Saturday, August 28, 2004 |
கர்வத்திற்கு புராணங்களில் தரப்படும் முக்கியத்துவம் |
கர்வம் என்பது எவ்வளவு தூரம் தவறானது என்பதற்கு நம் புராணங்களில் ஏராளமான கதைகள் உண்டு.
மகாபாரதத்தின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே யயாதியின் கர்வம் காரணமாக அவருடைய மேலுலக வாழ்க்கை தடை செய்யப்பட்டது என்பது போன்ற கதைகளை நாம் படித்திருக்கிறோம்.
கடவுளின் அவதாரம் என்பது மிக மிக முக்கியமான காரணங்களுக்காக ஏற்படுவதாகத் தான் இது வரை நமக்கு சொல்லப்பட்டு வந்துள்ளன. அவதாரம் என்பதை மிகவும் கவனமாக நன்மைகள் குறைந்து தீமைகள் அதிகப்படும் காலங்களில் எடுக்கப்பட்டதாகத் தான் நாம் அறிந்துள்ளோம். அப்படிப்பட்ட நிலையில் கர்வத்தினை அழிப்பதற்காக ஒரு அவதாரம் என்றால், அது எவ்வளவு முக்கியமான விசயம்?!
தென் இந்தியாவில் ஆட்சி செய்து வந்த அந்த அரசன் நல்லவனாகவும், வல்லவனாகவும் சித்தரிக்கப்படுகிறார். மக்களுக்கு நன்மைகள் செய்யும் ஒரு அரசராக சொல்லப்படுகிறார். அந்த அரசு அந்த காலத்தில் பொற்காலமாக சொல்லப்படுகிறது. அந்த அரசனிடம் உள்ள ஒரே குறை. தன் மீது ஏற்பட்ட அதீத கர்வம். தன்னால் எதையும் யாருக்கும் கொடுக்க முடியும் என்ற எண்ணம்.
கர்வம் என்பது ஒரு தொற்றுநோய். ஒருவர் கர்வமுடன் இருக்க, அவர் எதிரில் உள்ளவரும் தம்மை அறியாமல் தான் இவனை விட பெரியவர் என்ற எதிர்வினைக்கு அடிமையாகிறார்.
இப்படித் தொடரும் கர்வம், விடாமல் தொடர்ந்து அடுத்தவரை காயப்படுத்தி, கர்வப்படுத்திக்கொண்டே இருக்கும்.
அரசனுக்கே அப்படிப்பட்ட கர்வம் இருந்தால் என்ன ஆகும்? அவனுடன் நெருங்கிய மந்திரியிலிருந்து ஆரம்பித்து கீழ் மட்டம் வரை அந்த கர்வம் என்ற நோய் பரவும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவத்தை நிகழ்த்த விரும்பினார் இறைவன். கர்வம் என்பது தவறு என்று உலகிற்கு காட்ட விரும்பினார். சாதாரண எடுத்துக்காட்டாக இல்லாமல் காலம் முழுவதும் அது நிலைத்திருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் போலும். ஒரு அவதாரம் பிறந்தது. அந்த அவதாரம் தான்... வாமனாவதாரம்!
இனிக்கும் மொழியும் எங்கும் நிறைந்திருக்கும் நீரும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மக்களை ஆண்டு வந்த மகாபலி என்ற அந்த அரசன், ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தான். அந்த காலத்தில் யாகத்தின் முன் அந்தணர்களுக்கு தானம் அளிப்பது முக்கியமான ஒன்றாக இருந்து வந்தது. இறை ஒரு சிறிய அந்தணச் சிறுவன் வடிவம் எடுத்தது. யாகத்தில் தானம் தந்து கொண்டிருந்த அரசனை நெருங்கியது. வேண்டும் மூன்று அடி நிலம் என்று கேட்டது. ஆச்சரியமடைந்தான் அரசன்!
இருக்காதா பின்னே? ஒரு ஊர் வேண்டும் என்று கேட்கலாம். செல்வம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம். இன்னும் எத்தனையோ கேட்க இருக்க, வெறும் மூன்று அடி நிலம் மட்டுமா? ஏதோ பொறி தட்டியது. ஆனால் அங்கே விதி விளையாடியது. மூன்றடி நிலம் தருவதில் என்ன சிக்கல். என்னிடம் இல்லாததா? தந்தேன் என்று சத்தியம் செய்தான் அவன்.
அருகிலிருந்த குலகுரு சுக்ராச்சாரியார் அரடனை நெருங்கினார். அரசன் உடனடியாக தந்தேன் என்று சொன்னதை அறியாமல், அரசா, இது இறை வடிவம். நீ எதையும் கொடுத்துவிடாதே என்று அறிவுரை சொன்னார். அரசன் இப்பொழுது யோசித்தான். இல்லை குரு, உங்களை கேட்காமலேயே நான் கொடுத்து விட்டேன். மூன்று அடி நிலம் என்ன பெரிய விசயம். இறை வடிவமாகவே இருந்தாலும், என்னிடம் இறை, தானம் பெற்றதாக இருக்கட்டுமே.. என்று சொல்லி இயல்பானான். அங்கும் அவனது கர்வம் தெரிந்தது.
வாமனம் என்றால் சிறியது என்று பொருள். சிறிய உருவில் இருந்த இறை, தன் முழுமையான வடிவத்தை எடுத்தது. அடி எது, முடி எது என்று தெரியாத ஒரு உருவம். அரசனின் கட்டுப்பாடில் இருந்த தேவலோகத்தில் ஒரு காலும், பூலோகம் முழுமையும் ஒரு காலுமாக எடுத்து வைத்தார். உலகம் முழுதும் அளந்தாயிற்று... மூன்றாவது கால் எங்கு வைப்பது?
கடவுளின் முன், யார் பெரியவர்? யாரால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்? மகாபலியின் கர்வம் அவனைவிட்டு தெரித்தது.
மண்டியிட்டான், இறையே, என் மேல் உங்கள் மூன்றாவது அடியை வையுங்கள் என்று தலை குனிந்தான்.
அவன் மீது வைத்த காலடியின் வேகம், அவனை பாதாள லோகத்தில் சென்று சேர்ந்தது. மகாபலியின் கர்வம் அடியோடு ஒழிந்தது.
மகாபலி கர்வம் உள்ள ஒருவனாக இருந்தாலும், நல்ல அரசன், தன் மக்களின் மீதும் நாட்டின் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டவன். அவன் மீது மனமிரங்கி, அவன் விருப்பப் படி, இனி வருடா வருடம் ஒரு தினம் நீ உன் மக்களுடன் வாழலாம் என்று வரம் தந்தார் இறை.
தன் நாட்டுமக்களின் மீது அக்கறையும், ஆசையும், ஈடுபாடும் கொண்டுள்ள எந்த அரசனையும் வாழ்வாங்கு நினைவில் நிறுத்தும் குணம் நம் மக்களுக்கு எப்பொழுதும் உண்டு. (மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு முதலமைச்சர் உட்கார்ந்த இடத்திலேயே ஜெயித்த கதையும், இன்றும் அவர் பெயருக்காவே ஓட்டிடும் மக்களும் நம்மிடையேயும் உண்டுதானே?!) அந்த அரசனினின் வருகைக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்லி, அவர் என்றும் எங்கிருந்தாலும் சிறப்போடிருக்கச் சொல்லி கொண்டாடுவது அந்த நாளின் பழக்கமாயிற்று.
அந்த நாள்... இன்று!
இன்றும் கொண்டாடப்படும் 'ஓணம்', கேரளத்துக்கே உரிய ஒரு பண்டிகை. தமிழகத்தை சேர்ந்த நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு பண்டிகை. பெயர் கேள்விப்பட்டிருப்போமே ஒழிய முழுமையாக அறிந்திருப்போமா என்றால் சந்தேகம்தான், இல்லையா?
பூவினால் செய்த கோலங்கள், பூஜைகள் என்று இன்றும் அமர்களப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக பாயாச இனிப்புக்கள் அந்த மக்களின் இல்லங்களை மகிழ்ச்சி படுத்துகின்றன. யானைகளின் அணிவகுப்பும், பட்டாசுகளும், தனித்தன்மை வாய்ந்த கதகளி நடனங்களும் தேசமெங்கும் சந்தோஷ ஆரவாரத்தை அள்ளித் தெளிக்கின்றன. மிகப் புகழ்பெற்ற படகுப்போட்டிகள் நடைபெறுவதும் இதே காலத்தில்தான். நெஞ்சை நெருக்கும் உடல் பலத்தை காட்டும் அற்புத படகுகள், காற்றின் வேகத்தில் நீரை கிழித்துச் செல்லும் காட்சி ஆயிரக்கணக்கானவர்களின் கூச்சல்களில் தன்னை மறக்க வைக்கும் அழகு.
ஓணம், இந்து மத கதையின் ஒரு நீட்சியாக கருதப்பட்டாலும், அது முக்கியமில்லை. ஓணம் எல்லோருக்குமான ஒரு திருவிழா தினம். இந்து, முஸ்லீம், கிருத்தவ மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்தோர்,தாழ்ந்தோர் எல்லோரும் ஓணத்தை ஒரே வித நோக்கில் தான் அணுகுகிறார்கள். இந்த ஒரு பகுதி மக்கள் மட்டுமே கொண்டாடும் இந்த ஓணம், வேற்றுமையில் ஒன்றுமை காணும் இந்தியாவின் அழகிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
|
posted by சாகரன் @ 8/28/2004 10:12:00 AM |
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|