சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, January 15, 2007
கலீல் அல்-முவைல் (Khalil)
லீல் அல்-முவைல் - இந்தப் பெயர் பல தினங்களுக்கு என் மனதில் பதியவே இல்லை. ஆனாலும் அந்த நண்பனின் முகம் மட்டும் பதிந்திருந்தது. என்னுடைய அலுவலகத்தின் நான் இருந்த சாரியின் மறுகோடியில் இருந்தது அவனுடைய இடம்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், 'சன் ஜாவா சர்டிபிகேசன் செய்யணும், உன் கிட்ட மெட்டீரியல் இருக்கா' என்று கேட்டு பேசியதுதான் அவனுடனான முதல் பேச்சு. டெக்னாலஜியில் ஆர்வமாக இருப்பவர்களுடன் என்னையும் அறியாமல் ஒரு நட்பு வட்டம் உண்டாகிவிடுவது எனக்கு பல வருடங்களாக ஏற்படும் நிகழ்வு. கலீல் டெக்னிகலாக திறமையானவனாக எங்கள் அலுவலகத்தில் சேரவில்லை.ஆனால் ஆர்வம் இருந்தது. ஆர்வம் எவரையும் திறமையானவராக மாற்றி விடும் என்பது அனுபவ உண்மை. அதே போலத்தான் தொடர்ந்து வந்த மாதங்களில் பல விடயங்களையும் கற்றுக்கொண்டு கலக்கி வந்தான்.

அவ்வப்போது - சில தளங்களை என்னிடம் காட்டி வருவான். முக்கியமாக கிடார் மாஸ்டர் ஒருவருடைய தளம். அதில் அவனுடைய பிளாஷ் மென்பொருள், இமேஜிங் திறமை இப்படி பல விதமாக புதுமைகளைப் புகுத்தியிருப்பான். நான் மனம் திறந்து பாராட்டுவதும், உன்னிப்பாக கவனித்து சில விசயங்களைச் சொல்லிப் பேசுவதும் அவனுக்குப் பிடித்திருக்க வேண்டும்.

நானும் பார்க்கும் போதெல்லாம், 'என்னாச்சு கலீல் உன் ஜாவா சர்டிபிகேசன்' என்று கேட்பது வழக்கம். அடுத்த மாசம், இந்த செப்டம்பரில், வர்ற ஜனவரியில் என்று பல மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் ஒரு முறை தேர்வு கூட எழுதிவிட்டான். ஆனால் பாஸாக வில்லை. வருத்ததுடன் இருந்தவனைத் தேற்றினேன் - "கவலைப்படாதே கலீல். என்னையே எடுத்துக்கொள். நான் இரண்டு முறை சிறிய இடைவெளியில் தோற்றவன். விடாது மூன்றாம் முறை முயற்சித்தபோதுதான் பாஸாக முடிந்தது. இப்பொழுதெல்லாம் நிறைய எக்ஸாம் டம்ப்கள்(Exam Dumps) கிடைக்கின்றன. சாம்பிள் டெஸ்ட்கள் இருக்கின்றன. இவற்றை பிராக்டிஸ் செய்தாலே போதும். மறுபடி முயற்சி செய்." ஆறுதல் அடைந்தவனாகத் தோன்றி 'சரி' என்று மனமில்லாமல் சொல்லி வைத்தான்.

திறமை அதிகரிக்கும் போது, வேலைக்கானத் தேவை இருப்பதில்லை. அவனுக்கும் அப்படியே. சில மாதங்களாக கொடுக்கப்படும் வேலை ஜுஜுபி யாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். நானும் என்னாச்சு உன்னுடைய ஜாவா என்று கேட்பதை நிறுத்தவில்லை.

*****

தேடிப்பிடித்து நிறுத்திய பார்க்கிங். அருகில் வேகமாக இடிப்பது போல ஒரு வண்டி வந்தது கண்டு திடுக்கிட்டேன். திட்டுவதற்காக கோவம் வரவழைக்க மனசு முயற்சித்துக்கொண்டிருந்தது. டிரைவர் சீட்டிலிருந்து இறங்கினான் கலீல். ஹே! ஹவ் ஆர் யூ! கேப் ஹாலக்!! - அல் ஹம்ததுல்லா! என்னை அரேபிய முறையில் கட்டிக்கொண்டு விடுவித்தான். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

"என்ன இந்தப் பக்கம்?"

"இது தெரியாதா நான் இப்ப இங்கேத்தான் வேலை செய்யறேன்."

"என்னது?!"

"ஆமா.. போன மாசம் ரிசைன் பண்ணிட்டு இங்க வந்து ஜாயின் பண்ணிட்டேன். நீ விடுமுறையில் இருந்தாய் அதனால்தான் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியவில்லை. மிகவும் ப்ரஷாக பீல் பண்ணுகிறேன். என்னை மதித்து பேசுகிறார்கள். எனக்கென்று ஒரு டீம் இருக்கிறது. மிகுந்த நம்பிக்கையாக உணர்கிறேன்."

"வாவ்.. கிரேட் யார். என்ன ஜாப். அதே ஜாவா தானா?"

"இல்லை. நான் இப்போ இங்கே ததாவுல் (ஸ்டாக் மார்கெட்டிங்) மேனேஜர். பிசினஸ் சைடு. இன்வெஸ்ட்மெண்ட் டிபார்ட்மெண்டில்."

"அட.. கலக்கல்தான்." - என் அலுவலகத்தில் அவன் வெறும் டெவலப்பர் மட்டுமே!

"நிறைய பேரு இங்கத்தான் இருக்காங்க. நம்ம ஆபீஸ்ல வேலை செஞ்சாங்களே ஹானி அல் சலாம், தாமர் யூசுப், ஹுசைன் அல் யாமி, ஷகீல் எல்லாரும் இங்கத்தான் வேலை பார்க்கறாங்க."

"போடு. அப்ப மொத்த டீமும் இங்க ஷிப்ட் ஆகிட்டீங்கண்ணு சொல்லு!"

"ஒவ்வொருததவங்க ஒவ்வொரு ஏரியா. நான் மொத்தமா பிசினஸ் பக்கம். அதனால அவங்களோடல்லாம் இண்டராக்சன் கிடையாது. உனக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம ஆபீஸ்ல என்னோட பிராஜக்ட் மேனேஜர் இருப்பாருல்ல அவர் கூட சி.வி கொடுத்திருக்காரு. ஆனா கண்டிப்பா என் டிபார்ட்மெண்ட்ல கொடுக்க மாட்டேன்."

"ம்.. :-)"

"இன்னிக்கு ஈவினிங் ஒரு ப்ளே இருக்கு வர்றியா? "

"என்னது பிளேயா? "

"ஆமா. நான் ஆக்டர் இல்லை. ஆனால் கிடார் ப்ளே பண்றேன்."

"ஓ.. நீ ஒரு மாஸ்டருக்காக வெப்சைட் பண்ணினியே! "

"ஆமா. அவருடைய மியூசிக் ட்ரூப்தான்."

எனக்கு மனசுக்குள் பட படப்பு அதிகமாகவே இருந்தது. சவுதியில் சவுதி ட்ரூப் ஒன்றினால் நடத்தப்படும் ட்ராமாவுக்கு செல்ல முடிந்தால்.. எவ்வளவு நன்றாக இருக்கும். இதைப் பற்றி இணையத்தில் எழுதலாம். எங்கேனும் குறித்து வைக்கலாம். ஆனால் மொழி புரியாதே! பரவாயில்லை. எல்லா மொழிகளிலும் ஒரே உணர்வுகள் தானே. கெஸ் பண்ண முடியாதா என்ன? ஐயையோ.. இன்னிக்கு டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங் உண்டே. போகணுமே. நான் கூட பேர் கொடுத்திருக்கேன். சே..

"கலீல்.. ஐ லவ் டு கம். ஆனால் இன்னிக்கு முடியுமா தெரியல."

"சரி முடிஞ்சா வா. இந்தா இன்விடேசன். அல்மாதர் ஸ்ட்ரீட் கடைசில வந்தால் இந்த ஆடிட்டோரியம் வரும். ஓ.கே கல்யாண். மறுபடி பார்க்கலாம். நேரம் கிடைக்கும் போது போன் செய்."

"ஸ்யூர்."

கார் கிளம்பிச் சென்றது. அவனுடைய நினைவு மட்டும் மனசில் தொட நின்று கொண்டிருந்தேன். பெரும்பாலும் இதுவே கலீலை நான் சந்திக்கும் கடைசி தருணமாக இருக்கக்கூடும். 'இனி அவனுக்கு ஜாவா சர்டிபிகேசன் தேவையில்லை' என்ற எண்ணம் மெல்லியதாக மனதில் தோன்றி மறைந்தது.
posted by சாகரன் @ 1/15/2007 05:16:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER