சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, January 27, 2007
எழுத்துக்கூடத்தின் 19வது சந்திப்பு - நகுலன் (Writer Nagulan)
நகுலனின் எழுத்தில் தோல்விதான் முக்கிய அனுபவம். நான் தோல்வி என்று குறிப்பிடுவது இலக்கிய தோல்வியை அல்ல. நகுலனின் அந்தரங்க தோல்வியும் அல்ல. சூழலை ஒரு நாடகமாக, ஏதோவொன்றை சுட்டி இன்னொன்றுக்கு காரணமாக்கும் வினோத தர்க்க முறையை ஒரு மனம் இயக்கமின்மையிலிருந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஏனெனில்

'யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம் '

நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம். - சங்கர ராம சுப்ரமணியன்
நன்றி : திண்ணை
~~*~~

தமிழில் கம்பன், திருத்தக்க தேவரிலிருந்து தான் ஓசை, சந்தம் கூடி வருகிறது. சங்கப் பாடல்களிலெல்லாம் இன்னர் ரிதம்தான் இருக்கிறது. இந்த இன்னர் ரிதம்தான் நகுலன், பிரமிளிடமும் இருக்கிறது.திரும்பத் திரும்ப இவர்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் காரணம், இவர்கள் கவிதைக் கட்டமைப்பிலும், விஷயத் தெரிவுகளிலும் சங்க மரபு சார்ந்து வருகிறார்கள். பழைய கவிதையாகயிருக்கிறது; அதே சமயத்தில் இன்றைய வாழ்க்கையை, இன்றையப் பிரச்சினைகளை, இன்றைய மனோபாவங்களை எடுத்துச் சொல்வதால் முழுக்க முழுக்க நவீன கவிதையாகவும் இருக்கிறது.
...........
ஒருவேளை கவிஞர் என்று சொன்னால் 'எழுத்து' அமைப்பில் நகுலன் ஒருவர்தான் கவிஞர். - கவிஞர் விக்ரமாதித்தன் - நன்றி: ஆறாம் திணை.
http://www.aaraamthinai.com/interview/2004/july10vikramathithyan.asp

“எழுத்து” காலகட்டம் பற்றி தெரிந்து கொள்ள...
http://thaaragai.wordpress.com/2006/05/05/pudhukkavithai2/

~~*~~


"என்னைப் பெற்றது நான்தான் "

நகுலனை சந்தித்த போது இதைச் சொல்லி அவரைப்படம் பிடித்துக் கொண்டிருந்த இயக்குனர் அருண்மொழியிடம் அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டார். அருண் மொழி சொன்ன விளக்கம் அவருக்குத் திருப்தி தராதது போல பார்த்துக் கொண்டிருந்தார். நான்கு நாள் இடைவெளிக்குப் பின் "செவ்வகம்" ஆசிரியர் விஸ்வாமித்திரனுடன் சந்தித்தபோது நகுலன் விஸ்வாமித்திரனிடம் அதே கவிதையைச் சொல்லி இதற்கு அர்த்தம் என்ன என்றார். அவர் ஒருவனின் ஆளுமையும், வாழ்மனச் சூழலும் அவனின் வாசிப்பு, அவனைச்சுற்றி உள்ல்ளவர்களால் உருவாக்கப்படுவது பற்றிச் சொன்னார். நகுலன் ஓரளவு திருப்தி அடைந்தவர் போல் புன்னகைத்தார். அதைத் தொடர்ந்து அவர் கோள்விகளை கேட்டார். பெரும்பாலும் பதில்களாக அவை அமையாமல் கேள்விகளாகவே அமைந்திருந்தன. " இது ஒரு வகை ஜென் தன்மையானது கேட்கிற கேள்விகளுக்கு பதில்களை சொல்லாமல் அதனை ஒட்டி கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பது " என்றார் விஸ்வாமித்திரன்.

2005ம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன் வைத்து... - சுப்ரபாரதிமணியன் நன்றி: பதிவுகள்

~~*~~
நகுலன் தமிழ் நவீன எழுத்தின் முன்னோடிக் கவிஞர். கதையாசிரியர். திருவனந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறார். எண்பது வயது தாண்டிவிட்டது. சாகித்ய அகாதமி, ஞானபீடம் உள்ளிட்ட எந்தப் பரிசையும் பெறாதவர் என்பது அவரது தனிச்சிறப்பு. அவரது கதையுலகம் மிகவும் தனித்துவமானது . எட்டு வயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக்கவிதையும் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். .......

நன்றி: எஸ்.ரா, அட்சரம்.

~~*~~

படிக்க ஒரு கட்டுரை : http://subramesh.blogspot.com/2005/05/blog-post_111624109063459058.html

~~*~~
புனைவு என்ற நிலையில் இயங்கும் மனம், தத்துவங்களை/அதுரீதியிலான ஒரு சாரத்தை எப்படிக் கையாள்கிறதென்று பார்க்கையில் ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களை ஒரு துருவத்தில் வைத்தால் நகுலன் போன்றவர்களின் எழுத்துக்கள் தானாக மறு துருவத்தில் பதிந்துகொண்டுவிடுகின்றன.

- சன்னாசி (http://dystocia.weblogs.us/archives/182 or MyDump)


எழுத்துக்கூடத்தின் 19ம் கூட்டம்: நகுலன் ஒரு அறிமுகம்.
- 26/01/2006

நீண்ட நாட்கள் கழித்துக் கூடும் கூட்டம் இது. சுமார் இரண்டு மாதங்கள் விடுப்பு முடித்து பெரும்பாலானவர்கள் பணிக்குத் திரும்பியிருந்தனராதலால் மீண்டும் ஒரு புது உத்வேகத்துடன் எழுத்துக்கூடக் கூட்டங்களைத் தொடரும் பொருட்டு இந்த வாரமே ஆரம்பிக்க முடிவு செய்திருந்தனர். குடியரசு தினம் - காலையில் இந்திய தூதரகத்தில் கொண்டாடப்பட்டதாகவும், கூட்டம் இந்த முறை அதிகமாக இருந்ததாகவும் கலந்து கொண்ட நண்பரொருவர் காதைக் கடித்தார்.

இந்த வாரக் கூட்டத்தில் வழக்கம் போல - எஸ்.ராவின் 'கதா விலாசம்' முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நகுலன். எடுத்துப் பிரிக்கும் வரை நகுலன் பற்றி நான் அறிந்தது மிகக் குறைவு. வழக்கமாக அடுத்த வாரம் யார் என்பது முன்னரே தெரியும் என்பதால் கொஞ்சம் பிரிபரேசன் இருக்கும். அது இந்த வாரம் மிஸ்ஸிங்க்! நகுலனை எஸ்.ரா சந்தித்ததும், அதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதன் பின்னர் இணையத்தில் வந்து செய்த சிறு ஆராய்ச்சிதான் மேலே பார்க்கும் சிறு கோட்டுகள். இணையத்தில் சிறு துழாவலிலேயே இவ்வளவு தூரம் எடுக்க முடிந்தது கொஞ்சம் பெரிய விசயம் தான். முந்தைய கதாவிலாசங்களில் படிந்த பெரும்பாலான எழுத்தாளர்கள் குறித்து என்னால் அதிகம் கண்டுபிடிக்க முடிந்ததில்லை:-(

"திருவனந்தபுரத்தில் அவரது வீடு, கௌடியார் என்ற பகுதியில் இருக்கிறது. நான் பார்க்கச் சென்ற நாட்களில், அவரது 'நாய்கள்' என்ற நாவல் வெளியாகியிருந்தது. 'நாய்களைப் பற்றி ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாரே!' என்று ஆச்சரியத்துடன் அதை வாசிக்கத் துவங்கினேன். நாவலில் ஓர் உருவகமாக, நாய் என்ற படிமத்தைப் பயன்படுத்தி இருந்தார்."


படிமம் - ? படிமம் என்றால்...? மாடல்? ப்ரோட்டோ டைப்?

நகுலன் திருமணம் செய்துகொள்ளாதவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று தனிமையில் வாழ்பவர். அவருக்குள்ள ஒரே துணை ஒரு பூனை மட்டும்தான்!

அவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘நான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமா?’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘பூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?’ என்று கேட்டேன். ‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?’ என்றார்.
இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், என்ன இது பிதற்றல்? என நினைப்பான். ஆனால், அதுதான் நகுலன்!

ஆழமான கேள்விகள். வயதானவர்கள் பலர் விதண்டாவாதம் செய்வதுண்டு. அதே போலத்தான் என்று தோன்றலாம். ஆனால் எஸ்.ரா சொல்கிறார்...

நகுலன் தன்னைத் தேடி வருபவர்களோடு கொள்ளும் உறவு விசித்திரமானது. சந்தித்த மறு நிமிடமே, ஒரு குழந்தையைப் போல ஏதேதோ கேட்கத் துவங்கிவிடுவார். அது ஒருவிதமான நட்பாக வளர்ந்து செல்லும். அவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும். உலகின் மீதான அவரது வியப்பும் ஈடுபாடும் தர்க்கங்களை மீறியது.

~~*~~

திரும்பவும் மாலையில் நான் சென்றபோது, காலையில் கேட்ட கேள்விகளையே மறுபடி கேட்டார்.
‘நீங்கதானே ராமகிருஷ்ணன்?’
‘ஆமாம்!’
‘அப்போ, காலையில் 'ராமகிருஷ் ணன்' னு ஒருத்தர் வந்திருந்தாரே, அவர் உங்களுக்குத் தெரிந்தவரா?’ ‘ஓரளவுக்குத் தெரியும்’ என்றேன். நகுலனின் சிரிப்பு பீறிட்டது. ‘அப்போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததை உங்களிடமும் பேசலாம், இல்லையா?' என்று கேட்டார். உரையாடலைத் தத்துவத்தின் உயர்ந்த நிலைகளை நோக்கி நகர்த்திப் போகும் கலை அவருக்கே உரியது.
ஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, 'இவள் அழகாக இருக்கிறாளா?' என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், 'கண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா? அது எப்படி சார்?' என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


அடேங்கப்பா.. நிஜமாகவே இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்?! ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அழகு என்று சொல்ல எப்படி முடிகிறது?!!

ஒரு முறை நகுலன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்தபடி, சாலையில் போகிறவர்களுக்குக் கையசைத்துக்கொண்டு இருந்தார். பள்ளிச் சிறுவர்கள் சிலர் கையசைத்துப் போனார்கள். அவர் கையசைத்தபடியே என்னிடம் கேட்டார்...
‘நான் இறந்துபோன பிறகு, இந்த வீட்டில் கை காட்டும் கிழவன் ஒருவன் இருந்தான் என்று குழந்தைகள் நினைப் பார்கள், இல்லையா? அதற்குத்தான் கையசைக்கிறேன்’ என்றார். இந்த ஆதங்கத்தின் கீழ் இருந்த துக்கம், ஒரு தேளின் விஷக்கடுப்பைப் போல என் உடலெங்கும் தாக்கியது.

இதைப் படிக்கும் போது எழுத்துக்கூடத்தில் இருந்த நண்பர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இந்த உணர்ச்சியைப் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும் இயல்பு உலகில் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இலக்கியம், படைப்பு அனைத்துமே தன்னை கால காலத்திற்கும் நிலை நிறுத்திக்கொள்ளத் துடிக்கும் துடிப்புதான். 'தேடிச் சோறு தின்று... ' பாரதியை ஏனோ நினைவு கூர்ந்தார் நண்பரொருவர்.

சில வாரங்களுக்கு முன் வந்த விகடன் கட்டுரையை நினைவுகூர்ந்தார் வேறொருவர்.

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’ (விகடன் or உமாசரண்)


எஸ்.ரா எழுத்தார்வலர்களுக்கு முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்கிறார்:

"பெரிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை, சிறிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம்" என்று யுத்த சாஸ்திரம் கூறுகிறது. அந்த நூலை எழுதியவன் ஒரு பௌத்த பிக்கு. ஒருவகை யில் இதுதான் எழுத்தின் ரகசியம். இதைக் கற்றுத் தருபவன், கதையை எழுதியவன் இல்லை. மாறாக, ஒரு நாடோடி. கற்றுக் கொள்வதற்கு ஆசானை விடவும் மனம்தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. மனதைக் குழந்தையைப் போல வைத்துக்கொள்வது எளிதானதா என்ன?

முழுமையான எஸ்.ரா.வின் கதாவிலாசம் கட்டுரையைப் படிக்க:
http://www.vikatan.com/av/2005/may/22052005/av0602.asp (or) http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997277395514514.html

***********

நகுலன் கவிதைகள் குறித்தான சில அலசல்கள் நண்பர்களால் முன் வைக்கப்பட்டன. அவரது கவிதைகள் தரும் தத்துவ விசாரங்கள் குறித்த பகிர்வு தொடர்ந்தது. சின்னச் சின்ன வரிகளில் எத்துணை ஆழம். கூடிய சீக்கிரம் நகுலன் புத்தகங்கள் வாங்கி வரச் செய்து ரியாத் தமிழ்ச்சங்கம் "அறிவுக்கூடம்" மூலமாக படிக்க வழி வகை செய்தால் நன்றாக இருக்கும்! :-)


இதன் தொடர்ச்சியாக "தமிழில் தாக்கம் ஏற்படுத்திய தலைசிறந்த பத்து தமிழர்கள்." வரிசையில் சங்க இலக்கியம் குறித்த சுமார் 20 நிமிடச் சொற்பொழிவு டாக்டர். மாசிலாமணி ஐயா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. முதல் தமிழராகத் "தொல்காப்பியர்" குறித்து சென்ற முறை பேசியிருந்தார். இந்த முறை அவர் பேசிய அனைத்தையும் ஓரளவுக்கு குறிப்பெடுத்தேன். இந்தக் குறிப்புகளை கூடிய விரைவில் ஒரு தனிக்கட்டுரையாகப் பதிக்க வேணும்! [வழக்கமாக எழுத்துக்கூட சந்திப்புகளைப் பதிவு செய்யும் கவிஞர்கள் இருவரும் கதாவிலாசம் பார்ட் முடிந்தவுடனேயே அடுத்த வாரம் நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்காக எஸ்கேப்பாயிபதே ஆகியிருந்தார்கள்! :-)]

******

என்னத்தான் இருந்தாலும், பழசினை எழுதுவது அவ்வளவு சுவாரசியமானது இல்லையே! ஏற்கனவே நடந்த கூட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள 'ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடம்' தளத்தினைப் பாருங்கள்.


******

அடுத்த வார எழுத்துக்கூடம்: 2ம் தேதி வெள்ளிக்கிழமை. தெரிந்து கொள்ளப்பட இருக்கும் எழுத்தாளர்: ஜி.நாகராஜன்
posted by சாகரன் @ 1/27/2007 08:07:00 PM  
2 Comments:
 • At 9:49 PM, Anonymous Anonymous said…

  Writer Nagulan என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருந்ததே எனக்கு இந்த பதிவை படிக்க தூண்டியது.

  பல விவரங்களை எழுதியுள்ளீர்கள். எல்லா பதிவுகளையும் படிக்கும் ஆவல் ஏற்படுகிறது.

  கதாவிலாசம் மற்றும் விகடனில் வந்தவைகளை ஏற்கனவே படித்திருப்பதால் புதியதாக ஒரு விசயமும் கிடைக்கவில்லை.

  அருமை நண்பர் பாம்பாட்டி சித்தனின் www.thaaragai.wordpress.com பற்றி குறிப்பிட்டிருப்பதன் மூலம் பலருக்கும் எழுத்து காலகட்டத்தை பற்றிய விவரங்கள் தெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

  விக்ரமாதித்யன் குறிப்பிட்டவாறில்லாமல் நகுலனின் தனிமை வெளியும் தத்துவவிசாரமும் பிரமிளிடம் குறைவாக காணப்படலாம். ஆனால் எழுத்து காலகட்டத்தின் பிதாமகராக பிரமிளையே முன்வைக்க வேண்டும். விக்ரமாதித்யன் தனக்கேயுரிய மயக்கத்தில் சொல்வதால் மட்டும் எழுத்து காலகட்டத்தின் சந்தம் பொதிந்த கலைஞனாக நகுலன் உருவாகிவிட மாட்டார்.

  நன்றி.

   
 • At 8:47 AM, Blogger சாகரன் said…

  நன்றி மஞ்சூர் ராசா.

  இந்த வார மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வரை எனக்கு நகுலன் பற்றி தெரியாது. பெயர் மட்டும் கேள்விப்படடிருக்கிறேன். கூட்டம் முடிந்த பிறகு தான் அவர் குறித்த பதிவுகளை வாசித்தேன். உண்மையில் இங்குள்ள அனைத்து விபரங்களும் எனக்குப் புதியவை!

  அன்புடன்,

   
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER