சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, January 20, 2007
எழுத்துக்கூடத்தின் சந்திப்பு -3

அடுத்து வந்த வாரங்களின் பார்வைகள் - எழுத்துக்கூடத்தின் முக்கிய ஆர்வலர், என் இனிய நண்பர், ரியாத் வாழ் நண்பர்களுக்கு மிகவும் அறிமுகமான 'லக்கி ஷாஜஹான்' அவர்களால் தொடரப்படுகிறது (இங்கு எழுதப்போகிறேன் என்று லக்கியிடம் ஏற்கனவே அனுமதி வாங்கிட்டம்ல :-))


எழுத்துக்கூடத்தின் சந்திப்பு
-3
ஒரு பார்வை. (March 3 2006)

- லக்கி ஷாஜஹான்

எ.பட்டறை மூன்றாம் கூட்டம் என் பார்வையில் - லக்கி ஷாஜஹான்


ரியாத் எழுத்துப்பட்டறையின் மூன்றாம் கூட்டம் நேற்று அக்காரியா சமூகவியல் கூடத்தின் முற்றத்தில் நடைபெற்றது.. என்னைப் போல் இலக்கியவாதி ( சரி சரி அடங்குடா... ) நண்பர்கள் பலர் கலந்து கொண்டு தம் தம் கருத்துகளை சிறப்பாக பகிர்ந்தளித்தார்கள்..

முதல் இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் இந்த முறை நிச்சயம் போயே தீருவது என்று நானும் கவிஞர் ஹ.பஃகுருதீனும் சரியான நேரத்துக்கு சென்று ஆஜராகி விட்டோம். இலக்கிய கூட்டம் என்றாலே 'சிறப்புரை,இலக்கியத் தமிழ்,அது இதுன்னு கொன்னுடுவாய்ங்கப்பா..' என்று இது போன்ற கூட்டங்களை தப்பாக புரிந்து வைத்திருக்கும் என் போன்ற இலக்கியோபோஃபியா பாமரன்களுக்கு இவர்களின் சிறப்பான அணுகுமுறைகள் ,செயல்திட்டங்கள், தெளிவான நிரைவுவரைகள் ஆச்சரியத்தை தந்தது..

முதல் கட்டமாக வாரந்தோறும் இலக்கிய சாம்ராட்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் ( விகடன் தொடர் )அறிமுகப்படுத்தும் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்பு , நடையமைப்பு, கதையில் கவர்ந்தவை போன்ற அம்சங்களை ரசிக்க கற்று தருகிறார்கள். ஒருவர் படிக்க அதன் பிரதிகள் எல்லோருக்கும் தரப்பட்டு முக்கியமான இடங்களில் படிப்பது நிறுத்தப்பட்டு உவமைகள் ரசிக்கப்பட்டு உணர்வுகள் வியக்கப்பட்டு அடடா மிக அருமையான மணித்துளிகள் அவை.. இம்முறை ஐயா மாசிலாமணி அவர்கள் இதை திறம்படவே செய்தார்கள். சுயம்புலிங்கம் என்ற இலக்கிய உலகம் அதிகம் அறியாத ஒரு எழுத்தாளரின் சிறுகதை பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் பார்வை நேற்றைய நிகழ்வுக்கு எழுத்துப்பட்டறையில் இவ்விதம் விவாதிக்கப்பட்டது..

சாதாரணமாய் எழுதும் ஆர்வம் கொண்ட எல்லோருக்கும் இது போன்ற பயிற்சிக் கூடங்கள் ஒரு வரப்பிரசாதம்.. பயன்படுத்திக் கொள்பவர்கள் படைப்பாளிகளாகலாம்.. படைப்பாளிகள் இன்னும் தங்களை பட்டை தீட்டிக் கொள்ளலாம்.. ஏனெனில் அதற்குரிய எல்லா விஷயங்களும் இங்கு சுவையாக அலசப்படுகின்றன.. ஆங்கில எழுத்தாளர்களின் படைப்பு நடை கூட விட்டுவைக்கப்படுவதில்லை. நல்ல விஷயங்கள் எட்டுத் திக்கிருப்பினும் இங்கொணர்ந்து ஆய்வோம் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

திருமதி கீதா சங்கர் ஏற்பாடு செய்திருந்த சிறிய தேனீர் பகிர்தல் இடைவேளையில் கூட நேரம் விரயம் செய்யாமல் பேச்சு புற்று நோய் உலகம், சித்த மருத்துவம், ஜெயகாந்தன், எழுத்தாக வந்த படைப்புகள் திரையில் இருட்டடிப்பு செய்யும் அவலம், சுனாமி என்று பல்வேறு பாதையில் பயணித்தது இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.. எவ்வளவு தகவல்கள், எவ்வளவு பகிர்தல்கள் ...' உலகம் ரொம்ப பெரிசு நைனா ' என்று சொல்லியபடியே என் திறந்திருந்த வாய்க்குள் அடிக்கடி போய் வந்தார் ஒரு ஈயார்.

ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு கட்டுரை என்ற பொருள் கொண்டு வாரம் ஒரு முறை ஆய்வோம், பிறர் படைப்புகள் அல்லது நமது படைப்புகள் பற்றி நிறை,குறை,நடை பற்றி அப்போது பேசுவோம் என்ற ஐயா மாசிலாமணி அவர்களின் கருத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிகம் தமிழ் நாவல்கள் தொகுப்பு வைத்திருக்கும் அன்பர் ஒருவரும், சிலப்பதிகாரம் பற்றி ஆய்வு செய்து அதிகமதிகம் கட்டுரைகள் படைத்திருக்கும் நண்பர் ஒருவரும் நேற்றைய புதுமுகங்களாக அறிமுகம் ஆனார்கள். 'தன்னேரில்லாத தமிழ்' எப்படியெல்லாம் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறது பாருங்கள்..

எழுத்துப்பட்டறையின் இன்றைய கூட்டத்தில் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று வரும்போது நண்பர் பஃகுருதீனீடம் கேட்டேன். எஸ்.ராமகிருஷ்ணனின் நடை என்ன என்பதும் இனி பெயரே போடாமல் அவர் படைப்பு வந்தால் கூட தாம் அதை கண்டுபிடித்துவிட முடியும் எனவும் கூறினார்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. விரைவில் கவிஞர் பஃகுருதீனும் சிறுகதை எழுத கூடும்..

அடுத்த கூட்டத்தில் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் அதிகம் பேசப்படும் தி.ஜானகி ராமன் படைப்புகள் பற்றி அலசப்போவதாக அறிவித்தார்கள்.. மோகமுள்,அம்மா வந்தாள், செம்பருத்தி போன்ற படைப்புகள் செய்து அதிகம் பேசப்பட்டவர் ஜானகி ராமன்.. நிச்சயம் அடுத்த கூட்டம் தித்திப்பான விருந்தாகவே இருக்க கூடும்.. மார்ச் 17 ஆம் தேதிக்கு இன்னும் ப...தி...மூ...ன்....று நாள்...!
posted by சாகரன் @ 1/20/2007 05:50:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER