சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, January 29, 2007
டாம் அண்ட் ஜெர்ரி! (Tom & Jerry)
"அப்பா நான் ஜெர்ரி நீ டாம் ஓ.கே?......... ஒ.கே! இப்ப வரை சொல்றேன்."

ரோஸ்கலர் சிலேட். எழுதவும் ஓரமாகத் தூக்கினால் எழுத்து மறைந்துவிடுவதுமான அமைப்பு. நான் 'டாம்' படத்தின் முகத்தினை வரைய ஆரம்பித்திருந்தேன்.

".. இங்கப் பாரு வர்ணிக்காக்கு இருக்கில்லோ அதே மாதிரி ஹேர் வரையணும், ஓ.கே? "

"டாம்க்கு ஏது முடி? நோ கிடையாது."

"ச்சூ. உண்டு. நீ போடலைனா நான் பேசமாட்டேன் போ. உனக்கு சாக்லேட் தரமாட்டேன்.... குடு. நான் வரையிரேன் பாரு. "

என்னிடமிருந்து சிலேட்டை பிடுங்கினாள். டாம் படத்தின் தலையில் இரண்டு நீளமானக் கோடுகள் வரைந்தாள். பின்னர் உடம்பினை வேகமாகக் கோடு இழுத்தாள். அது டாம் படத்தின் வயிற்றினைக் கிழித்தது போல இருந்தது. சட்டென்று சிலேட்டின் முனையைப் பிடித்து தூக்கினாள். டாம் அழிந்தது.

"இப்ப ஜெர்ரி போடலாம். நான் தான் வரைவேன் ஓ.கே"

அவளின் பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. இன்று அவள் பள்ளியில் 'வொய்ட் டே'! அதாவது வெள்ளை ட்ரெஸ் அணிந்துவர வேண்டுமென்பது கட்டாயம். இப்படி மாதத்திற்கு ஏதாவது ஒரு கலர் ட்ரெஸ் டே உண்டு. வெள்ளைகலரில் அவள் சைசுக்கு சரியாக ஒரு சட்டை இருந்தது. ஆனால் போட மாட்டேன் என்று ஒரே அடம். ஏன்? அது பாய்ஸ் ட்ரெஸ்ஸாம். மூன்றரை வயதில் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவும் பிடிவாதமும் ஆச்சரியமானது!

"இதோ பாருடா, இதெல்லாம் பாய்ஸ் ட்ரெஸ் கிடையாது. எல்லாரும் போடலாம். அம்மா கூட சட்டை வச்சிருக்கேன் பாரு " - அவளுடைய அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அழுது அடம் பிடித்துக்கொண்டிருந்தாள். கடைசியில் ஜெயித்ததும் அவள்தான். இன்று ஸ்கூலுக்கு மட்டம்!

*****

எங்களூரில் ஒரு நண்பர் இருந்தார். பெயர் ஞாபகம் இல்லை. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை முத்து முத்தான் கையெழுத்தில் அழகாக படம் வரைந்து போட்டோ ஒட்டி ஒரு கையெழுத்துப் பிரதி வரும். கருத்துக்கள் எழுதுவதற்காக கடைசி ஆறு பக்கங்கள் வெள்ளையாக விடப்பட்டிருக்கும். ஒரு முறை தன்னுடைய சுய சரிதத்தை தொடராக எழுதியிருந்ததைப் படித்தேன். நெட்டையனுடனும், காத்தமுத்துவுடனும் இணைந்து ஆத்தங்கரைத் தோட்டத்தில் ஏறிக்குதித்து தென்னையை பறித்து தின்றதும், அதில் மாட்டிக்கொண்டதும் என்பதாக சுவாரசியமாக(?) ரசித்து எழுதியிருந்தார். இன்றைய நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பேன், ஆனால் அன்றோ எனக்கும் இது போன்ற பயணக்கட்டுரைகள் சுயபுராணங்களில் ஆர்வமிருந்தது. நிறைய படித்து கருத்து சொல்லும் வேகம் இருந்தது. பத்திரிக்கைகளுக்கு 15 பைசா போஸ்ட் கார்டில் விமர்சனம் அனுப்பும் பழக்கம் இருந்தது. அதனால் கடைசி பக்கத்தில், 'உங்கள் சுயசரிதை யாருக்கு என்ன பிரயோசனம்? உருப்படியாக ஏதேனும் எழுதுங்கள்!' என்பது போல ஏதோ எழுதிவிட்டு வந்துவிட்டேன்.

அடுத்த நாள் நான் யார் என்று விசாரித்திருக்கிறார் போலும். அடுத்த பிரதியில் தலைப்பு இப்படி வந்தது 'பிள்ளைத்தெரு கல்யாணராமனுக்கு பதில் மடல்' - இரண்டு பக்கங்களுக்கு, 'தான் ஏன் சுயசரிதை எழுதக்கூடாது? எந்த விதத்தில் தகுதி குறைந்துவிட்டது' என்று கேட்டு என்னென்னமோ எழுதியிருந்தார். காந்தி பூங்கா அருகில் என்னை சைக்கிளில் மடக்கி புத்தகத்தைக் கொடுத்து, படித்துவிட்டுத் திரும்பக் கொடுங்கள் என்று சொன்னார்.

அதற்குப் பிறகு நல்ல நண்பராகிவிட்டார். பார்க்கும் போதெல்லாம், தமிழரசியில் வந்து கொண்டிருந்த 'திருப்பூந்துருத்தி'யைப் பற்றியும், பொள்ளாச்சி நசன் குறித்தும், ஜெராக்ஸ் எடுத்து வெளிவரும் தனிச்சுற்று பத்திரிக்கைகளை பற்றியும் எங்கள் விவாதம் விரியும். பிற்காலத்தில் ஏதோ ஒரு பிரபல நாளிதழில் இணைந்துவிட்டதாகக் கேள்வி. கையெழுத்துப் பிரதி நடத்தும் பெரும்பாலான நண்பர்கள் ஊடகத்துறையில் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறார்கள்.

*****

இந்தவாரத்தின் டோஸ்ட் மாஸ்டரில் நண்பர் அறவாழி அருமையான ஒரு சிறு பத்திரிக்கையை உருவாக்கியிருந்தார். அழகான லே அவுட். இதுதான் முதல் முறை இப்படி உருவாக்கியது என்று சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட இப்படி ஒன்றைச் செய்ய வேண்டுமானால் டெடிகேசன் மற்றும் ஆர்வம் இரண்டும் வேண்டும். வாழ்க!

*****

மக்கள் டிவி, தமிழன் டிவி, வின் டிவி - இந்த மூன்று சேனல்களும் இப்பொழுது சவுதியில் இலவசமாக வருகின்றன. இன்சாட் 2சி டைரக்ஷனில் ஆண்டெனாவைத் திருப்பி வைத்து ட்யூன் செய்தால் கூடவே கைரலி, ஏசியா நெட்,ஜீவன் டீவி ஆகிய மலையாளச் சேனல்களும் கிடைக்கின்றன.

இந்தத் தமிழ் டி.விகள் இன்னும் எனக்கு முழுமையாகப் பரிச்சயமாகவில்லை. மக்கள் டி.வியில் அடிக்கடி செய்திகள் ஒலிபரப்பாவதாகவும், தமிழன் மற்றுமொரு ஜல்லியாகவும், வின் - என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாத குழப்பமாகவும் இருப்பதாக இப்போதைக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில் மலையாளச்சேனல்கள் இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆச்சரியமாக இருக்கிறது. எந்த நேரம் திருப்பினாலும் ஏதாவது ஒரு சேனலில் யாராவது ஒரு பாடகரின் பாட்டோ பேட்டியோ ஓடிக்கொண்டிருக்கிறது!
posted by சாகரன் @ 1/29/2007 06:41:00 PM  
4 Comments:
  • At 1:31 AM, Blogger Boston Bala said…

    ---அது பாய்ஸ் ட்ரெஸ்ஸாம். ---

    எங்க வீட்டில்தான் இந்த நிலை என்று மாய்ந்திருந்தேன். வீட்டுக்கு வீடு அடாவடி ;-)

     
  • At 9:09 PM, Anonymous Anonymous said…

    // வீட்டுக்கு வீடு அடாவடி ;-) //

    :-))

     
  • At 4:46 AM, Anonymous Anonymous said…

    Yes. Now we can watch these 3 insat tamil channels and Cee TV channel from hot bird. But I don't know what happen to dan tamil which we used to watch earlier. In Dan tv Mr. Jail abdeen's program about Islam helps to understand Islam in a better angle. Now it's not coming at all.
    Mahesh.

     
  • At 8:01 AM, Blogger சாகரன் said…

    Mahesh,

    I heard DAN TV was running out of money and got closed. I believe some of those programs are coming in Win TV now a days. check it out.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER