சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, February 26, 2005
காலம் கவிழ்க்காத உணர்வுகள்!
''பெண்' என்று பேப்பரில் எழுதிக்கொடுத்தாலே பக்கத்தில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேசுகின்ற காலம் அது....'- மலரும் நினைவுகளாக விஸ்வா பேச ஆரம்பித்தார்!

'அது என்னமோ தெரியல.. இந்த பொண்ணுங்க ஒழுங்காத்தான் பேசிகிட்டிருப்பாங்க. ஆனா பசங்க கூட பேசறப்போ மட்டும் குரல் அப்படி ஒரு குழைவு காட்டும்.'- அடுத்தவர் எடுத்துக்கொடுத்தார்.

இருவரும் நண்பர்கள்... திருச்சியைச் சேர்ந்தவர்கள். என்.ஐ.ஐ.டி-யில் படித்த நினைவலைகளை பேசிக்கொண்டிருந்தார்கள்!

"டாஸ்-ல எல்லா கமாண்டும் தெரியும். ஆனாலும், இந்த டைரக்டரி லிஸ்டிங் எப்படி பண்றதுண்ணு கேப்போம்.."அவங்களும், ரொம்ப சீரியஸா சொல்லிகொடுப்பாங்க..!"

"இந்த லாகின் எப்படி பண்றது? கேட்டா.. அரை மணி நேரம் சொந்த கதை பேசிட்டு கடைசியா சொல்லி கொடுப்பாங்க:-) நாங்களும் தெரியாத மாதிரி கேட்டுப்போம்.." - இது அடுத்தவர்.

... கடலை அனுபவங்கள். இதன் தொடர்ச்சி இன்னமும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது. நடுவில் யாரோ ஒரு மாஸ்டரை ரொம்ப சீரியஸாக திட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்குள் ஆச்சரியம். காலம் கடந்த பின்னும், சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் ஆன பின்னும், இன்னமும் அதே கோபம், வேதனை வருத்தம் வெளிப்படுத்த முடியும் என்றால்... மனித மனம்தான் உணர்வுகளை எத்துணை ஆழமாகத் தேக்கிக்கொள்கிறது!! 

*

'PAGE 3' என்ற படம்.  ஒரு நாவலைப் படிக்கும் மனநிலையை ஏற்படுத்தியது. எந்த சீனையும் விட முடியாமல். மேல்தட்டு மக்களின் மூன்றாம் பக்கம்.  அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. 

*

வழக்கத்திற்கு அதிகமாக, இந்த வருடம், 'ரியாத்' மழையால் நனைந்து இடியால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும், 'என்விரான்மெண்ட்' மாறும் காலங்களில் இது போன்ற மழை ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், இந்த வருடம்,  அதிகம் என்றே தோன்றுகிறது!  
அதிகம் ஆக்ஸிடண்ட் நடக்கும் சீஸனும் இதுதான்.  கொஞ்சம் கவனமாகத்தான் வண்டி ஓட்டணும். ஸ்கிட் ஆயிடும்! அதிலும் இன்று பெய்த மழை... uff. 1995ற்கு பிறகு இன்று தான் இப்படி ஒரு பனிக்கட்டி மழை. (தகவல் உபயம் பக்கத்து சீட்டு அயூப்!)

*

சமீபத்தில் சந்தித்த நண்பரொருவர்... வெங்கடேஷ். பல்சுவை தளத்தின் மூலமாக அறிமுகமானவர். நானும் ரியாத் என்பதை அறிந்து 'உடையார்' புத்தகம் வாங்கிவரச் சொல்லி, நான் ஊர் வந்து ஒரு வாரம் கழித்து போன் செய்து என் செளகரியம் அறிந்து, வீடு வந்து பேசி வாங்கிச் சென்றார். கோவையைச் சேர்ந்த அந்த நண்பர்,  சுவாரஸ்யமான சில தகவல்களைச் சொன்னார்.புத்தக ஆர்வம் உள்ளவர். ந.சு. நல்ல பெருமாள் புத்தகங்கள் சில எடுத்து வந்திருப்பதாகவும், தருவதாகவும் சொல்லி இருக்கிறார்.  எங்கோ ரியாதிலிருந்து பல மைல் தொலைவில் இருக்கும், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அந்த நண்பருக்கு, இணையத் தொடர்பென்பது கொஞ்சம் அதீதமான விடயம்தான். இருந்தாலும், ஆர்வம் எப்படியாவது தேட வைக்கத்தான் செய்கிறது. 

*

ரியாத் டெய்லி- என்றொரு பத்திரிக்கை. அதில் சனிக்கிழமையோ அல்லது திங்களன்றோ தமிழில் ஒரு இணைப்பு வரும். தமிழ் கவிதைகள், இஸ்லாம் படைப்புகள், தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள். கதைகள் இப்படி ஏதாவது வரும்.  டெலிபோன் இல்லாத ஊருக்கு தபால்நிலையம் பெரியவிசயம்(!).

சமீபத்தில் நடந்த வைரமுத்து நிகழ்ச்சியில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை ரியாத் டெய்லி- தமிழ் இணைப்பில் வெளிவந்தவை.  அந்த புத்தகங்களில் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமதி.கீதா சங்கரின் கவிதைத் தொகுப்பு.  ...முழுக்க முழுக்க ரியாத் வாழ் வாழ்வியலின் புலம்பல்கள் என்றே சொல்லலாம்.  நல்ல வேளை புத்தகத்தில் விலை குறிப்பிடப்படவில்லை!
posted by சாகரன் @ 2/26/2005 11:58:00 AM   0 comments
Tuesday, February 15, 2005
ஓரத்தில் ஒரு சிகப்பு டி-ஷர்ட்!
சிரியாவைச் சேர்ந்தவர் அவர். சுமார் 45 வயது இருக்கும். நான் பார்த்து ஆச்சரியப்படும் பர்பெக்ஷனிலிஸ்டுகளில் ஒருவர். எந்த வேலையைச் செய்தாலும், அதை சிறப்பாகச் செய்வார். அவர் மீது எல்லோருக்கும் நல்ல மதிப்பு உண்டு. 'உலகத்திலேயே சிறந்த மருந்து' என்று எனக்கு குடிநீரின் மகிமை பற்றி ஒரு நாள் மதியம் பாடம் எடுத்தவர்..

"யூ நோ..." பேசிக்கொண்டே அவர் அந்த பாஸ்போர்ட் கட்டை எடுத்து பிரித்த போது எனக்குள் எந்த எண்ணமும் இல்லை. "இது என்னுடைய மகளுடைய பாஸ்போர்ட். இப்பொழுது ஜோர்டானில் படித்துக்கொண்டிருக்கிறாள். இவள் படிப்பிற்கு மட்டும் எனக்கு வருடத்திற்கு 25ஆயிரம் ரியால்கள் செலவாகிறது. இது என்னுடைய அடுத்த மகள். பக்கத்திலுள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள். இது என்னுடைய மகன் கடைசிவருடம் பள்ளியில் படிக்கிறான். இது என்னுடைய அடுத்த மகன்..இரண்டரை வயது. இது என்னுடைய மகள்.. நான்காம் வகுப்பு படிக்கிறாள்.." தொடர்ந்து அவர் பாஸ்போர்ட்டின் பக்கங்களை பிரித்து காண்பித்துக்கொண்டிருக்க, என்னவென்று சொல்லவியலாத ஒரு மனநிலைக்கு நான் வந்திருந்தேன்.

இவர் எனது மகள் மகன் என்று அறிமுகப்படுத்தும் போது, ஒரு நெருக்கமான மனநிலையும், அந்த குழந்தைகள் நம்மவர்கள் என்பதான ஒரு எண்ணமும் எனக்குள் ஏற்படுவதை கவனித்திருக்கிறேன். அதே போன்ற ஒரு மனநிலை இப்பொழுதும் ஏற்பட்டாலும், உள்ளார்ந்த ஒரு அயர்ச்சி அல்லது சுணக்கம்; இத்தனை பேரா ஒரு குடும்பத்தில்? ஏனோ ஒரு இனம் புரியா வருத்தமும், சுமார் 5000 ரியால் சம்பளத்தில் இவ்வளவு குடும்ப பாரமும் தாங்குவது என்பது எவ்வளவு கடினமானது என்ற எண்ணமும் வந்து என்னை ஒரு குழப்பமான மனநிலைக்கு மாற்றியிருந்தது.

சவுதி அரேபியா போன்ற முஸ்லீம் நாடுகளில் குழந்தை பிறப்பு என்பது கடவுளின் கட்டளை என்று கருதப்படுவது உண்மைதான் என்றாலும்..........

*****

வைரமுத்து - கவியரங்கம்!

ரியாத் வாழ் தமிழர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விசயம்... கவிஞர் வைரமுத்து தலைமைதாங்க வரும் 17ம் தேதி ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் இன்னமும் சுவாரஸ்யமான விசயம், இது வரை தனித்தனியாக செயல்பட்டு வந்த ஐந்து இந்திய தமிழ் கலை குழுக்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது. சுமார 4 லட்ச ரூபாய் செலவில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. தலைமை பாண்டிச்சேரி முதலமைச்சர்! எல்லாம் தற்போதைய இந்தியத் தூதுவர் திரு.பரூக் மரைக்காயர் மகிமை?!

*****
15/2/2005

அலுவலகத்தில் நுழைந்தவுடன், 'ஹே கல்யாண், என்ன உன்னை போலீஸ் புடிச்சுட்டாங்க சொன்னாங்க..!:-)" என்ற கூச்சல்! வழக்கமான(!?) வம்பு அறியும் சுவாரஸ்யத்துடன், "என்ன ஆச்சு" என்று விசாரித்ததில்.... என் பெயருடைய வேறொருவரை போலீஸ் பிடித்திருப்பதைச் சொன்னபோது அதுவும் காரணத்தைச் சொன்னபோது உண்மையிலேயே ஷாக் அடித்தது!

காதலர் தினமான நேற்று அந்த நண்பர் சிகப்பு டி-ஷர்ட் அணிந்து வாக்கிங் சென்றிருக்கிறார். அதன் காரணமாக போலீஸ் அவரை பிடித்துக்கொண்டு சென்று விட்டது. சவுதி அரேபியாவில் சிகப்பு டிரஸ் காதலர் தினம் அன்று அணிந்திருப்பது தவறு என்று நேற்று சி.என்.என் தளத்தில் கூட அறிவிப்பு இருந்ததாம். முதல்நாள் மசூதிகளில் இதைப் பற்றி சொல்லியிருந்தார்களாம்..! இன்றைய அலுவலக 'ஹாட் டாக்' இதுதான்!!

"லச்சுக்கு போயிருந்தப்போ என்கிட்ட இருந்த சிகப்பு கலர் டி-ஷர்ட்டை தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டேன்..." - இது பக்கத்து சீட்டிலிருப்பவர்! :-)
posted by சாகரன் @ 2/15/2005 05:36:00 PM   7 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER