து நாம் வலை பதிக்கிறோம், சாட்டுகிறோம். இதை என் மனைவி அடிக்கடி குட்டிக்காட்டுவதுண்டு - ஏனோ திருந்தமாட்டேன் என்கிறேன். இது ஏன்...?

    அப்புறம், என்ன தலைவா Vignette V7 மேம்பாடு வெற்றிகரமா முடிந்துவிட்டதா? எல்லா TCL கோடையும் JSPக்கு மாற்றவேண்டும் என்று கேள்விப்பட்டேன்.

     
  • At 8:31 PM, Anonymous Anonymous said…

    (21.9.2004) சாகரன் said...

    //இது ஏன்...?// எல்லாம் ஒரு ஆரம்ப ஆர்வம்தான் அன்பு.. கொஞ்ச நாள் கழிச்சு சரியாயிடும்! :-)

    ம்.. சீரியஸான கொஞ்சம் ரீசன் இங்க எழுதியிருக்கேன் பாருங்க.

    //எல்லா TCL கோடையும் JSPக்கு மாற்றவேண்டும் என்று கேள்விப்பட்டேன்.//

    இல்லை அன்பு, 6.0.6 பேட்ச் இன்ஸ்டால் பண்ணி TCL கூட யூஸ் பண்ணலாம்!

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER