Tuesday, September 14, 2004 |
பேச்சுத்தமிழின் இனிமை! |
புதுசு கண்ணா புதுசு. இப்போது கிளிஷேயாக அதிகம் பேர் வைக்கும் தலைப்பு. ஏனோ தெரியவில்லை, இந்தத் தலைப்பில் எந்தப் பதிவைக் கண்டாலும், அல்லது எந்த விசயத்தைக் கண்டாலும் நான் பார்க்கக்கூடச் செய்வதில்லை...
இங்கு சவுதியில் சன் டி.வி வருகிறது... ஆனால், எங்கள் வீட்டில் வருவதில்லை. சன் டிவிக்கான கார்ட் இங்கு இப்பொழுது கிடைப்பதில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன், தமிழ் ஹோட்டல்களில் கூட விற்கப்பட்டு வந்த இந்த கார்ட் தற்போது ஸ்டாக் இல்லை என்றோ அல்லது இனி வராது என்றோ சொல்லப்படுகிறது. சவுதியில் தமிழர்களிடையே சமீபத்திய ஹாட் டாக் என்று ஒன்று இருக்குமானால் அது இந்த விசயம்தான் என்று நினைக்கிறேன்.
ஜெயா மற்றும் ராஜ் டி.வி உள்ள கார்ட் ஒன்று மாதிரிக்காக நண்பர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்தேன். எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக. அதில் 24 மணி நேர தமிழ் சினிமா சேனல் ஒன்று இருக்கிறது. 'டான் சினிமா' என்று பெயர். குவாலிடி என்னமோ ரொம்ப சுமார்தான்.
நேற்று சும்மா டெஸ்ட் பண்ணலாம் என்று ஆரம்பித்த என்னை கிட்டத்தட்ட கட்டிப்போட்டுவிட்டது அதில் வந்த ஒரு படம்.
பழைய படங்கள் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சாதாரணமாக படம் பார்க்கும் போது
அந்தப்படத்தின் ஒட்டுமொத்த காட்சியமைப்பு, எந்தக் கோணத்தில் காட்டுகிறார்கள், பாத்திரப்படைப்பு, பாத்திரங்கள் நடிக்கும் விதம், அவர்களின் முகபாவங்கள் இப்படித்தான் என் எண்ணம் ஓடும். சமீபத்திய படங்கள் பலவற்றை.. 20 நிமிடங்களுக்கு மேல் நான் பார்ப்பதில்லை. அந்த இருபது நிமிடங்களில் படத்தின் சொதப்பல் நன்றாகப் புரிந்து விடும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை... எப்படி பேசினார்கள் எப்படி பழகினார்கள் என்பது போன்றவற்றை அறிந்து கொள்வதில் நிறையவே சுவாரஸ்யம் இருக்கிறது.
பேச்சுத் தமிழ் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கிறது என்பதை அழகாகக் காட்டுபவை அந்தப் படங்கள் மட்டுமே. அது மட்டுமே அல்லாமல் அதில் வரும் பாடல் காட்சிகள், நாடகம் போன்ற செட் போட்டு எடுத்தாலும், அந்த எண்ணத்தை மறக்கச் செய்யும் நடிகர்களின் ஒன்றிய நடிப்பு என்று எத்தனையோ விசயங்கள் இதில் உண்டு.
நேற்று இரவு பார்த்தப் படமும் அதில் எந்த விதத்திலும் குறைந்ததாகத் தெரியவில்லை. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் கூடத் திரும்பாமல் ஒன்றிப்பார்த்துக் கொண்டிருக்க வைத்தது.
நான் பார்க்க ஆரம்பித்த போது, ஒரு அண்ணனும் தங்கையும் நீளமான கிராமத்து ரோட்டினூடே மாட்டுவண்டியில் பாடிச்செல்லும் காட்சி ஆரம்பித்தது.... பாடல்களுடன் ஆரம்பித்தப்படம், ஒரு கல்யாண சீனில் வந்தது. முத்துராமன் அண்ணணாக நடித்து இருந்தார்... யப்பா... என்ன ஒரு வேகமான உற்சாகம்;தன் தங்கைக்கு தன் கையால் தான் பார்த்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கும் போது ஏற்படும் உற்சாகத்தை, அப்படி ஒரு அற்புதமான நடிப்பால் காட்டிக்கொண்டிருந்தார். தொடர்ந்து காட்சிகள் மாறி, சிறைசென்று... பின்னர் அவர் தங்கையை பகைவனின் மகனே மனம் முடிப்பது என்று காட்சிகள் நீண்டன. திரும்பிவந்த அண்ணன்; வீட்டினரின் தவறான கண்ணோட்டத்தால் மரணிக்கப்போகும் தங்கை; காப்பாற்றும் அண்ணன் இப்படி நிறையவே திருப்பங்களுடன் படம் சென்றது.
ரொம்பவே ரசித்துப் பார்க்க வைத்தது அதில் பேசப்பட்ட வசனங்களும் பாடல்களின் இனிமையும்தான். என்ன ஒரு சுவாரஸ்யமான வசனங்கள்... எல்லா பாத்திரங்களும் இயல்பான வசன நடை. பேச்சுத் தமிழ் கூட அழகாகத் தான் அப்பொழுது இருந்திருக்கிறது. இது போன்ற பழைய படங்களின் கொஞ்சம் திணறுகின்ற இடம் என்று சொன்னால் உணர்ச்சிகளைக் கொட்டும் இடம் மட்டும்தான். அது காதலாகட்டும், அல்லது சோகமாகட்டும்... அந்த இடங்களின் வசனங்கள் நிறையவே செயற்கையாகி விடுகின்றன. அப்படி இருந்தாலும் ரசிக்க முடிவதற்குக் காரணம் அந்த வசனங்களில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளும், உவமைகளும் அப்படி ஒரு ரசனையோடு எழுதப்பட்டு பேசப்படுவது!
ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் எந்த ஒரு கதையும் பெரிதாக இருப்பதில்லை. உணர்ச்சிகளினால் நகர்த்தப்பட்டு, சூழ்நிலையால் விளையாட்டுக்கு ஆளாக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கைதான் பெரிதும் கதையாக்க முடியும். சினிமா, நாடகம் போன்ற கதைகளில் இன்னமும் நிறையவே மாற்றங்கள் தேவைப்படும்.சாதாரணமாக மனிதர்களால் உணர்ச்சிகளை குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயலாகத் தான் காட்ட முடியும். வார்த்தையாகப் பகிர்ந்து கொள்ள முடியாது. நாடகத்திலிருந்து சினிமாவுக்கு மாறிய கால கட்டம் அல்லவா? அந்தக் காலத்துக் கதைகளிலும், உணர்வுகளை வார்த்தையாகப் பகிர்தலில் உள்ள கஷ்டம் அனுபவித்திருப்பார்கள் போலும்; அதனால்த் தான் நிறைய பேசி ஒரு குறிப்பிட்ட லெவல் தாண்டி அது பாட்டாக மாற்றப்படுகிறது. பாடல்கள் என்றால் சும்மா இல்லை. இனிக்கும் தமிழில் சுலபமான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட பாடல்கள். கதையின் போக்கிற்காகவே எழுதப்பட்ட ரசனைச் சிதறல்கள்.
இந்தப்படத்தில் நிறையவே பாடல்கள் இருந்தன என்றாலும், நான் முன்னரே கேட்டிருந்த பிரபலமான சில பாடல்கள்...
"அமுதும் தேனும் எதற்கு?.... .... தமிழ்போல செந்தேனாக நீ இனித்திடும் போது..."
"வாழ்க்கையே அலை போலே... "
நான் அதிகம் கேட்டிராத சில பாடல்களும் ரொம்பவே இனிமை...
குழந்தையை வேறு ஒருவர் வளர்க்கக் கொடுத்துவிட்டு திரும்புகிறாள் தாய். அங்கு வேறு ஒரு தாய் குழந்தையை வைத்து பாடிக்கொண்டிருப்பதாக ஒரு காட்சி... இந்தப் பாடலுடன்...
"மண்ணுக்கு மரம் பாரமா?...
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்கு காய்... பாரமா?
பெற்றெடுத்த தாய்க்கு... குழந்தை பாரமா?!"
முத்துராமன் ஒரு காட்சியில், சரோஜா என்ற பெண்ணின் அறையில் தனித்திருக்கும் போது, கிண்டலடிப்பார்...
"இந்தக் காட்சியில் காதல் வசனம் பேசி, பாட்டெல்லாம் பாட வேண்டாமா?:-)" என்று.
ம்... கருப்பு வெள்ளையிலேயே இதை சகஜமாக கிண்டல் அடித்திருக்கிறார்கள்!
திருவள்ளுவரின் குறளில் ஒரு கருத்து என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது!
மனைவி கணவனைப்பார்த்து கேட்கிறாள்... ஏன் இந்த (நெற்)கதிர் தலை குனிந்திருக்கிறது என்று!
அதற்கு கணவன் என்ன சொல்ல வேண்டும்?
அவள் கேட்பதற்கு பதிலாக உண்மையான காரணம் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது! அவளுக்குத் தெரியாததா என்ன?
அதனால் கணவன் சொல்கிறான்.... 'கண்ணே.. உன் முகப்பிரகாசம் கண்டு வெட்கிக் குனிந்திருக்கிறது' என்று!
எப்படி ஜிவ் வென்று இருந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு!!
காதல் காட்சிகளில் செயற்கைத் தனம் நிறையவே இருக்கிறது என்று தோன்றினாலும், கணவன் மனைவியிடையே புகழ்ச்சி என்பதும் முக்கியம் என்ற கருத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.
ம்... ஒரு பழைய படத்தினைப்பற்றி இப்படி எழுதியிருக்கிறேனே என்று எனக்கே தயக்கமாகத் தான் இருக்கிறது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. நான் தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்த நேரம், "கவுண்டமணி செந்தில்" டாப்பில் இருந்தார்கள். படிக்கும் காலத்தில் சினிமா பார்க்க எனக்கு அதிகம் வழி இல்லை.
இப்பொழுதும் கூட இந்தப்படத்தின் பெயர் என்ன என்பதோ, முத்துராமன், ராமசாமி தவிர்த்த வேறு யார் பேருமோ எனக்குத் தெரியவில்லை!
எனக்கு அடுத்த தலைமுறை இன்னமும் மோசமாக இருக்கப்போகிறது. சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் வித்தியாசம் தெரியாத 18 வயது கஸின் எனக்கு உண்டு!
|
posted by சாகரன் @ 9/14/2004 01:11:00 AM |
|
5 Comments: |
-
்சாகரன்,
இந்த பதிவினை திஸ்கியில் எழுது விட்டீர்களா என்ன. மொசில்லாவில் சில பத்திகளை வாசிக்க முடியவில்லையே.
நவன் பகவதி
-
உண்மைதான்... நவன்...
இதோ மாற்றி விடுகிறேன்...
- சாகரன்.
-
சாகரன், இந்த show/hide ஜிகினாவேலை நல்லா இருக்கே, நம்ம வாசகர் பக்கத்திற்கு ஆகும் போல இருக்கே. சுட்டுடவா? -காசி
-
என்ன காசி இப்படி கேட்டுட்டீங்க?! :-) சொல்லாமல் சுடுவதுதானே இணைய மரபு!!! :-))
நான் இங்கேர்ந்துதான் சுட்டேன்.... : URL- சாகரன்
-
கலர் கலராய் கலக்குகிறீர்கள் சாகரன்...வாழ்த்துக்கள்.
கீப்பொட்டி.. மேப்பொட்டி..பின்னூட்டம் எல்லாம் ஜோராகீதுப்பா.
|
|
<< Home |
|
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|
்சாகரன்,
இந்த பதிவினை திஸ்கியில் எழுது விட்டீர்களா என்ன. மொசில்லாவில் சில பத்திகளை வாசிக்க முடியவில்லையே.
நவன் பகவதி