சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Friday, October 15, 2004
ஒரு.. தெய்வம் தந்த பூவே...
... யப்பா.. இந்த குழந்தைகள் தான் ஒரிரு மாதங்களில் என்ன வேகமாக வளர்ந்து விடுகிறார்கள்!! ஊருக்கு சென்று திரும்பிய என் மகள், விசமத்தனங்களிலும், முக பாவங்களிலும் நிறையவே மாறுதல்கள்.

-oOo-

வெற்றி நிச்சயம் இது கலாம் சத்தியம்!

"வாங்க டீ சாப்பிடலாம் முதல்ல.." - இந்த நண்பர், இந்தப் பக்கங்களின் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டவரின் உறவினர். நிறைய பேசினோம் என்றாலும், கடைசியாக ஒன்று சொன்னார். "இந்தியாவில நான் செய்யாத லாரி ஒட்டம் இல்லை சார்... கஞ்சா முதக்கொண்டு ஒரு தடவை லாரில ஓட்டியிருக்கேன். சவுதிக்கு வந்து இப்படி, ஒரு சவுதிகாரன் குடும்பத்துக்கு டிரைவரா வேலை செய்யறப்போதான், நாம் பண்ணின தப்பும், அப்பா சொன்ன அறிவுரையெல்லாம் கேட்காமப் போனதும் உரைக்குது. இந்த அனுபவம் போதும்... இதையே மனசில வச்சி... ஊரில நிச்சயமா ஜெயிச்சிடலாம் சார்"

திரும்பும் போது, என் புத்தகக் கலெக்சனிலிருந்து எ.பி.ஜேயின் 'அக்னிச் சிறகுகள்' கேட்டு வாங்கிக்கொண்டார்!

-oOo-

சட்டென்று சோகம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலியே!

டிராவல் ஏஜெண்ட்களிடம் டீல் செய்திருக்கிறீர்களா? இருப்பதிலேயே செம கடியான ஆட்கள் என்றால் அவர்கள்தான். சரியான ஏஜெண்ட் மாட்டுவதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும், மிக மிக முக்கியம். இல்லையென்றால், கடைசி நேரத்தில் கேஷுவலாக கவுத்து விடுவார்கள்.

இந்திய டிராவல் ஏஜென்ஸி மார்க்கெட்டிற்கும், சவுதி மார்க்கெட்டிற்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் ரூல் ரூல் என்று ஏகப்பட்டது மாறடிப்பதுண்டு. ஆனால், சவுதியில் அவ்வளவு பெரிதாக பார்க்காமல் அட்ஜெஸ்ட் செய்து கொள்வதுண்டு என்று சொன்னார்கள்.

ஒன்று மட்டும் நிச்சயம். புக் செய்கின்ற கவுண்டரில் உள்ள ஏஜெண்ட்களுடன் கூட பேசிவிடலாம். ஆனால், நடுவில் ஏதாவது ஒரு ஏஜெண்ட் கோ-ஆர்டினேட்டராக மாட்டிவிட்டால் அவ்வளவுதான். ஒரு விசயம் பெயராது!

அடுத்த பத்தியில் வரும் விசயத்திற்காக.. டிராவல் ஏஜெண்ட்களிடம் மாட்டிக்கொண்டு நான் பட்ட பாடு... ம்.. சொல்லி மாளாது!

சுவாரஸ்யமான வாழ்க்கை ஆரம்பிக்கப்போகிறதென்று நினைக்கிறேன். அப்பா-அம்மா இன்று இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஒரு மாதப் பயணமாக வருகிறார்கள். இந்தப் பயணம் எப்படி இருக்கப்போகிறதென்று இன்னமும் எனக்கு நிச்சயம் இல்லை. "சே.. என்ன ஊர் இது.." என்று சொல்வார்களா 'அட.. நல்லாருக்கே' என்பார்களா? என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்:-)

உங்க அம்மா கூட எனக்கு சண்டை வந்தா அதுக்கு நீதான் காரணமா இருப்பே - என்று என் துணை வேறு, அவர்கள் பயத்தை என் மீது முன்கூட்டியே போடுகிறார்கள்! :-)

ஆஹ்..ஹா...

-oOo-

ரமதான் கரீம்

விசேச தினங்களில் 'பேமிலி சூப்பர்மார்கெட்' பக்கம் போனால், பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் பார்த்து விடலாம். நேற்று இரவு, அந்தப்பக்கம் போனபோது, பல நண்பர்களை பார்க்க முடிந்தது.

வழக்கம்போல நேற்றிரவு கோலாகலமாக(அதாவது ஸ்பெசல் பிரேயர்களுடன்) ஆரம்பித்த ரமதான் காரணமாகவும் நிறைய பேர் வந்திருந்தார்கள்.

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இடைமறித்தார் ஒருவர். கையில் ஏதோ கட்டு இருந்தது. அதைக் காட்டி, ரமதான் என்று ஆரம்பித்து ஏதோ பேசி, காசு கேட்டார்..

ஆரம்பித்து விட்டார்கள்...! இனி இந்த மாசம் முழுக்க இது போன்ற தொல்லைகள் இருக்கும்.
ரமதான் மாதம் என்றால் மட்டும் எங்கிருந்துதான் முளைப்பார்களோ என்று தெரியாது. அவ்வளவு பிச்சைக்காரர்கள் நடமாட்டம் இங்கு! சமயத்தில் வீடு தேடி வந்து கதவைத் தட்டி பிச்சைகேட்கும் பெண்களைக் கூட பார்க்கலாம். இந்த தைரியத்திற்கு காரணமும் இருக்கிறது. அது, ரமதான் மாதத்தில் வறியவர்களுக்கு உதவி செய்தால் புண்ணியம் என்ற நம்பிக்கை!

ரமதான் மாதம், சவுதியில் என்றாலே அது ஒரு தனி சுகம்தான்! வேலை ஒன்றும் பெரிதாக ஓடாது... இத்தனை நாள் நெருப்பாக செய்துகொண்டிருந்த வேலைகள்.. நீறு பூத்துப் போகும். இரவு பகலாகும். இந்த வருடமும் பெரும் வித்தியாசம் இருக்காது என்று நினைக்கிறேன்.

போன வருடம் இதே தினத்தில், மில்லியனுக்கும் அதிகமான SMS மெசேஜ்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக செய்தி வந்தது. நான் கூட ஓரிரண்டு SMS அனுப்பியிருந்தேன். இந்த வருடம் அதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன். இமெயில்தான். (மொபைல்ல பைசா இல்லைங்கற ரகசியத்தை யாரிடமும் சொல்லப்போவதில்லை.:-) )

பி.கு: சவுதி அரேபிய SMS ஒன்றும் அவ்வளவு மலிவானதில்லை! சமயத்தில் இந்தியாவுக்கு அனுப்பும் SMS போய் சேருவதும் இல்லை!!
posted by சாகரன் @ 10/15/2004 08:34:00 AM  
1 Comments:
  • At 12:38 PM, Anonymous Anonymous said…

    (16.10.2004) Visitor said...

    இந்தியாவுக்கு www.smstoindia.com பயன்படுத்துங்க. சவூதி அரேபியா sms அனுப்ப alnokhba.com ல் அனுப்பலாம். என்ன ஒரு தொல்லை ரெஜிஸ்டர் பண்ணி விளம்பரம், விளம்பரமா பார்க்கனும். மற்றபடி எல்லா ஏரியாவுக்கும் அல்நோக்பா கரெக்டா எஸ்.எம்.எஸ் அனுப்பி வைக்குது.
    முடிஞ்சா பயன்படுத்தி பாருங்க.
    மோகன், ரியாத்.

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER