சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, August 22, 2004
குழந்தைகளின் படிப்பு நகரங்களில் மட்டுமா?
குழந்தைகளின் படிப்பு நகரங்களில் மட்டுமா?

இதை பல பெற்றோர்கள் நம்பினாலும், ஏனோ எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

குழந்தைகளின் படிப்பு நகரங்களில் மட்டுமா? நகரத்திலேயே பிறந்து வளரும் எத்தனை குழந்தைகள் படிப்பில் சிறப்பானவர்களாக இருக்கின்றார்கள்? நகரம் என்பது படிப்பதற்காக வரவேண்டிய ஒரு இடமா? மேற்படிப்பிற்கு வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் 4 அல்லது 5 ஆம் வகுப்பிற்கே நகர பள்ளிகளில் அட்மிஷன் தேட வேண்டியது அவசியமா? நிச்சயம் இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

குழந்தைகளின் படிப்பிற்காக, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும் என்பதற்காக எத்தனையோ பெற்றோர்கள் இன்று சென்னை போன்ற பெரும் நகரங்களில் முற்றுகையிட்டு இருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக,'பத்மா சேஷாத்ரி' போன்ற பெரும் பள்ளிகளின் சுற்றுப்புறங்களிலேயே இடமும் வீடும் வாடகைக்காகவோ அல்லது அதிக பணமாக இருந்தாலும் பரவாயில்லை என்று விலைக்கு வாங்கியோ குடியிருப்பவர்கள் அதிகம்.

பெற்றோர்கள் படித்தது கிராமமாகக் கூட இருக்கலாம், ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு அல்லது சிந்தனை சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் குழந்தைகள் இன்னமும் சிறப்பாக வெளிவரும் என்பது...

இதில் சில உண்மைகள் இருப்பதாகத் தோன்றினாலும், பெரும் அளவு மாற்றம் இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே.

குழந்தைகள் அல்லது மாணவர்களின் வளர்ச்சியும் படிப்பும், சூழ்நிலையை மட்டும் கொண்டதல்ல.... ஏன் எந்த காரணமும் சொல்ல முடியாத ஒன்று என்று எனக்கு தோன்றுவதுண்டு. அவசரப்பட்டு, பிறவியிலேயே சில குழந்தைகள் திறமையுடன் பிரகாசிக்கிறார்கள் என்று சொல்லவும் நான் விரும்பவில்லை. கிராமங்களில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெறுவதும், சிறப்பான முன்னேற்றத்தை அடைவதும் நாம் பார்த்துக்கொண்டிருப்பது அடிக்கடி நடப்பதுதானே.படிக்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் படிப்பார்கள் என்று சொல்வார்கள். இந்த படிக்கும் மாணவர்கள் என்பவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இது ஒரு தனி கேள்வி. *பெரும்பாலும் இதற்கான பதில் பெற்றோர்கள், சூழ்நிலை என்பதாக இருக்கும். *

என் தந்தை என்னை பெரிய அளவில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. அவர் இருந்த இடங்களில் வேலை பார்த்த இடங்களில்தான் என் படிப்பு இருந்தது. குடும்பத்தை சேர்ந்த மற்ற சிலர் நிறைய படிக்க வேண்டும், சிறப்பான படிப்பு வேண்டும் என்பதற்காக கவனித்து கவனித்து வாழ்க்கையை செதுக்கிக் கொண்டிருந்த காலத்தில், நான் சுதந்திரமாகத் தான் இருந்தேன். முடிந்த அளவு படித்தேன்.

இன்று யோசித்து பார்த்தால் எதையும் இழந்துவிட்டதான எண்ணம் இல்லை. படிப்பு என்ற ஒரு விசயத்திற்கு மட்டுமல்லாமல் வேறு விசயம் எடுத்துக்கொண்டாலும், ஹிந்தி, வாய்ப்பாட்டு போன்றவை எங்களைச் சுற்றி இருக்கத்தான் செய்தது. மிஞ்சி போனால் சென்னைக்கு வந்திருந்தாலோ அல்லது ஒரு பெரும் நகரத்தில் இருந்திருந்தாலோ, வேறு சில விசயங்கள் கற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு என்னைத் தெரியும், எதிலும் அறைகுறை... நானும் கற்றுக்கொண்டேன் என்று ஏதேனும் செய்திருக்கலாம். பேருக்கு... அவ்வளவுதான்.

அழுத்தமாக எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனதில் உறுதிப்படுவதற்கே ஒரு வயது தேவைப்படுகிறது. அந்த வயது பெரும்பாலும், வாழ்க்கையின் ஆரம்ப அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய பின்னர் தான் வருகிறது. வாய்ப்புகள் அதிகம் இருக்கும்போது உபயோகப்படுத்திக்கொள்வதற்கு,அதுதான் சரியான நேரம்.

சமீபத்தில் ஏதோ ஒரு பழைய அவள் விகடனில், ஒரு பெண், திருமணத்திற்கு பின், ஓவியம், எம்ப்ராய்டரி போன்ற விசயங்கள் கற்றுத் தேர்ந்ததை படித்த போது..., 'சபாஷ்' என்று சொல்லத்தோன்றியது.

சில காரணங்களை முன் வைக்கின்றனர் சிலர். அதில் முக்கியம்..., என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது தெரிகிறது; குழந்தைகளின் மற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது. அது வாய்ப்பாட்டாகவோ அல்லது வீணையாகவோ அல்லது டென்னிஸாகவோ அல்லது நடனமாகவோ எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அதற்கான வாய்ப்பு நகரங்களில் மட்டுமே இருக்கிறது.

இது ஒரு விதத்தில் உண்மைதான்; நம் குழந்தையிடம் ஏதோ ஒரு திறமை இருக்கிறது என்பதும், அதில் ஈடுபாடு இருக்கிறது என்பதும் தெளிவானால் அந்த ஈடுபாட்டினை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு நாம் இருக்கும் இடத்தில் கிடைக்காது என்பது நிச்சயமானால், அதற்காக இடம் பெயருவதில் தவறில்லைதான். ஆனால் இப்படி எந்த ஒரு தெளிவான காரணமும் இல்லாமல், சும்மா நகரத்தில் படித்தாலோ அல்லது நல்ல பள்ளியில் படித்ததாலோ எந்த குழந்தையும் மிகவும் திறமையாகி விடும் என்ற எண்ண்ம் ஒரு கனவு என்பது தவிர வேறில்லை.

நிச்சயம் கவனமாக இருக்க வேண்டிய விசயம் என்று ஒன்று இருந்தால், அது அவர்களுடைய நட்பு வட்டம் மட்டுமே!

posted by சாகரன் @ 8/22/2004 05:24:00 PM  
2 Comments:
 • At 9:10 PM, Blogger ஞானதேவன் said…

  நான் படித்ததெல்லாம் திருச்சியில் தான். ஆனால் சென்னை வந்த பிறகு தான் பல விஷயங்களை அறிந்து கொண்டேன். முதல் முறை சென்னை வந்து, அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு அரண்டு போனவன் நான். சாலை நெரிசல், பஸ் கூட்டம், மக்கள் தொகை, வேர்வை, அழுக்கு.... இதை கண்டு பயந்து போய் காய்ச்சலே வந்திருக்கிறது. :) நகரத்தில் படித்தால் ஓரளவு உலகம் புரியும், மற்றப்படி வேறு ஒன்றும் வித்தியாசம் இல்லை

   
 • At 1:28 AM, Blogger சாகரன் said…

  உண்மைதான் நண்பரே.... ஒத்துக்கறேன்...
  ஆனா சின்ன வயசுலயே மத்த ஊரில படிப்பு கிடைக்க வாய்ப்பிருந்தாலும், அதை விட்டுட்டு,
  கஷ்டப்பட்டு பெரிய நக்ரங்களுக்கு படையெடுக்கணுமா?

  ஏன் கொஞ்சம் 9-12 பீரியட்லயோ அல்லது மேல் படிப்புக்கோ போகக் கூடாதா?

  எதுக்கு இந்த சிந்தனைனா...
  நம்ம நண்பர் ஒருத்தரு ஒரு நியூஸ் சொன்னாப்ல,
  அதாவது அவருக்கு கீழ வேலை பாத்துகிட்டிருந்த ஒருத்தரு, தன் குழந்தையின் அட்மிசன் மெட்ராஸ்ல ஏதோ பெரிய பள்ளிக்கூடத்தில கிடைச்சிடுச்சு சொல்லி, இங்க இருந்த வேலைய ரிசைன் பண்ணிடாப்லயாம்...

  பரவாயில்லை படிப்புக்கு ரொம்ப இம்பார்ட்டெண்ஸ் குடுக்கறாங்களேன்னு நினைச்சா....., அவர் குழந்தைக்கு படிக்கற கிளாஸ்.. எல்.கே.ஜி தானாம்!!

   
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER