Friday, March 11, 2005 |
சூடான் பழக்கம். |
வழக்கம்போல ஒரு நாள். நெருங்கிய நட்பு என்று சொல்லக்கூடிய ஒரு நண்பரின் குடும்பத்தினருடன் பிட்சா இன் -ல் சாப்பாடு. பில் கொடுக்க வேகமாக (இல்லையென்றால், அவன் கொடுத்துவிடுவான்) கவுண்டர் சென்று ஏ.டி.எம் கார்ட் நீட்டினேன். ஆனால் ஏனோ கார்ட் ரிஜெக்ட் ஆகிக்கொண்டே இருந்தது. சரி என்று வேறு வழியின்றி, கிரெடிட் கார்ட் உபயோகித்துவிட்டு மறந்து போனேன்.
அன்று, என் மகளை பிளே-ஸ்கூலில் சேர்க்கும் நாள். பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மெசினில் சென்று கார்டை சொருகினால், 'இன்வாலிட் அக்கவுண்ட் நெம்பர்' என்று மெசேஜ். கடும் குழப்பம். என்னாடாது இந்த ஒரு ஏ.டி.எம்-ல மட்டும் பிராப்ளமா, இல்லை வேற ஏ.டி.எம்ல வேலை செய்யுமா? என்ற என் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒரு வேளை கார்டி-ல் கோடுகள் விழுந்து இப்படி ஒரு பிராப்ளம் கொடுக்கும் போலும் என்று நினைத்து,
மறு நாள், பேங்கிற்கு சென்று கவுண்டர் டோக்கன் வாங்கி வெயிட் செய்தேன். வழக்கம் போல சவுதிஅரேபிய சப்போர்ட் கவுண்டர்கள் ஆமை வேகம். அலுவலக்த்தில் ஒரு மீட்டிங் இருந்தது. அதில் எனக்கு எந்த பேச்சும் இல்லை. இருந்தாலும் அட்டெண்ட் செய்ய வேண்டும். 4 கவுண்டர்களில் இரண்டில் ஆட்கள் இல்லை. மீதி இருந்த இரண்டில் ஒரு கவுண்டரில் இருந்தவர் ரொம்ப நேரமாக யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். ஒரே ஒரு ஆள் மட்டும், அவ்வப்போது வந்த மொபைல் போன் பேச்சுக்களிலிருந்து மீண்டு சில டோக்கன்களை கவனித்துக்கொண்டிருந்தார். என் நம்பருக்கு முந்திய நம்பர் வரை வந்துவிட்டது.
அடுத்த நம்பரை அவர் அழுத்தவில்லை. கொஞ்ச நேரம் அவதானித்துப்பார்த்தேன். சீட்டை அப்படி இப்படி நகர்த்தி, ஏதையோ தேடி, சும்மாவேணும் எழுந்து உட்கார்ந்து என்று நேரம் நகர்த்திக்கொண்டிருந்தார். அருகில் இருந்த ஒரு சவுதி, என் சீட்டிலிருந்த நம்பரைப் பார்த்து, போ என்று சைகை காட்ட... உள்ளே நுழைந்தேன்.
என்ன, என்று அந்த சப்போர்ட் ஆள் கேட்க, என் நம்பரைக் காட்ட, வெயிட் அவுட்சைட். மேபி சம் ஒன் எல்ஸ் மே கால் யூ. என்று திருப்பி விட.. இரண்டும் கெட்டான் மனநிலையில் இருந்தேன். என் ரெஸ்ட்லெஸ்நெஸ் பார்த்துவிட்டு, என்ன என்று கேட்க, 'ATM Card is not working.I want to get Replacement' என்று சொல்ல... அங்கிருந்தவாறே...
"நோ பிராப்ளம் வித் கார்ட். சாமா ரூல் பிரகாரம், உன்னுடைய அக்கவுண்ட் Freeze ஆகிவிட்டது. உன்னுடைய கம்பெனியிலிருந்து பாஸ்போர்ட் காப்பியில் சீல் போட்டு வாங்கிவா."
"போன வருசம் தானே, இதே மாதிரி கொடுத்தேன்"
"வெல்... இது புது வருடம்"
அருகில்தான் கம்பெனி. ஓடி சென்று விபரம் சொல்லி, பாஸ்போர்ட் காபி எடுத்துக்கொண்டிருந்தேன். செராக்ஸ் மெசினில் இருந்தவர், பாஸ்போர்ட் காபி எடுத்துத் தந்தபடி, "இகாமா காபி எடுத்துட்டியா" என்றார். "இல்லியே பாஸ்போர்ட் காபி தானே கேட்டாங்க." "இந்த ஊர்ல டாய்லெட்டுக்கு போறதா இருந்தாகூட இகாமா காபி வேணும், கல்யாண். அதையும் எடுத்துக்க..."
அவசரமாக திரும்பி அதே நபரை பார்க்கச் சென்றபோது, ஏகப்பட்ட கூட்டம் அவரைச் சுற்றி. எட்டி எட்டி பார்த்த என்னை கூப்பிட்டு, "உன் பாஸ்போர்ட் காப்பியில் உன் அக்கவுண்ட் நம்பர் எழுதிக்கொடு.."
அந்த நேரம் பார்த்துதானா என் பேனா மக்கர் செய்ய வேணும்?
பக்கத்தில் சுற்றி முற்றி பார்த்தேன். கொஞ்ச தூரத்தில் இருந்த ஒருவரிடம் பேனா இருந்தது.சூடானி. நெருங்கி, 'ஜஸ்ட் டு ரைட் மை அக்கவுண்ட் நம்பர்' என்று சொல்லி, பேனா கேட்டேன். என்னை ஒரு கணம் பார்த்து விட்டு கொடுத்தார். எழுதி முடித்து அவரிடம் பேனாவை உடனே கொடுத்துவிட்டு, மறுபடி அந்த கவுண்டர் ஆளை நாலைந்து பேரைத் தாண்டி என் கையிலிருந்த பேப்பர்களை கொடுத்துவிட்டு திரும்பிய போது,
எனக்கு பேனா, கொடுத்த அந்த சூடானி கூப்பிட்டார். எதற்கு என்று புரியாமல் நெருங்கிய போது, "have you been to sudan?" "no" "in sudan, we have a habit, to say thanks or sukran".
ஹக்.
|
posted by சாகரன் @ 3/11/2005 12:21:00 PM   |
|
|