Saturday, August 07, 2004 |
நிழலாக நிற்க விரும்பும் நிஜங்கள்.... |
நிழலாக நிற்க விரும்பும் நிஜங்கள்....
சில நேரங்களில் உண்மை என்பதை மனம் ஏற்றுக்கொண்டாலும் தேவைஇல்லை என்று விருப்பத்துடன் நாம் ஒதுக்குவதுண்டு.உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதுண்டு!
என் நண்பர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். அவருடைய மாமி ஒருவர் உடல்நலம் இழந்து முழுவதும் உடல் உருகி ஆஸ்பிடலில் இருந்த போது ஆஸ்பிடல் வரை சென்ற அவர், மாமியை பார்க்க மறுத்துவிட்டதைச் சொன்னார். ஏன் என்று கேட்கப்பட்ட போது, மனதளவில் நிறைந்து விட்ட மாமியின் உருவத்தினை இப்பொழுது பார்த்து மாற்றிக்கொண்டு அவஸ்த்தைப்பட தான் தயாரில்லை என்றாராம்.
எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் என்னுள்ளும் இப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டு.
சவுதி வருவதற்கு முன் என் தாய் அழகாக இருந்தார்கள். உடல் பூசி ஒருவித தனி அழகுடன் இருந்த தோற்றம் எனக்குள் உண்டு.தாய் என்றாலே அழகு என்பது வேறு விசயம். இருந்தாலும், இன்று பல வருடங்கள் ஓடி விட்ட பின் உருக்குலைந்து கொஞ்சம் ஒல்லியாகிஒட்டிய கன்னங்களுடன் என் தாய் இருக்கும் போது கூட... அன்று பார்த்த அதே அழகான பூசிய தோற்றம்தான் என் மனதில் ஓடுகிறது.என் மனம் அந்த தோற்றத்தை விட்டு வெளியே வர விருப்பம் இல்லாமலேயே இருக்கிறது.
இது போன்ற மறக்க விரும்பும் நிஜத்தோற்றங்கள் என் தாய்க்கு மட்டுமல்ல. என் பாட்டிக்கும் கூட உண்டு.பாட்டி.... அப்படி ஒரு அழகு. வெள்ளி கிரணங்களாக தலை முழுக்க முடி. எவ்வளவு பெரிய கூட்டமானாலும் பாட்டியை கண்டுபிடித்து விட முடியும்.மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் நல்ல கூட்டமாக இருக்கும் போது கூட, பாட்டியை சட்டென்று அடையாளம் கண்டுபிடித்து அழைத்து வந்து விடுவோம். பாட்டியின் குரலில் ஒரு கம்பீரம் மின்னும். ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க.. உங்க பாட்டி இங்கிலீஷ்லாம்பேசறாங்க அப்படின்னு. என் முதல் மாத சம்பளத்தில் 5000 ரூபாய் அனுப்பியிருந்தேன். அதனை வைத்து ஏலக்காய் மாலை என்று ஏதேதோ செய்தார்கள். ரொம்ப நாள் அந்த பணத்தை சேமித்து வைத்துக்கொண்டிருந்தார்கள்; என் பெயரில் அர்ச்சனை செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.மரணிக்கும் முதல்நாள் பாட்டியுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்... என்னடா.. யூ.எஸ் போறவங்க தான் ஊர்ல இருக்கறவங்கள மறந்துடுவாங்க...உனக்கு என்ன ஆச்சு அப்படின்னு கேட்டு கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
பாட்டி மரணித்த செய்தி எங்கள் குடும்பத்தில் பெரிய அதிர்ச்சி இல்லை. வயது ஆகியிருந்தது 75. அதனால் கூட இருக்கலாம்.
ஆனால் நான் சொல்ல வருவது. இன்றும் என் மனதில் அந்த நிகழ்ச்சி பதியவில்லை என்பதை. சில நேரங்களில் என் துணையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இதை பாட்டிக்கு வாங்கி போகலாம் என்பது போல் ஏதாவது என்னை மறந்து சொல்லி விடுவது வழக்கம்.
இப்படி எத்தனையோ நிஜங்களை நிழலாக்கி நாம் அமைதிப்படுவது எல்லோருக்கும் இருக்கலாம்.
சொல்ல மறந்துட்டேனே... கொஞ்ச நாள் முன்னாடி அம்மாவிற்கு போன் செய்த போது... அம்மாவின் குரல், பாட்டியின் குரலாக எனக்குத் தெரிந்தது! வயது ??
பதிவு எண்: 48
|
posted by சாகரன் @ 8/07/2004 10:58:00 AM |
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|