சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, August 25, 2004
சமூக விலகல்கள்...
ஒத்த கருத்துள்ளவர்களுடன் ஒரு தோழமை உடனடியாக ஏற்படுவது நாம் அறிந்ததுதான்...
சில நேரங்களில் சந்தர்ப்ப வசத்தால் இந்த ஒத்த கருத்து என்பது ஏற்படாமல் போய்விட்டாலும் தோழமையை தொடர வேண்டிய அவசியம் வந்து விடுகிறது.

இந்தியாவில் நம் ஊரில் இருப்பவர்களுக்கே இந்த பிரச்சனை அதிகம் என்னும் போது வெளிநாடு பற்றி கேட்க வேண்டுமா என்ன?

கிடைப்பவருடன் தான் நீங்கள் நட்பு கொள்ள வேண்டும். நட்பு என்பது ஒத்த கருத்து என்பது மாறி ஒரே மொழி பேசுபவர் அல்லது ஒரே மாநிலக்காரர் அல்லது இந்தியர் என்பது போன்ற பொது கலன்கள் கொண்டதாக சில நேரம் மாறி விடுகிறது. வேறு வழி இல்லை!

டாக்ஸியில் செல்லும் போதோ, அல்லது ஏதேனும் கடைகளுக்கு செல்லும் போதோ, பெரும்பாலும் இந்திய முகங்கள் உள்ளவர்களாக பார்த்து ஏதேனும் பேசத் தோண்றுகிறது. ஏதோ இந்திய முகங்களுடன் பேசினால் நமக்கு ஒரு நிம்மதி, நாம் வாங்கும் பொருள் பற்றி ஒரு ஒழுங்கான கருத்து சொல்வார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதற்கு உதவியாகவே சவுதியின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்திய முகத்தினை பார்க்க முடிகிறது.

ஒருவேளை இந்தியர் இல்லையென்றால் அடுத்த கட்ட பேச்சு பாகிஸ்தானியருடன் வருகிறது. இதற்கு காரணம் என்று சொன்னால் அவர்கள் பேசும் உருதுவும் நாம் பேசும் ஹிந்தியும் புரிவதுதான்!. அடுத்த காரணம், அவர்களுடைய தோழமையான, கண்ணியமான பேச்சுக்கள்.

என் மனைவியுடன், நான் செல்லும் போது 'பஹன்' என்று விளித்து கண்ணியமாக பேசும் பாகிஸ்தானிய டாக்ஸி டிரைவர்களும், கடையில் வேலைசெய்யும் பாகிஸ்தானியரும் இங்கு அதிகம். பாகிஸ்தானியர் மீது இந்தியாவில் இருந்த விலகலான மனப்பான்மை இப்பொழுது இங்கு வந்தபிறகு பழகிய பிறகு நிறையவே குறைந்துபோய் விட்டது. அதே போல 'சிஸ்டர்' என்று விளித்து கண்ணியமாக பேசும் ஈழ்த்தமிழர்களும் நேசமானவர்கள்தான். கொஞ்சம் எரிச்சல் ஏற்படுத்தும் மக்கள் என்று சொன்னால் அது பங்களாதேசிகள் மட்டுமே என்று தோன்றுகிறது.

ஏனோ தெரியவில்லை சில நேரங்களில் அடுத்த தேசத்து மக்களை விட நம்மக்கள் கொஞ்சம் விலகி நிற்பதான தோற்றமும் வருகிறது.
இதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை... நம்மையும் மீறி, நம் இந்திய வாழ்வில் ஊடுறுவி இருக்கும் சமூக விலகல்கள் எங்கு சென்றாலும் மறக்க முடியாததாலா? அல்லது அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற விதி இங்கும் வேலை செய்வதாலா?!

கேள்விகள் கேட்பது சுலபம்... பதில் தேடுதல் என்பது அந்தந்த நேரத்தின் சம்பவங்களின் பாதிப்பு...! ஏனென்றால் இந்த சம்பவங்களில் பெரும்பாலனவை சில மணித்துளிகளில் மறக்கப்படுபவை, கொஞ்சமும் நம் தனிவாழ்க்கையை நேரடியாக பாதிக்காதவை!
posted by சாகரன் @ 8/25/2004 12:47:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER