சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, July 31, 2004
போடுங்கம்மா ஓட்டு...
பொதுநல நோக்கில் பல நேரங்களில் சில சிந்தனைகள் தோன்றுவதுண்டு.

அது போல வரும் சில சிந்தனைகள் இங்கு....

இன்று மதியம் தோன்றிய ஒரு சிந்தனை:

இந்திய அரசியலின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஓட்டுபோடாமை.!

அதை கொஞ்சம் குறைக்க ஒரு ஐடியா.

நாம் சில பொருட்கள் வாங்கும் போதோ அல்லது ஏதேனும் சினிமாவிற்கு செல்லும் போதோ கூட... சமயங்களில் நமக்கு டிஸ்கவுண்டு கூப்பன்கள் கிடைப்பதுண்டு. இந்த டிஸ்கவுண்டு கூப்பன் வைத்து ஏதேனும் கடைகளில் 10%-20% டிஸ்கவுண்டு கிடைக்கும் என்று சொல்வதுண்டு.

இதே டெக்னிக்கை ஓட்டு போடுபவர்களிடமும் செய்யலாம். ஓட்டு போட்டு முடிந்தவுடன் அவர்களுக்கு டிஸ்கவுண்டு கூப்பன்கள் வழங்கலாம். ஓட்டு போடுபவர்களுக்கு மட்டும்தான் இது கிடைக்கும் என்பதால் அதை வாங்குவதற்காகவாது வருவார்கள். ஒவ்வொரு ஊரிற்கும் தகுந்தார்போல அங்குள்ள கடைகளுடன் தொடர்பு கொண்டு இந்த ஏற்பாடினை செய்யலாம்.

அடுத்ததாக, பெரிதும் பேசப்படும் ரேஷன் விசயம். பலர் ரேஷன்களை ஓட்டுபோடுபவர்களுக்கு மட்டும் கிடைக்கும் வண்ணம் செய்யவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு பதிலாக ஓட்டு போடுபவர்களுக்கு 1 கிலோ அரிசி இனாம் ரேஷன் கடைகளில் அப்படின்னு சொன்னா இன்னும் நிறைய பேரு ஓட்டு போட வருவாங்க.

என்ன இதுவும் கூட பிரைப் மாதிரிதான். ஆனா நல்ல விசயங்களுக்காக....
posted by சாகரன் @ 7/31/2004 02:11:00 PM   0 comments
இனி தொடரலாம்.
நல்லது. சவுதியில் இன்று இந்த தளத்தினையும் மற்ற பிளாக்ஸ்பாட் தளங்களையும் ஓபன் செய்துவிட்டார்கள்.

இனி தொடரலாம்.
posted by சாகரன் @ 7/31/2004 02:03:00 PM   0 comments
Thursday, July 29, 2004
இன்னும் பிளாக்ஸ்பாட் தளங்களை சவுதி அரேபியா ரியாத்தில் ஓபன் செய்ய வில்லை. இனி வழியில்லை. அடுத்தது அவங்க எப்ப ஓபன் பண்றாங்களோ அதுவரை பொருத்துத்தான் ஆகணும். ஹ்ம்ம்....
கொஞ்ச நாளா... நிறைய யோசித்தேன். அது கடவுளுக்கே பிடிக்கவில்லை போலும்...!  முதல் ரவுண்டு இங்க நிறுத்திக்கறேன். அடுத்த ரவுண்டு சீக்கிரம் பார்க்கலாம் :-)

posted by சாகரன் @ 7/29/2004 02:27:00 AM   0 comments
விஞ்ஞானம் என்பது கீழை நாட்டிற்கோ மேலை நாட்டிற்கோ மட்டும் சொந்தமானதன்று. அது எல்லோருக்கும் பொதுவான உலகச் சொத்து. இருந்தாலும் பாரதம் விஞ்ஞானத்தில் சிறந்த பங்காற்ற தனித் தகுதி பெற்றுள்ளது.**"
- ஜகதீஸ் சந்திர போஸ்.

**புராதன இந்துக்களுக்குப் பொருட்களின் அணு அமைப்புப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. இந்திய தத்துவ சாத்திரத்தில் ஆறு முறைகளில் ஒன்றானது வைசேஷிகம். சமஸ்கிருத மூலச்சொல்: விசேஷஸ், "அணுவின் தனித்தன்மை".வைசேஷிகத்தை விளக்கியவர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான ஆலுக்யர் என்பவர் கணாதர் (அணுவைப் புசிப்பவர்) எனவும் அழைக்கப்பட்டு வந்தார். இவர் சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்.
ஏப்ரல் 1934, கிழக்கு-மேற்கு பத்திரிக்கையில் வெளிவந்த தாரா மாதா எழுதிய கட்டுரையில் வைசேஷிகத்தின் விஞ்ஞானக் கருத்துச் சுருக்கம் பின்வருமாறு கொடுக்கப்பட்டிருந்தது: "அணுவைப் பற்றிய புதிய கொள்கை பொதுவாக விஞ்ஞானத்தின் நவீன முன்னேற்றம் என்று கொள்ளப்பட்டாலும் வெகு காலத்திற்கு முன்பே கணாதர்(அணுவைப் புசிப்பவர்) என்பவரால் அதற்கு மிக அற்புதமான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருத "அணுஸ்" என்பதை அணு(atom) என மொழி பெயர்க்கலாம். அது கிரேக்க மொழிப்படி "வெட்ட முடியாதது" அல்லது பகுக்க முடியாதது என்பதாகும்.
கிறிஸ்துவிற்கு முந்தைய கால இலக்கியமான வைசேஷிகத்தில் காணக்கிடைக்கும் மற்ற விஞ்ஞான உண்மைகள்:

(1). காந்தத்தை நோக்கி ஊசிகளின் அசைவு

(2). தாவரங்களின் நீரின் சுழற்சி

(3). ஆகாயம் அல்லது ஈதர், நுட்பமான சக்திகளின் போக்குவரத்துக்கு ஆதாரமாக ஜடப் பொருளாகவும், எந்த கட்டமைப்பும் கொண்டிராமலும் இருப்பது.

(4). மற்ற எல்லா வெம்மைக்கும் காரணமாக சூரியனுடைய வெப்பம் இருப்பது
(5). மூலக்கூறுகளின் மாற்றத்திற்கு வெப்பம் காரணமாக இருப்பது

(6). பூமியின் அணுக்களுக்குள் அடங்கியிருக்கும் சுய சக்தியினால் கீழ் நோக்கி இழுக்கும் திறனான புவிஈர்ப்பு சக்தியின் விதிமுறை.

(7). அனைத்து சக்திகளின் இயங்கும் இயல்பு - இதன் செயல்பாடானது சக்தியைச் செலவழிப்பதையும் அல்லது இயக்கத்தின் மறு வினியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

(8 ). அணுப்பிளவினால் பேரண்டத்தின் அழிவு

(9). ஒளி மற்றும் வெப்பத்தின் கதிர் வீச்சுகள் மிக மிக நுண்ணிய சிறு துகள்களாக நினைக்க முடியாத வேகத்தில் எல்லாப் பக்கங்களிலும் சிதறுவது (நவீன 'பிரபஞ்சக் கதிர்கள்' கோட்பாடு)

(10). காலம், இடம் இவைகளின் சார்பு தத்துவம்.
"வைசேஷிகம், உலகத்தின் மூல காரணமாக என்றும் அழியா இயல்பைக் கொண்ட அணுக்களையே குறிப்பிடுகிறது. அதாவது அணுக்களின் முடிவான விசேஷத் தன்மையைக் குறிப்பிடுகிறது. இந்த அணுக்கள் இடையறாத அதிர்வசைவுகளைக் கொண்டதாகக் கருதப்பட்டன.........பழங்காலத்து வைசேஷிக தத்துவ ஞானிகளுக்கு அணு ஒரு மிகச் சிறு சூரிய மண்டலம் என்ற நவீன கண்டுபிடிப்புப் புதியதில்லை; அவர்கள் கணக்கியலின் கருத்துப்படி காலத்தின் மிகக் குறைந்த அளவைக் கூட, அணு தன் வட்டத்தைச் சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமாகக் கணக்கிட்டிருந்தார்கள்"

நன்றி : "ஒரு யோகியின் சுயசரிதம்" - பரமஹம்ஸ யோகானந்தர்.
posted by சாகரன் @ 7/29/2004 02:02:00 AM   0 comments
Wednesday, July 28, 2004
பிளாக்(Blog) பிளாக் (block)!
இந்த முறை மீண்டும் சவுதி அரேபியாவில் பிளாக்ஸ்பாட் தளத்தினை பிளாக் பண்ணி விட்டார்கள்!

பிளாக்கர்.காம் -ல் நுழைய முடிகிறது. ஆனால் பிளாக்ஸ்பாட் தளத்தில் முடியவில்லை :-(
வழக்கம் போல தளத்தினை ஓபன் செய்வதற்கு எழுதியிருக்கிறேன். இந்த விசயங்களில் அவர்கள் கொஞ்சம் வேகமானவர்கள். பெரிய டீம் வொர்க். சுமார் 24 மணி நேரத்திற்குள் ஓபன் செய்துவிடுவார்கள். நாளை ஓபன் ஆகிவிடலாம்.

நான் கேட்ட முந்தைய தளங்கள் பலவற்றையும் இப்படி ஓபன் செய்திருக்கிறார்கள்.

நிச்சயம் நிறைய பேர் வேலை செய்வார்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் சும்மாவா 2 மில்லியன் தளங்களை பிளாக் செய்ய முடியும்? 2 மில்லியன் என்பது ஜனவரி 2004 கணக்கு. இப்பொழுது எவ்வளவு என்பது தெரியவில்லை!

சவுதியில் பிளாக் செய்யப்படும் வலைப்பூ தளங்கள் பார்க்க ஒரு வழி இருக்கிறது. அந்த புண்ணியம் பிளாக்லைன்ஸை சாரும் :-) பிளாக் லைன்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதை பற்றி அப்புறம் ஒரு பதிவில் எழுதலாம்!

பதிவு எண்: 36
posted by சாகரன் @ 7/28/2004 10:08:00 AM   0 comments
Tuesday, July 27, 2004
எய்ட்ஸ் என்னும் அரக்கனை எப்படி ஒழிப்பது?
தமிழ்மன்றத்தில் நான் எழுதியிருந்த ஒரு பதிவும் அதற்கு பதிலளித்த நண்பர் துலாவின் பதிவும்!

எய்ட்ஸ் என்னும் அரக்கனை எப்படி ஒழிப்பது?

முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிக முக்கியம் அதற்கான சில யோசனைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்....

1. திருமணப் பதிவு என்பது மிகவும் அவசியமாகி விட்ட காலம் இது.. திருமணப்பதிவின் போது ஆண் பெண் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் டெஸ்ட் குறித்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் அவசியம். அப்போது தான் ரிஜிஸ்டர் செய்யப்படும் என்று சட்டமாக்கலாம்...
 
2. எங்கெல்லாம், ரத்தம் சம்பந்தப்படுகிறது என்று யோசிக்கலாம்... உதாரணத்திற்கு சலூன்கள்... சலூன்கள் அனைத்திலும் "சுத்தீகரிக்கப்பட்ட புது பிளேடு உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் எய்ட்ஸ் தாக்கலாம்" என்ற போர்ட் எழுதப்படலாம்... பெரிய அளவில்... இதை சட்டமாக்கலாம்.

3. விபசாரத்தை அங்கீகரித்து , ஈடுபடுபவர்களை மாதம் இருமுறை எய்ட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தி அடையாள அட்டை குடுக்கலாம்.

4. எய்ட்ஸ் டெஸ்ட் எடுக்க வருபவர்களுக்கு, அந்த டெஸ்ட்டை இலவசமாக்கலாம்... எங்கே செய்து கொண்டாலும்..

4அ. வேறு டெஸ்ட்டிற்கு வந்தாலும் பிளட் டெஸ்ட் என்றால் ஹெச் அய் வி டெஸ்ட் இணைந்தது என்று சொல்லலாம்... அதனால் யாரும் தயங்க மாட்டார்கள்.. வேறு பிளட் டெஸ்ட்டிற்காக வந்ததாக கூறிக் கொள்வார்கள்.

5. புள்ளிராஜா எய்ட்ஸ் விளம்பரம் போன்ற புது யுத்தி விளம்பரங்களை அதிகப்படுத்தலாம். ஐடியா குடுப்பவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தலாம்...

6. ரத்த தானம், மருத்துவமனை போன்ற இடங்களில் இன்னும் கவனமாக இருக்கச் செய்யலாம்.

7. டிஸ்போசபிள் நீடில்ஸ் விலை குறைப்பு மேலும் உபயோகப்படுத்தலை அதிகப்படுத்தும்.

8. 11/12ம் வகுப்புகளில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பாடத்திட்டமாக்கலாம். இதைப் பரிட்சைகளில் கட்டாயக் கேள்வியாக்கலாம். அதற்காகவாவது படிப்பார்கள்....

9. அனைத்து கல்லூரிகளிலும், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம்.. அவர்கள் தான் நாளைய தலைமுறை...

10. பாட்டு கூத்து போன்ற கிராமப்புற நிகழ்ச்சிகளில் எய்ட்ஸ் குறித்த கருத்துக்களையும் இணைத்து அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

11. பேருந்துகளின் பின்புறம் மற்ற கருத்துக்களை விட, எய்ட்ஸ் குறித்த சுலோகன்களை எழுதச்செய்யலாம்.

12. கல்வியறிவில் பின் தங்கியவர்கள் இந்தியாவில் அதிகம்... அதனால் அவர்களை உணர்ந்து கொள்ளச் செய்ய... சினிமாவை ஒரு ஊடகமாக பயன்ப்டுத்தலாம்... கமர்சியல் படங்களின் இடைவேளையில் கமர்சியல் ஹீரோக்கள் சொல்லும் வார்த்தைகள்... சிலருக்கு....வேகமாக சென்றடையும்

13. இன்று ஆணுரை மெடிகல்ஸில் மட்டுமே கிடைக்கிறது(என்பது பலர் கருத்து..), அதை மாற்றி, எல்லா மளிகை கடைகளிளும், பெட்டிக் கடைகளிலும் விற்பனையாக்கலாம்.. வெட்கமாக இருக்கிறது அதை கேட்டு வாங்குபவர்களுக்கு என்பவர்களுக்காக ஏடிஎம் மெஷின்களுடன், ஆணுரையையும் மெஷின் மூலமாக பெறுவதற்கு ஏதேனும் கருவி கண்டுபிடிக்கலாம்...

14. தினசரிகளில் கண்டிப்பாக இது குறித்த விளம்பரம் அல்லது சுலோகன் கண்ணில் படும் இடத்தில் பதிக்கப்பட ஏற்பாடு செய்யலாம்....
 
இன்னும் யோசிக்கலாம்......

Follows , நண்பர் துலாவின் பதிவு:
 
சாகரன், அழகாக பாயிண்ட் பாயிண்டாக விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். அதையொட்டி இங்கு நான் எழுதப்போவது, அந்த விஷயங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவதற்காகத்தான். குற்றம் குறை கண்டுபிடித்து சொல்வதற்காக அல்ல. 


சாகரன் wrote:

1. திருமணப் பதிவு என்பது மிகவும் அவசியமாகி விட்ட காலம் இது.. திருமணப்பதிவின் போது ஆண் பெண் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் டெஸ்ட் குறித்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் அவசியம். அப்போது தான் ரிஜிஸ்டர் செய்யப்படும் என்று சட்டமாக்கலாம்...  
 
இது தனிமனித உரிமை பிரச்சினையாகி விடும். வளர்ந்த நாடுகளிலேயே இது செய்யப்படவில்லை. அத்தோடு எல்லா திருமணங்களும் பதிவு செய்யப்படுவதில்லை. இரு வீட்டார்களும் ஒருவருக்கொருவர் மாப்பிளையையும் பெண்ணையும் சோதனை செய்து சான்றிதழ்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். இது சீக்கிரம் நகரத்தில் பழக்கமாகிவிடுமென நம்புகிறேன். 


சாகரன் wrote:

2. எங்கெல்லாம், ரத்தம் சம்பந்தப்படுகிறது என்று யோசிக்கலாம்... உதாரணத்திற்கு சலூன்கள்... சலூன்கள் அனைத்திலும் "சுத்தீகரிக்கப்பட்ட புது பிளேடு உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் எய்ட்ஸ் தாக்கலாம்" என்ற போர்ட் எழுதப்படலாம்... பெரிய அளவில்... இதை சட்டமாக்கலாம். 


இந்த சலூன் விஷயம் நம் நாட்டில்தான் அதிகம் பேசப்படுகிறது. உண்மையில் எச்ஐவி கிருமிகள் அறை வெப்பத்தில் (room tempature, 24/25 degreeக்கு மேல்) அதிகபட்சமாக மூன்று நிமிடங்கள்தான் உயிரோடு இருக்கும். அந்த குறைந்த காலகட்டத்தில் ஒருவருக்கு சவரம் செய்துவிட்டு அடுத்தவருக்கு செய்வது என்பது கஷ்டமான காரியம். அதுவும் முதலாமவர் கத்தியால் வெட்டப்பட்டிருக்க வேண்டும், இரண்டாமவரும் அதே கத்தியால் வெட்டு வாங்க வேண்டும். டெட்டால் உடனடியாக எச்ஐவி கிருமிகளை கொன்றுவிடும். இதே மாதிரிதான் ஊசி கேஸ¤ம். லேசாக வெந்நீரில் வைத்தாலே போதுமானது. உடனடியாக வைரஸ் செத்துவிடும். உலக முழுவதும் இந்த முறையில் எய்ட்ஸ் இதுவரை பரவியது 0.03%க்கும் குறைவுதான். இதில் போதை ஊசி போட்டுக்கொள்பவர்கள் கணக்கு வரவில்லை. ஒரே ஊசியை ஒருவர் மாற்றி ஒருவர் போட்டுக்கொள்வதால் எய்ட்ஸ் வந்து சாகுபவர்கள் மேற்கத்திய நாடுகளில் அதிகம். நம் நாட்டில் இன்னும் பவுடர்தான் பழக்கமென்பதால், இந்த வகை தாக்கம் ரொம்ப கம்மி. 


சாகரன் wrote:

3. விபசாரத்தை அங்கீகரித்து , ஈடுபடுபவர்களை மாதம் இருமுறை எய்ட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தி அடையாள அட்டை குடுக்கலாம். 


இதுவும் ஓரளவுக்குத்தான் உதவும். காரணம் எச்ஐவி கிருமியினால் தாக்கப்படுபவருக்கு முதல் மூன்று மாதங்கள் ரத்தத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. எந்த பரிசோதனையும், வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்க முடியாது. க்ளின் சர்டிபிகேட் வாங்கி மூன்று மாதத்தில் மூவாயிரம் பேருக்கு பரப்பிவிடுவார். 


சாகரன் wrote:

5. புள்ளிராஜா எய்ட்ஸ் விளம்பரம் போன்ற புது யுத்தி விளம்பரங்களை அதிகப்படுத்தலாம். ஐடியா குடுப்பவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தலாம்... 
 
கை கொடுங்கள் சாகரன். இது அருமையான யோசனை. ஊறிப்போன பழைய விளம்பரங்களை விடுத்து புதிய புதிய விளம்பரங்களை கொண்டுவர வேண்டும். மக்களை பயமுறுத்தலாகவோ, ஜாலியாகவோ எய்ட்ஸ் பற்றி பேச வைக்க வேண்டும். 


சாகரன் wrote:

6. ரத்த தானம், மருத்துவமனை போன்ற இடங்களில் இன்னும் கவனமாக இருக்கச் செய்யலாம்.  


எனக்கு தெரிந்த வரைக்கும் இப்போது சட்டத்தில் மாற்றம் செய்தாகிவிட்டது. நம்முடைய உறவினர்களேயானாலும் நாம் நேரடியாக அவர்களுக்கு ரத்தம் கொடுக்க முடியாது. லேப்பிலிருந்து வருவதைத்தான் பயன்படுத்த வேண்டும். லேப்கள் ரத்தத்தை சோதனை செய்தே வெளியே அனுப்புகிறது. 


சாகரன் wrote:

7. டிஸ்போசபிள் நீடில்ஸ் விலை குறைப்பு மேலும் உபயோகப்படுத்தலை அதிகப்படுத்தும். 
 
மறுபடியும் ஒரு அட்டகாசமான யோசனை. என்னைக் கேட்டால் மருந்து கம்பெனிகள் டாக்டருகளுக்கு காம்ப்ளிமெண்டாய் ஏதேதோ தருவதற்கு இவைகளை தரலாம். டாக்டர்கள் அதை நோயாளிக்கு இலவசமாக பயன்படுத்தலாம். 


சாகரன் wrote:

8. 11/12ம் வகுப்புகளில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பாடத்திட்டமாக்கலாம். இதைப் பரிட்சைகளில் கட்டாயக் கேள்வியாக்கலாம். அதற்காகவாவது படிப்பார்கள்....

9. அனைத்து கல்லூரிகளிலும், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம்.. அவர்கள் தான் நாளைய தலைமுறை... 


கலக்கிட்டீங்க சாகரன். உங்களுடைய யோசனையிலேயே டாப் இதுதான். இப்படிப்பட்ட தைரியமான முடிவுகளைத்தான் நம்முடைய அரசாங்கம் எடுக்க வேண்டும். 


சாகரன் wrote:

10. பாட்டு கூத்து போன்ற கிராமப்புற நிகழ்ச்சிகளில் எய்ட்ஸ் குறித்த கருத்துக்களையும் இணைத்து அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம். 


எட்டு, ஒன்பது படிப்பவர்களுக்கு என்றால், பத்து படிக்காத கிராம மக்களுக்கு. சபாஸ் சாகரன். 


சாகரன் wrote:

11. பேருந்துகளின் பின்புறம் மற்ற கருத்துக்களை விட, எய்ட்ஸ் குறித்த சுலோகன்களை எழுதச்செய்யலாம்.

12. கல்வியறிவில் பின் தங்கியவர்கள் இந்தியாவில் அதிகம்... அதனால் அவர்களை உணர்ந்து கொள்ளச் செய்ய... சினிமாவை ஒரு ஊடகமாக பயன்ப்டுத்தலாம்... கமர்சியல் படங்களின் இடைவேளையில் கமர்சியல் ஹீரோக்கள் சொல்லும் வார்த்தைகள்... சிலருக்கு....வேகமாக சென்றடையும். 


இவைகள் ஏற்கனவே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையா? நம்முடைய கமர்சியல் ஹீரோக்கள் சும்மா வில்லனை பார்த்து சவால் விடுவதற்கு, திரைப்படத்திலேயே எய்ட்ஸ் பற்றிய வசனங்களை லாவகமாக நுழைத்து விடலாம். 

சாகரன் wrote:

13. இன்று ஆணுரை மெடிகல்ஸில் மட்டுமே கிடைக்கிறது(என்பது பலர் கருத்து..), அதை மாற்றி, எல்லா மளிகை கடைகளிளும், பெட்டிக் கடைகளிலும் விற்பனையாக்கலாம்.. வெட்கமாக இருக்கிறது அதை கேட்டு வாங்குபவர்களுக்கு என்பவர்களுக்காக ஏடிஎம் மெஷின்களுடன், ஆணுரையையும் மெஷின் மூலமாக பெறுவதற்கு ஏதேனும் கருவி கண்டுபிடிக்கலாம்... 

 மளிகைக்கடையில் ஆணுரை விற்கப்படுகிறது. ஏடிஎம் மெஷின்கள் படித்தவர்களுக்கு மட்டும்தான் உபயோகப்படும். இதே வரிசையில் இன்னும் சிந்திதால், இன்னும் நல்ல யோசனைகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள். மற்றவர்களும் செய்வோம். 

- துலா

-----------
பதிவு எண்: 35
posted by சாகரன் @ 7/27/2004 02:22:00 PM   0 comments
Monday, July 26, 2004
எதிர் கோபம்
கோபம் பற்றி எழுதாதவர்கள் குறைவு.. வள்ளுவரிலிருந்து ராமகிருஷ்ணர் முதல் எத்தனையோ ஆன்மீகவாதிகள் எழுதிய ஒரு விசயம்தான். ஏன் எத்தனையோ பழமொழிகள் கூட உண்டு..மிகவும் பிரபலமான, 'கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்' என்ற பழமொழி ஒரு கிளிஷேயாக நம்மிடையே பயன்படுத்தப்பட்டுவரும் ஒன்று. குறைந்த பட்சம், 'எனக்கு கோபம் அதிகங்க...','எனக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவேன்னே தெரியாது' இந்த அளவிலாவது நம்மில் பலர் பேசுவதுண்டு.

இருந்தாலும் வேறு விதமாக யோசிக்க விரும்புகிறேன்.

கோபம் என்பது அதீதமான ஒரு சக்தி என்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு.

ஆமாம்... நான் கோபத்தினை வரவேற்கிறேன்... ஏன் அந்த அதீதமான சக்தி வேறு திசையில் திருப்பிவிடப்பட்டால்... என்ன விதமான பயனைத்தரும் என்று யோசிக்க ஆசைப்படுகிறேன்.

எப்படியெல்லாம் கோபம் வரும்? இரண்டு விதமாக.... ஒன்று உங்களுக்கு கீழ் உள்ளவர்களிடம் உங்களால் கோபம் காட்டமுடியும் என்று தெரிபவர்களிடம். இரண்டு உங்களிடம் கோபப்படுபவர்களிடம் திரும்ப கோபம் காட்டமுடியாத ஒரு நிலை.. அப்பொழுது ஏற்படும் கோபம்.

முதல் வகை பற்றி பேச நிறைய பேர் இருக்கலாம். குறைக்க வேண்டும் என்று அறிவுரை சொல்ல நிறைய பேர் வரலாம். தனிமனித வாழ்க்கையில் ஏற்படும் கோபங்கள் அப்படிப்பட்ட அறிவுரைகளுக்கு அடங்கியவையாகவும் இருக்கலாம். ஆனால் நான் பேசப்போவது இரண்டாம் வகைக்கு. அதாவது உங்களிடம் மற்றவர்கள் கோபப்படுவதால் ஏற்படும் எதிர் கோபம் பற்றி..! இந்த எதிர் கோபம் தான் முக்கியமானது ஒரு மனிதனை மிகவும் காயப்படுத்துவதால் ஏற்படும் எதிர்ப்பு சக்தி. எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்ற நியூட்டனின் விதி அறிவியலுக்கு மட்டுமல்ல...!

இந்த எதிர் கோபம்.. அழிவை நோக்கித் திரும்பாமல், வேறு பக்கம் மாற்றப்பட வேண்டும். முற்றிலும் வித்தியாசமாக கையாளப்பட வேண்டும். அந்த முயற்சியின் காரணமாக வெற்றியையும் அடையும் பொழுது, முன்னர் கோபப்பட்டவரை நன்றி சொல்லி நினைக்கத் தூண்டும்! இன்றைக்கும் எத்தனையோ கம்பெனிகளில் இருக்கும் M.Dக்கள் பலர் முந்தைய கம்பெனியை நினைத்துப்பார்ப்பது இதனால்தான்.

ஒரு நிர்வாகத்தினை பிடிக்காமல் தனி நிர்வாகம் துவங்கியது தான் சரியானதே தவிர, அதே நிர்வாகத்தில் இருந்து கொண்டு அந்த நிர்வாகத்தினை கெடுத்துக்கொண்டிருப்பது அல்ல. இந்த சிந்தனை நிச்சயம் பலருக்கு சரியான நேரத்தில் வரும். அப்படி வராதவர்கள் இன்னும் எதையும் புரிந்துகொள்ளாதவர்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.

எத்தனையோ அரசியல் கட்சிகள் உடைவதும் இப்படிப்பட்ட காரணங்களால்தான். ஆனால் எத்தனை பேர் கண்ணியம் காக்கிறார்கள் என்பது அரசியல் சார்ந்தது.

தனிமனித வாழ்க்கையிலும் கூட எதிர் கோபத்தினால் சாதித்தவர்களும், படித்தவர்களும், முன்னேறியவர்களும் அதிகம்... ஆனால் வெளியே சொல்வார்களா என்றால் சந்தேகம்தான்..

இப்படி புதிய சக்தியாக உருவெடுப்பவர்களிடமிருந்தும் பிரிந்து வேறு புதிய சக்திகள் உருவாகக்கூடும்.

இது ஒரு ஸ்டார் டோபோலஜி... முடிவில்லாத நட்சத்திரச் சிதறல்கள்...

பதிவு எண்: 34
posted by சாகரன் @ 7/26/2004 04:45:00 PM   3 comments
உலா வரும் நேரம்....
உலா வரும் நேரம்....

வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சந்தோஷம்....இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் அது குறித்து நாம் நினைத்துப்பார்க்கிறோமா என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. அப்படியே நினைத்துப்பார்த்தாலும் வாழ்க்கையில் அதை கொண்டுவருகிறோமா என்றால்....

பணம் சம்பாதிப்பது அல்லது சேமிப்பது என்ற விசயத்தில் நாம் கவனமாக இருந்தாலும், திட்டமிடுவதிலும் ஒழுங்காக செலவு செய்வதிலும் தவறுகிறோமோ என்று தோன்றுகிறது.

சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவரை சந்தித்தேன்... அவர் சொன்ன சில விசயங்களை இங்கு குறித்து வைப்பது நாளை எனக்கு உதவலாம்....

அவர் சொன்னது... சுற்றுலா திட்டமிடல் என்பது முக்கியமானது குடும்ப வாழ்க்கைக்கு...! கடந்த 20 வருடங்களான வாழ்க்கையில் அவர் செய்த முக்கிய காரியம் ஒவ்வொரு வருடமும் குடும்பத்தினருடன் பல இடங்களுக்கு சுற்றுலா..! இந்தியாவில் இருந்த போதும் சரி.. வெளிநாட்டில் இருந்த போதும் சரி.. அதனால் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சி கடந்த வாழ்க்கையில் நிறைவைத் தந்திருக்கிறது.

இன்றைய இளைய தலைமுறை, நாள் முழுவதும் வேலை வேலை என்று ஆளாய் பறக்கிறார்கள்.. அவர்களின் அந்த பரபரப்பிற்கு காரணம் இல்லாமல் இல்லை. தன்னை நிரூபிக்கும் அவசியம் இருக்கிறது அவர்களுக்கு. அதை exploit செய்ய அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களும் தவறுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் குடும்பம் என்ற விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்று தோன்றுகிறது. சில வருடங்கள் கழிந்த பின் அவர்களின் வாழ்கையில் சந்தோஷமான தருணங்கள் என்பது குறைந்து விட்டதே என்ற எண்ணம் வரலாம்.

நான் பேசுவது வேலை செய்வதில் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும் திருமணமான நண்பர்கள் குறித்து!

கொஞ்சம் திரும்பிப்பார்த்தால்... எந்தையும் தாயுடனும் நான்  பேசிக்கொண்டிருக்கும் இன்றும் இனிமையான் தருணங்கள் ஞாபகம் வருகிறது... சென்னையின் பரபரப்பில் ஐக்கியமாவதற்கு முன் கிராமத்தில் நாங்கள் வாழ்ந்த காலங்கள் நினைவில் நிழலாடுகின்றன. அப்பொழுது ... இரவு 8:30 மணிக்கெல்லாம் உண்வுக்கடன் முடித்து, வீட்டு வாசலிலோ அல்லது மொட்டை மாடியிலோ ஈஸிசேர்... ரேடியோ சகிதம் உட்கார்ந்து ஏதேனும் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். வருடம் ஒரு முறை குடும்பமாக எங்கேனும், சுற்றுலா சென்று வருவதும் வழக்கம்.  அது போன்ற அமைதியான காலங்கள் இன்று கிடைப்பதில்லை..

பணம் பார்க்காமல் எங்கு இருக்கிறோமோ அங்குள்ள இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு திட்டமிட்டு வருடத்தில் இருதடவையாவது குடும்பத்துடன் நாம் சென்று வருவது பின்னாளில் நினைத்துப்பார்த்து மகிழ நிச்சயம் உதவியாக இருக்கலாம்....

எத்தனை தான் சில விசயங்கள் மனதில் தோன்றினாலும் நல்ல விசயமாக மனம் ஏற்றுக்கொண்டாலும், வாழ்கையில் Implement செய்வது என்பது முடியுமா என்ற சந்தேகம் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை!!

பதிவு எண் : 33
posted by சாகரன் @ 7/26/2004 12:13:00 PM   0 comments
Sunday, July 25, 2004
வட்டம் புள்ளியாக...!
பெரிய வட்டம்...
காலம் புரட்டிப்போட புரிதல் நிகழ்ந்த பின்,
வட்டம் புள்ளியாக...!

மனையிடம் எதை எதிர்பார்ப்பது? இந்த கேள்வியும் இதற்கு பதில் சொல்லவும் திருமணமான பெரும்பாலானவர்கள் திணருவார்கள்... ஏன்? இது கொஞ்சம் தனிப்பட்ட கேள்வி.. பற்பல பதில்கள் தரும் கேள்வி.

இந்த கேள்வியை திருமணமாகாதவர்களிடம் கேட்டால்... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வரும்.தன் குடும்பத்தினை அனுசரிக்க வேண்டும் , தாயைப் போற்ற வேண்டும் என்பது இயல்பான ஒரு எதிர்பார்ப்பு...

ஆனால், இதே கேள்வியை திருமணமாகி சில வருடங்கள் கழிந்த பிறகு கேட்டால் பதில் சொல்ல பலர் திணருவார்கள்..! இதற்குள் அவர்களுக்கு மனைவியின் உண்மை கருத்துக்கள், எப்படி இருப்பார்கள் என்பது புரிந்திருக்கும்.

இந்த பழைய எதிர்பார்ப்பு உடைபட்டது மனதில் இன்னும் தங்கியிருப்பின், சிலர் கல்யாணம் என்பதே வேஸ்ட்.. பேச்சுலரா இருந்திருக்கலாம் என்றும் நினைக்கலாம்..!!

இன்னும் பார்த்தால், சில பல நேரங்களில் மனைவி தன் உலகில் தனித்து இருப்பதனால், உங்கள் கஷ்டம் புரிந்து கொள்ளாமல் அவர்கள் கஷ்டத்தினை மட்டுமே பேசுவதாக எண்ணவும் தோன்றும்....

இந்த விசயம் குறித்து இன்னும் நிறையவே யோசிக்கலாம் என்றாலும்...

இதில் யாரும் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லை.

இதுதான் வாழ்க்கை. அனுபவித்துத்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.......!


posted by சாகரன் @ 7/25/2004 12:20:00 PM   0 comments
Saturday, July 24, 2004
எப்படிப் பேசுவது?
எப்படிப் பேசுவது?

இதென்ன கேள்வி என்று மேல் பார்வைக்கு தோன்றினாலும், இது நிச்சயம் முக்கியமான கேள்விதான். 

எப்படி பேசுவது என்று நமக்கு யாரேனும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களா?

யோசித்துப்பாருங்கள். மார்க்கெட்டிங் அல்லது பிரசண்டேஷன் போன்றவற்றில் எப்படி பேசுவது என்று வேண்டுமானால் சொல்லிக்கொடுத்திருக்கக்கூடும்...! ஆனால் சாதாரணமாக பேசும் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்றோ.. அல்லது இப்படித்தான் பேச வேண்டும் என்றோ யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.அது தானாகவே தெரிய வருகிறது. பெற்றோர், நண்பர்களின் பேச்சுப் பழக்கங்கள் நம்மை அறியாமலே நம்முடையதாக மாறுகின்றன.

இணையத்தில் பெற்றோர்களின் உற்ற துணையாக இருக்கும் பேபிசெண்டர் என்ற தளத்திலிருந்து எனக்கு அடிக்கடி மெயில் வருவது வழக்கம். இந்த வார மெயிலில் என் மகளின் 16வது மாதத்திற்கான சிறப்பு கண்ணோட்டம் இருந்தது. அதில் இந்த விசயம் பற்றி அழகாகக் குறிப்பிட்டிருந்தார்கள்...

குழந்தை நம்மைப்பார்த்துதான் எல்லாம் கற்று கொள்கிறது. ஆரம்பத்தில் நன்றாக சத்தமிட்டு நம் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறது. இப்படி இருக்கும் போது அடிக்கடி அமைதியாக இந்த சின்னஞ்சிறிய பிஞ்சு வயதிலேயே திரும்பத்திரும்ப "சத்தமிடாமல் மெதுவாக பேச வேண்டும்" என்று சொல்லுவதன் மூலம், காலப்போக்கில் குழந்தையின் பேச்சு தெளிவாகவும் அழகாகவும் அமைதியாகவும் சன்னமாகவும் இனிமையாகவும் அமையும் என்று கூறுகிறது அந்தக் கட்டுரை...!

அப்படிப் பேசுகின்ற குழந்தையை எல்லோரும் விரும்புவது இயல்புதானே....!

கற்றுக்கொள்ளவேண்டியது குழந்தைகள் மட்டுமா?!


posted by சாகரன் @ 7/24/2004 01:04:00 PM   0 comments
தற்பெருமை!
தற்பெருமை!

தற்பெருமை என்று எதை சொல்கிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இருப்பதுண்டு. ... எதை தற்பெருமை என்று சொல்கிறார்கள்..? ஒரு மனிதன் தன்னைத்தானே மதிப்பதற்கும் தற்பெருமைக்கும் என்ன வித்தியாசம்?
இன்னும் சொல்லப்போனால்... ஒருவரின் தன்னம்பிக்கையை பிறர் தற்பெருமை என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று தோன்றுகிறது!

ஒரு விசயம் குறித்தும், தனக்குத் தெரியும் என்பதிலும், தன்னைக்குறித்து ஒரு மகிழ்ச்சியோடு நினைத்துப்பார்ப்பதும் தற்பெருமையா? இல்லை அதை வெளிப்படுத்துவது தற்பெருமையா? தவறா?!

 
பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்கள் என்று சிலரை நாம் குறிப்பிடும் போது தன்னைப்பற்றியே புகழ்ந்து பேசுபவர்கள் என்று தான் முடிவிற்கு வருகிறோம். ஆனால் கொஞ்சம் யோசித்தால்... இந்த புகழ்ச்சியை குறைந்த பட்சம் வெளியில் சொல்லாமல் மனதிலாவது பேசாத மனிதர்களே இருக்க முடியாது என்று தோன்றுகிறது!

 
உங்களைப்பற்றி நீங்களே சிறப்பாக எண்ணாவிட்டால் மற்றவர்கள் எப்படி எண்ணுவார்கள்? அப்ப இது தற்பெருமை என்ற கேட்டகரியில் வருகிறதா?

ஹ்ம்ம்... அப்படி இருக்க முடியாது.. தற்பெருமை என்று ஒருவரின் குணத்தை சொல்லுவதற்கு முன், அவரின் திறமையையும் மதிப்பிட வேண்டும்.

அப்போழுதுதான் அவரின் உண்மை நிலை வேறு தன் நிலை என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கும் நிலை வேறு என்பது புரியும். அது நிச்சயமான பிறகே தற்பெருமை என்ற வார்த்தையை உபயோகிக்க முடியும்.....

வேதமொழி வள்ளுவரின் குறளில் ஒன்றில் " தற்பெருமையின் காரண்மாக தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது" என்று வரும்...

இதற்கு காரணம், ஒரு வேளை.. தற்பெருமை காரணமாக நல்ல செயல்களில் ஈடுபடுவதில் தவறில்லை என்று அவர் எண்ணியிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!!

ஏனென்றால், தன்மீது நம்பிக்கை ... அல்லது அபார நம்பிக்கை உள்ள மனிதன் நிச்சயம் எப்படியாவது சாதித்துக்காண்பிப்பான்... அதற்கான தகுதியை அறிந்தோ அறியாமலோ அவனுடைய நம்பிக்கை தந்துவிடுகிறது.
அப்படி இருக்கும் போது தற்பெருமை என்பதும் தன்னைக்குறித்து பெருமையாக எண்ணுவதும் தவறில்லை... அடுத்தவரிடம் சொல்வது மட்டுமே தவறானது என்ற முடிவுக்குத்தான் வரத்தோன்றுகிறது!

 
posted by சாகரன் @ 7/24/2004 04:52:00 AM   0 comments
Friday, July 23, 2004
எது விரயமாகும் நேரம்?
எது விரயமாகும் நேரம்?

இது ஒரு இண்டரஸ்டிங்கான கேள்வி... ! ஏன் சொல்கிறேன் என்றால் இது ஆளாளுக்கு மாறுபடும் ஒன்று!

யோசித்துப்பாருங்கள்... எந்த நேரம் உங்களுக்கு முக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ... அந்த நேரம் அடுத்தவர் பொருத்த வரை நீங்கள் வெட்டியாக கழித்துக்கொண்டிருப்பதாக எண்ண வைக்கலாம்.

இந்த விசயம் நம்முடைய மிகச் சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது.

உதாரணத்திற்கு கிரிக்கெட் விளையாடுவது என்பது எனக்கு முக்கியமான ஒன்றாக இருக்கலாம் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது... ஆனால் அந்த நேரத்தை வெட்டியாகக் கழிப்பதாக என் தந்தை சொல்லக்கூடும்..!

இப்படி ஒவ்வொரு விசயத்தில் ஒருவர் ஈடுபடும் போதும் மற்றொருவர் மறுகருத்து கொண்டிருப்பதால் தான் பிரச்சனைகள் வருகின்றன. அதிலும் முக்கியமாக தன் கருத்தை பிறர் மீது திணிக்க வேண்டும் என்று நினைக்கும் போது நிச்சயம் உள்ளார்ந்த பிரச்சனை வருகிறது... மன வருத்தம் வருகிறது.

இந்த பிரச்சனைகளும் சின்னஞ்சிறு வருத்தங்களும் கால காலத்திற்கும் இருக்கக் கூடியவை மட்டுமல்ல நீங்களும் தெரிந்தோ தெரியாமலோ இது போன்ற மன்வருத்தங்களை பெறவோ தரவோ போகிறீர்கள் என்பது நிச்சயம்.... !

இதிலிருந்து முழுமையாக தப்பிக்க வேண்டுமானால் துறவறம் தான் ஒரே வழி....ஆனால் இந்த சின்னஞ்சிறு விசயங்களுக்காக துறவறம் கொள்வது முட்டாள்தனம்... அதைவிட அப்பப்ப வெகேஷன் போகலாம்....  இந்த கேள்வி, இதனால் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் எல்லாமே மறந்து போகும்...!!!


posted by சாகரன் @ 7/23/2004 12:51:00 AM   2 comments
Wednesday, July 21, 2004
கேட்பதும் பெறுவதும்....
ஆலோசனை, உதவிகளை கேட்பதும் பதில் பெறுவதும்... இந்த விசயம் பற்றி சில கருத்துக்களை எழுதும் ஆசை வருகிறது...

சாதாரணமாக யோசித்தால் யாருக்கு ஆலோசனையை அல்லது உதவியை கேட்டுப் பெறுவதில் விருப்பம் இருப்பதில்லை.

இதன் காரணங்கள்.. பல..
ஆனால் முக்கியமான காரணமாக எனக்குத் தோன்றுவதில் சில...


  • அவர் யார் எனக்கு ஆலோசனை சொல்ல..
  • என் பிரச்சனையின் தீவிரம் எனக்கு மட்டும்தான் தெரியும்.
  • சொன்னா புரியாது...
  • ஐயோ பர்சனல்...
  • என் பிராப்ளத்தை என்னாலே தீர்த்துக்க முடியும்..
  • அவர் ஹெல்ப் பண்ணினா நல்லா இருக்கும் ஆனா ஒத்துக்குவாரா?
  • ................
இப்படி எத்தனையோ இருக்கலாம்... ஆனால் கொஞ்சம் யோசியுங்கள்.

எனக்கென்னமோ கண்டிப்பாக உதவி செய்ய, விருப்பு வெறுப்பின்றி ஆலோசனை கூற பலர் ரெடியாக இருக்கிறார்கள்.. நம் கண்ணுக்குத்தான் தெரிவதில்லை.. என்று தோன்றுகிறது!!

வாழ்க்கையில் எல்லோரும் எல்லா பிரச்சனைகளிலும் அடிபட்டுத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. நாகூர் ரூமி அவர்களின் அடுத்த விநாடி என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயத்திலேயே 'பிரச்சனையின் தீவிரம்' என்ற விசயம் பற்றி அருமையான கருத்துக்களை அள்ளித் தெளித்திருப்பார்... உண்மையில் பிரச்சனையின் தீவிரம் அதை எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் மாறுபடுகிறது. எனவே... எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கண்டிப்பாக உண்டு.

அதனால்... ஒரு பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது என்பதை பிறரிடம் நீங்கள்  சொன்னால் அதற்கான பதில் கண்ணோட்டம் நிச்சயம் உங்களுக்கு புதிய கோணத்தைக் காட்டும்.

இதில் முக்கியமானது யாரிடம் நீங்கள் யோசனை கேட்கப் போகிறீர்கள் என்பது. இதை முடிவு செய்துவிட்டாலே...போதும். நிச்சயம் உங்களால் நல்ல முடிவு எடுக்க முடியும்.

நான் பார்த்த வரை.. உங்கள் வயதை ஒத்த நண்பர்களை தவிர்த்து, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக் நீங்கள் கருதும், வெல் விஷர் என்று எண்ணும் நண்பர்களிடம் உங்கள் பிரச்சனைகளை சொல்லிப்பாருங்கள்... அவர்களின் அனுபவத்தில் உங்களுக்கு கிடைக்கும் பதில் கண்டிப்பாக தீர்வுக்கான வழியை காட்டும்.

அதே போல... உதவியை தயங்காமல் உங்கள் வயதையொத்த நண்பர்களிடம் சொல்லிப்பாருங்கள்.. கண்டிப்பாக உதவுவார்கள். நட்பு என்பது பலப்படுவதே, உதவி என்பது பெறப்படும் போதும் தரப்படும் போதும் தான் என்றும் எனக்குத் தோன்றுவதுண்டு!

மேற் சொன்ன இரண்டிலும் ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. உதவி கேட்கும் போது நீங்கள் முடிவுக்கு வந்து விடுகிறீர்கள் இதைதான் செய்யப்போகிறீர்கள் என்று. அதனால் தான் உங்கள் வயதையொத்த நட்புகள் நிச்சயம் செய்வார்கள் என்று சொல்கிறேன். அதே சமயம் எல்லா விசயத்திற்குமான ஆலோசனையை விருப்பு வெறுப்பிலாமல அவர்களால் வழங்க முடியாமல் போகலாம். அதனால்தான் பெரியவர்களிடம் கேட்பது நல்லது என்று நினைக்கிறேன்.

இப்ப இன்னொரு முக்கிய கேள்வி ,வயதில் மூத்தவர்கள் கிண்டல் செய்வார்களே... எப்படி அவர்களை அணுகுவது.. ? 
 
இதற்கான பதில் சுலபம்தான். இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது. அதை பேசுவதற்கு முன்....
 
இதன் பதிலை கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றி யோசிக்கலாம்.
 
ஏனென்றால், உங்கள் வாழ்க்கை இதமான பயணமாக இருக்க வேண்டுமானால் நிச்சயம் பெரியவர்களின் நட்பு வேண்டும். அவர்களின் நட்பு உங்கள் எண்ணங்களை தெளிவாக்கும்.
 
அதே சமயம், வயதில் மூத்த எல்லோரும் பெரியவர் அல்ல. ஆனால் நம் மனதுக்குகந்த பெரியவர்கள் நம்மைச் சுற்றி இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் பல நேரம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்....
 
இப்ப மறுபடி அந்த கடைசி கேள்விக்கான பதிலுக்கு வரலாம். 
 
இது கொஞ்சம் சுலபமான கேள்வியாகக் கூட பலருக்குத் தெரியலாம். சுயமுன்னேற்ற நூல்கள் பல படித்தவர்களுக்கு இதற்கான பதில் டக் கென்று பஸ்ஸர் அழுத்தி குவிஸ் பதில் சொல்வது போல சொல்லிவிடலாம்...! எல்லோரும் சொல்லக்கூடிய அந்த பதில் "பணிவு"!!

ஆனால் எனக்கு சொல்லத்தோன்றுகிற பதில்: "பேசிப்பாருங்க...."


posted by சாகரன் @ 7/21/2004 05:49:00 PM   0 comments
கட்டுப்படுத்துதலும் கட்டுப்படலும்...
யாருக்கு யார் கட்டுப்பட்டவர்? இந்த கேள்வி மிகவும் கிரிடிக்கலானது மட்டுமல்ல கொஞ்சம் குழப்பமானதும் கூட...

இது குறித்து நிறையவே சிந்திக்க முடியும்...

கட்டுப்படுதல் என்பது எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறது...? இதனை யோசித்தால் இதற்கான பதில் கிடைத்துவிடலாம்.

பல நேரம் மனிதர்கள் கட்டுப்படுவதாக நடிக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுவதுண்டு.எங்கெல்லாம் கட்டுப்படுவதான நடிப்பு வருகிறது..? எவரிடமிருந்து ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது அல்லது கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதோ... அங்கெல்லாம் இந்த நடித்தலும் உடனடியாக வந்து விடுகிறது. பலர் இதனைப்புரியாமல் நமக்கு எல்லோரும் கட்டுப்படுகிறார்கள் என்ற இறுமாப்பில் இருந்துவிடக்கூடும்...

ஆனால், இது கண்டிப்பாக உடைபடும்...

எப்பொழுது இனி இவரிடமிருந்து உதவி தேவை இல்லை யென்று தோன்றுகிறதோ, எப்பொழுது தனியாக நாமே இந்த காரியத்தை செய்ய முடியும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது இந்த கட்டுப்படுதல் காணாய் போய் விடுகிறது!

இங்கே பாவம்... கட்டுப்படுத்தியவர் தான்... அவருடைய ஈகோ.. திமிர் எல்லாம் உடைபட்டுப்போகிறது.
கொஞ்சம் யோசித்தால் இதற்கான ஏராளமான உதாரணங்களை நம் வாழ்க்கையிலிருந்தே கூட நாம் எடுக்க முடியும்!!

இதனாலேயே இந்த விசயத்தை ஆழமாக யோசிக்க வேண்டி வருகிறது.

உண்மையில் யாரும் யாருக்கும் கட்டுப்பட்டவர் இல்லை. ஏன் மனைவி கூட, கணவனுக்கு கட்டுப்பட்டவர் இல்லை. வயதால் குறைவானவராவதாலும், திறமையால் குறைவானவராவதாலும் ஒருவர் கட்டுப்பட்டவர் என்று எண்ணுவதும் தவறு. அனைத்துமே மாறக்கூடியது!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்..
- இப்படிப்பட்ட செயல்களால் கட்டுப்பட்டவர்களிடம்... கட்டுப்படுதல் என்ற எண்ணம் தாண்டி அன்பு என்ற ஆழமான நட்பு ஏற்பட்டுவிடுகிறது, இது தான் உண்மையான கட்டுப்படுதலும் கட்டுப்படுத்துவதும் என்று தோன்றுகிறது; இந்தப் பிணைப்புகளில் தான் ஒருவர் பெரியவர் மற்றவர் சிறியவர் என்ற எண்ணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவானது.

வாழ்க்கை ஓட்டத்தில் இதுவும் இயல்பல்ல... வாழ்வே ஒரு நாடக மேடை.. நாமெல்லாரும் ஏதோ சில பாத்திரங்கள்... திறமைக்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போல் வெவ்வேறு வேசங்கள்... சிலரிடம் கட்டுப்படுவதும், சிலரை கட்டுப்படுதலுமாக.......?!!?posted by சாகரன் @ 7/21/2004 09:27:00 AM   0 comments
Sunday, July 18, 2004
அடுத்த வேலை ?!
ஒருவருக்கு அடுத்த வேலை தேடவேண்டும் என்ற உந்துதல் எப்பொழுது ஏற்படுகிறது...?

கொஞ்சம் யோசித்தால் இதற்கான பல பதில்கள் கிடைக்கக்கூடும்.

என்னுடைய சில சிந்தனைகள்...

முதலில் வேலை என்பது எப்படிப்பட்டது என்பதை விட எவ்வளவு தூரம் நமக்கு அந்த வேலை செய்வதில் ஆர்வம் இருக்கிறது என்பது முக்கியம். ஆங்கிலத்தில் மோடிவேஷன் (Motivation) என்று சொல்வார்கள். அந்த ஆர்வம் குறைந்தால் அவ்வளவுதான். போர் அடிக்க ஆரம்பித்துவிடும்.அப்புறம் என்ன வாழ்க்கையின் விரக்தி நிலை சீக்கிரமே வரப்போகுதுண்ணு அர்த்தம். இது ஒரு முக்கிய காரணம்.

மோடிவேஷன் நாமே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய விசயமா? இந்த் கேள்விக்கு பின்னர் வரலாம்...

அடுத்தபடியா, பணம்.. வாழ்வு நிலை பற்றிய கனவு. எங்க நல்ல பணம் கிடைக்கிறதோ, வாழ்க்கை நிலை உயர்வாக இருக்கிறது என்று தோன்றுகிறதோ அங்கு போகலாம் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை. என்னுடைய அமெரிக்காவில் வேலை பார்க்கும் நண்பர், அமெரிக்கா வந்தால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை என பல கம்பெனி மாறினால்தான், நாம் விரும்பும் சம்பளத்தில் பர்மெனெண்ட் பொஷிசனில் சேரமுடியும் என்று சொல்வார்...

அடுத்தது... போதும்பா இந்த் ஊரு இந்த மக்கள் என்ற நிலை. இது கொஞ்ச காலத்திற்குப் பிறகு எல்லோருக்கும் ஏற்படும் ஒன்று. இதற்கும் மோடிவேஷனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் இதற்கும் அலுவலகம் தாண்டி வெளி உலக வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. புலம் பெயர்ந்த பலர் இதன் காரணமாகத் தான் மீண்டும் தாயகம் திரும்புகிறார்கள்..!

அடுத்தது... நிச்சயமற்ற வேலை நிலை. எல்லாருக்கும், பெரும்பாலும் கணிணியில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் ஒரு நிலை. இதுவும் கூட அடுத்த வேலைக்கு ரெடியா இருக்க வேண்டும் என்று தோண வைக்கிறது.

இந்த நேரத்தில் என்னோட இன்னொரு ஆதங்கத்தையும் எழுத வேண்டும்...

எனக்கென்னமோ அந்த கால கனரா, இந்தியன் பேங்க் வேலை செய்பவர்கள் போல வாழ்க்கை கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது. எந்த ஊரிலயும் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்.. வேலை போய்விடுமோ என்ற கவலையே இல்லை. எங்க போனாலும் செண்ட்ரல் போர்ட் ஸ்கூலில் குழந்தைகளுக்கு படிப்பு... கம்பெனியே தரும் வீடு.. ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களும் பிறகு கேட்கும் இடத்தில் டிராண்ஸ்பர், புது மனிதர்களுடன் பழக்கம்... சொர்கமாகத்தான் தோன்றுகிறது அந்த வாழ்க்கை.

இந்த கணிணித் துறையிலோ எப்பவும் அடுத்த சப்ஜெக்ட் தெரிஞ்சு வச்சிக்கணும்கற வேகத்தோடயே வாழ்க்கை.. நிச்சயமற்ற வேலை நிலை.. இதெல்லாம்.. என்னத்தான் பணம் கிடைச்சாலும் எதையோ மிஸ் பண்ற மாதிரி தோண வைப்பது நிஜம்.
posted by சாகரன் @ 7/18/2004 06:24:00 PM   2 comments
உலகிலேயே அதிகம் ஆக்ஸிடெண்ட் நடைபெறும் இடம்!
நேற்று முன் தினம், என் காருக்கு ஒரு சிறிய ஆக்ஸ்டண்ட்....
நல்ல வேளை ஒன்றும் பெரிதாக இல்லை. காரின் பின் பக்கம் பம்பர் விலகி விட்டது. அவ்வளவுதான்.

சவுதி ரூல்ஸ் பிரகாரம், பின் பக்கம் யார் மோதுகிறார்களோ அவர்கள் தான் தவறிழைத்தவர்கள்.. ஆனாலும், என் பக்கம் தான் தவறென்று தீர்ப்பாகியது. நான் மறுக்க விரும்பவில்லை. அவசரம் என்பது இப்படித்தான் பிரச்சனையைக் கொண்டு வரும். நானே கவனமாக இருந்திருக்கலாம்.

இன்று போலீஸ் ரிப்போர்ட் வாங்கி விட்டேன். இனிதான் ரிப்பேர் பற்றி முடிவு செய்யவேண்டும்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகிலேயே அதிகம் ஆக்ஸிடண்ட் நடைபெறும் இடம் : ரியாத்
இந்த தகவலை சவுதியில் தான் எங்கோ ஒரு இன்ஸூரன்ஸ் கம்பெனியின் பிரோசரில் பார்த்தேன்.
அதனால்தான் இங்கு பெர்சனல் இண்ஸூரன்ஸ் என்பது கட்டாயம்!

என்னடா கார் ஓட்ட ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆகுதே ஒண்ணும் ஆகலியே ரொம்ப நல்லா ஓட்டரோம் போல இருக்குண்ணு இப்பத்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி யோசிச்சேன்.. ஹ்ம்ம்...
posted by சாகரன் @ 7/18/2004 03:04:00 PM   0 comments
ஜாவா புலி...!
ஜாவா புலி.. இப்படிச் சொன்னா.. ஏதோ ஜாவா வில பிஸ்தா அப்படின்னு தானே தோணும்... அதுதான் இல்லை!

புதிய வெர்ஷன் ஜாவா1.5 யின் பெயர் டைகர்.
இந்தியாவின் தேசிய விலங்கு டைகர் இப்போது ஜாவாவின் பெயராகப்போகிறது!!
புதிய செயல்பாடுகள் நிறையவே இருக்கின்றன.. விரைவில் இந்த வெர்சன் வரப்போகிறது. பீடா வெளியாகிவிட்டது.

அதிலும் முக்கியமாக வலைப்பதிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியும் இருக்கிற்து. ஆம், இப்பொழுது ஜாவா Blogs சப்போர்ட்டுடன் வருகிறது. ஆனால் என்ன, எப்படி என்ன features இருக்கும் இதெல்லாம் தெரியவில்லை.

மற்ற முக்கிய செயல்பாடுகள் : J2ME, EJB3.0, Web Services, J2EE Paterns etc.
posted by சாகரன் @ 7/18/2004 09:11:00 AM   0 comments
Saturday, July 17, 2004
எண்ணித்துணிக கருமம்....
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

வள்ளுவரின் வேதமொழி வாக்கு. என்றும் எப்போதும் நினைவில் இருக்கவேண்டிய ஒன்று...

எந்த ஒரு முயற்சியையும் ஆரம்பித்த பிறகு காத்திருப்பதும், பின்னர் யோசிக்கலாம் ஆரம்பிப்போம் என்று சொல்வதும், காரியம் ஆரம்பித்த பிறகு சுணக்கத்தை தந்துவிடக் கூடும். அதன் காரணமாக ஆரம்பித்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடும் வாய்ப்பிருக்கிறது.

செயல் என்பது எப்பொழுதுமே, தனி ஒருவரின் சிந்தனையாகவும், பலரின் தூண்டுகோலாகவும் இருந்துதான் செயலாக மாறுகிறது. நேரடியாக செயலில் ஈடுபடுவது சில நேரங்களில் சரியாக முடிந்தாலும் பெரும்பாலான நேரங்க்ளில் பாதியில் நிறுத்தப்படும் வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான் ஆலோசனை கேட்பதும், நட்புகளின் விருப்பம் கேட்கப்படுவதும் நடக்கிறது. கூட்டாக ஆரம்பிக்கப்படுவதும் நடக்கிறது.

பின்னர் ஏற்படலாம், என்று தோன்றும் பிரச்சனைகளுக்கும், தடங்கலுக்கும் பயந்து செயல்களில் இன்று ஈடுபடாமல் இருப்பவர்கள் நாளை வருத்தப்பட நேரிடும்.... செயலில் ஈடுபடாதவர்களிடம் சோம்பேறித்தனம் தான் தூக்கலாக இருக்கும். அது அவர்களுக்கு ஒரு வித கழிவிரக்கத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தலாம்...! ஏன் இந்த குழப்பம்.. சிறு தடங்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் கவலைப்படாமல்,
எண்ணித்துணிந்த காரியத்தை துரிதப்படுத்துவதும், கருமத்தில் நம்மையே தொலைப்பதும் தான் வாழ்க்கையின் வெற்றி என்று தோன்றுகிறது.

பகவத் கீதையில் கரும யோகத்திலும் கூட இதே கருத்து சொல்லப்பட்டிருக்கும்என்று நினைக்கிறேன்.
posted by சாகரன் @ 7/17/2004 11:22:00 AM   0 comments
இறையடி சேர்ந்த இளம் குருத்துக்கள்...
இன்னும் பலகாலங்கள் நம்மை வேதனையிலேயே வைத்திருக்கப்போகின்ற நிகழ்ச்சி, நேற்று நடந்த கும்பகோணம் குழந்தைகள் சம்பவம். நேற்று டி.வி யில் பார்த்துக்கொண்டிருந்த போது, அழுகை சத்தம் கேட்டு தாங்க முடியாமல் எனக்கும் என் துணைக்கும் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க ஆரம்பித்ததும், எங்கள் கைகள் தானாகவே டி.வியை அணைக்க ரிமோட்டை தேடின. டி.வியை அணைத்து விடலாம் தான், ஆனால்.............
posted by சாகரன் @ 7/17/2004 11:20:00 AM   0 comments
டைனமிக் பாண்ட் - தானியங்கி எழுத்துரு
தானியங்கி எழுத்துரு என்பது இப்போது தமிழ் இணையத்தளங்களில் பெரிதும் உபயோகப்படும் ஒன்றாகி விட்டது. சமீபகாலங்களாக அதனுடன் நான் போராடிக்கொண்டிருக்கிறேன்.

இணையதள்ங்களில் மைக்ரோசாப்ட் WEFT உபயோகித்து செய்யப்படும், தானியங்கி எழுத்துருக்கள் பற்றி பல கட்டுரை இருந்தாலும், எந்த கட்டுரையும் பிறமொழி எழுத்துருக்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவாகச்சொல்லவில்லை. பின்னர் நண்பர் முத்து மூலமாக சுரதாவில் இது குறித்த கட்டுரை இருப்பதை அறிந்தேன். பார்த்தேன்.

நல்ல கட்டுரைதான். ஆனால், அந்த பிரசண்டேசனுக்கு பதிலாக், அல்லது இன்னும் ஒரு சிறிய கட்டுரை, இது தான் செய்யவேண்டும் என்று டெக்னிகல டாகுமெண்ட்டாக சில ஸ்கிரீன் ஷாட்டுகளுடன் கொடுத்திருந்தால் இன்னும் சுலபமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், நிறைய நேரம் வெயிட் பண்ண வேண்டி வந்தது.

எனக்கு இப்போது சில விசயம் தெரிய வேண்டும், subset - Basic Latin எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு எழுத்தாக செலக்ட் செய்வதற்கு பதில், subset- Raw Subsetting செலக்ட் செய்வதும் சரியானதா?!

இணையத்தில் தேடினால் கிடைத்துவிடும்... Raw subsetting இன்னும் சுலபமானதாகவே தோன்றுகிறது... ஆனால் சரியானதா தெரியவில்லை. எனக்கு ஒரு தளத்தில் இது ஒர்க் செய்கிறது.ஆனால் இன்னொரு தளத்தில் வேலை செய்யவில்லை.
posted by சாகரன் @ 7/17/2004 11:19:00 AM   0 comments
Wednesday, July 14, 2004
பெயர்ப் பொருத்தம்!
என் நண்பர் ஒருவருடன் பயணித்துக்கொண்டிருந்தேன். வழியில் ஒரு கார்கோ வேன் கிராஸ் செய்தது.
அதன் பெயரைப்பார்த்து சரியாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்றார்! அவர் சொன்ன சம்பவம் கேட்ட பிறகு எனக்கும் சரியென்றுதான் தோன்றியது!! என்ன பெயர் என்று சொல்வதற்கு முன் அவர் சொன்ன சம்பவத்தைச் சொல்கிறேன்.

சவுதி அரேபியாவிலிருந்து ஒருவர் வீட்டை காலி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் செய்யவேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்று, சாமான்களை அடுக்கி கார்கோவில் சேர்ப்பிப்பது.
கார்கோ கம்பெனியினர் அந்தப் பெட்டிகளை இந்தியாவில் சேர்த்து விடுவார்கள்.

சமீபத்தில் எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இவ்வாறு ஊரை காலி செய்து கொண்டு சென்றார்.
கார்கோ கம்பெனியைச் சேர்ந்தவர்களே வந்து எல்லாவற்றையும் ஒழுங்காக பேக் செய்து, மொத்தம் 12 கார்கோ பெட்டிகளையும் எடுத்துச்சென்றனர்.

அந்த நண்பர் தமிழகத்தின் தலைநகரத்தில் கார்கோவிற்காக வெயிட் செய்துகொண்டிருந்தார். சில வாரங்கள் கழித்து அவருக்கு கார்கோ பெட்டிகள் வந்து சேர்ந்தது. ஆனால் பெட்டிகளின் எண்ணிக்கையோ வெறும் 6 மட்டுமே.

சென்னை அலுவலக்த்தில் அவ்வளவுதான் வந்தது என்கிறார்கள். சவுதியிலுள்ள ரியாத் அலுவலகத்திலோ எல்லாம் துபாய்க்கு அனுப்பிவிட்டதாக சொல்கிறார்கள். துபாயில் நாங்கள் 12 பெட்டிகளை சென்னை அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள். இப்ப என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் அவர்! இது போன்ற பிரச்சனை வந்தால் அதனை followup செய்வது ஒன்றும் சுலபமில்லை.

இப்ப மறுபடி நாங்கள் பார்த்த கார்கோ கம்பெனி வேனின் பெயருக்கு வருவோம். அந்த வேனில் எழுதியிருந்த கம்பெனியின் பெயர்: swallow cargo's.
posted by சாகரன் @ 7/14/2004 03:32:00 PM   0 comments
Tuesday, July 13, 2004
கவிதையும்.....
இது ஒரு காண்ட்ரொவர்ஷியல் டாபிக்...
எனக்கு கவிதை என்பது பல நேரங்களில் புரிபடவில்லை.
கவிதையை ரசிப்பதற்கு மனம் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதுவும் கவிதைக்கென்று ஒரு மனம் வேண்டும் போலும்...

ஓவியங்களில் மாடர்ன் ஆர்ட் என்று ஒன்று உண்டு... அதில் வரைந்திருப்பது என்ன என்பது புரிவதற்கு வரைந்தவர் வந்து விளக்கம் சொல்ல வேணும்..அல்லது நீங்களாக ஏதேனும் கற்பனை செய்ய வேண்டும்.
இது போலத்தான் கவிதையும் என்று தோன்றுகிறது... வார்த்தைகளை இட்டுகட்டி சொல்நயத்துடன் கொஞ்சம் சந்தமும் சேர்த்து எழுதுவதுதான் கவிதையா? தெரியவில்லை. இன்று வரும் பல 'புது'க்கவிதைகள் அப்படித்தான் இருக்கின்றன. சில கவிதைகள் மட்டும் சொல் தாண்டி ஏதோ ஒன்றை புரிய வைக்க முயலுவதாகத் தோன்றுகிறது. அதுதான் கவிதை என்றும் சொல்லத் தோன்றுகிறது.
சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லும் எந்த ஒரு ஊடகமும் சிறப்புதான்.. ஆனால் அதனை புரிந்து கொள்வதற்கு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும் என்றால், சற்று சிந்திக்க வேண்டி இருக்கிறது.

எனக்கென்னமோ... ரொம்ப யோசிக்க வைக்காமல், அதே சமயம் கொஞ்சம் யோசிச்சாலும் புரிஞ்சுக்கறமாதிரி இருக்கற உள்ளார்ந்த அர்த்தம் உள்ள சிறு வார்த்தை பிரயோகங்கள் கொண்ட கவிதைகள் தான் பிடித்திருக்கிறது. வார்த்தைகளை அகராதியை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சரி அடுத்ததை படிக்கலாம் என்று மனம் தாவி விடுகிறது...

இது என் கஷ்டம் தான்; "லோகோ பின்ன ருசி..." ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு எண்ணம்.... யார் கண்டார்கள் என்றேனும் எனக்கும் கூட கவிதையின் அடிநாதம் பிடிபடலாம்.. அன்று என் கருத்துக்களும் மாறலாம்..!!
posted by சாகரன் @ 7/13/2004 10:35:00 AM   0 comments
Sunday, July 11, 2004
வேலைச் சூடு
தென் கண்டங்களில் இது கோடைகாலம், இங்கே (சவுதியில்) வெயில் கொளுத்துகிறது. இந்த வெயிலில் இரண்டு நிமிடம் நடந்தாலே சூடு தலைக்கேறி ஒரு உள்ளூரும் கோவம் வருகிறது... போதாகுறைக்கு..

கணிணியில் வேலை செய்பவர்களுக்கு இந்த மாதங்கள் (ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்) கொஞ்சம் சூடான (?!?) மாதங்கள் என்று தோன்றுகிறது. வருடத்திற்கான பெரும்பாலான வேலைகளும் இந்த மாதங்களில் தான் ஏற்படுகின்றன.

முதல் ஆறு மாதங்கள் சுமாரான வேகத்துடன் நடக்கும் வேலை, இன்னும் ஆறு மாதங்களில் இந்த வருடத்திற்கான வேலைகள் அனைத்தையும் முடிக்க் வேண்டும் என்ற வேகம் ஏற்படுவதினால் ஜெட் ஸ்பீடில் போகிறது என்று தோன்றுகிறது.

அதே சமயம் சவுதி அரேபியாவை பொருத்த வரை.. பெரும்பாலான நேரங்களில், இது ஒரு சோம்பேறித்தனமான ஊர். அதிலும் ஜூலை மாதங்களில் குழந்தைகளின் விடுமுறை காலமாதலால்...பலர் இந்த மாதங்களில் சொந்த ஊருக்கு பயணப்படுவதாலும், இங்கு வேலை செய்பவர்களின் தலைகளில் அவர்கள் வேலையின் பளுவும் ஏறி உட்கார்ந்துகொள்கிறது.
posted by சாகரன் @ 7/11/2004 12:56:00 PM   0 comments
Saturday, July 10, 2004
குழப்பமும் தெளிவும்..
வாழ்க்கையில் குழப்பம் எதனால் நேரிடுகிறது?

இது ஒரு முக்கியமான கேள்வி. ஆனால் இந்த கேள்வியை கேட்கக் கூடத் தோன்றுவதில்லை பல நேரம்.ஏனென்றால் குழ்ப்பத்தில் நம்மை நாமே ஆழ்த்திக்கொண்டு விடுவதால்.

ஒரு மனிதன் எல்லா நேரமும் தெளிவாக இருக்க முடியுமா? அப்படி இருப்பத்ற்கு அவன் என்ன செய்ய வேண்டும்?! இதற்கு பதில் பல வரலாம்... ஆனால் உண்மையான பதிலை தெளிவாக இருப்பவர்கள் தான் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நம்மில் பலர், நம் இன்றைய நிலமையை தெளிவென்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

Live is relationship என்பார்கள். எப்போது ரிலேசன்ஷிப் தான் வாழ்க்கை என்று வந்துவிடுகிறதோ.. அப்போழுது குழப்பமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கவனமாக உறவுகளை கையாளுவது என்பது எப்போதும் முடியும் விசயமல்ல....உறவு என்று நான் சொல்வது எல்லாவற்றையும் இணைந்தது. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமல்ல.. நட்பும் கூடத்தான்..!

... குழப்பமும் தெளிவும் கலந்தது தான் வாழ்க்கை. அதில் முழுகி எழுவதுதான் மனிதனின் கட்டாயம்..!?!

posted by சாகரன் @ 7/10/2004 04:03:00 PM   0 comments
வெட்டிச்சண்டையும் வெண்டைக்காய் கறியும்...

சொல்லுக்குச் சொல்
ஏட்டிக்குப் போட்டி
வெட்டிச் சண்டையில் வீணாகிப் போனது
எனக்குப் பிடித்த
வெண்டைக்காய் கறியும், முருங்கைக்காய் குழம்பும்

வாசம் மூக்கில் நெருடும் நேரம்...
சாப்பிட்ட பிறகு சண்டையிட்டிருக்கலாமோ?


posted by சாகரன் @ 7/10/2004 11:02:00 AM   0 comments
Monday, July 05, 2004
சவுதி மயமாக்கல் - நம் மக்கள்
இப்போது என்று அல்ல, சில வருடங்களாகவே சவுதி அரேபியாவில் முக்கியாக பேசப்படும் விசயம் சவுதிமயமாக்கல்(saudiazation).

காரணம்.. சவுதி நாட்டினரின் வேலையில்லாத் திண்டாட்டம். ஆனால் இதில் பிரச்சனை என்ன வென்றால், சவுதி நாட்டினர் சுய கவுரவம் அதிகம் பார்ப்பவராகவும், திறமை குறைவாக உள்ளவர்களாகவும் இருப்பது தான்.

இந்த நிலையும் இன்று மாறி வருகிறது. இப்போது வரும் புதிய தலைமுறையினர், முன்னிலும் வேகமாக வளர்ந்து வருகின்றனர். திறமைதான் சோறு போடும் என்பதைப்புரிந்து நடந்து கொள்கின்றனர்.

இதில், நம்மவர்கள் பாடுதான் திண்டாட்டம்.... பலருக்கு வருடா வருடம் வேலை இழப்பு ஏற்படுகிறது... அல்லது குறைந்த பட்சம், வேலை போய்விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தினை சமாளிக்க, சில கம்பெனிகள் வெளிநாட்டவரை கன்ஸல்டெண்டுகளாக மாற்றிவிட்டனர். அப்படி என்றால் இது கணக்கில் வராது இல்லையா?!

இந்த விசயம் பற்றி பேச, எவ்வளவோ இருக்கிறது.. விரைவில்...
posted by சாகரன் @ 7/05/2004 02:25:00 PM   0 comments
Friday, July 02, 2004
தத்துவ வாதிகள்...
மிகச்சிறந்த தத்துவ வாதிகள் யாரென்று கேட்டால், எந்தெந்த பெயரையோ நாம் சொல்வதற்கு யோசித்துக்கொண்டிருப்போம்....

ஆனால், உண்மையில், மிகச் சிறந்த தத்துவ வாதிகளாக ஒரு பெரும் கூட்டமே இருக்கிறது.
அவர்கள்.. marketing people's.ஆம்... எப்போழுது என்றில்லாம், பெரும்பாலான நேரங்களில் தத்துவம் சொல்லியே நம்மை கவிழ்த்து விடுவார்கள்...

உதாரணத்திற்கு ஒன்று,

"Be positive, You'll Grow" இன்று என்னிடம் இதைச் சொன்னவர், ஏதோ சுயமுன்னேற்ற நூல் எழுதும் ஆசிரியர் அல்ல... ஒரு இணையதள ஹோஸ்டிங் கம்பெனியின் மார்க்கெட்டிங் மேனேஜர்.

ஒரு புதிய தளம் குறித்து பேண்ட்விட்த் முதலியன negotiate செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறு சொன்னார்...!! நான் ஏதோ அதிக பேண்ட்விட்த் வாங்கிவிட்டதாக எண்ணிக்கொண்டு, அதை குறைத்து பணம் குறைக்கலாம் என்று முயற்சித்துக்கொண்டிருக்கும் போது இப்படி ஒரு பதில் !!

இப்பல்லாம்... யார்கிட்டேர்ந்து எந்த தத்துவம் வந்து விழும்னு எதிர் பார்க்க முடியல...
posted by சாகரன் @ 7/02/2004 04:08:00 PM   2 comments
Thursday, July 01, 2004
இரண்டு முகங்கள்..
எப்போதுமே ஒரு பிரச்ச்னைக்கு இரண்டு முகங்கள் உண்டு.ஒன்று உங்கள் பக்கம்.
மன்றொன்று எதிராளி பக்கம். உங்கள் பக்கம் தான் நியாயம் போலும் என்று
நீங்கள் எண்ணிக்கொண்டிருக்க..
திடீரென்று.. எதிராளி தன்னைப்பற்றி எடுத்துரைக்க.. நீங்கள் பேச முடியாமல்
போக நேரிடலாம்...

இங்கே இன்னொன்றும் சொல்ல வேண்டும். பல நேரங்களில் எதிராளி தன்னைப்பற்றி
விளக்குவார் என்பது நிச்சயமில்லை. அதனால், இரு பக்கத்திலும் தான்
நினைத்தது தான் சரி என்று நினைத்துக்கொண்டு பகை
வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.,

இது போன்ற பிரச்சனைகள் நம் வாழ்வின் எல்லா கால கட்டத்திலும்
ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், எவ்வளவு தான்
அறிந்திருந்தாலும், எல்லா நேரங்களிலும் நாம் சரியாக அவற்றை கையாள
முடிவதில்லை... முடியவும் முடியாது என்று தான் எனக்குத் தோன்றுகிறது!
posted by சாகரன் @ 7/01/2004 04:19:00 PM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER