சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Thursday, July 14, 2005
SV-771
வாழ்க்கை என்பது எல்லா நேரமும் ஏதாவது கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் கற்றுக்கொள்கிறோமா என்பதுதான் இதில் பிரச்சனை. ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு நேரமும் ஒரு படிப்பினைதான். அதிலிருந்து தெரிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏதேனும் இருக்கத்தான் செய்கிறது. நான் வாழ்ந்து அடிபட்டுத்தான் தெரிந்து கொள்வேன் அல்லது புரிந்துகொள்வேன் என்பது சிறுபிள்ளைத்தனம்.

வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர்கள் எல்லோருக்கும் இந்தியா திரும்பும், பிடித்த படத்தின் முதல் ஷோ பார்க்கும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை செயல்படுத்துவதில்தான் எத்தனை சோம்பேறித்தனம் அல்லது பிரம்ம பிரயத்தனம்?! வீடு மாறும் போது இருக்கும் அதே தயக்கமும் கலக்கமும், அதைக் காட்டிலும் பல மடங்கு இவர்களுக்கு இருக்கிறது.
இந்த இயலாமையின் அடிப்படை என்ன? பணம் ஒரு முக்கிய காரணி மற்றொன்று சுற்றமும் நட்பும் மற்றொன்று கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ
என்ற கலக்கம்.

"25 வருசமாச்சு சவுதிக்கு வந்து. இந்த தடவையோடு முடிச்சுடலாம்னு நினைச்சேன் ஆனா இன்னும் ஒரு ரெண்டு வருசம் ஓட்டலாம்னு இப்ப திரும்பறேன்." - அவர் இதைச் சொன்னபோது கிட்டத்தட்ட நானும் இதே நிலையில் இருந்ததால் சின்னதாக ஒரு ஒட்டுதல் வந்தது. அவருக்கு வயது 45 இருக்கும்.கையில் சூட்கேஸும். தினமணி பத்திரிக்கையும்.

"நான் கூட அப்படித்தாங்க நினைச்சேன். ஆனா இப்ப இன்னும் ஒரு வருசம் ஓட்டலாம்னு தோணுது..ஆனா வருசா வருசம் இதே போல ஒரு நிலை வர்றத நினைச்சாத்தான் வேடிக்கையா இருக்கு"

சில விநாடிகள் யோசித்துவிட்டு என்னைப்பார்த்து பேச ஆரம்பித்தார்.

"அதுக்கு என்ன காரணம் நினைக்கிறீங்க. முக்கியமான காரணம், இந்தியாவில நமக்கு ஒரு பேஸ் செட் பண்ணிக்காம இருக்கறதுதான். திரும்ப வந்து ஆரம்பத்திலேர்ந்து செய்யணும்கற போதுதான் ஒரு பயம் வருது.இந்தியா வந்துட்டோம்னா நமக்குன்னு ஒரு பிசினஸ் இருக்கணும். ஒரு செட்டில் ஆகற விதத்தில லைப் இருக்கணும். அப்பத்தான்
திரும்ப வரணும்ங்கற முடிவு சரியானதா இருக்கும்.வருசா வருசம் நாம இந்தியா வர்றோம். வர்றது வேகேஷன்ல. வந்து ஊரை சுத்திபார்த்து நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, விலைவாசி உயர்வை பார்கறப்போ திரும்ப சவுதி வரணும் இன்னும் சம்பாதிக்கணும்னு தோணிடுது."

எனக்குள் இப்பொழுது வேறு கேள்விகள் முளை விட்டிருந்தன.என்னைப் பற்றியும் என் அடிப்படை இந்தியாவில் என்ன என்பதைப் பற்றியும் என் எண்ணங்களை திரும்பிப் பார்க்கத்துவங்கியிருந்தேன்.
சில நிமிடங்கள் கழித்து அவரே பேச்சைத் தொடர்ந்தார்.

"இந்த தடவை 45 நாள் லீவு எப்படியோ மேக் அப் பண்ணிகிட்டு வந்தேன். அதுக்கு மெயின் காரணமே நம்மூர்ல ஒரு பிசினஸ் செட் பண்ணனும்கறதுதான். ஓரளவுக்கு செட் பண்ணிட்டேன்..."

இப்போது கொஞ்சம் கவனமாக அவரைப் பார்த்தேன். என்ன பிசினஸ் பண்ணியிருக்கீங்க என்று கேட்கத்தோன்றுவது ஒரு சாதாரணனின் இயல்பு. ஆனால் சட்டென்று அதைக் கேட்பது, அந்தப்பக்கம் வாங்கி இந்தப்பக்கம் விட்டுவிடும் ஒரு அரட்டை. அல்லது ஒரு வித துடுக்குத் தனம். அவரே சொல்லட்டும் அல்லது சில நிமிடங்கள் கழித்து கேட்கலாம் என்று தோன்றியது. சில நேரங்களில் பேச்சை ஆரம்பித்துவிட்டால், அதை முடிக்காமல் இருக்க முடியாது.
எனக்கென்னமோ இன்று அவர் நிறைய விசயங்கள் சொல்லப்போகிறார் என்று தோன்றியது.

"சவுதியில எங்க வேலை பார்க்கறீங்க?"

சொன்னார். என்னைப்பற்றியும் கேட்டுக்கொண்டார்.என் கம்பெனியிலிருந்த ஒரு நண்பரை அவருக்குத் தெரியும் என்றும் அவர் குறித்த விபரங்களையும் சொல்லி உறுதிபடுத்திக்கொண்டார். சில நிமிடங்கள் கழித்து...

"நீங்க ஆரம்பிச்சிருக்கற பிசினஸ்.. சொன்னீங்களே.. அது உங்க வேலை தொடர்பானதுதானா?" - சுற்றி வளைத்து கேட்டே விட்டேன்.

"இல்லீங்க. தேங்காய் மண்டி. இந்த தடவை, சரவணபவன் மாதிரி பெரிய ஹோட்டல்களுக்கெல்லாம் காண்ட்ராக்ட் போட்டுட்டேன்.இந்த வேகேசன்ல ஒரு நிமிடம் கூட சும்மா இல்லை. அந்த வேலை தான் பெரிய வொர்க். நம்ம பஸ்லயே எடுத்துட்டு வர்றதுக்கு ஏற்பாடு பண்ணி, காண்ட்ராக்டுக்கு அலைஞ்சு அப்படி இப்படின்னு பெண்டு எடுத்துடுச்சு"

"உங்க பஸ்ஸா.."

"ஆமா, அதிராம்பட்டினத்துக்கும், மெட்ராஸுக்கும் ஆறு மாசமா வண்டி ஓட்டறோம். நானும் இன்னொருத்தரும் சேர்ந்து பண்றோம்.அவர் ஒரு வண்டி நான் ஒரு வண்டி. வோல்வா வாங்கி விட்டிருக்கேன். 57 லட்சம். சாதாரண பஸ்ஸுனா 28 லட்சத்துல முடிஞ்சுடும். ஆனால் வோல்வா-ங்கறதுனால் இவ்வளவு. ஆனா, ஒருதடவை வோல்வா-வில போனவன், மறுபடி அதுக்குத்தான் வருவான்."

"பிஸினஸ் எப்படி இருக்கு.."

"பஸ் ஓட்டறதில ஒண்ணும் பெரிசா காசு தேறாது. ஆனா, லோடு வரும்ல அதில நல்லா காசு பார்க்கலாம். அதுதான் மெயினே."

"ம்.."

"டிரைவருக்கு மாச சம்பளம் 1000. டெய்லி பேட்டா 300. இரண்டு கிளீனர் இருக்காங்க. பெட்ரோல் லிட்டருக்கு 3 கிலோமீட்டர் தான் வரும். அதுவே 6000 ரூபா ஆயிடும். அப்புறம் டிப்ரிசியேசன் இருக்கு. இதெல்லாம் வச்சு பார்த்தா, வெறும் பஸ் ஓட்டறதுல மட்டும் பெருசா ஒண்ணும் தேறாது"

"ஓ."

"ஆமா.. பஸ்ல வர்றவங்க குடுக்கறதெல்லாம் மெயிண்டனென்ஸுக்கே போயிடும். எனக்கு கடைசியா நிக்கறது லோடுதான். அதில நல்ல காசு. மூட்டைக்கு 50 ரூபா. 20-30 மூட்டை ஒவ்வொரு டிரிப்லயும் ஏத்திடுவோம். அது அப்படியே துண்டா நிக்கும்."

"ம்.." யோசிப்புடன் தலையாட்டினேன்.

பேச்சு கொடுப்பதென்பதும், பேச்சை வாங்குவதென்பதும் ஒரு கலை. யாரிடம் எப்படி பேசவேண்டும் என்று திட்டமிட்டு பேசினால் அது வேறுவிதம். ஆனால் எந்த திட்டமும் இடாமல் அடுத்தவர் என்ன சொல்கிறார் என்பதை அவர் பக்கமே நின்று கேட்டுக்கொண்டிருப்பது, பேசுபவரை மேலும் பேசத் தூண்டும்.நான் இந்த ரகம். இன்னுமொரு ரகம் இருக்கிறது, அது ரிடையர்ட் ஆசாமிகள் ரகம். சும்மாவேணும் டைம் பாஸ் செய்வதற்காகவே வார்த்தைகளை விட்டு ஆளை பேச வைப்பார்கள். அந்தப் பேச்சு ஒரு வித ஆபாசம். எதிராளியின் விருப்பமே இல்லாமல் வாயைப் பிடுங்கும் வெட்டி அரட்டை.இந்த ரகத்தினர் தனக்குத் தெரிந்ததை வைத்து கடைசியில் அட்வைஸ் கூட கொடுப்பதுண்டு.பேசி முடித்து வெளியே வந்த பிறகு, எதற்கு இந்தாளிடம் அவசியமே இல்லாமல் இவ்வளவு விசயம் பேசிக்கொண்டிருந்தேன் என்று தன்னையே நொந்து கொள்ள நேரிடும்.

சில விநாடிகள் என்னை கவனித்துவிட்டு தொடர்ந்தார்.

"பிளைன் மாதிரி சர்வீஸ். ஒரு மணிநேரத்து ஒரு தடவை ஜூஸு. காபி , பிஸ்கெட் சப்ளை.."

"அட.. அப்ப ரொம்ப பேமஸாயிருக்குமே.." - கொஞ்சம் ஆச்சரியமாகவே கேட்டேன்.

"ஆமா. கடவுள் கருணையினால நல்லா ஓடுது. டிரைவருக்கெல்லாம் நல்ல சம்பளம்ங்கறதுனால அவங்களும் சந்தோசமாயிருக்காங்க."

"அது எப்படி, 1000 ரூபாதானே சொன்னீங்க.." - நான் கொஞ்சம் ட்யூப் லைட்...

"1000 ரூபா சம்பளம் ஆனா ஒரு நாளைக்கு 300 ரூபா பேட்டா. அதைத் தவிர அங்கங்க 50, 100னு காசு பார்ப்பானுங்க. சாப்பாடு மத்த செலவெல்லாம் பிரீ. எப்படியிருந்தாலும் மாசத்துக்கு 8000 ரூவாயாவது வருதுல்ல.."

"ம்.."

சீட்டின் முன் இருக்கும் சின்னத்திரையில் படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து ஹெட்போன் வந்தது. மாட்டிக்கொண்டு, ஏதேனும் பார்க்கும் வண்ணம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தேன்.

ஒண்ணும் உருப்படியாக இல்லாத நிலையில், அவர் சூட்கேஸ் மேல் இருந்த 'குங்குமம்'எடுத்து புரட்ட ஆரம்பித்தேன். மகா குப்பை. இதற்கா இத்தனை விளம்பரம்? படிப்பதற்கென்று சில பக்கங்களைக் கூடத் தேட முடியவில்லை. குமுதத்தின் மோசமான வடிவம் என்று ஒரு கருத்து உள்ளே தோன்றியது. சினிமா, சினிமாத் துறை பெண்களின் விதவிதமான் உடைகளில் படங்கள். இந்த மாதிரிப் படங்கள் சுகம் தான். எதிர் சாராரின் அழகின் மீது ஏற்படும் ஈடுபாடு இயல்புதான். ஆனால், அப்பொழுது அந்தப் படங்களைப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. அவரிடமே பேச்சு கொடுக்கலாம் என்று தோன்றியது...

"எப்பயிலேர்ந்து இந்த பஸ் ஓடுது? அதிலயே நீங்க இன்னும் கொஞ்சம் டீப்பா இரங்கறமாதிரி ஐடியா இல்லியா?"

"எங்க வண்டி இப்பத்தான் ஆறுமாசமா ஓடுது.அதுலயே திரும்பத்திரும்ப இன்வெஸ்ட் பண்றது வேஸ்ட். அப்பறம் அப்படியே போய்கிட்டிருக்கணும். இன்னும் ஒரு ஐடியா இருக்கு. அதிராம்பட்டினத்துக்கும் மெட்ராஸுக்கும் தூரம் அதிகம். அதைவிட குறைஞ்ச தூரத்தில பெங்களூர் இருக்கு.
நல்ல பிசினஸும் வரும்.ரேட்டும் ஜாஸ்தி வாங்கலாம்.பெங்களூர் ரோடு இப்ப ஓரளவுக்கு நல்லா போட்டுட்டான் இன்னும் கொஞ்ச நாள்ல முழுசும் முடிஞ்சுடும். அப்படி முடிஞ்சுடுச்சுன்னா, வோல்வாவை அந்தப் பக்கம் திருப்பி விட்டுட்டு, நம்மூருக்கு வேற வண்டி வாங்கிடலாம்னு யோசிக்கிறேன்."

"ஆமாமா...பெங்களூர் நல்ல ரூட்" - போன தடவை வந்தபோது, பெங்களூர் செல்லும் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல பஸ் சர்வீஸ்களும், அதன் சூப்பர் டூப்பர் விலை விபரங்களும் என்னுள் ஓடியது.

"இன்னொரு விசயம் கூட இந்த தடவை செஞ்சிருக்கேன்.வேளச்சேரில ஒன்றரை கிரவுண்ட் நிலம் வாங்கியிருக்கேன்.கிரவுண்டு 24 லட்சம். பிளாட் கட்டப்போறேன்."

"அட... நல்ல பிசினஸுங்க"

"அண்ணா நகர்ல கூட பார்த்திருக்கேன். இப்ப இந்த பிசினஸ்தான் காசு. கைமேல பார்க்கலாம். 8 வீடு கட்டி வித்தா 8 லட்சம் கையில நிக்கும்."

"எனக்கு கூட நிலம் வாங்கணும்னு ஆசை. ஆனா ரேட் இன்னிக்கு எங்கியோல இருக்கு. முந்தா நேத்தி கொளத்தூர் பக்கம் போயிருந்தேன். எங்கியோ இருக்கு. அங்க கிரவுண்டு 8 லட்சம் சொல்றாங்க" - பல்சுவை நாவல் ஆசிரியர், பொன்.சந்திரசேகரனுடன் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அந்த ஞாபகம் வந்தது.

"ஆமா, கொளத்தூர்ல இப்ப 8 லட்சம்தான்.. மெயின் மெட்ராஸ்ல காசு குடுத்து நிலமெல்லாம் வாங்கக் கூடாது. அவுட்டர்ல வாங்கி போட்டுட்டு மறந்திடணும். மணலி பிரிட்ஜ் இருக்குல்ல.. அதுக்கு பக்கத்தில ஒரு புது லே-அவுட் போட்டிருக்கான். மே-மாசம்தான் போட்டிருக்காங்க. அண்ணா நகருக்கு அப்புறம் இவ்வளவு நிறைய இடம் விட்டு போட்ட லே அவுட் இது மட்டும்தான். அங்கியே கிரவுண்ட் 5 லட்சம். நான் ஒரு ஆறு கிரவுண்ட் வாங்கி போட்டிருக்கேன்."

ஒரு கணம் துணுக்குற்று சாதாரணமானேன். 25 வருடங்களாக சவுதியில் இருப்பவர். பணம் புரட்டுவதென்பது இயல்பாக இருக்கக்கூடும்.

"இப்பவே எங்கியாவது வாங்கி போடுங்க கல்யாண். போட்டுட்டு மறந்துடுங்க. அப்புறம் அஞ்சு வருசம் கழிச்சு டபுள் ரேட் கண்டிப்பா போகும். வாங்கறதப்போ, 40 இஞ்சு ரோடு உள்ள இடமா பார்த்து வாங்கணும்.அப்பத்தான் 4 பிளோர் 5 ப்ளோரெல்லாம் கட்டமுடியும். அதுக்கு குறைச்சலாம் இருந்தா கிரவுண்ட் பிளஸ் ஒண்ணு தான் கட்டமுடியும்"

அவர் சொன்னதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. சமீபத்தில்தான் சென்னை மார்கெட்டை கவனிக்க ஆரம்பித்திருந்தேன்.

"லேண்ட் வாங்கிப் போடலாங்க. ஆனால் யாராவது ஆக்குபை பண்ணிகிட்டாங்கண்ணா அப்புறம் துரத்தறது கஷ்டமாயிடும்" - வழக்கமான மிடில் கிளாஸ் உப்புக்கு சப்பாணி வாதத்தை போல பேசுகிறேனோ என்று தோன்றியது. என் தகப்பனார், மாமனார் இன்னும் என்னைச் சுற்றியுள்ள பலரும் இதையே சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.

"இப்ப அண்ணா நகர் லேண்ட் சொன்னேனே. அது கூட ப்ரச்சனையான இடம்தான். குடிசை போட்டுகிட்டிருக்கானுங்க. பிரச்சனையோட சேர்த்து 35க்கு இரண்டரை கிரவுண்ட் முடிச்சுட்டு வந்திருக்கேன்."

ஆச்சரியத்துடன்..

"எப்படி கிளப்புவீங்க...?"

"சொல்லிட்டு வந்திருக்கேன். டைம் குடுத்துருக்கேன். கிளம்பலைனா வேற வழியில பார்க்க வேண்டியதுதான்"

நான் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்ப்பதை கவனித்துவிட்டு சொன்னார்..

"எங்க அண்ணன், எம்.பி.******"

அதற்கு மேல் எதுவும் பேசவேண்டும் என்று தோன்றவில்லை.

அடுத்த ரவுண்ட் படங்கள் சின்னத்திரையில் வர ஆரம்பித்திருக்க, அதில் மூழ்கலானேன். அவர் பேப்பரில் ஆழ்ந்தார்.

விமானம் சவுதியை நெருங்கும் நேரம், அவரிடமிருந்த தினமணியையும், என் பக்கத்திலிருந்த குங்குமம் புத்தகத்தையும் வைப்பதற்காக சூட்கேஸைத் திறந்தார். அதில்... ஏராளமான புத்தகங்கள். கல்கி விகடன் முதற்கொண்டு பல பத்திரிக்கைகள்.

"என்ன சார், ஒரு மினி லைப்ரரியே வச்சிருக்கீங்க.. நிறைய புத்தகம் படிப்பீங்களா."

"ஆமா. எனக்கு டி.விலாம் பார்க்க பிடிக்காது. புத்தகம்தான் பொழுது போக்கு."

சட்டென்று மின்னல் வெட்டியது. "என்னென்ன புத்தகம் படிப்பீங்க"

"எல்லா புத்தகமும். முக்கியமா சுஜாதா அப்புறம் தி.ஜானகிராமன்,அசோகமித்ரன்,அகிலன் கல்கி.. இந்த தடவை நிறைய புத்தகம் வாங்கிட்டு வந்திருக்கேன். என் லக்கேஜ்ல 30 கிலோ புத்தகங்கள்தான்."

"ஜெத்தால வீட்ல கம்ப்யூட்டர் இண்டர்நெட்லாம் இருக்கா.."

"ம்.. இருக்கு"

"அடடா.. உங்க கிட்ட இன்னமும் நிறைய பேசியிருக்கலாமே சார்.. "

அதற்குள் விமானம் தரையைத் தொட்டிருந்தது.
posted by சாகரன் @ 7/14/2005 02:58:00 AM   11 comments
Sunday, July 10, 2005
அந்நியன்
"அரே யார்.. who said there is no freedom in india pakistan?"

பக்கத்தில் இருந்த பாகிஸ்தானிய நண்பன் பிலால் குரைஷி கேட்ட நேரம், ஒன்-வேயை கிராஸ் செய்துகொண்டிருந்தேன். கூட்டம் அதிகம் இருந்த ஈகா தியேட்டரின் அருகிலிருந்த அந்த ஹோட்டலிலிருந்து மீண்டும் தியேட்டருக்கு வர வேண்டும். மறுபடி ஒரு முழு சுற்று சுற்றி வந்துவிடலாம் தான். ஆனாலும், ஏனோ அதே வழியில் ஓரமாகத் திரும்பி வந்து தியேட்டரில் என் இருசக்கர வாகனத்தைப் பார்க் செய்தேன்.

அவன் கேட்ட கேள்விக்கு 'ஹும்' என்ற பதில் மட்டுமே கொடுத்திருந்தேன். ஆனால் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும் என்ற யோசிப்பு வந்தவண்ணம் இருந்தது. ஒன் - வே கிராஸ் செய்ததை வைத்து சுதந்திரத்தை எடை போட முடியுமா? இந்த சிறு தவறுக்கு இவ்வளவு பெரிய கேள்வி அதிகமில்லையா?!

தியேட்டரில் ஒரு ஓரத்தில் நின்ற பர்தா பெண்களைப் பார்த்து, ' நான் ஒரு நிமிடம் சவுதி என்று நினைத்துவிட்டேன்' என்று பிலால் சொல்ல, துணைக்கும் எனக்கும் மெலிதாக சிரிப்பு வந்தது.

பஹேலி - அறுவை. ( ஒரு வேளை உணமையிலேயே அந்த 'காதல் பூத்' பைக்குள் அடைபட்டுக் கிடந்திருக்குமானால், கொஞ்சமாவது அர்த்தம் இருந்திருக்கும்; அல்லது இவ்வளவு காலம் கழித்து கூடு விட்டு கூடு பாய்வதற்கு பதில், ஆரம்பத்திலேயே கூடு பாய்ந்திருந்தால், நமக்கு இப்படி ஒரு படம் பார்க்கவேண்டிய தேவையாவது இல்லாமல் இருந்திருக்கும்.)

இரவு, நேரம் 1 மணியை நெருங்கியபிறகு, ஆட்டோக்களை நம்பி பிலாலை அனுப்ப மனம் வரவில்லை. போதா குறைக்கு பாகிஸ்தானியன் என்று தெரிந்தால் இன்னமும் பிரச்சனை அதிகம் ஆகலாம். ஈகாவிலிருந்து அண்ணா நகர் MRF கெஸ்ட் ஹவுஸ் செல்லும் வழி தெரியாதுதான், இருந்தாலும், யாரிடமாவது கேட்டுச் சென்றுவிடலாம் என்று தோன்றியது.

"சார்.. இங்கேர்ந்து கே-4 போலீஸ் ஸ்டேஷன் எப்படி போறது? "- வழியிலிருந்த போலீஸ்காரரை நெருங்கி கேட்டேன்.

"நேரே போங்க சார். அப்புறம் ஒரு சிக்னல், அதையும் தாண்டி நேர போனீங்கண்ணா அடுத்த சிக்னல் வரும், நீங்க நேரே தான் போகணும்.அது ஒன்வே. இப்ப ஒண்ணும் பிரச்சனை இல்லை. அதனால நேரயே போகலாம்... ...." - தொடர்ந்து முழு வழியையுமே விளக்கமாகச் சொன்னார் அவர்.

போலீஸ் எவ்வளவு உதவியானவர்கள் என்பதைக் குறித்து பேசியவண்ணம் அவர் சொன்ன வழியில் செல்ல, எம்.ஆர்.எப் கெஸ்ட் ஹவுஸ் நெருங்கியது. உம்... அதை மாளிகை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஒரு மணி நேரம் அவனோடு பேசியிருந்துவிட்டு திரும்பியபோதும் கூட...

ஆளில்லாத அந்த ரோட்டில், ஒன்-வே சிக்னலை மதித்து, ஏனோ சுற்றிக்கொண்டுதான் சென்றேன்.

தேவை ஒரு அந்நியன்?!


-------*-----------*----------
28ம் திகதி ஜூன் மாதம் 'தி ஹிந்து' இதழிலிருந்து..
"Two seamers from Saudi Arabia — Bilal Quereshi and Sufyan — are also training along with a bunch of Indian bowlers chosen from the country. "
posted by சாகரன் @ 7/10/2005 05:14:00 PM   1 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER