சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, September 08, 2004
பேர் பட்ட பாடு!
எங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது பட்ட பாடு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அது ஒரு பெரிய ரிசர்ச்...

வீட்டில் குழந்தையின் நட்சத்திரப்படி, 'வ,வா,வி' -ல பெயர் ஆரம்பிக்வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். சரி என்று பெயர்களை யோசித்தால், எத்தனையோ பெயர்கள்... அதிலும் முக்கியமாக, 'வித்யா,விமலா,வனிதா,வாசுகி,..." அப்படி இப்படி என்று ஏகப்பட்ட பிரபலமான பெயர்கள்!!

இதில் வேடிக்கை என்னவென்றால்... ஆளாளுக்கு ஏதோ பெரிய பேர் கண்டுபிடித்துவிட்ட மாதிரி இரண்டு நாளும், மாற்றி மாற்றி அவங்க யோசிச்ச பேரை எல்லாம் என்கிட்ட வந்து சொல்லிகிட்டிருந்ததுதான்! இந்தப் பக்கம் போனா, அவங்க அப்பா வருவார், ".. , 'விஜயா' வைக்கலாங்க, நல்ல பேரு, விஜின்னு கூப்பிடலாம், அப்புறமா நியூமராலஜிபடி, மாத்திக்கணும்னாலும் முடியும்"

"வித்யா நல்ல பேர்டா...எனக்கு பிடிச்சிருக்கு... அதையே வச்சிடலாம்" - இது என் அம்மா...

"எதை வேணா, வைங்க இந்த வினிதா, கினிதா-ன்னு சினிமாகாரங்க பேர் மட்டும் வச்சிராதீங்க" - இது அவங்க அம்மா...

"'தன்யா'ங்கற பேர் வைங்க.. நல்ல பேர்.." - இது அவங்க பாட்டி

"உன் பெரிய பாட்டிதாண்டா மறுபடி பொறந்திருக்கா, அவ பேரையே வை.." - இது என்னோட பாட்டி

"மச்சி, நியூமராலஜி பார்க்கணும்னு தோணிச்சுன்னா, அதையும் பார்த்துடுடா.." - இது நண்பன்..

என் கஸின்ஸ் மட்டும் என்ன சும்மாவா? "அண்ணா, வர்ஷிணி, விஷ்ருதி" என்று அவர்களுக்குத் தெரிந்த பேர்களை எல்லாம் அடுக்கிக்கொண்டிருந்தார்கள்.

குழந்தை வெளியுலகுக்கு வந்து ஹலோ சொல்லி இரண்டு நாட்கள் ஆகப்போகிறது. பெயர் சொல்லிவிட்டால், நாங்களே பர்த் சர்டிபிகேட் வாங்கித்தருகிறோம் என்கிறார்கள் ஹாஸ்பிடலில். இல்லையென்றால், பர்த் சர்டிபிகேட்டிற்கு அலைய வேண்டி வரும்!

****

இருந்த, குழப்பத்தில், நியூமராலஜி ஒரு வேடிக்கை...

சரி, நியூமராலஜில ஏதாவது நல்ல பேர் மாட்டுதா பார்ப்போம் என்றால் யாரைப்புடிக்கிறது? யார் திறமையானவங்க? மறுபடி நண்பர் ஒருவர் போனில் வந்தார்..." நியூமராலஜி, நான் என் பொண்ணுக்கு, டி.நகர் பஸ்ஸ்டாண்ட் தாண்டி இருக்குமே அந்த செட்டியார் தங்க நகை கடை அங்கத்தான் பார்த்தேன்.."

டி-நகரில் பேருந்து நிலையம் பக்கத்தில் செட்டியார் நகை கடையா... எனக்கு சுற்றிச் சுற்றி அன்று பிளந்தவெயிலில் மண்டை காய்ந்தது தான் மிச்சம். அப்புறம் அங்க இங்க விசாரிச்சப்போ, "உம்மிடி-பங்காரு நாயக்கன்" கிடைத்தது. அங்க போனா, ரிசப்ஷனிஸ்ட்...
'இங்க போங்கண்ணு' ஒரு பக்கம் கை காட்டறாங்க...

அவங்க சொன்ன இடத்தில ஒரு க்யூ... "ஏங்க இங்க பேர் வக்கறதுக்கு......."

"இருங்க.. வெயிட் பண்ணுங்க.. இவ்வளவு பேர் இருக்காங்க இல்ல....."

ம்.... வேற என்ன பண்றது. இவர்தான் பேர் வைக்க ஹெல்ப பண்றவர் போல.. தலையை படிய வாரி, நெத்தியில நல்லா பெரிச்சா சந்தனம்லாம் வச்சிருக்காரு.. வெள்ளை சட்டை..

நேரம் ஓடி, என் முறை வந்த போது, விசயத்தை சொன்னேன். கேட்டுக்கொண்டவர், "சரி, அட் ரஸ் குடுங்க.. "

"எவ்வளோ ஆகும் சொல்லுங்க..."

"ஒரு சிட்டிங் 500, அடுத்த மாசம் இதே தேதியில வருவாங்க"...

"என்னது?!?"

"இங்க ஒருத்தவங்க, வருவாங்க... மாசத்தில 10,11 தேதியில் மட்டும் இருந்து சொல்வாங்க.. அதுக்கு புக்கிங்க்தான் இது... "

அடப்போங்கய்யா... நான் எஸ்கேப்..!

"உனக்கென்ன நாங்க நியூமராலஜி பாத்தா பேர் வச்சோம்.. " - அப்பா சொன்னது இப்ப இன்னமும் நன்றாக உரைத்தது!

****

அடுத்த கட்டம், இண்டர்நெட்.. இணையம் இருக்கும் போது கவலை ஏன்?! ஒரு ரவுண்ட் கூகிள்,யாஹூ,அல்டாவிஸ்டா உதவியால் ரவுண்டு அடித்தும் பார்த்தாகிவிட்டது. ஒன்றும் ஸ்ட்ரைக் ஆகவில்லை. லிஸ்ட் எடுத்து வைத்ததுதான் மிச்சம்.

மறுபடி ஒரு நண்பன் "டேய், அப்பா பேர்ல கொஞ்சம் அம்மாபேர் கொஞ்சம் இப்படி ரெண்டையும் கலந்து ஒரு பேர் வச்சா...நல்ல ராசியா இருக்கும்"

ம்.. சரி டிரை பண்ணலாம்.. என் பேர்ல முதலும், அவங்க பேர்ல கடைசியை எடுத்துப்போட்டா "கல்பனா"-னு வர்து, வச்சிடலாமா...

"இது என்ன அர்த பழசா இருக்கு.. இதெல்லாம் வேண்டாம்.. நான் இந்த காம்பினேஷன்லாம் ஏற்கனவே டிரை பண்ணிட்டேன்... வித்தியாசமா இருக்கணும்;அதுவும் 2-4 எழுத்துக்குள்ள இருக்கற மாதிரி பாரு.." - என் மனைவி. அவங்க சொல்லிட்டா அப்பீலேது! ரைட்... அடுத்த ரவுண்ட்...

இந்த புக்ஸ்லாம் படிச்சு படிச்சு, நமக்கு கொஞ்சம் ஐடியா இருந்துச்சா.. சரி
நாமளும் ஹிக்கின் பாதம்ஸ் போனா, ஏதாவது பிடிச்சிடலாம், நினைச்சு... அங்கப் போனேன்...

"குழந்தைகளுக்கான பெயர்கள்"- ஆண், பெண், இந்து முஸ்லீம் இப்படி அப்படின்னு நிறைய புத்தகங்களும் இருந்தன...

ஆனால், நாங்கள் எதிர்பார்த்த, அந்த வித்தியாசமானப் பெயர் மட்டும் மாட்டவில்லை.....

நமக்கு சுலபமாகப் படிக்க வருவது தமிழ் புத்தகம் தானே.. அதனால அந்தப் பக்கமே சுற்றிக்கொண்டிருந்தேன்.ஆனால் கடைசியாகக் கிடைத்ததென்னவோ ஆங்கிலப்புத்தகம்தான்! மேனகா காந்தி எழுதியது... அதில் இல்லாத பேரே இல்லை என்னும் அளவிற்கு.. டிக்ஷனரி மாதிரி!

அதிலேர்ந்து ஒரு பேர் தேடணும், ஹாஸ்பிடல்ல நைட் முழுக்க இரண்டு மூணு மணி நேரம், அலசி, ஒரு பத்து பேர் செலக்ட் பண்ணியாச்சு...

****

அடுத்தநாள், குடும்ப மீட்டிங்....

முதல் பேர் " வாமிகா" - 'இது நல்லா இல்லை.. வாமி...மாமின்னு கிண்டல் பண்ணுவாங்க..' - அவங்க அப்பா...
இரண்டாவது "வந்தியா" - 'இதுவும் நல்லா இல்லை.. வந்தியா போனியான்னு கிண்டல் பண்ணுவாங்க' - இது அவங்க அம்மா...

இப்படியே அந்த மீட்டிங், ஒரு ரேஞ்சில் நாங்கள் செலக்ட் பண்ணிய 9 பேரையும் நிராகரிக்க...

கடைசிப் பேர்... அட... எல்லாரும் ஒ.கே சொல்லிட்டாங்க!!!

அது......
"வர்ணிகா" - கலர்புல், சொக்கத்தங்கம் என்று அர்த்தம்!

பேர்லாம் வச்சு, ஒரு வழியா எல்லாம் முடிஞ்சப்புறம், எங்க மாமா சொல்றாரு "அது என்ன வர்ணிகா? வெரோனிகா மாதிரி இருக்கு!! :-) (கர்ர்ர்ர்... நல்ல வேளை மாமா மீட்டிங்க்ல இல்லை.. இருந்திருந்தா இந்தப் பேரும் காணாப் போயிருக்கும் :-))

இதுக்கு நடுவில, காலமான அவங்க பெரியம்மா, எங்க 'சுப்பு' பாட்டி, ரெண்டு பேர் பேரையும் சேர்த்து, சுபஹேமா-னு ஒரு இரண்டாவது பேர் வச்சதும், அப்புறம் பாட்டி அவங்க இஷ்டத்துக்கு தன்யானு பேர் வச்சதும்...

ஒரு வருசமா, எல்லாரும்,வச்ச எந்தப் பேரையும் சொல்லிக் கூப்பிடாம, பட்டாணி, பட்டுக்குட்டி, தங்கம், கண்ணம்மா இப்படி ஆயிரம் பேரைச் சொல்லி கூப்பிட்டுகிட்டிருக்கறதும்.....

வேற கதை! :-)
posted by சாகரன் @ 9/08/2004 08:43:00 PM  
8 Comments:
  • At 3:25 PM, Blogger Chandravathanaa said…

    உங்கள் வீட்டிலும் இப்படியா?
    எனது தங்கைக்கு பெயர் வைக்கிற போது அப்பாச்சி சொல்லி விட்டா
    பாக்கிய பத்மினி அல்லது பர்வத பத்மினி என்று வை என்று. அப்பா திக்குமுக்காடிப் போனார்.
    ஆனாலும் ஒருவாறு சமாளித்து (குமாரி)பாமா என்று வைத்து விட்டார்.
    எனக்கும் சுமதி என்ற பெயர் வைக்கத்தான் அப்பா விரும்பினாராம். அப்பாச்சி
    சந்திரவதனா என்று வைக்க வேண்டுமென்று நின்றதில் இவ்வளவு நீட்டுப் பெயராகி விட்டது. இப்போது எனது வங்கிக்கார்ட்டுகள், காப்புறுதிக் கார்ட்டுகள்.. எதிலும் என் பெயர் அடங்க மறுப்பதால் தனியே சந்திரா செல்வகுமாரன் என்றுதான் எழுதுகிறார்கள்.

    அதுசரி சாகரனில் எங்கே கல்பனாவுக்கான தொடக்கம் இருக்கிறது.
    வர்ணிகா இது வரை கேட்காத நல்ல பெயர்.

    நட்புடன்
    சந்திரவதனா

     
  • At 3:32 PM, Blogger மீனாக்ஸ் | Meenaks said…

    நீங்கள் ஏன் இப்படி காரியத்தை ரொம்பத் தள்ளிப் போட்டு விட்டீர்கள்? என்னைப் பாருங்கள், இன்னும் கல்யாணமே ஆகவில்லை, பிறக்கப் போகும் மகளுக்குப் பேர் ரெடி!! :-))

     
  • At 3:52 PM, Blogger Kasi Arumugam said…

    மீனாச்சு,

    பேர் ரெடியா? உலகமே இன்னும் தெரியாத கொழந்தைப் பயலா இருக்கியேப்பா:))

    உண்மையிலேயே பேர் வைக்கற அன்னிக்குத் தெரியும் அதோட கொடுமை. அனுபவி ராஜா அனுபவி!

     
  • At 4:38 PM, Anonymous Anonymous said…

    Oh. peru vaikkirathil ivvalavu visayam irukkaa.. ?? nalla pathivu ezhuthi, ennnai maathiri aalungkalukku romba uthavi paNNi irukkiingka. :-)

     
  • At 3:49 AM, Blogger பரி (Pari) said…

  • At 7:44 AM, Blogger சாகரன் said…

    சந்திரவதனா...உங்களின் விரிவான கமெண்ட்டுக்கு நன்றி....
    இந்த பேர் பத்தின விசயம் நிறையவே இருக்கு... ஒவ்வொருத்தவங்களும் சொல்ல ஆரம்பிச்சா எத்தனையோ சுவையான சம்பவங்கள் வரும்...!

    என் பெயர் கல்யாண். சாகரன் என்பது தமிழுக்காக...
    நீங்க பேர் நல்லா இருக்கு சொன்னதை, எங்க வீட்ல சொல்றேன்.. சந்தோஷப்படுவாங்க! :-)

    மீனாக்ஷ்.....நாங்க முன்னாடி டிசைட் பண்ணி வச்சிருந்த பேர்லாம், குவார்டர் பைனல் கூட வர்லீங்க...! :-)

    காசி... ஏதேது, உங்கப் பக்கமும் நிறைய விசயம் இருக்கும் போல இருக்கே! :-)

    விருந்தினர்....நண்பா... நன்றி!

    பரி....சுட்டியை மட்டும் கொடுத்தா என்ன அர்த்தம் நண்பரே? ஏதாவது கருத்து சொல்ல வேண்டாமா? :-(

    அன்புடன்,
    சாகரன்.

     
  • At 2:42 PM, Blogger பரஞ்சோதி said…

    நண்பரே! உங்கள் இப்பதிவு நகைச்சுவையாக அமைந்துள்ளது. தற்போது அனைவரும் படும் பாட்டை அப்படியே சொல்லிவிட்டீங்க.

    ஏன் எங்க வீட்டிலும் இப்போ இதே நிலை தான், பையனுக்கு வித்தியாசமான பெயர், அத்துடன் அருமையான தமிழ் பெயர் என்று யோசித்தால் ஒன்றுமே பிடிபடவில்லை. பேசாமல் அந்த காலத்தை போல் இரண்டாம் பரஞ்சோதி என்று வைத்துவிடலாமா என்று யோசிக்கிறேன்.

     
  • At 11:23 PM, Anonymous Anonymous said…

    நன்றி நண்பரே...:-)

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER