சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Friday, January 12, 2007
Barbe-Q வாசனையும் இலக்கிய கூட்டமும்
ஞானரதம் 1970 ஜனவரியில் துவக்கப்பட்டது. ஜனவரியிலிருந்து முதல் மூன்று இதழ்கள் ஆசிரியர் குழுவின் பெயர்கள் இல்லாமலேயே வெளிவந்தன. நான்காம் இதழிலிருந்து நிர்வாக ஆசிரியராக தேவ சித்ரபாரதி (அப்பாஸ் இப்ராஹிம்) பணியாற்றினார்.,...........
............பதிப்பாசிரியராய்ச் சித்ரபாரதி ஜெயகாந்தனுக்கு அமைத்த களன் ஒரு புதிய கருத்துச் சாளரத்தைத் தமிழில் திறந்து வைத்தது......

http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_116793739018173033.html


*******

'தம்பி என்ன பண்றீங்க?'
'பைனல் இயர் சார். பிராஜக்ட்க்கு கம்பெனி தேடிக்கிட்டிருக்கேன்'
'நம்ம கம்பெனியிலேயே சேர்ந்துடறீங்களா?'

சட்டென்று வாய்ப்பு கிடைத்தது. கூட இருந்தவர்கள் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க சென்னையில் எவரையும் தெரியாத அவனுக்கு - சும்மா இருக்கப் பிடிக்காமல் லொட்டு லொசுக்கு கணினி வேலை செய்ய வந்தவனுக்கு - இந்த வாய்ப்பு பெரிய்ய்ய்ய்ய விசயம்.

சுமார் 65 வயது மதிக்கத்தக்க இளைஞர் அவர். அவ்வளவு சுறு சுறுப்பு. கதர் ஜிப்பா, வேட்டி.கண்ணியமிக்க தோற்றம். சரியென்று தலையசைத்தான்.

அறையிலிருந்து வெளியேறிய பின்னர் சுற்றிப்பார்த்தான். அது ஒரு வீட்டின் மாடிப்பகுதி. அதனை அலுவலகமாக மாற்றியிருந்தார்கள். மாடியின் ஒரு ஓரத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு ஒரு ரூம் இருந்தது. அங்கே ஒரே புத்தகக் குவியல்களாகக் கிடந்தது. பிற்காலத்தில் அவன் வேலை பார்த்த 3 மாதங்களும் அவனுடைய புதையல்களாக அந்த குப்பைகள் இருக்கப்போகின்றன என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஆம். அத்தனையும் அற்புதமான புத்தகங்கள். தமிழ் ஆங்கிலம் என இறைந்து கிடந்தன. கட்டு கட்டி போடப்பட்டிருந்த குவியலில் ஒரு புத்தகம் பிதுங்கிக்கொண்டிருந்தது. அதன் மேலட்டையில் - என் ஹஜ் பயணம், ஹாஹியார் அப்பாஸ் இப்ராஹிம்.

******

அவரை இத்தனை வருடம் கழித்து பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. தொடர்பு கிடைத்து நேரில் சந்தித்தப்போது 8 வருடங்களுக்கு முன் பார்த்த கம்பீரத்தில் எந்தத் தொய்வும் இல்லை.

"ஏதாவது செய்யணும் தம்பி.சோம்பேறித்தனமா இருந்துடக் கூடாது. நல்ல திறமையான மக்கள் நம்மூர்ல இருக்காங்க. அவங்கள நல்லா எழுதக்கூடியவங்களா நாம தயார் பண்ணனும். புதிய விசயங்கள தமிழ்ல எழுதணும். முக்கியமா தொழில்த் துறை சார்ந்த புத்தகங்கள் நிறைய வரணும். அதுக்கான முயற்சிகள்ல ஈடுபடுங்க. நான் உங்க கூட இருந்து எப்படி செய்யணும்னு சொல்லிக் காட்டறேன். அதுக்கப்புறம் நீங்களே புடிச்சுக்குவீங்க.."

உற்சாகப் புதையலாக எல்லா நேரமும் அவரிடமிருந்து ஏதாவது ஐடியாக்கள் உதிரிந்து கொண்டே இருக்கும். அதில் ஒரு ஐடியா - எழுத்துக்கூடம்!

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ரியாத் வாழ் நண்பர்களில் எழுதுவதற்கு ஆர்வமுள்ளவர்கள், எழுத கற்றுக்கொடுக்கக்கூடியவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இவர்களை ஒன்று கூட்டி ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய வட்டம். சுமார் ஓராண்டுகளுக்கு முன்னர் உருவாகி இன்று வரை பல ரியாத் இலக்கிய ரசிகர்களை ஆட்டிக்கொண்டிருக்கும் ஒரு உற்சாக பானம்!

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 முதல் 5:30 மணி வரை இலக்கிய ரசனை மீட்டிங் என்பது கட்டாயம் போதைதான்! இலக்கிய ரசிப்பு இருக்கும் இடத்தில் காழ்ப்பு இல்லை பொறாமை இல்லை நீ நான் போட்டி இல்லை - தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களின் எழுத்துக்களை பற்றி தெரிந்து கொள்வதும் அவர்களது படைப்பினை அசைபோடுவதுமே நோக்கம். எழுத்துக்களை எழுதுவதற்கு முன் எழுதுபவர்களைப் படி என்பதே அடிப்படைப் பாடம்.

முதல் கூட்டம் குறித்து என்னிடம் குறிப்பில்லை. ஆனால் இரண்டாவது கூட்டம் முடிந்தவுடன் மறக்காமல் இதனைப் பற்றி எழுதிவிட வேண்டும், இல்லையெனில் பேசியதும் புரிந்ததும் காற்றில் பறந்துவிடும் என்று தோன்றியது. அந்தக் குறிப்பு இதோ:

*******
தேதி: பிப்ரவரி 18 2006
எழுத்துக்கூடத்தின் இரண்டாம் கூட்டம்

பிப்ரவரி மாதத்தில் கிளுகிளுக்கும் குளிர்காற்று ஆச்சரியப்படும் விதத்தில் அங்கிருந்தோர் அனைவரையும் தழுவிச்சென்று கொண்டிருந்தது. அது ஒரு மதியமும் மாலையும் கலந்த நேரம். நரகாசுரனை மரணிக்கச்செய்ய அப்படி ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்ததாக கதை உண்டு. ரியாத் தமிழ் சங்கம், சோம்பல் என்னும் அசுரனை அழித்து எழுத்தாளர்களை உருவாக்கத் தேர்ந்தெடுத்தெடுத்த வெள்ளிக்கிழமை, அலுவலகம் செல்லாத நாளின் ரியாத் நகரின் மயான அமைதியை அனுபவிக்கும் சுகத்தினை கெடுக்கக்கூடியதாக இருக்குமோ என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அந்த கூட்டம் முடிந்த பின்னர், கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சும் கருத்துக்களும் அப்படிப்பட்ட எண்ணங்களையே இல்லாமல் செய்துவிட்டிருந்ததுதான் உண்மை.

அன்றைய தினம் தலைப்பு ' எஸ்.ரா எழுதிய கதாவிலாசத்தின் இரண்டாம் கதாசிரியர், திரு. ஆ.மாதவன் அவர்கள் பற்றி. அழுத்தமாக ஏற்றத்தாழ்வுகளுடன் சுவாரஸ்யமாக அனுபவித்து படித்துக்கொண்டிருந்தார் நண்பரொருவர். ஆ.மாதவன் அவர்களைத்தேடி எஸ்.ரா பயணித்த விபரம் அந்த கட்டுரையில் முதலில் எழுதப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தின் அந்த சாலையில் அப்படி ஒரு மனிதரை யாருமே அறிந்திருக்கவில்லையாம்! 'பாண்டியா' என்று கேட்டார்கள் என்று மட்டும் சொல்கிறார். பேச்சு இப்பொழுது 'பாண்டி' பற்றி திரும்பியிருந்தது. தமிழர்களை பாண்டியர்களாக்த்தான் திருவனந்தபுரத்தினர் குறிக்கிறார்கள் என்பது எனக்கு புதிய செய்தி. 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்ற பழமொழிக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கக் கூடும். ஒன்று சோழியன் என்ற சோழி உருட்டும் ஜோசியக்காரரின் குடுமி காரணமில்லாம ஆடாது என்பதாகவும், மற்றொருந்து 'சோழ நாட்டி'னரின் குடுமி என்ற அர்த்தமும் இருந்திருக்கலாம். 'தஞ்சை குசும்பு' என்பதும், தஞ்சை வசவு நடை என்பதும் தனித்தன்மை வாய்ந்ததாக பேசப்படுவதுண்டு! கூடவே 'கொல்டி' என்று நாம் கூப்பிடுவதுபோலத்தானே அவர்களும், என்று தோழி ஒருவர் கூற, உண்மைதானே என்று எல்லோருக்கும் தோன்றியது!

எஸ்.ரா - வின் கதா விலாசத்தில், தெரிந்து கொள்ளவேண்டிய, எழுத்தார்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விதயங்கள் நிறையவே இருக்கிறது. ஒரு எழுத்தாளரை வாசகர் தேடிச் செல்வது என்பதில் தவறில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தன்னம்பிக்கையும், எழுத்தார்வமும் நிரம்பிய, எழுதவும் தெரிந்துவிட்ட பலர் அதை ஒரு மேம்போக்காக மட்டுமே வைத்துக்கொள்வதென்பது இயல்பு. ஆனால், எஸ்.ரா இந்த கதாவிலாசப் பக்கங்களில் அவருடைய உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார். ஆ. மாதவனை தேடிக்கொண்டிருந்தவர், அவருடன் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, தேடி அலைந்ததை முகத்துக்கு நேர் சொல்ல கூச்சப்பட்டிருந்த அனுபவத்தை பதிவு செய்திருப்பது, அவரது அனுபவம் வாசகர்களை நேரடியாகச் சென்றடையும் உத்தியாகவும் மாறிவிடுகிறது. தன்னைப் பொருத்தி வைத்து பார்க்கும் வாசகனாக இந்த கட்டுரைகளை எஸ்.ரா எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

'கதாவிலாசம்' விமர்சன பாணியில் எழுதப்படாமல், ஒரு முன்னுரை, கதை, அனுபவத்துடனான முடிவு, எழுத்தாளர் குறிப்பு என்று வித்தியாசமான ரசனைப்பதிவாக எழுதப்பட்டதனால்தான், தொடர்ந்து வாசிப்பும், உள்வாங்குதலும், ரசிப்பும், விமர்சிப்புமாக அதனை அலச முடிகிறது!

வாசகனும் எழுத்தாளனும் சமதளத்தில் இருந்திட வேண்டும். அப்பொழுதுதான், எழுத்தாளன் சொல்வது வாசனை சரியான விதத்தில் 'ரீச்' ஆகும். 'பக்கிம் சந்திர'ரின் எழுத்துக்கள் புரியவில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, தாகூரின் பதில், 'அவர் எனக்காக எழுதுகிறார், நான் உனக்காக எழுதுகிறேன்' என்பதாக இருந்தது என்று தாகூரின் எடுத்துக்காட்டுடன் பேசிக்கொண்டிருந்தார் டாக்டர். அப்பாஸ் இப்ராஹிம்.

பேச்சு பல தளங்களில் பயணித்த வண்ணமிருந்தது. தோழி ஒருவர், பாலகுமாரன் எழுத்துக்களில் தெரிக்கும் காமம், ஜெயகாந்தனின் எழுத்துக்களில் தெரிவதில்லை என்பதாக கருத்து தெரிவித்தார். எனக்கு ஏற்புடையதாக இல்லை. பாலகுமாரன் 'செக்ஸ்' எழுதுகிறார் என்பது பலர் வைக்கும் சராசரி வாதம். ஆனால், பாலகுமாரன் எங்குமே அத்துமீறவில்லை என்பது என் கருத்து. கணவன் மனைவியிடையே உறவு என்பதும், நெருக்கம் என்பதையும் காட்டுவதற்கும், இன்னமும் சபையில் பேசமுடியாத ஏராளமான கருத்துக்களையும் தமிழ் எழுத்துக்களில் பாலகுமாரன் அளவுக்கு எவருமே பதிவு செய்ததில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை!

பேச்சு ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' பக்கம் சென்றது. எம்.ஜி.ஆர் படம் பார்த்து முயங்குவதற்கு ஒப்புக்கொள்ளும் பேதமையான காலகட்டத்தை சாடிய ஜெயகாந்தனின் எழுத்து மற்றும், அக்னிப்பிரவேசமாகி - சில நேரங்களில் சில மனிதர்களாக மாறி - கங்கை எங்கே போகிறாள் என்று திரிந்த ஜெயகாந்தனின் எழுத்து போன்றவை பேசப்பட்டது. அக்னிப்பிரவேசத்திற்கு வந்த எதிர்ப்புகளுக்கு பதிலடியாக
'நவகாளி' இளைஞர்கள் போன்ற 'வீரர்களை' நம்பித்தான் அந்த கதாநாயகியை நான் அக்னிப்பிரவேசம் செய்வித்தேன். உங்களைப் போல கோழைகளை நம்பியல்ல.' என்று சொல்லியதாகக் கேள்விப்பட்டபோது, 'ஜெயகாந்தன்' கதைகளை படிக்கும் போது ஏற்பட்ட அதே உணர்வு மீண்டுத் திரும்பியது. ஜெயகாந்தனின் கதைகள் இப்பொழுது படித்தாலும் கூட, கண்ணெதிரே நடப்பதாக, புரட்சியான கருத்துக்களாக, இந்த விநாடி வரை இப்படி எழுதக்கூடிய மாற்று எழுத்தாளர் இல்லையே என்ற எண்ணத்தை தோன்றும் படியாகத்தான் இருக்கின்றன.

தொடர்ந்து பேச்சு, பாலச்சந்தரின் திரைப்படங்கள் என்று வேறு பக்கம்
பயணித்தாலும், பாரதி சகாப்தத்தில் - பாரதியை மையமாக வைத்து, ஒரு புகழ்வாய்ந்த இலக்கியப்பரிசு உருவாக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தினை அனைவர் மனதிலும் விதைத்துவிட்டு எழுந்தார், எழுத்துக்கூடத்தின் மையமாக இருந்து நடத்திய டாக்டர். அப்பாஸ் இப்ராஹிம்.

கதா விலாசம் தவிர, வேறு ரசிக்கத்தக்க விபரங்களையும் படிக்கலாமே. கதாவிலாசம் படிக்கும் நேரம் குறுகியதாக மாறிவிடும்போது, தொடர்ந்து சிறந்த எழுத்தாளர்களின் எழுத்து நடையை அவதானித்துக்காட்டும் சிறுகதைகளையும் படிக்கலாமே என்ற எண்ணம் பளிச்சிட்டது.

கூட்டம் முடிந்து கூடத்திலிருந்து வெளியே வரும்போது, 'Barbe-Q' வாசனை மூக்கைத் துளைத்தது. சிறு பிரட்டலைத் தந்தது. இந்த வாசனை மெல்லியதாக கூட்ட நேரத்திலும் வந்திருக்கக்கூடும், ஆனால், 'செவிக்குணவு இல்லாதபோது' என்ற நிலை எங்களுக்கு வரவில்லையாதலால், அது உறுத்தலாக இல்லை போலும்'!

---------****---------

இனி வரும் வாரங்களில் எழுத்துக்கூடத்தின் வாரா வாரம் பேசப்பட்டவை குறித்த - மீட்டிங் மினிட்ஸ் - என் வலைப்பதிவுகளில் வெளிவரும்.
posted by சாகரன் @ 1/12/2007 04:09:00 AM  
1 Comments:
  • At 10:18 PM, Anonymous Anonymous said…

    Welcome back

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER