சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, July 21, 2004
கேட்பதும் பெறுவதும்....
ஆலோசனை, உதவிகளை கேட்பதும் பதில் பெறுவதும்... இந்த விசயம் பற்றி சில கருத்துக்களை எழுதும் ஆசை வருகிறது...

சாதாரணமாக யோசித்தால் யாருக்கு ஆலோசனையை அல்லது உதவியை கேட்டுப் பெறுவதில் விருப்பம் இருப்பதில்லை.

இதன் காரணங்கள்.. பல..
ஆனால் முக்கியமான காரணமாக எனக்குத் தோன்றுவதில் சில...


  • அவர் யார் எனக்கு ஆலோசனை சொல்ல..
  • என் பிரச்சனையின் தீவிரம் எனக்கு மட்டும்தான் தெரியும்.
  • சொன்னா புரியாது...
  • ஐயோ பர்சனல்...
  • என் பிராப்ளத்தை என்னாலே தீர்த்துக்க முடியும்..
  • அவர் ஹெல்ப் பண்ணினா நல்லா இருக்கும் ஆனா ஒத்துக்குவாரா?
  • ................
இப்படி எத்தனையோ இருக்கலாம்... ஆனால் கொஞ்சம் யோசியுங்கள்.

எனக்கென்னமோ கண்டிப்பாக உதவி செய்ய, விருப்பு வெறுப்பின்றி ஆலோசனை கூற பலர் ரெடியாக இருக்கிறார்கள்.. நம் கண்ணுக்குத்தான் தெரிவதில்லை.. என்று தோன்றுகிறது!!

வாழ்க்கையில் எல்லோரும் எல்லா பிரச்சனைகளிலும் அடிபட்டுத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. நாகூர் ரூமி அவர்களின் அடுத்த விநாடி என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயத்திலேயே 'பிரச்சனையின் தீவிரம்' என்ற விசயம் பற்றி அருமையான கருத்துக்களை அள்ளித் தெளித்திருப்பார்... உண்மையில் பிரச்சனையின் தீவிரம் அதை எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் மாறுபடுகிறது. எனவே... எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கண்டிப்பாக உண்டு.

அதனால்... ஒரு பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது என்பதை பிறரிடம் நீங்கள்  சொன்னால் அதற்கான பதில் கண்ணோட்டம் நிச்சயம் உங்களுக்கு புதிய கோணத்தைக் காட்டும்.

இதில் முக்கியமானது யாரிடம் நீங்கள் யோசனை கேட்கப் போகிறீர்கள் என்பது. இதை முடிவு செய்துவிட்டாலே...போதும். நிச்சயம் உங்களால் நல்ல முடிவு எடுக்க முடியும்.

நான் பார்த்த வரை.. உங்கள் வயதை ஒத்த நண்பர்களை தவிர்த்து, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக் நீங்கள் கருதும், வெல் விஷர் என்று எண்ணும் நண்பர்களிடம் உங்கள் பிரச்சனைகளை சொல்லிப்பாருங்கள்... அவர்களின் அனுபவத்தில் உங்களுக்கு கிடைக்கும் பதில் கண்டிப்பாக தீர்வுக்கான வழியை காட்டும்.

அதே போல... உதவியை தயங்காமல் உங்கள் வயதையொத்த நண்பர்களிடம் சொல்லிப்பாருங்கள்.. கண்டிப்பாக உதவுவார்கள். நட்பு என்பது பலப்படுவதே, உதவி என்பது பெறப்படும் போதும் தரப்படும் போதும் தான் என்றும் எனக்குத் தோன்றுவதுண்டு!

மேற் சொன்ன இரண்டிலும் ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. உதவி கேட்கும் போது நீங்கள் முடிவுக்கு வந்து விடுகிறீர்கள் இதைதான் செய்யப்போகிறீர்கள் என்று. அதனால் தான் உங்கள் வயதையொத்த நட்புகள் நிச்சயம் செய்வார்கள் என்று சொல்கிறேன். அதே சமயம் எல்லா விசயத்திற்குமான ஆலோசனையை விருப்பு வெறுப்பிலாமல அவர்களால் வழங்க முடியாமல் போகலாம். அதனால்தான் பெரியவர்களிடம் கேட்பது நல்லது என்று நினைக்கிறேன்.

இப்ப இன்னொரு முக்கிய கேள்வி ,வயதில் மூத்தவர்கள் கிண்டல் செய்வார்களே... எப்படி அவர்களை அணுகுவது.. ? 
 
இதற்கான பதில் சுலபம்தான். இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது. அதை பேசுவதற்கு முன்....
 
இதன் பதிலை கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றி யோசிக்கலாம்.
 
ஏனென்றால், உங்கள் வாழ்க்கை இதமான பயணமாக இருக்க வேண்டுமானால் நிச்சயம் பெரியவர்களின் நட்பு வேண்டும். அவர்களின் நட்பு உங்கள் எண்ணங்களை தெளிவாக்கும்.
 
அதே சமயம், வயதில் மூத்த எல்லோரும் பெரியவர் அல்ல. ஆனால் நம் மனதுக்குகந்த பெரியவர்கள் நம்மைச் சுற்றி இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் பல நேரம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்....
 
இப்ப மறுபடி அந்த கடைசி கேள்விக்கான பதிலுக்கு வரலாம். 
 
இது கொஞ்சம் சுலபமான கேள்வியாகக் கூட பலருக்குத் தெரியலாம். சுயமுன்னேற்ற நூல்கள் பல படித்தவர்களுக்கு இதற்கான பதில் டக் கென்று பஸ்ஸர் அழுத்தி குவிஸ் பதில் சொல்வது போல சொல்லிவிடலாம்...! எல்லோரும் சொல்லக்கூடிய அந்த பதில் "பணிவு"!!

ஆனால் எனக்கு சொல்லத்தோன்றுகிற பதில்: "பேசிப்பாருங்க...."


posted by சாகரன் @ 7/21/2004 05:49:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER