சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, August 28, 2004
கர்வத்திற்கு புராணங்களில் தரப்படும் முக்கியத்துவம்
கர்வம் என்பது எவ்வளவு தூரம் தவறானது என்பதற்கு நம் புராணங்களில் ஏராளமான கதைகள் உண்டு.

மகாபாரதத்தின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே யயாதியின் கர்வம் காரணமாக அவருடைய மேலுலக வாழ்க்கை தடை செய்யப்பட்டது என்பது போன்ற கதைகளை நாம் படித்திருக்கிறோம்.

கடவுளின் அவதாரம் என்பது மிக மிக முக்கியமான காரணங்களுக்காக ஏற்படுவதாகத் தான் இது வரை நமக்கு சொல்லப்பட்டு வந்துள்ளன. அவதாரம் என்பதை மிகவும் கவனமாக நன்மைகள் குறைந்து தீமைகள் அதிகப்படும் காலங்களில் எடுக்கப்பட்டதாகத் தான் நாம் அறிந்துள்ளோம். அப்படிப்பட்ட நிலையில் கர்வத்தினை அழிப்பதற்காக ஒரு அவதாரம் என்றால், அது எவ்வளவு முக்கியமான விசயம்?!

தென் இந்தியாவில் ஆட்சி செய்து வந்த அந்த அரசன் நல்லவனாகவும், வல்லவனாகவும் சித்தரிக்கப்படுகிறார். மக்களுக்கு நன்மைகள் செய்யும் ஒரு அரசராக சொல்லப்படுகிறார். அந்த அரசு அந்த காலத்தில் பொற்காலமாக சொல்லப்படுகிறது. அந்த அரசனிடம் உள்ள ஒரே குறை. தன் மீது ஏற்பட்ட அதீத கர்வம். தன்னால் எதையும் யாருக்கும் கொடுக்க முடியும் என்ற எண்ணம்.

கர்வம் என்பது ஒரு தொற்றுநோய். ஒருவர் கர்வமுடன் இருக்க, அவர் எதிரில் உள்ளவரும் தம்மை அறியாமல் தான் இவனை விட பெரியவர் என்ற எதிர்வினைக்கு அடிமையாகிறார்.
இப்படித் தொடரும் கர்வம், விடாமல் தொடர்ந்து அடுத்தவரை காயப்படுத்தி, கர்வப்படுத்திக்கொண்டே இருக்கும்.
அரசனுக்கே அப்படிப்பட்ட கர்வம் இருந்தால் என்ன ஆகும்? அவனுடன் நெருங்கிய மந்திரியிலிருந்து ஆரம்பித்து கீழ் மட்டம் வரை அந்த கர்வம் என்ற நோய் பரவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவத்தை நிகழ்த்த விரும்பினார் இறைவன். கர்வம் என்பது தவறு என்று உலகிற்கு காட்ட விரும்பினார். சாதாரண எடுத்துக்காட்டாக இல்லாமல் காலம் முழுவதும் அது நிலைத்திருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் போலும். ஒரு அவதாரம் பிறந்தது. அந்த அவதாரம் தான்... வாமனாவதாரம்!

இனிக்கும் மொழியும் எங்கும் நிறைந்திருக்கும் நீரும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மக்களை ஆண்டு வந்த மகாபலி என்ற அந்த அரசன், ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தான். அந்த காலத்தில் யாகத்தின் முன் அந்தணர்களுக்கு தானம் அளிப்பது முக்கியமான ஒன்றாக இருந்து வந்தது. இறை ஒரு சிறிய அந்தணச் சிறுவன் வடிவம் எடுத்தது. யாகத்தில் தானம் தந்து கொண்டிருந்த அரசனை நெருங்கியது. வேண்டும் மூன்று அடி நிலம் என்று கேட்டது. ஆச்சரியமடைந்தான் அரசன்!

இருக்காதா பின்னே? ஒரு ஊர் வேண்டும் என்று கேட்கலாம். செல்வம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம். இன்னும் எத்தனையோ கேட்க இருக்க, வெறும் மூன்று அடி நிலம் மட்டுமா? ஏதோ பொறி தட்டியது. ஆனால் அங்கே விதி விளையாடியது. மூன்றடி நிலம் தருவதில் என்ன சிக்கல். என்னிடம் இல்லாததா? தந்தேன் என்று சத்தியம் செய்தான் அவன்.

அருகிலிருந்த குலகுரு சுக்ராச்சாரியார் அரடனை நெருங்கினார். அரசன் உடனடியாக தந்தேன் என்று சொன்னதை அறியாமல், அரசா, இது இறை வடிவம். நீ எதையும் கொடுத்துவிடாதே என்று அறிவுரை சொன்னார். அரசன் இப்பொழுது யோசித்தான். இல்லை குரு, உங்களை கேட்காமலேயே நான் கொடுத்து விட்டேன். மூன்று அடி நிலம் என்ன பெரிய விசயம். இறை வடிவமாகவே இருந்தாலும், என்னிடம் இறை, தானம் பெற்றதாக இருக்கட்டுமே.. என்று சொல்லி இயல்பானான். அங்கும் அவனது கர்வம் தெரிந்தது.

வாமனம் என்றால் சிறியது என்று பொருள். சிறிய உருவில் இருந்த இறை, தன் முழுமையான வடிவத்தை எடுத்தது. அடி எது, முடி எது என்று தெரியாத ஒரு உருவம். அரசனின் கட்டுப்பாடில் இருந்த தேவலோகத்தில் ஒரு காலும், பூலோகம் முழுமையும் ஒரு காலுமாக எடுத்து வைத்தார். உலகம் முழுதும் அளந்தாயிற்று... மூன்றாவது கால் எங்கு வைப்பது?

கடவுளின் முன், யார் பெரியவர்? யாரால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்? மகாபலியின் கர்வம் அவனைவிட்டு தெரித்தது.
மண்டியிட்டான், இறையே, என் மேல் உங்கள் மூன்றாவது அடியை வையுங்கள் என்று தலை குனிந்தான்.
அவன் மீது வைத்த காலடியின் வேகம், அவனை பாதாள லோகத்தில் சென்று சேர்ந்தது. மகாபலியின் கர்வம் அடியோடு ஒழிந்தது.

மகாபலி கர்வம் உள்ள ஒருவனாக இருந்தாலும், நல்ல அரசன், தன் மக்களின் மீதும் நாட்டின் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டவன். அவன் மீது மனமிரங்கி, அவன் விருப்பப் படி, இனி வருடா வருடம் ஒரு தினம் நீ உன் மக்களுடன் வாழலாம் என்று வரம் தந்தார் இறை.

தன் நாட்டுமக்களின் மீது அக்கறையும், ஆசையும், ஈடுபாடும் கொண்டுள்ள எந்த அரசனையும் வாழ்வாங்கு நினைவில் நிறுத்தும் குணம் நம் மக்களுக்கு எப்பொழுதும் உண்டு. (மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு முதலமைச்சர் உட்கார்ந்த இடத்திலேயே ஜெயித்த கதையும், இன்றும் அவர் பெயருக்காவே ஓட்டிடும் மக்களும் நம்மிடையேயும் உண்டுதானே?!) அந்த அரசனினின் வருகைக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்லி, அவர் என்றும் எங்கிருந்தாலும் சிறப்போடிருக்கச் சொல்லி கொண்டாடுவது அந்த நாளின் பழக்கமாயிற்று.

அந்த நாள்... இன்று!

இன்றும் கொண்டாடப்படும் 'ஓணம்', கேரளத்துக்கே உரிய ஒரு பண்டிகை. தமிழகத்தை சேர்ந்த நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு பண்டிகை. பெயர் கேள்விப்பட்டிருப்போமே ஒழிய முழுமையாக அறிந்திருப்போமா என்றால் சந்தேகம்தான், இல்லையா?

பூவினால் செய்த கோலங்கள், பூஜைகள் என்று இன்றும் அமர்களப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக பாயாச இனிப்புக்கள் அந்த மக்களின் இல்லங்களை மகிழ்ச்சி படுத்துகின்றன. யானைகளின் அணிவகுப்பும், பட்டாசுகளும், தனித்தன்மை வாய்ந்த கதகளி நடனங்களும் தேசமெங்கும் சந்தோஷ ஆரவாரத்தை அள்ளித் தெளிக்கின்றன. மிகப் புகழ்பெற்ற படகுப்போட்டிகள் நடைபெறுவதும் இதே காலத்தில்தான். நெஞ்சை நெருக்கும் உடல் பலத்தை காட்டும் அற்புத படகுகள், காற்றின் வேகத்தில் நீரை கிழித்துச் செல்லும் காட்சி ஆயிரக்கணக்கானவர்களின் கூச்சல்களில் தன்னை மறக்க வைக்கும் அழகு.

ஓணம், இந்து மத கதையின் ஒரு நீட்சியாக கருதப்பட்டாலும், அது முக்கியமில்லை. ஓணம் எல்லோருக்குமான ஒரு திருவிழா தினம். இந்து, முஸ்லீம், கிருத்தவ மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்தோர்,தாழ்ந்தோர் எல்லோரும் ஓணத்தை ஒரே வித நோக்கில் தான் அணுகுகிறார்கள். இந்த ஒரு பகுதி மக்கள் மட்டுமே கொண்டாடும் இந்த ஓணம், வேற்றுமையில் ஒன்றுமை காணும் இந்தியாவின் அழகிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

posted by சாகரன் @ 8/28/2004 10:12:00 AM   0 comments
Friday, August 27, 2004
என்ன வாங்குவது?
ஊருக்கு செல்வது என்று முடிவாகிவிட்டால் போதும். எங்கிருந்தோ ஒரு சந்தோசம் மனதில் வந்து ஒட்டிக்கொள்கிறது!

ஊரில் யார் யாருக்கு என்னென்ன வாங்கிப்போகலாம் என்பதில் ஆரம்பித்து குழந்தைக்கு என்னென்ன எடுத்துச்செல்வது, நமக்கு எதை எதை எடுத்து வைத்துக்கொள்வது என்பது வரை தினசரி ஒரு சிந்தனை; பர்சேஸிங்!

பர்ச்சேஷிங் என்று ஆர்ம்பித்துவிட்டால் வழக்கமாக வாங்கும் சாக்லேட், டேட்ஸ் (Date's) தவிர தங்கமும் ஏனோ முக்கியமாகிவிட்டது. நம் ஊரில் இல்லாத கிடைக்காத தங்கமா? அல்லது பொருட்களா? ஆனாலும் இங்கிருந்து வாங்கிச்ச் செல்வது என்பது வழக்கமாகவே இருக்கிறது.

சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது உண்டு, ஒரு வேளை கோவையிலோ அல்லது திருச்சியிலோ அல்லது பெங்களூரிலோ வேலை பார்த்தால் இப்படியெல்லாம் சொந்தங்களுக்கு பார்த்து பார்த்து பொருட்கள் வாங்குவோமா என்று? சந்தேகம்தான். இந்தியாவில் தூரத்தில் இருந்தாலும் மனதளவில் நெருங்கியே இருப்பதாலோ என்னமோ இது போன்ற பொருட்கள் வாங்கிச்செல்வதில் நமக்கு சுணக்கம் ஏற்படும் என்று நினைப்பேன்.

என் துணை வேறு ஐடியா வைத்திருக்கிறார், எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊரில் பிரபலமான பொருட்களை சொந்தங்களுக்கு வாங்கிச் செல்வது அவசியம்தான் என்கிறார். நல்ல பழக்கம்தான். ஆனால் நான் இதுநாள் வரை இதெல்லாம் செய்ததில்லை!

இந்த தங்கம் பற்றி சொல்லவேண்டும்....

பொதுவாகவே எப்படியோ இப்படி ஒரு எண்ணம் நம் ஊரில் உள்ளவர்களுக்கு வேறூன்றிவிட்டது, இந்த மிடில் ஈஸ்டில் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை குறைவு என்று. ஆனால் உண்மை ஒன்றும் அப்படி இல்லை. எலக்ட்ரானிக்ஸ் பரவாயில்லை. நம் ஊரில் டேக்ஸ் அதிகம் என்பதால் இங்கு விலை கொஞ்சம் குறைவுதான். ஆனால் தங்கம் பற்றி பார்த்தால் நம் ஊரில் கிடைப்பது போன்ற வெரைட்டி இங்கு இல்லை.
துபாய் கோல்ட் மார்கெட்டில் நிறையவே வெரைட்டி கிடைக்கும் ஆனால் சவுதியில் அந்த அளவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சவுதியின் மூன்று முக்கிய நகரங்களான ஜெத்தா, தமாம் மற்றும் ரியாத் ஆகிய இடங்கள் அனைத்திலும் கோல்ட் மார்கெட் என்று ஒரு பகுதி இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்கள் இங்கு ரியாத்தில் உள்ளது. முக்கிய பகுதியான பத்தா வின் பின்புறங்களில் இரண்டு மார்கெட்களும், குவைதி மார்கெட் எனச் சொல்லப்படும் பகுதியிலும் கோல்ட் மார்கெட்கள் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், விலைதான்!

ஒரு இடத்திலும் நீங்கள் ஒழுங்கான விலையை கண்டுபிடிக்க முடியாது. 56 ரியால் / கிராம் என்று ஒரு கடையில் சொன்னால் இன்னொரு கடையில் 53 அல்லது 50 ஆகக் கூட இருக்கும். கடைசியில் பேரம் பேசி 48 ரியால்களுக்குக் கூட வாங்க முடியும்! அடுத்ததாக வருவது மூன்று விதமான கோல்ட் கேடகரி: சவுதி கோல்ட் (பெரும்பாலும் 21 காரட்), துபாய் கோல்ட், சிங்கப்பூர் கோல்ட்(22 காரட்). ஒவ்வொன்றிர்கும் ஒவ்வொரு விலை!

சவுதி கோல்ட் நம்மால் பெரிதும் வாங்க முடியாது. அவர்களுடை ஜிகினாக்கள் நிறைந்த தங்க நகைகள் நம் விட்டு வாசல்களில் மாட்டி வைக்கும், தொங்கவிடும் மாவிலை தோரணங்கள் போலத்தான் எனக்குத் தோன்றும்.

கோல்ட் பர்சேஸ் செய்யும் சில நண்பர்க்ளுடன் இது பற்றி பேசி இருக்கிறேன். பெரும்பாலானவர் சொல்வது இங்கு கிடைப்பது போன்ற கோல்ட் குவாலிடி இந்தியாவில் கிடைக்காது என்பது! சரவணாஸ்டோர்ஸை நம்புவதில் இன்னமும் சிக்கல் இருக்கிறது போலும். உண்மையா தெரியவில்லை. ஆனால் தெளிவாக தெரியும் ஒன்று, விலையில் ஒன்றும் தங்கம் இந்திய விலைக்கு குறைந்ததில்லை!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாக இருந்தாலும், இந்தியாவில் வாங்கும் பட்சத்தில் கேரண்டி என்ற விசயம் இருக்கிறது. பொருள் சரியில்லையென்றால், தெரிந்த கடை என்பதால் நேரடியாகச் சென்று சண்டையிடவும் முடியும். மற்ற சின்னச்சின்ன சைனா பொருட்கள் பர்மா பஜார், ரங்கநாதன் தெரு போன்றவற்றில் கொட்டிக்கிடக்கின்றன. விலையும் நிச்சயம் குறைவு.

இங்கிருந்து ஒரு பொருளை வாங்கிச் செல்லவேண்டிய ஒரே தேவை, ஒரு பரிசு என்பதற்காக மட்டுமே தவிர உபயோகம், திறன் மிகுந்தது,விலை குறைவு, கிடைக்காதது என்பதெல்லாம் காரணமாக இருக்க முடியாது!
posted by சாகரன் @ 8/27/2004 01:44:00 PM   2 comments
Wednesday, August 25, 2004
சமூக விலகல்கள்...
ஒத்த கருத்துள்ளவர்களுடன் ஒரு தோழமை உடனடியாக ஏற்படுவது நாம் அறிந்ததுதான்...
சில நேரங்களில் சந்தர்ப்ப வசத்தால் இந்த ஒத்த கருத்து என்பது ஏற்படாமல் போய்விட்டாலும் தோழமையை தொடர வேண்டிய அவசியம் வந்து விடுகிறது.

இந்தியாவில் நம் ஊரில் இருப்பவர்களுக்கே இந்த பிரச்சனை அதிகம் என்னும் போது வெளிநாடு பற்றி கேட்க வேண்டுமா என்ன?

கிடைப்பவருடன் தான் நீங்கள் நட்பு கொள்ள வேண்டும். நட்பு என்பது ஒத்த கருத்து என்பது மாறி ஒரே மொழி பேசுபவர் அல்லது ஒரே மாநிலக்காரர் அல்லது இந்தியர் என்பது போன்ற பொது கலன்கள் கொண்டதாக சில நேரம் மாறி விடுகிறது. வேறு வழி இல்லை!

டாக்ஸியில் செல்லும் போதோ, அல்லது ஏதேனும் கடைகளுக்கு செல்லும் போதோ, பெரும்பாலும் இந்திய முகங்கள் உள்ளவர்களாக பார்த்து ஏதேனும் பேசத் தோண்றுகிறது. ஏதோ இந்திய முகங்களுடன் பேசினால் நமக்கு ஒரு நிம்மதி, நாம் வாங்கும் பொருள் பற்றி ஒரு ஒழுங்கான கருத்து சொல்வார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதற்கு உதவியாகவே சவுதியின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்திய முகத்தினை பார்க்க முடிகிறது.

ஒருவேளை இந்தியர் இல்லையென்றால் அடுத்த கட்ட பேச்சு பாகிஸ்தானியருடன் வருகிறது. இதற்கு காரணம் என்று சொன்னால் அவர்கள் பேசும் உருதுவும் நாம் பேசும் ஹிந்தியும் புரிவதுதான்!. அடுத்த காரணம், அவர்களுடைய தோழமையான, கண்ணியமான பேச்சுக்கள்.

என் மனைவியுடன், நான் செல்லும் போது 'பஹன்' என்று விளித்து கண்ணியமாக பேசும் பாகிஸ்தானிய டாக்ஸி டிரைவர்களும், கடையில் வேலைசெய்யும் பாகிஸ்தானியரும் இங்கு அதிகம். பாகிஸ்தானியர் மீது இந்தியாவில் இருந்த விலகலான மனப்பான்மை இப்பொழுது இங்கு வந்தபிறகு பழகிய பிறகு நிறையவே குறைந்துபோய் விட்டது. அதே போல 'சிஸ்டர்' என்று விளித்து கண்ணியமாக பேசும் ஈழ்த்தமிழர்களும் நேசமானவர்கள்தான். கொஞ்சம் எரிச்சல் ஏற்படுத்தும் மக்கள் என்று சொன்னால் அது பங்களாதேசிகள் மட்டுமே என்று தோன்றுகிறது.

ஏனோ தெரியவில்லை சில நேரங்களில் அடுத்த தேசத்து மக்களை விட நம்மக்கள் கொஞ்சம் விலகி நிற்பதான தோற்றமும் வருகிறது.
இதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை... நம்மையும் மீறி, நம் இந்திய வாழ்வில் ஊடுறுவி இருக்கும் சமூக விலகல்கள் எங்கு சென்றாலும் மறக்க முடியாததாலா? அல்லது அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற விதி இங்கும் வேலை செய்வதாலா?!

கேள்விகள் கேட்பது சுலபம்... பதில் தேடுதல் என்பது அந்தந்த நேரத்தின் சம்பவங்களின் பாதிப்பு...! ஏனென்றால் இந்த சம்பவங்களில் பெரும்பாலனவை சில மணித்துளிகளில் மறக்கப்படுபவை, கொஞ்சமும் நம் தனிவாழ்க்கையை நேரடியாக பாதிக்காதவை!
posted by சாகரன் @ 8/25/2004 12:47:00 PM   0 comments
Tuesday, August 24, 2004
டிஜிடல் விமர்சனங்கள்
ஷாப்பிங் செல்வது என்பது இப்பொழுதெல்லாம் தவிர்க்க முடியாத ஒரு பொழுதுபோக்காகிவிட்டது.
எங்காவது ஷாப்பிங் என்று சென்றால் என் கண் மேயும் முதல் பகுதி எலக்ட்ரானிக்ஸ் செக் ஷன் தான்.

புதிதாக என்னென்ன காட்ஜெட்கள் வந்திருக்கின்றன. புதிய டிவிடி ப்ளேயர் விலை என்ன? என்னென்ன பியூச்சர்கள் என்பதில் ஆரம்பித்து,
புதிய டிவி பியூச்சர்கள், டிஜிடல் கேமராக்கள், செல்போன்கள், காம்கேடர்கள் என்று பெரிய அளவில் விழிவிரிக்க ஆராய்ந்து கொண்டிருப்பது என் வழக்கம்.

பல நேரங்களில் என் கூட வருபவர்கள் என்னை இழுக்காத குறையாக திரும்ப அழைத்து வருவார்கள்.

ஆண்களில் பெரும்பாலானோருக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் ஈடுபாடு இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு வருவதுண்டு. உண்மையா தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பெண் நண்பர்கள் யாருக்கும் எலக்ட்ரானிக்ஸ் ஈடுபாடு குறைவுதான்.

நான் ஒரு பொருள் வாங்கும் முன்பு அது பற்றி பெரிய ரிசர்ச்சே செய்யும் வழக்கம். இணையத்தில் கூகிள்தான் முழுமுதல் உதவி.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விமர்சனங்களை எழுதும் பெரிய பெரிய தளங்கள் ஆங்கிலத்தில் நிறையவே இருக்கின்றன.

இனி வரும் வாரங்களில் நான் செய்யும் ரிசர்ச், டிஜிடல் பொருட்கள் பற்றிய என் விமர்சனங்களை இங்கே எழுலாம் இருக்கிறேன்.

முதலாவதாக நேற்று வாங்கிய சோனி டிஜிடல் காம்கேடர் HC30E பற்றி எழுதப்போகிறேன்.

(தொடரும்)
posted by சாகரன் @ 8/24/2004 07:02:00 PM   0 comments
பேஃமிலி வெகேஷன்...
கடைசியா ஊருக்கு சென்று வந்து சுமார் 5 மாசத்துக்கு மேல ஆகிவிட்டது.

சவுதி மாதிரி ஊர்ல இது ரொம்ப கடி. எந்த வித எண்டர்டெயிண்மெண்டும் கிடையாதுங்கறதுனால,
ஊருக்கு போவதே பெரிய எண்டர்டெயின்மெண்ட்...

நான் கூட பரவாயில்லை... ஏதோ ஆபீஸுக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். வீட்ல அவங்க என்ன பண்ணுவாங்க?

ரொம்ப போரடிச்சுடுச்சு போல. கொஞ்ச நாளா ஊருக்கு போகணும்னு ரொம்ப நச்சரிச்சாங்க... அட்லீஸ்ட் ஒரு மாசமாவது போய்ட்டி வரேன் சொல்லிக்கிட்டிருந்தாங்க...

சரின்னு எக்ஸிட்-ரீ எண்ட்ரி, டிக்கட் எல்லாம் இன்னிக்கி அரேஞ் பண்ணிட்டேன். நம்மாலதான் போகமுடியாது ஆபீஸ் வேலை..., வீட்லயாவது போய்ட்டு வரட்டுமே! இன்னும் இரண்டு வாரத்தில கிளம்பிடுவாங்க...

என்ன, அவங்களும் மகளும் ஊருக்கு போனதுக்கப்புறம்தான் எனக்கு ரொம்ப போரடிக்கப் போகுது..!! :-(

உருப்படியா ஏதாவது எக்ஸாமுக்கு படிக்க டிரை பண்ணலாம் நினைச்சுகிட்டிருக்கேன். பார்க்கலாம்.
posted by சாகரன் @ 8/24/2004 06:59:00 PM   0 comments
விலையேற்ற வேகம்
இந்தியா முழுமைக்குமாக லேண்ட் பிரைஸ் ( பிளாட் மற்றும் இடங்களின் விலைகள்) வேகமாக ஏறி விட்டதாக ஒரு தகவல்.

கடந்த ஜனவரி பிப்ரவரிக்கு பிற்கு இந்த விலை ஏற்றம் வேகமாகி, இன்று சுமார் 20-30 % அதிகமாகிவிட்டதாம்.

முக்கியமாக டெல்லி போன்ற நகரங்களில் இந்த ஆறு மாத காலத்தில் 30 % ஏறி, இன்னமும் ஏறிக்கொண்டிருப்பதாகக் கேள்வி.சென்னை போன்ற பெரு நகரங்களில் புதிதாக உருவாக்கப்படும் எந்த புதிய பிளாட்களிலும் முதல் மற்றும் இரண்டாம் மாடிகள் உடனடியாக புக் செய்யப்படுகின்றன.

இதற்கான காரணங்களில் சில,

NRI - இவர்களின் முக்கிய இண்வெஸ்ட்மெண்டாக லேண்ட் மற்றும் பிளாட் மாறி வருகிறது. இவர்களுக்கு Tax உண்டு என்று சமீபத்தில் தெளிவானதிலிருந்து, லேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் அதிகரித்திருக்கிறது.  இதுவும் இந்த அதிக விலைக்கு காரணம்.

Interest Rate - இது கூட காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதிகமாக இண்ட்ரெஸ்ட் ரேட் எங்கும் கிடைக்காத போது பிளாட்களில் இண்வெஸ்ட் பண்ணலாம் என்று மக்கள் நினைக்க் ஆரம்பித்து விட்டார்களோ....

Loans --  முன்னர் மாதிரி இப்போ இல்லை. வீடு வாங்க கட்ட லோன் வேணும் சொன்னா, போட்டி போட்டுக்குட்டு லோன் தருவதற்கு பேங்குகளும் கம்பெனிகளுகளும் தயாராக இருக்கின்றன. இது கூட ஒரு காரணமாக இருக்கும் போலும்...

இந்த விலையேற்ற வேகம், குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக பலர் நம்புகிறார்கள். காரணம், நிறைய பிளாட் பில்டர்கள் தங்கள் பிராஜக்டை விரிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில், உயர்ந்த ஒரு விலை அவ்வளவு சீக்கிரம் குறைக்கப்படாது என்பது நாம் பார்த்துக்கொண்டிருபப்துதானே. அதனால் இதே விலை இனிமேலும் தொடருமே தவிர, குறையாது!


இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது இந்த தகவல்களைச் சொன்னார்...!
posted by சாகரன் @ 8/24/2004 09:59:00 AM   0 comments
Sunday, August 22, 2004
குழந்தைகளின் படிப்பு நகரங்களில் மட்டுமா?
குழந்தைகளின் படிப்பு நகரங்களில் மட்டுமா?

இதை பல பெற்றோர்கள் நம்பினாலும், ஏனோ எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

குழந்தைகளின் படிப்பு நகரங்களில் மட்டுமா? நகரத்திலேயே பிறந்து வளரும் எத்தனை குழந்தைகள் படிப்பில் சிறப்பானவர்களாக இருக்கின்றார்கள்? நகரம் என்பது படிப்பதற்காக வரவேண்டிய ஒரு இடமா? மேற்படிப்பிற்கு வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் 4 அல்லது 5 ஆம் வகுப்பிற்கே நகர பள்ளிகளில் அட்மிஷன் தேட வேண்டியது அவசியமா? நிச்சயம் இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

குழந்தைகளின் படிப்பிற்காக, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும் என்பதற்காக எத்தனையோ பெற்றோர்கள் இன்று சென்னை போன்ற பெரும் நகரங்களில் முற்றுகையிட்டு இருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக,'பத்மா சேஷாத்ரி' போன்ற பெரும் பள்ளிகளின் சுற்றுப்புறங்களிலேயே இடமும் வீடும் வாடகைக்காகவோ அல்லது அதிக பணமாக இருந்தாலும் பரவாயில்லை என்று விலைக்கு வாங்கியோ குடியிருப்பவர்கள் அதிகம்.

பெற்றோர்கள் படித்தது கிராமமாகக் கூட இருக்கலாம், ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு அல்லது சிந்தனை சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் குழந்தைகள் இன்னமும் சிறப்பாக வெளிவரும் என்பது...

இதில் சில உண்மைகள் இருப்பதாகத் தோன்றினாலும், பெரும் அளவு மாற்றம் இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே.

குழந்தைகள் அல்லது மாணவர்களின் வளர்ச்சியும் படிப்பும், சூழ்நிலையை மட்டும் கொண்டதல்ல.... ஏன் எந்த காரணமும் சொல்ல முடியாத ஒன்று என்று எனக்கு தோன்றுவதுண்டு. அவசரப்பட்டு, பிறவியிலேயே சில குழந்தைகள் திறமையுடன் பிரகாசிக்கிறார்கள் என்று சொல்லவும் நான் விரும்பவில்லை. கிராமங்களில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெறுவதும், சிறப்பான முன்னேற்றத்தை அடைவதும் நாம் பார்த்துக்கொண்டிருப்பது அடிக்கடி நடப்பதுதானே.படிக்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் படிப்பார்கள் என்று சொல்வார்கள். இந்த படிக்கும் மாணவர்கள் என்பவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இது ஒரு தனி கேள்வி. *பெரும்பாலும் இதற்கான பதில் பெற்றோர்கள், சூழ்நிலை என்பதாக இருக்கும். *

என் தந்தை என்னை பெரிய அளவில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. அவர் இருந்த இடங்களில் வேலை பார்த்த இடங்களில்தான் என் படிப்பு இருந்தது. குடும்பத்தை சேர்ந்த மற்ற சிலர் நிறைய படிக்க வேண்டும், சிறப்பான படிப்பு வேண்டும் என்பதற்காக கவனித்து கவனித்து வாழ்க்கையை செதுக்கிக் கொண்டிருந்த காலத்தில், நான் சுதந்திரமாகத் தான் இருந்தேன். முடிந்த அளவு படித்தேன்.

இன்று யோசித்து பார்த்தால் எதையும் இழந்துவிட்டதான எண்ணம் இல்லை. படிப்பு என்ற ஒரு விசயத்திற்கு மட்டுமல்லாமல் வேறு விசயம் எடுத்துக்கொண்டாலும், ஹிந்தி, வாய்ப்பாட்டு போன்றவை எங்களைச் சுற்றி இருக்கத்தான் செய்தது. மிஞ்சி போனால் சென்னைக்கு வந்திருந்தாலோ அல்லது ஒரு பெரும் நகரத்தில் இருந்திருந்தாலோ, வேறு சில விசயங்கள் கற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு என்னைத் தெரியும், எதிலும் அறைகுறை... நானும் கற்றுக்கொண்டேன் என்று ஏதேனும் செய்திருக்கலாம். பேருக்கு... அவ்வளவுதான்.

அழுத்தமாக எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனதில் உறுதிப்படுவதற்கே ஒரு வயது தேவைப்படுகிறது. அந்த வயது பெரும்பாலும், வாழ்க்கையின் ஆரம்ப அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய பின்னர் தான் வருகிறது. வாய்ப்புகள் அதிகம் இருக்கும்போது உபயோகப்படுத்திக்கொள்வதற்கு,அதுதான் சரியான நேரம்.

சமீபத்தில் ஏதோ ஒரு பழைய அவள் விகடனில், ஒரு பெண், திருமணத்திற்கு பின், ஓவியம், எம்ப்ராய்டரி போன்ற விசயங்கள் கற்றுத் தேர்ந்ததை படித்த போது..., 'சபாஷ்' என்று சொல்லத்தோன்றியது.

சில காரணங்களை முன் வைக்கின்றனர் சிலர். அதில் முக்கியம்..., என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது தெரிகிறது; குழந்தைகளின் மற்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது. அது வாய்ப்பாட்டாகவோ அல்லது வீணையாகவோ அல்லது டென்னிஸாகவோ அல்லது நடனமாகவோ எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அதற்கான வாய்ப்பு நகரங்களில் மட்டுமே இருக்கிறது.

இது ஒரு விதத்தில் உண்மைதான்; நம் குழந்தையிடம் ஏதோ ஒரு திறமை இருக்கிறது என்பதும், அதில் ஈடுபாடு இருக்கிறது என்பதும் தெளிவானால் அந்த ஈடுபாட்டினை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு நாம் இருக்கும் இடத்தில் கிடைக்காது என்பது நிச்சயமானால், அதற்காக இடம் பெயருவதில் தவறில்லைதான். ஆனால் இப்படி எந்த ஒரு தெளிவான காரணமும் இல்லாமல், சும்மா நகரத்தில் படித்தாலோ அல்லது நல்ல பள்ளியில் படித்ததாலோ எந்த குழந்தையும் மிகவும் திறமையாகி விடும் என்ற எண்ண்ம் ஒரு கனவு என்பது தவிர வேறில்லை.

நிச்சயம் கவனமாக இருக்க வேண்டிய விசயம் என்று ஒன்று இருந்தால், அது அவர்களுடைய நட்பு வட்டம் மட்டுமே!

posted by சாகரன் @ 8/22/2004 05:24:00 PM   2 comments
Saturday, August 21, 2004
கைகளில் வைரஸ்
ஜலதோஷம் என்பது வராத மனிதர்கள் இருக்க முடியுமா? சான்ஸே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

இது ஒரு இயல்பாக மறக்கப்படும் பிரச்சனை;இதற்கு பெரிய தீர்வென்று ஒன்றுமே கிடையாது.

நான் பேசிக்கொண்டிருப்பது காமன் கோல்ட் எனச் சொல்லப்படும் சாதாரண ஜலதோஷம் பற்றி.

எப்படி இந்த ஜலதோஷம் பரவுகிறது? 

இந்த வகை வைரஸ் கிருமிகள் மூக்கினுள் பல்கி பெருகுகின்றன. மூக்கிலுள்ள செல்களை ஆக்கிரமிட்ப்பதன் மூலமாக.முதல் மூன்று நாட்களில்தான் அதிக அளவில் இந்த வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. படுத்துகின்றன.சில நேரங்களில் இருமல், தும்மல் கூட இந்த கிருமிகளை வெளிவிடுகிறது. இந்த வகை கிருமிகள் மூக்கினை தொடுவதாலும், மூக்கினை சிந்துவதாலும் கைகளில் பரவி, பின்னர் நம்மைச்சுற்றி உள்ள இடங்களிலும் தங்குகிறது. இதனால் உடனடியாக நாம் தொடுபவர்களுக்கும் பரவுவது சாத்தியமே... குழந்தைகளை கேட்கவே வேண்டாம்;வேகமாக அவர்களுக்குத்தான் பரவும்.

சோதனைகள் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. இந்த கிருமிகளை கைகளால் தொட்டவர்கள் கண்களை தொடுவதாலும், நாசியினைத் தொடுவதாலும் இது அவர்களுக்கு பரவுகிறது.

ஆக மொத்தம் கைகளிலும் சுற்றுப்புறங்களிலும் வைரஸை எடுத்துக்கொண்டு சுற்றுபவர்கள் நம் ஜலதோஷத்தினால் தாக்கப்பட்ட நண்பர்கள்.கொஞ்ச்சூண்டு யோசிச்சு பாருங்க... ஒரு பிரவுசிங் செண்டர் போகறீங்க, கம்ப்யூட்டர் கீ போர்டை தட்டறீங்க... அதில் கூட இந்த கிருமி ஒளிந்திருக்கலாம்... இப்படி எத்தனை எத்தனையோ இருக்கலாம்கள் இருக்கும். ஆக மொத்தம் இதிலேர்ந்து தப்பிக்கறது கஷ்டம்தான்.

அதே நேரத்தில் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்ற கேள்வி வரும்போது, ரொம்ப சிம்பிளான ஒரு விசயம் சொல்றாங்க. அதுதான் கைகளை கழுவுதல்! ஆமா... எப்பல்லாம், நீங்க ஜலதோஷம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச நேர்கிறதோ பழக நேர்கிறதோ.. அப்பொழுதெல்லாம் உடனடியாக வந்து கைகளை கழுவுவதால் இந்த கிருமி உடனடியாக சென்று விடுகிறது. முக்கியமாக சின்னக் குழந்தைகளின் மூலமாகக் கூட இவை பரவலாம் என்பதாலும், கை கழுவாமல் கண்களையும் நாசியையும் தொடுவதாலும் இந்த பிரச்சனை வருகிறதாம். அதனால் அடிக்கடி கை கழுவுதல் அவசியம் என்று சொல்கிறார்கள்.

இதெல்லாம் ஏன் இன்று எழுத வேண்டியிருக்கிறது? என்க்கு ஏனோ திடீரென்று இரு தினங்களாக ஜலதோசம் படுத்துகிறது.

ம் ஒரு நல்ல விசயம்..., இந்த வகை வைரஸ் இணையம் மூலம் பரவுவதில்லை :-)
posted by சாகரன் @ 8/21/2004 06:22:00 PM   2 comments
உள்ளம் நலமா?
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்று சொல்வார்கள்.

'எண்ணங்கள்', என்ற எம்.எஸ் உதயமூர்த்தியின் புத்தகத்திலாகட்டும். 'நீ விரும்புவது எதுவானாலும் அடைவது எப்படி?' என்ற காப்மேயர் புத்தகத்திலாகட்டும், இன்னும் எத்தனை எத்தனையோ சுயமுன்னேற்ற புத்தகங்களிலும், இதே விசயம் திரும்பத்திரும்ப வலியுருத்தப்பட்டிருக்கும்.

இது பெரிய விசயங்களுக்கு வொர்க்-அவுட் ஆகிறதோ இல்லையோ சிறிய விசயங்களுக்கு கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகிறது!

சில தினங்களாக ஏனோ உடல்நிலை சரியில்லை என்று நினைத்தேன். நிஜமாகவே சரியாக இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது:-(

சில நண்பர்கள் சொல்வார்கள், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட, நான் நல்லா இருக்கேன் நினைச்சிக்கணும். தேவையில்லாம டாக்டர்கிட்ட போறது அது இதுன்னு செய்யக்கூடாது என்று. ஒரு விதத்தில் அது சரிதான். மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற ஆரம்பகட்ட விதிமுறை இதில் கண்டிப்பாக பெரும்பாலானவர்கு வேலை செய்யும்.

நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?  - பத்மினி சிவாஜியை பார்த்து கேட்ட கேள்வி. இதில் ஏதோ சொல்லப்படுகிறது.சாதாரணமாக நலம்தானா என்றால் உடல் நலம் என்று மட்டுமே நாம் எண்ணுவது வழக்கம். உள்ளம் நலமா? என்ற கேள்வியை யாரும் நம்மிடம் கேட்பதில்லை நாமும் யாரிடமும் கேட்பதில்லை. ஏன் நம்மிடமே நாம் கேட்டுக்கொள்கிறோமா என்றால் சந்தேகம்தான்!

உள்ளம் நலமா? என்று கேட்டால் 'என்னை என்ன மனபிறழ்ச்சி உள்ளவன் என்று கேட்கிறாயா' என்று யாரேனும் சண்டைக்கு வந்தாலும் வந்துவிடக்கூடும் என்பது காரணமாக இருக்கலாம்...:-) ஆனால் இந்த கேள்வியும் நிச்சயம் முக்கியமான ஒன்று தான்; குறைந்த பட்சம் நம்மிடம் நாமே கேட்டுக்கொள்வதற்காகவாவது....!

posted by சாகரன் @ 8/21/2004 10:51:00 AM   0 comments
ஆக்டிங் பிராஜக்ட் மேனேஜர்
கொஞ்ச நாளாக அலுவலகத்தில் நிறைய வேலை; பிராஜக்ட் மேனேஜர் விடுப்பில் சென்றிருந்ததால்.
இப்பொழுது வந்துவிட்டார்... இனி கொஞ்சம் வேலை குறையும் என்று எதிர்பார்க்கிறேன்.

டெக்னாலஜி பிராஜக்ட் மேனேஞ்மெண்ட் என்பது கொஞ்சம் கடி வொர்க் என்று நினைக்கிறேன்.
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கிறது. கற்றுக்கொள்வது குறைவாக இருக்கிறது. பிராசஸ் வேலைகள் அதிகம்.

ஒரு டெவலப்பராக எனக்கு இருந்த எதிர்பார்ப்புக்கள் நிறைய... பிராஜக்ட் மேனேஜர் நான் வேலை செய்வதற்கான ஏற்பாடுகள், அமைப்புக்கள்,
வழி நடத்துதல், கோ ஆர்டினேஷன் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், பாவம், அந்த வேலைகள் செய்வதற்கு அவர்கள் படும் கஷ்டங்கள் நிறைய.. மெயில் அனுப்புவதில் மட்டும் யாரும் எந்த வேலையும்
செய்துவிடுவதில்லை. நிறைய பாலோ அப் செய்ய வேண்டி இருக்கிறது. தொடர்ந்து பின்னால் நிற்க வேண்டி இருக்கிறது.
பார்ம்ஸ் நிறப்பி கையெழுத்து வாங்க வேண்டி இருக்கிறது. சும்மாவேணும் மீட்டிங்குகள் அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கிறது.
எப்பொழுது வேலை முடியும் என்று முன்னோக்கி நேரம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

ஏனோ, பிராஜக்ட் மேனேஜ்மெண்டில் எனக்கு சுவாரஸ்யம் இதுவரை இல்லை. எப்பொழுது அந்த ஈடுபாடு வரும் என்றும் தெரியவில்லை.
ஒருவேளை, நான் கற்றுக்கொள்ள வேண்டியதில் எனக்குள்ல ஈடுபாடு குறையும் போது, பிராஜட் மேனேஜ்மெண்டில் ஈடுபடத்தோன்றுமோ என்னமோ...!

பல பிராஜக்ட் மேனேஜர்கள் அப்படித்தான் ஏற்படுத்தப்படுகிறார்கள். நன்றாக கணிணி வேலை செய்பவர்களை விட, சுமாராக வேலை செய்பவர்களுக்கு பிராஜக்ட் மேனேஜர் பிரொமோஷன் கிடைப்பது அதனால்தான் போலும்.
posted by சாகரன் @ 8/21/2004 10:50:00 AM   0 comments
Wednesday, August 18, 2004
ரசம்
"ஹாய்டா... எனக்கு ஒரு ஆபர் வந்திருக்கு, சவுதி அரேபியாவில. இந்த கம்பெனி எப்படி பார்த்து சொல்றியா? "

"அப்படியா? சொல்லு எந்த கம்பெனின்னு... "

"*** டிராவல்ஸ். "

"ம்.. கேள்விப்பட்டதில்ல்... சரி, சாலரி என்ன சொல்றாங்க.. "

"3000 ரியால்ஸ்.. சொல்லிருக்காங்க, மத்தபடி இரண்டு வ்ருசத்து ஒரு தடவை விடுமுறை.. இடம் பிரீ. சாப்பாடு நாமதான். "

எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. மூவாயிரம் என்பது ஒன்றும் குறைந்த பணம் அல்ல. கண்டிப்பாக நல்ல பணம்தான்.
ஆனால் அதே சம்யத்தில், சவுதியில் கணிணி துறைக்கு இன்னமும் நல்ல சம்பளம் கிடைக்கும்.
ஒரு 5000+ ஆவது இருந்தால்தான் நல்லது.

அதுவும் தவிர, சவுதி எல்லோருக்கும் ஒத்துக்காது. இது ஒரு போர் ஊரு. ஏண்டா வந்தோம்னு சமயத்தில நம்ம மேலயே எரிச்சல் வரும்.
பேச்சுலருக்கு கொஞ்ச நாள் தான், இல்லைனா பைத்தியம் ஆயிடலாம். சாப்பாடு பிரச்சனை இல்ல. ஆனா தனிமை பிரச்சனை.
தனிமை கடி. தனிமை எரிச்சல். சுத்தியும் நம்ம மக்கள்தான், ஆனா எல்லாரும் சரிசமமா பழகுவாங்க சொல்ல முடியாது. எல்லா பிரச்சனையும் உண்டு.

"சவுதி வேணாண்டா ஜோ, ஏதோ பேர் தெரியாத கம்பெனி சொல்ற, கஷ்டமா இருக்கப்போவுதுடா.. "

"அடப்போடா.. இதெல்லாம் விட கொடுமைலாம் நான் குஜராத்ல பார்த்துட்டேன்." (அவன் குஜராத்தில் வேலை செய்தான்)

ஏனோ தெரியல, இப்படி சொன்னால் சவுதிக்கு வரவேண்டாம் என்று சொன்னால் பாதி பேர் நம்புவதில்லை. நாம் ஏதோ வேணும்னே அவங்க முன்னேறறதை தவிர்க்கறதா நினைப்பாங்க... அதனால் அதிகம் அழுத்தி சொல்ல முடியறதில்லை.

"சரிடா நான் விசாரிச்சுட்டு சொல்றேன். "

ஒரு ட்ராவல் ஏஜென்ஸியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் நண்பருக்கு போன் செய்தேன்.

"அந்த கம்பெனியா? படுத்துவாங்களே கல்யாண். காலைல எர்லி மார்னிங் வேலைக்கு போகணும். லீவு நாள்னு ஒண்ணும் கிடையாது. ரூம்லாம் நல்லா இருக்கும் சொல்ல முடியாது. உங்க கம்பெனி முடியாதா.. "

அவனுடைய டெவலப்பர் 2000 நாலெட்ஜுக்கு என் கம்பெனியில் வேலை கிடைக்காது.

ஜோசப்பிற்கு போன் செய்தேன். விபரம் சொன்னேன். கேட்டுக்கொண்டான். மறுபடி யோசிக்கச் சொன்னேன்.

"பார்க்கலாம்டா.. நான் வரத்தான் போறேன். "

---*--------*-----*----------

ஜோசப் ரியாத் வரும் நேரம் நான் வெகேஷனில் இருந்தேன் என் திருமணத்திற்காக. சில மாதங்கள் கழித்த பிறகும் அவனிடமிருந்து தொடர்பில்லை.
ஏனோ இன்று அவன் ஞாபகம் நிறைய வந்தது. முதலில் அனுப்பியிருந்த மெயிலை தேடி எடுத்தேன். அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டேன். 

" ஹலோ... "

"மர்ஹாபா(வெல்கம் இன் அரபி) "

"கேன் ஐ ஸ்பீக் டு ஐடி டிபாட்மெண்ட்? "

"ஒகே... "

...... ஏதோ அரயியில் அட்வர்டைஸ்மெண்ட் ஓடியது....

"ஹலோ... "
"கேன் ஐ ஸ்பீக் டு ஜோசப் ப்ரேம் குமார்.. "
"வெயிட்... "
"ஹலோ ஜோ, ஞாபகம் இருக்கா? நான் கல்யாண் பேசறேன். "
"ஹாய்டா... சொல்லுடா... "
"என்னடா எபப்டி இருக்கே... ஏன் உன் குரல் இப்படி மாறியிருக்கு உடம்பு சரியில்ல்லியா? "
"ம்... அதெல்லாம் ஒண்ணும் இல்லை... கொஞ்சம் லைட்டா பீவர் மாதிரி.. "
"ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்... "
"அது பரவாயில்லை. சொல்லு நீ எப்படி இருக்க? வீட்ல எப்படி இருக்காங்க.. "
"நல்லா இருக்காங்க மச்சி... "
"கல்யாண். நாம் அப்புறம் போன் பண்றேனே.. கொஞ்சம் வேலை இருக்கு "
"சரிடா... "

போன் வைத்த பிறகும் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. எப்படி பழகிய நண்பன். அருகில் இருக்கிறான். போய் பார்க்கக்கூட இல்லைனா எப்படி, மறுபடி போன் அடித்தேன். இப்போ எடுத்தவர் ஜோசப் என்றவுடன் தமிழ்லேயே பேசினார்.
"அவருக்கு உடம்பு சரியில்லைனு கம்பூட்டர் ரூமில ரெஸ்ட் எடுத்துகிட்டிருக்காரு. இருங்க கூப்பிடறேன். "
நான் வேண்டாம், அட்ரஸ் சொல்லுங்க எப்படி வரணும் என்றேன்.

அந்த் கம்பெனி பக்கத்தில் தான் இருந்தது. டாக்ஸியில் சென்று, கம்பெனியில் ஐடி டிபார்ட்மெண்ட் தேடினேன். ஜோசப்..
கொஞ்ச நேரங்கழித்து வந்தான். உருகி போயிருந்தான். ஷாக்காக இருந்தது. எப்படி இருந்தவன். குண்டா.. தாட்டியான ஆளாக பார்த்தவனா இப்படி, ஒல்லியாக இளைத்து ?

"என்ன ஆச்சு ஜோ இப்படி ஆயிட்ட... "
"சாப்பாடு ஒத்துக்கல கல்யாண்.. "
"உடம்புக்கு என்ன.. "
"ஓண்ணும் இல்லை ரெண்டு நாளா வைரல் பீவர். "
"டாக்டர்ட போனியா... "
"இல்லைடா... நானே மாத்திரை சாப்பிடரேன்... "
"ஏன் டாக்டர்ட போல.. "
"லீவு கிடைக்கலடா.. குடுக்க மாட்டாங்க.. மூணு நாள் லீவு எடுத்தா ஒரு நாள் சம்பளம் கட்.. மாசத்துக்கு ஒருநாள்தான் எடுக்கலாம்.நான் ஏற்கனவே ஒரு நாள் எடுத்துட்டேன். அதுவும் தவிர டாக்டர் பீஸ் 50 ரியாலாவது ஆகுமில்ல.. "
"ம்... "
"சரி கிளம்பு எங்க வீடூக்கு போகலாம். "
"இரு சொல்லிட்டு வந்துடறேன். "

வைரல் பீவர் பற்றி எனக்குத் தெரியும். உடம்பை முறுக்கி போடும் கொடுமையான ஒன்று. கண்டிப்பாக மூன்று நாளாவது இருந்துவிட்டுத்தான் போகும்.அதற்கு அடிபடாதவர் இங்கு குறைவு.
சவுதி மாதிரி ஊர்களில் இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் இது போன்ற நேரங்கள்தான் கொடுமை. பக்கத்தில யாருமே இல்லை என்ற உண்மை அப்பொழுதுதான் அழுத்தமாகத் தோன்றும்.

வீட்டுக்கு போன் பேசினேன். என் மனைவியிடம்.. ஜோசப் வருவதை சொன்னேன். உடம்பு சரியில்லாததையும்.

வீட்டில் வந்தான், ரசம் சாப்பாடு சாப்பிட்டான். நன்றாக பேசினான்.
மாலை நேரம் கழித்து கிளம்பினான்... முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. நிம்மதியாக இருந்தது.

மறுநாள்,
அவனிடமிருந்து போன் வந்தது.

"இன்னிக்கு நல்லாயிடுச்சுடா.. இப்பத்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்குடா. தெரிஞவங்கள வேற ஊரில பார்க்கறதில உள்ள இனபமே தனிதான். இன்னிக்கி எங்க வீட்டுக்கு போன் பண்ணி நான் உன்னை பார்த்ததை சொன்னேன். அவங்களும் சந்தோசப்பட்டாங்க.இப்ப உடம்பு நல்லாயிடுச்சுன்னா அதுக்கு உங்க வீட்ல ரசம் சாப்பிட்டது தாண்டா காரணம்...ரொம்ப தாங்க்ஸ்டா.. அவங்க கிட்டயும் சொல்லிடு.. "
...........

ஜோசப்... நீ வந்து போனபிறகு எங்க ரெண்டு பேருக்கும் வைரல் பீவர், ஆனா ரசம் வைத்துக்கொடுக்கத்தான் யாருமில்லை.
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

 


பின்குறிப்பு



ஜோசப் இப்பொழுது அந்த கம்பெனியில் இல்லை. ஒரு எமர்ஜென்ஸி விடுப்பில் இந்தியா சென்றவன், சவுதி திரும்பவில்லை!

posted by சாகரன் @ 8/18/2004 05:13:00 PM   2 comments
கூட்டுப்புழு
பட்டாம் பூச்சி கூட்டுப்புழு உதாரணங்களை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கூட்டுப்புழுவாக இரு, கற்றுக்கொள், உன்னை வளர்த்துக்கொள், சட்டென்று ஒரு நாள் பட்டாம்பூச்சியாக வெளியே வா... என்று.

இது எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. ஏனோ தெரியவில்லை, இப்படி இருக்க வேண்டும் என்று அடிக்கடி தோன்றுவதுண்டு.

கற்றுக்கொள்ள வேண்டியது ஏகப்பட்டது இருக்கும் போது, பட்டாம்பூச்சியாக முயற்சி செய்தால் சரியாக இருக்குமா? உடனடியாக வெளியே வந்தால், குத்திக்குதறி எடுத்துவிட ஏகப்பட்ட வழிகள் உண்டு.

இந்த விசயம் இங்கு என்று இல்லை, எங்குமே கவனிக்கப்ப்ட வேண்டும். முக்கியமாக, நீங்கள் உங்கள் திறமையை ஏதோ ஒரு விதத்தில் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம், அதற்கும் இப்படிப்பட்ட கூட்டுப்புழு நிலை தேவைப்படுகிறது.

சமீபத்தில் ஜாவாவில் ஒரு சர்டிபிகேஷன் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தேன். நெருங்கிய நண்பர் ஒருவனிடம் எத்தனையோ முறை சொல்லியும்அவர் அதனை கண்டுகொள்ளாமல் அவருடம் ஊர் சுற்றுவதற்கு என்னை நெருக்கிக்கொண்டிருந்தார்.ஒரு கட்டத்தில் சண்டையிட்டே பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அப்புறம் தான் நிம்மதியாக படிக்க முடிந்தது.

ஒரு விசய்த்தில் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு, அடுத்தவருக்கு புரியாமலே போய்விடும். சில நேரங்களில் மட்டும், புரிந்தும் புரியாமல் நடிக்கிறார்களோ என்றுதோன்றும். வேண்டுமென்றே நாம் இதில் ஈடுபடுவது தவிற்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்களோ என்று நினைக்க வைக்கும்.

சரியாகத் தெரியவில்லை. இன்னும் வாழ்கையில் கற்றுக்கொள்ள வேண்டியது, மனிதர்களை படிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது.

ஆனால், ஒன்று நிச்சயம், எந்த ஒரு செயலையும், நீங்கள் செய்யும் முன்னர், அது உங்களுக்கானது என்று மிகத் தெளிவாக மனதில் கொண்டுவந்து, அடுத்தவர் யாருக்கும் தெரியாமல் அந்த செயலில் ஈடுபடுவது, வெற்றி பெற்ற பின்னர் கூட தேவை இருந்தால் மட்டும் அறிவிப்பதும்,  முடிந்தவரை இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை இதை விட திறமையாக செய்பவர்கள் உண்டு என்பதை மனதில் நிறுத்துவதும் நிச்சயம் உள்ளார்ந்த அமைதியைத் தருகிறது.

அந்த அமைதிதானே முக்கியம்!
posted by சாகரன் @ 8/18/2004 10:57:00 AM   0 comments
பேட்டரி அவுட்
நேற்று அலுவலக்த்தின் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என் கார் திடீரென்று ஸ்டார் செய்ய முடியாமல் போய் விட்டது.ஆட்டோமேடிக் கியர் வேறு. என்ன செய்வது? தள்ளியும் ஸ்டார்ட் செய்ய முடியாது.

நல்ல வேளையாக அயூப், பிரபாகரன் (அலுவலக நண்பர்க்ள்) உதவிக்கு வந்தார்கள்.

பிரபாகரன், வீடு அருகில் இருந்ததாலும், ஸ்டார்ட்டர் கேபிள் வித் பேட்டரி வைத்திருந்ததாலும், உடனடியாக ஸ்டார்ட் செய்ய முடிந்தது.

ஸ்டார்ட் செய்த பிறகு முதல் வேளையாக பேட்டரி மாற்றி விட்டேன். நான் கார் வாங்கி சுமார் ஒன்றறை வருடங்களாகிறது. இன்னமும்பேட்டரி மாற்றவில்லை. இந்த பேட்டரி இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விசயம்தான்.
posted by சாகரன் @ 8/18/2004 10:49:00 AM   0 comments
கனவு
காலை எழும்போது சில நேரங்களில் வித்தியாசமான கனவுகளில் நீங்கள் மாட்டியிருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

இன்று ஒரு குழப்பமான கனவு...

நான் காரை பார்க் செய்யப்போகிறேன். இங்கு வேண்டாம் வேறு இடத்தில்தான் நிறுத்துவேன் என்று மெதுவாகச் செல்கிறேன்.ஒரு பார்க் ஒன்று வருகிறது. அதன் வாசலில் இடம் இருக்கிறது. பார்க்கில் ஒரே கூச்சல் குழப்பம். யாரோ ஒருவரை இருவர் போட்டு அடித்து துவைக்கிறார்கள். அவன் தப்பிக்க முயற்சிக்கிறான். ஆனால் விடாமல் துரத்தி அடிக்கிறார்க்ள்.

அவர்களை நெருங்குகிறேன். என்ன பிரச்சனை என்று கேட்கிறேன். ஒரு அழகான வாலிபன், பெண்களுக்கான உடை அணிந்து பெண்களுடன்இருந்திருக்கிறான். அதனால்தான் அவனை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் வந்தவுடன், அவர்கள் அவனை விட்டு விடுகிறார்கள்.அவனிடம் என்ன என்று கேட்கிறேன். அவன் ஒரு மாதிரி அடி வாங்கியது உரைக்காமல், என் இஷ்டத்திற்கு இருக்க முடியாதா என்று அங்கலாய்க்கிறான்.

அடுத்த காட்சியில் அவன் மீண்டும் பெண் உடையுடன் வருகிறான்., புருவம் மழிப்பக்க்ப்ட்டு நேர்படுத்தப்பட்டுள்ளது. உதடு லிப்ஸ்டிக்கில் மினுக்கிறது.

என் கூட வா, என்று எங்கோ கூட்டிப்போகிறான். அவனுடன் ஒரு இளைஞனும் கூட வருகிறான்.

திடீரென்று இருவரும் ஒரு மரத்தின் பின்னால் இருட்டில் நுழைகிறார்கள். அங்கு ஒரு புதிய உலகமே இருக்கிறது. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கில் தானே இருந்தோம். அது எப்படி இந்த உலகத்திற்கு?

அப்பொழுது சொல்கிறான். இந்த மனிதர்களை எல்லோராலும் பார்க்க முடியாது. இது ஒரு தனி உலகம். சில நேரம் மனிதர்கள் அறியும் விதத்தில்நடமாடுவோம், சில நேரம் யாருக்கும் நாங்கள் இருப்பது தெரியாது.

அடுத்த கட்டத்தில் ஏதோ ஒரு அருவி, அங்கே அருவியின் மலை மீதிலிருந்து இந்த இரண்டு இளைஞர்களும் விழுவது போல ஒரு கனவுக்குள் கனவு பிளாஷ்பேக்காக் ஓடுகிறது.அது என்ன அருவி? நான் பார்த்த ஒரே அருவி, குற்றாலம்தான், அதுவாக இருக்க முடியுமோ?

மீண்டும் இப்போ பார்க்கில் இருக்கிறோம். வேகமாக சைக்கிளில் ஒருவ்ன் வந்து நிறுத்துகிறான். எங்கே அந்த அடி வாங்கிய பையன் என்று என்னிடம் கேட்கிறான். நான் பதில் சொல்வதற்கு முன், நான் இங்குதான் இருக்கிறேன். ஆனால் சொல்லாதே என்று அந்த அடிவாங்கிய பையன் சொல்கிறான்.

எனக்கு இப்பொழுது குழப்பமாக இருக்கிறது... என்ன சொல்வது? இதோ இங்குதான் இருக்கிறான் உன் கண்ணிற்கு தெரியமாட்டான் என்றா?

நேரம் ஆயிடுச்சு... எந்திரி - இது என் மனைவி...

தூக்கம் கலைந்து விட்டாலும், இன்னமும் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்ற திகைப்பிலேயே இருந்தேன்...!

நேற்று பார்த்த Haunted Mansion அப்புறம், Ghost இந்த படங்களின் பாதிப்பு காரணமோ?
posted by சாகரன் @ 8/18/2004 10:38:00 AM   0 comments
Tuesday, August 17, 2004
டைனமிக் ஐபி .....
சில நேரங்களில் நம்மிடம் உள்ள பெரிய கோப்புக்களை யாருக்காவது அனுப்ப வேண்டிய தேவை எற்படுகிறது.

சமீபத்தில் இதற்கு ஒரு நல்ல வழி கண்டு பிடித்தேன்.

அது வேற ஒண்ணும் இல்ல, நாமளே நம்ம கம்ப்யூட்டரில் ஹோஸ்ட் பண்றது. சுலபமா செய்யற விசயம்தான்.வீட்ல டயல் அப் கனெக்ஷன் இருந்தாலும் அல்லது டி.எஸ்.எல் இருந்தாலும் இது மாதிரி பண்றது சுலபம்.

dynDns.org இந்த தளத்திலேர்ந்து நமக்கு பிடிச்ச ஒரு ஹோஸ்ட் நேம், இலவசமா ரிஜிஸ்டர் பண்ணிக்கணும்.

நான் kalyanj.homeip.net என்ற பெயரை ரிஜிஸ்டர் செய்து கொண்டேன். அப்புறம் அங்க உள்ள ஏதாவது டூல் டவுண்லோடு பண்ணி, அதை கொஞ்சூண்டு கான்பிகர் பண்ணிட்டா போதும், ஆட்டோமேட்டிக்கா ந்ம்ம ஐபி எப்பல்லாம் மாறுதோ அப்பல்லாம் அது தானா அப்டேட் ஆகிடும்.

பின்னர், அபிசிஸ்(absys webserver : இது ரொம்ப நல்ல சர்வர், கூகிளில் தேடுங்க) மாதிரி சிறிய வெப்சர்வர் சாப்ட்வேர்  டவுண்லோடு பண்ணி ரன் பண்ணிட்டா போச்சு...

எங்கேர்ந்து வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நாம் லைனில் இருக்கும்போது நம்மிடம் உள்ள சி.டி யையோ படங்களையோ டவுண்லோடு பண்ற மாதிரி பண்ணிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு கொஞ்சம் கூகிளில் சர்ச் பண்ணினா போதும்!
posted by சாகரன் @ 8/17/2004 12:45:00 PM   4 comments
Monday, August 16, 2004
ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ் துவக்கம்.
நேற்று ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸின் துவக்க விழாவை ரெகார்ட் செய்து வைத்த கேசட்டிலிருந்து பார்த்தோம்.

அட்டகாசமான கனவுக்காட்சியாக இருந்தது. ஏகப்பட்ட செலவு செய்திருப்பார்கள்!.

ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் மைதானம் முழுவதும் தண்ணீரும் பின்னர் சட்டென்று அந்த நீர் காணாமல் போவதும், அலை அலையாய் வருவது போல ஒரு நீல(ள) துணி மைதானம் முழுவதும் பரவுவதும், பார்க்க கலக்கலாக இருந்தது. மேடையைச் சுற்றி அணிவகுப்பாக உலக கலாசார மாறுதல்கள் பொம்மை வேடமிட்ட மனிதர்களால் நிகழ்த்தி காட்டப்பட்டது இன்னமும் அருமை.

வழக்கம்போல எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்தியா வரும் போது பார்த்தால் கூட்டம் கம்பியாக இருந்தது.

என்ன இது, வெரும் பத்து பேர் மட்டுமே அஞ்சுவின் பின்னால் வருகிறார்களே என்று யோசித்த போது, சரி நமக்கு ஏதாவது கப் கிடைக்கும் என்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காலி.

சாதாரண சிறு சிறு நாடுகளெல்லாம் ஏராளமான பேர் போட்டிக்கு செல்லும் போது இந்தியாவில் ஆட்கள் இல்லையா என்ன? எது இங்கு பிரச்சனை? அரசியலா பணமா? செலவு மிச்சம் பிடிக்கறாங்களா? வேதனையாக இருந்தது.

ஒருவேளை ஹாக்கி குழு போன்றவர்கள் நிறைய பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லையோ? தெரியவில்லை.

விளையாட்டுத்துறைக்கு நிறைய பணம் செலவு செய்வதும், ஊக்கப்படுத்தப்படவேண்டியதும் மிகவும் அவசியம். விரைவில் இந்த நிலை மாற வேண்டும்.

2016ல் இந்திய ஒலிம்பிக் இந்த அளவு செலவு செய்வார்களா? அடுத்தவர்கு நாம் இளைத்தவரில்லை என்று நிரூபிப்பார்களா? ஏனோ கவலை தொத்திக்கொண்டது.
posted by சாகரன் @ 8/16/2004 12:57:00 PM   0 comments
Sunday, August 15, 2004
சவுதி, ரியாத்: சுதந்திரதின கொடியேற்றம்
சவுதி,ரியாத், ஆக.,15 -

இன்று சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் காலை சவுதி அரேபிய நேரப்படி காலை 8 மணி அளவில், இந்திய தூதுவரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. சுமார் 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டு தேசிய கீதம் பாடி கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். பின்னர் ஜனாதிபதியின் உரை படிக்கப்ப்ட்டது. உரையின் நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அடுத்ததாக அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

இன்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் தென் நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

(டிஜிடல் கேமரா எடுத்துட்டு போகல:-( )
posted by சாகரன் @ 8/15/2004 10:17:00 AM   0 comments
Saturday, August 14, 2004
விடுதலை
நாமிருக்கும் நாடுநமதென்பதறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.

ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று!

- பாரதியாரின் சுதந்திரப் பள்ளு.
--------------------------வந்தே மாதரம்-------------------------------

நம் முன்னோர்கள் ஒட்டு மொத்தமாக எந்த நாளில் மிக அதிகமாக சந்தோஷப்பட்டிருப்பார்கள் சமீப காலங்களில் என்றால், அது ஒரே ஒரு நாளாகத் தான் இருந்திருக்க முடியும். 55 வருடங்களுக்கு முந்திய அந்த தினம். சுதந்திர தினம்.

ஒரே கருத்தோடு இந்தியா முழுமையும் பெரும்பாலானவர் மகிழ்ந்த அந்த நாளில், அந்த சந்தோஷத்தை கொடுத்த தியாகிகளுக்கு நன்றி சொல்வதோடு மட்டும் நம் சிந்தனை முடிந்துவிடக்கூடாது.

நெஞ்சம் முழுவதும் சந்தோஷத்தை அள்ளித்தரும் இந்தியத் தாயின் முகம் நம் கண்ணில் தெரியாமல் போகலாம். ஆனால் அக மனதில் இந்தியா என்றால் ஒரு கம்பீரம் வருவதை அறிந்திருக்க முடியும். இந்தியா என்ற அந்த உணர்விற்கு ஒரு விநாடியேனும் நன்றி கூற வேண்டும். உனக்கு வேறு என்னென்ன செய்ய வேண்டும் நாங்கள் என்று இறைஞ்சுதல் வேண்டும்.

நண்பர்கள் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
posted by சாகரன் @ 8/14/2004 04:25:00 PM   0 comments
கணவன்

சமையல் எப்படி?
தெரிந்து கொள்ள
அப்பா வாங்கித்தந்த
நிரந்தரசோதனை பிராணி


posted by சாகரன் @ 8/14/2004 04:22:00 PM   0 comments
பொறாமையா, போட்டியா?
அடிக்கடி டி.வி பார்க்கிறீர்கள்தானே!

இப்பொழுது வரும் பேட்டிகளில் (ஆமாம் சினிமா பேட்டிகள்தான்!) எத்தனை பேர் இளைய தலைமுறை பாருங்கள்.

சினிமா பாடகிகளிலிருந்து, நடிகர்,நடிகையர், இன்னும் எத்தனையெத்தனையோ பிரோகிராம்களில் பங்கு கொள்ளும்(அரட்டை அரங்கம், பட்டிமன்றம் போன்ற) அத்தனை பேரும் இளைஞர்களே!

இதெல்லாம் பார்க்கும் போது உங்களுக்கு தோன்றுவது என்ன?

நாம என்ன செய்யரோம் எவ்வளவு திறமையை நம்மால வளர்த்துக்க முடியும்ங்கற எண்ணம் உங்களுக்கு தோன்றவில்லையா?

இது பொறாமை அல்ல. ஜெயிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது, குறைந்த பட்சம் நம் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்லப்பிரியப்படுகிறேன்.

வாழ்க்கையில் சும்மா, வெட்டியா டி.வி பார்க்கறது, ஏதேனும் ஜாலியா நேரத்தை போக்கறதுன்னு இல்லாம எத்தனையோ செய்யலாம் எப்படி நேரத்தை உருப்படியாக்கலாம் அப்படின்னு யோசிக்கறதுதான் சரியானது. அப்படி இல்லாமல் போனால் நாளைய உலகில் வெறும் புலம்பல் ஆசாமியாகத் தான் இருக்க வேண்டும். அதைவிட கேவலம் உண்டா? எது நம்முடைய துறை என்பதை முடிவு செய்து அதில் திறமையை முழுமையாக்குவதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.

செய் அல்லது செத்து மடி!

(நண்பர்களே, யாருக்காகவும் நான் இதை எழுதவில்லை. எனக்காகவே தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். - சாகரன்)

posted by சாகரன் @ 8/14/2004 12:03:00 PM   0 comments
Thursday, August 12, 2004
காகித இணைப்பு
யூசர்ஸ் என சொல்லப்படும் கணிணி உபயோகிப்பாளர்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதானோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நேற்று நடந்த சம்பவம்,

ஒரு மெயிலும் அதனுடன் சில இணைப்புகளும் என் நண்பர் ஒருவருக்கு யூ.கே யிலிருந்து ஒருவர் அனுப்பி வைத்தார்.

ஆனால் வந்து சேரவில்லை.

சரி, இணைப்பு அனுப்பிவைப்பதில் பிரச்சனை போலும் என்று எண்ணி, அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ,மெயிலை பேக்ஸ் பண்ணச் சொல்லியிருக்கிறார் என் நண்பர். . Fax -ம் வந்தது.

மெயிலை பேக்ஸ் பண்ணியவர் இணைப்புகளை அனுப்பவில்லை ஏன் என்று கேட்ட போது அதுதான் அதிலேயே இருக்கிறதே என்றாராம்!

புரியவில்லையா, மின்னஞ்சலில் "இணைப்பு:xxxx" என்று இருக்குமே அதை ஃபேக்ஸ் பண்ணினால் காகித்திலேயே இணைந்து விடும் என்ற நினைப்பு அந்த யூசருக்கு!!! சிரிப்புதான் வந்தது எங்களுக்கு!

posted by சாகரன் @ 8/12/2004 01:43:00 PM   0 comments
Wednesday, August 11, 2004
உண்ட மயக்கம்...
"என்னடா இப்பல்லாம் நான் வெஜ் சாப்பிட ஆரம்பிச்சிட்டியா?"

நான் முதல் முறை ஊர் திரும்பிய போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று!
சாதாரணமாக வெளிநாடு செல்லும் விஜிடேரியன்கள், நான் வெஜிடேரியன்களாக, சூழ்நிலை நிர்பந்தத்தில் மாறுவது வழக்கம் போலும்.

இல்லை என்று சொன்ன போது நம்பாமலே பார்த்தார்கள் என் சித்தி.

சவுதி மட்டுமல்ல மிடில் ஈஸ்டில் வேலை செய்யும் எல்லோருக்கும் ஆறுதலான விசயங்களில் ஒன்று இந்த சாப்பாடு சமாசாரம்.

பெரும்பான்மையான மலையாள மக்கள் இந்த் பகுதிகளில் தஞ்சமாக இருப்பதால் (அவங்களுக்குன்னு டெயிலி நியூஸ் பேப்பர் கூட
இருக்கு, லட்சத்தைத் தாண்டி விற்பனை!) நம் இந்திய உணவுப் பண்டங்களும் வெஜிடேரியன் சாப்பாடுகளும் தாராளமாகவே
கிடைக்கின்றன.

ரியாத்தில் ஏகப்பட்ட ரெஸ்டாரண்ட்கள், இந்திய/பாகிஸ்தானிய உணவு வகை ரெஸ்டாரண்ட்களில் விஜிடேரியன் சாப்பாடு பிரமாதமாகவே இருக்கிறது.

இதில் இன்னமும் சொல்லப்போனால், தமிழ்,மலையாள ஹோட்டல்களில் கிடைக்கும் பதார்த்தங்களின் விலை , நம்ம ஊர்
சரவணபவன் விலையை விட குறைவுதான்! (ஒரு மசால் தோசை 30+ ருபாய்கள் வரும், இட்லி ஒரு செட் 20+!)

இங்க உள்ள ரெக்ரியேஷனில் முதன்மையானது சாப்பாடு என்று தான் இங்குள்ள பலர் சொல்வது வழக்கம்.

டெய்லி ஒரு ஹோட்டலில் சாப்பிடலாம்தான், ஆனால் நம்ம வயிரு அப்செட் ஆயிடுமே அதனால் கொஞ்சமே கொஞ்சம் வீட்டிலும்
சாப்பிடலாம் என்று சொல்பவர்கள் உண்டு!

இன்று நண்பர் ஒருவர் முதல் முறை ஊருக்குச் செல்வதற்காக ட்ரீட் கொடுத்தார் ஹோட்டல் மக்கானியில் (இதுக்கெல்லாம் ட்ரீட்டா?! ஏதாவது விசயம் இருக்கும், ஆனா சொல்ல மாட்டேங்கறாரு... :-)). முதல் வெகேஷன்... வரும்போது கல்யாணம் ஃபிக்ஸாயிடும் நினைக்கிறேன் :). இன்னும் முழுசா என்னென்ன ரெஸ்டாரண்ட் இங்க இருக்குது அப்படி இப்படின்னு எழுதி வைக்கலாம் நினைச்சேன். ம்... அப்புறம் எழுதலாம்.... நல்ல சாப்பாடா... அதான் கண்ணை சுத்துது...

posted by சாகரன் @ 8/11/2004 04:37:00 PM   1 comments
Tuesday, August 10, 2004
Abha
சவுதி அரேபியா என்றால் நினைவிற்கு வருவது, பாலைவனமும், அங்குள்ள கட்டுப்பாடுகளும் தான்.இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. சவுதியின் அரசு கட்டுப்பாட்டில் இன்னமும் சுற்றுலாவிற்கான விசா தளர்த்தல்கள் தேவைப்படுகின்றன.

ஆனால், உண்மையில் சவுதி அரேபியா சுற்றுலாவிற்கான பல இடங்களையும் கொண்டிருக்கிறது. பாதிநிலா பீச் (Halfmoon beach) என்று சொல்லப்படும்
கடல் சூழ்ந்த பகுதிகள் தமாம் போன்ற நகரங்களில் அழகுற அமைக்கப்பட்டிருக்கின்றன.அதேபோல சவுதியின் தகிக்கும் வெயிலின் கொடுமையையில் தப்பிக்க பலர் நாடும் இடங்களில் ஒன்று அஃபா.இது ஒரு சுற்றுலாத்தலம்.

இங்குள்ள மலையும், மலைசார்ந்த இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காக்களும்,காண்பவர் மனதைக்கவரும் ஒன்று. மலை சார்ந்த பகுதியாதலால் வெயிலின் கொடுமை என்பது இங்கில்லை. நல்ல குளிர் அடிக்கவும் செய்யும்.

இது சீசன், எப்படியாவது இந்த வருடம் அஃபா சென்று விடுவது என்று நாங்களும் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். தனியாக எங்கும் செல்வதை விட, சில நண்பர்களுடன் செல்வது இன்னமும் சுகமானது அதனாலேயே நண்பர் ஒருவரை தூண்டி விட்டேன்.அவரும் அதற்கான ஏற்பாட்டினை செய்து, வேறு சிலரையும் சேர்த்து இன்று கிளம்பலாம் என்று முடிவானது.

ஆனால் பாருங்க, இன்னிக்கி எங்களால் போக முடியாத சூழ்நிலை.குழந்தையின் உடல்நிலை படுத்திக்கொண்டிருக்கிறது.

மீண்டும் செல்வதற்கான நேரம் வரும் என்ற நம்பிக்கையில்....
posted by சாகரன் @ 8/10/2004 02:32:00 PM   0 comments
Monday, August 09, 2004
ஷாக்...
நேற்று பார்த்த ஷாக் நிச்சயம் ஷாக்காக இல்லை. ஆனால் நிம்மதியாக இருந்தது.
ஷாக் திகில் என்று பெரிதாக ஒன்றும் இல்லாமல், மாயாஜால காட்சிகள்
அமைப்பும் இல்லாமல், ஆவி உலகம் பற்றியதாக அமைந்தது இன்னமும் நிம்மதி.

எப்பொழுதுமே ஒரு படம் பார்க்கும் போது அதில் வெளிப்படும் வித்தியாசமான அழுத்தமான பாத்திரப்படைப்புகளின்
குணாதிசியங்கள்தான் என் கண்ணில் படும். அதே போல இந்த படமும்.

மீனா கலக்கியிருக்கிறார். அவருடைய உடைகளும், நடிப்பும் தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறது.

சில விசயங்கள் எனக்கு பிடித்திருந்தன. பிரசாந்த் படித்தவர் பேய், பிசாசு என்பதில் நம்பிக்கையில்ல்லாதவர்.
ஆனால் அவரே என் மனைவிக்கு ப்ப்ப்ப்பேஏஏய் பிடிச்சிருக்கு என்று வேண்டா வெறுப்பாக சொல்ல வேண்டிய அவசியம் வருவதை
அந்த சொல் பிரயோகத்திலேயே காட்டியிருக்கிறார்.

வழமை போல திகில் படம் என்ப்பதால் எல்லோரும் வித்தியாசமான குரல் தொனியுடந்தான் பேச வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள் போலும்.

பேக்ரவுண்ட் மியூசிக் படத்தின் ஒரு தூக்கல்தான். திகிலை படத்தில் இல்லாவிட்டாலும் பேக்ரவுண்ட் வரவைக்க டிரை பண்ணுகிறது.
அதிலும் சிலரது அடிக்குரல் கமறல்கள் பேக்ரவுண்டாக வரும்போது நிச்சயம் தூக்கலாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட முடிவு! நிச்சயம் நல்ல படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறது.

தமிழில் நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!!
posted by சாகரன் @ 8/09/2004 04:22:00 PM   0 comments
Sunday, August 08, 2004
மின்னஞ்சல் பனித்திரை
நட்பு என்பதும் தொடர்ந்து கருத்துப்பரிமாற்றம் நிகழ்வதால் தொடர்வதோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும் நாம் செய்யும் மிக முக்கிய தவறுகளில் ஒன்று உடனடியாக ரிப்ளை செய்யாமை.

இது நட்பை தூரமாகிவிடும் நிலையில் கொண்டு வந்து விடும்.

நட்பு என்பது தூரமாகும் ஒன்றா? இல்லை. உள்ளுக்குள் எப்பொழுதும் இருக்கும் ஒன்று. ஆனால், எல்லா நட்பும் அப்படிப்பட்டதல்ல.
நட்பு அந்த நிலையை அடைய நிறையவே காலம் எடுக்கிறது. முழுமையான புரிதல் ஏற்பட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நட்பு வேண்டும் என்பது நம் அத்தனை பேரின் கனவாகவும் இருக்கிறது. ஆனால், நாம் செய்யும் சிறு தவறுகலால் பல நல்ல நட்பையும் தூரத்தில் நிற்க வைத்துவிடுகிறோம். அப்படிப்பட்ட தவறுகலில் ஒன்றுதான் இந்த மின்னஞ்சலில் நேரம் தாழ்த்துவது.

நேரம் தாழ்த்தி நான் அனுப்பும் மின்னஞ்சலில் முதல் வாக்கியம் : காலம் கடந்து பதில் அனுப்புவதற்கு மன்னிக்கவும்.!

எனக்குத் தெரிந்த வரை, யாரும் இந்த வரிக்கு பதில் சொல்வதில்லை. அப்படியே விட்டு விடுவார்கள். இருந்தாலும் நமக்கே இது உறுத்திக்கொண்டிருக்கும்.

அதே போல நீங்கள் மடல் அனுப்பி அடுத்தவரிடமிருந்து பதில் எதிர்பாக்கும் நிலையிலும் உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை கொஞ்சம் கண் முன் கொண்டுவாருங்கள். இதே நிலையில் மற்றவரும் இருப்பார் அல்லவா? சில காலம் வெயிட் செய்துவிட்டு உங்களை அவர் மறந்துவிடக்கூடும்! இல்லை என்றால், நான் மெயில் அனுப்பினேன் ஆனா அவர் பதில் அனுப்பவே இல்லை என்று சொல்லிவிடக் கூடும். இது போன்ற காரியங்களால் சில நல்ல நட்புகளை நான் இழந்திருக்கிறேன்.

இது போன்ற நிலமைகளில் சரியான செயல், தொடர்பு கொண்டவரை உடனடியாக தொலைபேசியில் அழைத்து உரையாடுவதுதான். இதை பெரும்பாலானவர் செய்வது உண்டு.

என் குழப்பம் எல்லாம், இப்படி எல்லாம் யோசிக்கத் தெரிந்தும் பல நேரம் உடனடியாக மடல் அனுப்பி வைப்பதில் காலம் தாழ்த்துவது ஏன் என்பதுதான். இந்த சோம்பேறித்தனம் எங்கிருந்து வருகிறது?! :-(
posted by சாகரன் @ 8/08/2004 02:44:00 PM   2 comments
Saturday, August 07, 2004
நிழலாக நிற்க விரும்பும் நிஜங்கள்....
நிழலாக நிற்க விரும்பும் நிஜங்கள்....

சில நேரங்களில் உண்மை என்பதை மனம் ஏற்றுக்கொண்டாலும் தேவைஇல்லை என்று விருப்பத்துடன் நாம் ஒதுக்குவதுண்டு.உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதுண்டு!

என் நண்பர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். அவருடைய மாமி ஒருவர் உடல்நலம் இழந்து முழுவதும் உடல் உருகி ஆஸ்பிடலில் இருந்த போது ஆஸ்பிடல் வரை சென்ற அவர், மாமியை பார்க்க மறுத்துவிட்டதைச் சொன்னார். ஏன் என்று கேட்கப்பட்ட போது, மனதளவில் நிறைந்து விட்ட மாமியின் உருவத்தினை இப்பொழுது பார்த்து மாற்றிக்கொண்டு அவஸ்த்தைப்பட தான் தயாரில்லை என்றாராம்.

எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் என்னுள்ளும் இப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டு.

சவுதி வருவதற்கு முன் என் தாய் அழகாக இருந்தார்கள். உடல் பூசி ஒருவித தனி அழகுடன் இருந்த தோற்றம் எனக்குள் உண்டு.தாய் என்றாலே அழகு என்பது வேறு விசயம். இருந்தாலும், இன்று பல வருடங்கள் ஓடி விட்ட பின் உருக்குலைந்து கொஞ்சம் ஒல்லியாகிஒட்டிய கன்னங்களுடன் என் தாய் இருக்கும் போது கூட... அன்று பார்த்த அதே அழகான பூசிய தோற்றம்தான் என் மனதில் ஓடுகிறது.என் மனம் அந்த தோற்றத்தை விட்டு வெளியே வர விருப்பம் இல்லாமலேயே இருக்கிறது.

இது போன்ற மறக்க விரும்பும் நிஜத்தோற்றங்கள் என் தாய்க்கு மட்டுமல்ல. என் பாட்டிக்கும் கூட உண்டு.பாட்டி.... அப்படி ஒரு அழகு. வெள்ளி கிரணங்களாக தலை முழுக்க முடி. எவ்வளவு பெரிய கூட்டமானாலும் பாட்டியை கண்டுபிடித்து விட முடியும்.மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் நல்ல கூட்டமாக இருக்கும் போது கூட, பாட்டியை சட்டென்று அடையாளம் கண்டுபிடித்து அழைத்து வந்து விடுவோம். பாட்டியின் குரலில் ஒரு கம்பீரம் மின்னும். ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க.. உங்க பாட்டி இங்கிலீஷ்லாம்பேசறாங்க அப்படின்னு. என் முதல் மாத சம்பளத்தில் 5000 ரூபாய் அனுப்பியிருந்தேன். அதனை வைத்து ஏலக்காய் மாலை என்று ஏதேதோ செய்தார்கள். ரொம்ப நாள் அந்த பணத்தை சேமித்து வைத்துக்கொண்டிருந்தார்கள்; என் பெயரில்  அர்ச்சனை செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.மரணிக்கும் முதல்நாள் பாட்டியுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்... என்னடா.. யூ.எஸ் போறவங்க தான் ஊர்ல இருக்கறவங்கள மறந்துடுவாங்க...உனக்கு என்ன ஆச்சு அப்படின்னு கேட்டு கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

பாட்டி மரணித்த செய்தி எங்கள் குடும்பத்தில் பெரிய அதிர்ச்சி இல்லை. வயது ஆகியிருந்தது 75. அதனால் கூட இருக்கலாம்.

ஆனால் நான் சொல்ல வருவது. இன்றும் என் மனதில் அந்த நிகழ்ச்சி பதியவில்லை என்பதை. சில நேரங்களில் என் துணையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இதை பாட்டிக்கு வாங்கி போகலாம் என்பது போல் ஏதாவது என்னை மறந்து சொல்லி விடுவது வழக்கம்.

இப்படி எத்தனையோ நிஜங்களை நிழலாக்கி நாம் அமைதிப்படுவது எல்லோருக்கும் இருக்கலாம்.

சொல்ல மறந்துட்டேனே... கொஞ்ச நாள் முன்னாடி அம்மாவிற்கு போன் செய்த போது... அம்மாவின் குரல், பாட்டியின் குரலாக எனக்குத் தெரிந்தது! வயது ??

பதிவு எண்: 48

posted by சாகரன் @ 8/07/2004 10:58:00 AM   0 comments
வீடியோ ஹெல்ப்
ஒரு காலத்தில் சிடி ரைட்டர் என்பதே பெரிய விசயமாக இருந்தது போய் இன்று டி.வி.டி ரைட்டர் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்து விட்டது.

டி.வி.டிக்களும் குறைவில்லை. எத்தனையோ அற்புதமான படங்கள் இன்று 3 படம், 4 படம் என்று ஒரே டி.வி.டியில் வந்து நம் வீட்டுக் டி.வி பெட்டியில் திரையாடுகின்றன.

ஒரு டி.வி.டியை எப்படி காபி செய்வது. (காபிரைட் பத்தி கவலைப்படாமல் இருப்பதற்காக பேக் அப் அப்படின்னு சொல்லிப்பாங்க) என்பது சாதாரணமாக ஏற்படும் கேள்வி. இதில் ஒரு சிறு குறிப்பு சொல்ல வேண்டும். இன்று வரும் பல டி.வி.டிகள் DVD-9 என்ற ஃபார்மேட்டில் வருபவை.அவற்றை நேரடியாக காபி செய்ய முடியாது. ஏனென்றால் அவை 8GB யில் அமைந்தவை. நமக்கு எழுதுவதற்கு கிடைக்கும் மீடியாவோ 4 GB மட்டுமே. அதனால் அந்த டி.வி.டிகளை டவுண்கன்வர்ட் டு DVD-5 என்ற ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டும்.

இந்த மாதிரி எந்த விசயமாக இருந்தாலும் உதவி செய்வதற்கென்றே ஒரு தளம் இருக்கிறது. அதுதான் வீடியோஹெல்ப்.காம்.(videohelp.com); தெரியாதவர்கள் குறைவு என்றே நினைக்கிறேன்.

எத்தனை எத்தனையோ டாக்குமெண்ட்கள், மென்பொருள்கள் உதவிகள்..  நிச்சயம் இது போன்ற ஆல் இன் ஒன் தளங்கள் எல்லா டெக்னாலஜிக்கும் வந்தால் உதவியாகத்தான் இருக்கும்.
posted by சாகரன் @ 8/07/2004 10:40:00 AM   0 comments
Friday, August 06, 2004
கற்பனையும் நாமும்....
மனசில கற்பனைங்கறது இல்லாத நேரம் இருக்கா? எனக்கு சந்தேகம்னுதான் தோணுது.

இப்பன்னு இல்ல, ரொம்ப சின்ன வயசுலயே... இந்த டூ, காய் , பழம்லாம் விட்டுக்க ஆரம்பிச்ச அந்த வயசுலேர்ந்தே இந்த கற்பனைங்கற ஒரு விசயம் நம்ம கூட தொத்திக்கிடுது. இன்னும் சொல்லப்போனா, பிறந்த குழந்தையாக இருக்கும் போது குழந்தை தானாக சிரிப்பதைப்பார்த்து குழந்தையோட கனவுல யாரோ கடவுள் வந்து விளையாட்டு காண்பிப்பதாகக் கூட சொல்வாங்க. அப்ப.. கனவுங்கறது பிறக்கும் போதே ஆரம்பிச்சிடுதா?!

இது தவிர்க்கணும் அப்படின்னு பெரிய பெரிய ஆளுங்களும் ஞானிகளும் சொல்வாங்க. ஏன் அப்படிங்கறத விட இதினால நமக்கு என்னங்கறத கொஞ்சம் பார்க்கலாம்.

யோசிச்சு பாருங்க... நீங்க இந்த கனவுகள்,கற்பனைகள் இல்லாத ஆளு சொல்ல முடியுமா? நான் சொல்ற கனவுங்கரது ஒரு வித கற்பனை... அதாவது பகல் கனவுன்னு சொல்வாங்க.

கண்ணு எதையாவது பார்த்துகிட்டிருக்கும், மனசு எங்கியோ ஓடிகிட்டிருக்கும். இதை பத்தி இன்னும் சில இண்ட்ரஸ்டிங்கான நினைவுகளை பகிரிந்து கொள்ளலாமே....

சின்ன வயசில, எனக்கும் சில நண்பர்களுக்கு நடுவில் சண்டை வந்து பின்னர் பொது நண்பர்களால் இணைக்கப்ப்டும் போது (அதாவது பழம் விடும் போது) அந்த காலங்களில் ஏதோ ஒருவித சந்தோஷம் தனிமையில் அவற்றை நினைத்துப்பார்க்கும் போது,அது சம்பந்தமான கற்பனையில் இருந்த போது இருந்ததாக தூரத்தில் தோன்றுவதுண்டு.

பின்னர், ஸ்கூல், காலேஜ் என்று வரும்போது, ஏதோ அந்த பரிட்சையில் திடீரென்று நமக்கு மட்டும் யாரோ ஒரு ஜீனி வந்து ஹெல்ப் பண்ற மாதிரியும், தானாகவே கை பரிட்சை முழுசையும் எழுதிடற மாதிரியோ அல்லது ஃகொஸ்டின் பேப்பர் நமக்கு மட்டும் கிடைத்துவிடுகிற மாதிரியோ அல்லது எப்படியோ சூப்பரா படிச்சு சூப்பரா மார்க் எடுத்துட மாதிரியோ அடிக்கடி கற்பனை வரும்.... (கடைசில வர்ற மார்க் என்னவோ சுமார்தான் வைங்க..)

இதே கற்பனை காலேஜ் காலத்தில் வேறு விதமான சிறகு எடுத்ததும் கொஞ்சம் லைட்டா (அப்படித்தான் சொல்லணும்) ஞாபகம் வர்து. அது வேற ஒண்ணும் இல்லை... இனக்கவர்ச்சி சமாசாரம்தான். அந்த நேரங்கள்ல என்ன மாதிரி கற்பனை ஓடியிருக்கும்கறது உங்களுக்கே தெரியும்.... தினம் ஒரு மனம்.

அப்புறம், மேற்படிப்பு, வேலை இப்படி எத்தனையோ இருந்தாலும் ஒவ்வொரு கால கட்டத்திலயும் நாம செய்வதற்கு சம்பந்தமாவோ இல்லை சம்பந்தமில்லாமலேயோ எத்தனையோ கற்பனைகள்.... எனக்கு அப்ப்டி இருந்தா, நடந்தாங்கற மாதிரி.

நம்ம ஜனாதிபதி கலாம், சொல்லியிருக்கும், "கனவு காணுங்கள்" என்ற விசயம் இப்பத் தெரியாத ஆட்கள் குறைவு.

இதில ஒரு குழப்பம் இருக்கு. கனவுங்கறது வேற, கற்பனைங்கறது வேற ஆனால் பல நேரங்கள்ல ரெண்டும் ஒண்ணு நினைச்சிப்போம். ஆனா, ரெண்டுக்கும் அப்படி ஒரு தொடர்பு. திருவிளையாடல் 'சேர்ந்தே இருப்பது...' மாதிரி.

உதாரணத்திற்கு, கனவுங்கறது எதையாவது செய்யணும், சாதிக்கணும்ங்கற எண்ணம். அந்த மாதிரி ஆகணும்னு நினைச்சுக்கறது. ஆனா, கற்பனைங்கறது அப்படி ஆனா நான் என்ன பண்ணுவேன், எப்படில்லாம் என்ஜாய் பண்ணுவேன் நினைச்சிக்கறது.

கனவுக்கு பின்னாடி கற்பனை வராம இருக்குமா? அப்ப அந்த கனவு காண்பதன் அர்த்தமே என்ன? இப்படில்லாம் சந்தோஷமா இருக்கும்னு நினைக்கறதினாலதானே இந்த கனவே...

இந்தக் கேள்விகள் எனக்கு எப்பவும் உண்டு... ,

கற்பனையே பண்ணக்கூடாது சொல்றது தப்பு மட்டும் இல்லை.. முடியவும் முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.ஆனால், அதிலயே முழ்கிட்டா பின்னர் எழுந்திருக்கிறது கடினம்கறதினாலதான் கற்பனைகள்ல கூட கொஞ்சம் டிஸ்டென்ஸ் வச்சிகங்க என்று எல்லாரும் சொல்லியிருக்காங்க தோணுது.

posted by சாகரன் @ 8/06/2004 11:15:00 AM   0 comments
Wednesday, August 04, 2004
பிஸினஸ் Vs டெக்னாலஜி
டெக்னாலஜி மக்களிடம் கோ ஆர்டினேட் பண்ணுவதிலும் பிஸினஸிடம் கோ ஆர்டினேட் பண்ணுவதிலும் நிறைய வேற்றுமை இருக்கிறது.

பிஸினஸ் என்று சொல்லப்படும் உபயோகிப்பாளர்கள் சுலபமானவர்கள் என்று தோன்றுகிறது. அவர்களிடமிருந்து requirement gather பண்ணுவதென்பது இன்னும் சுலபமானது. ஏனென்றால் பெரும்பாலான நேரம் அவர்களுக்கு என்ன தேவை என்பதையே அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். ஒரு manual பிராசசை கம்புயூட்டரைஸ் பண்ணப் போகிறோம் என்று சொன்னால் சந்தோஷமாக உதவி செய்வார்கள். தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இப்ப இருக்கற சாப்வேர் என்ன? இந்த மாதிரி விசயங்களை உடன் குடுப்பார்கள்.

ஆனால், அதே நேரத்தில், அடுத்த டீம் டெக்னாலஜில் உள்ளவர்களிடம் பேசிப்பாருங்க வெறுத்துடுவீங்க.

பாதி நேரம், சாரிப்பா நான் பிஸி அப்புறம் வந்து பாருன்னு சொல்வாங்க... இல்லியா நீ அந்த ஆளை புடி, அவர்தான் இதுக்கு சரியான ஆளுன்னு கை காட்டுவாங்க...

இந்த எஸ்கேபிஸம் கொஞ்ச நாள் ஓடும். அதுக்கப்புறம், சரி இதுதான் அப்படின்னு ஒரு படம் காட்டுவாங்க.அதை வச்சி நீங்க ஏதாவது செய்ய ஆரம்பிச்சீங்கன்னு வச்சுகங்க... வொர்க் ஆகாது. அப்புறம் மறுபடி அவங்க கிட்ட போனா, வேற ஒரு படம் வரும். நீ அதைத்தானே கேட்டே இதை கேட்கலியே சொல்வாங்க. நாமதான் மண்டைய பிச்சிக்கணும். அடுத்தவங்க அவங்க வேலையை, திறமையை பிடுங்கிகிட்டு போற மாதிரி ஒரு நினைப்பு.

எதுக்கு இப்ப இதை பேசறேன் கேட்கறீங்களா, நாங்க பண்ண ஆரம்பிச்சிருக்கற ஒரு பிராஜக்ட்ல முன்னாடியே ஒரு பழைய சிஸ்டம் இருக்கு. அந்த சிஸ்டத்தில என்னென்ன பண்ணியிருக்காங்க பார்க்கலாம்னு டிரை பண்ணினேன்.
ம்.. ஹும். நம்ம பசங்க யாரும் மசிஞ்சு குடுக்கலியே. சர்தான் இது வேலைக்காகாதுனு ஸ்ட்ரைட்டா பிஸினஸ் கிட்ட போய் முடிஞ்சளவு எல்லா விசயமும் வாங்கிட்டு வந்துட்டோம்!  ஆனா வேற வழி இல்லை... இனிமேலத்தான் ... டெக்னாலஜி கோ-ஆர்டினேஷன்கற கடி !!
posted by சாகரன் @ 8/04/2004 02:44:00 PM   0 comments
Tuesday, August 03, 2004
இணைய தலைமுறை எழுத்தாளர்கள்
எனக்கு இன்னும் வலைப்பூ எழுதுபவர்களும், இணையத்தில் எழுதும் திறமையாளர்கள் பத்தியும் அதிகம் தெரியாது.நான் புதுசு. இங்க எழுதி வைக்கறது எல்லாமே சும்மா என் மனசுல தோன்றதுதான்.

நேசமுடன் வெங்கடேஷ் பேட்டி பார்த்தேன்... இந்த மாத திசைகள் இதழில். சுட்டி: http://www.thisaigal.com/augest04/spl.html

"This is not a Spam Mail" புகழ் வெங்கடேஷ் பத்தி எனக்கு கோபம் உண்டு. எப்படி எல்லோருடைய மின்னஞ்சலையும் திருடி அவர் மெயில் அனுப்பலாம் அப்படின்னு. அவரோட கருத்துக்களை திணிக்க வைக்கிற முயற்சி. ஆனா, இந்த பேட்டி படிச்ச போது அந்த கோபம் கொஞ்சம் குறைஞ்சுடுச்சு.

முக்கியமா புடிச்சிருந்த ஒரு விசயம்:

வெங்கடேஷ்: நேசமுடன், மின்னஞ்சல், அதற்குள்ளிருந்து ஒரு வடிவமும், எழுதும் முறையும் கூடத் தோன்றலாம். இது நம்பிக்கைதான். தோன்றாமலும் போகலாம். அதுவும் சாத்தியமே. ஆனால், முயற்சித்துப் பார்ப்பதில் எனக்கு எந்த நஷ்டமுமில்லை.

நேசமுடன், இப்போதைக்குப் 16 இதழ்களே வந்திருக்கின்றன... ஒரு முயற்சியில், இது மிக மிக ஆரம்ப பருவம். ரொம்ப தூரம் போகவேண்டும். புதிதாக ஒன்று தென்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பரவாயில்லை... தான் செய்யறதுதான் சரின்னு வாதாடல... ஏதோ டிரை பண்றேன் சொல்றாரு...

9. தமிழ் படைப்புலகில் நடை என்ற ஒரு அம்சம் இப்போது இரண்டாம் பட்சமாகிவிட்டதாகத் தோன்றுகிறது. அலங்காரமாகவோ, நளினமாகவோ கதைகளை விவரிக்கும் போக்குகள் அருகிவருகின்றன. இன்னொருபுறம் இதழாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொல்லின் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலே பயன்படுத்தி வருகிறார்கள். கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட சங்க இலக்கியங்களையோ, செவ்விலக்கியங்களையோ, பாசுரங்களையோ, பாரதியைக்கூட முற்றிலுமாகப் படித்தவர்களாக இல்லை. மொழி அறிவு என்பது எழுதுபவனுக்கு அவசியமில்லை என்ற மனோபாவம் ஏற்பட்டுவிட்டது. இணையதலைமுறை எழுத்தாளர்கள் இந்த நிலையை மாற்றுவார்களா? அல்லது நிலை மேலும் மோசமாகுமா?

ஆர்.வி.: இணைய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகும் ஆரம்ப கட்டத்தில் நாம் இருக்கிறோம். எல்லோரும் நல்ல மொழிஅறிவு படைத்தவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் இணைய எழுத்தின் தரம் உயரும்.

இன்று இணையத்தில் எழுத வந்துள்ளவர்கள் பல்வேறு பின்னணியில் இருந்து வருகிறார்கள். பலர் ஆங்கிலக் கல்வியும், கணினிக் கல்வி அறிவும் மட்டுமே பெற்றவர்கள். ஆனால், இயல்பாகவே தமிழ் மேல் ஆர்வம் மிகுந்திருக்கிறது. இந்த ஆர்வம் தான் முக்கியம். தமிழ் மொழியின் வளங்களை மெல்ல மெல்ல பயின்றுகொண்டு விடுவார்கள்.

உடனடியாக அவர்கள் மேல் ஒரு வேல்யூ ஜட்ஜ்மெண்ட்டை வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது அவர்கள் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிடுவது போன்று ஆகிவிடலாம்.

அட... இந்த பதில் எனக்கு பிடிச்சிருக்கு!
posted by சாகரன் @ 8/03/2004 12:45:00 PM   1 comments
Monday, August 02, 2004
சவுதி சினேகம்
சவுதி அரேபியாவில இருக்கற கம்பெனிகளில் அடிக்கடி பேசப்படற விசயங்கள்ல ஒண்ணு இந்த் எஸ்கேப்.

நான் இங்க வந்து இருக்கற இந்த 6 வருசத்தில எத்தனை பேர் எஸ்கேப் ஆயிருக்காங்க பார்த்தா கணக்கே இல்லை.

வருவாங்க ஒரு வருசம், இரண்டு வருசம் இருப்பாங்க.. நல்லா பழகுவாங்க ரொம்ப குளோசாவும் இருப்பாங்க...திடீர்னு ஒரு வெகேஷன் போய்ட்டு வேற எங்கியாவது கம்பி நீட்டிடுவாங்க... நமக்குதான் கஷ்டமா இருக்கும் என்னடா இவ்வளோ நெருக்கமா இருந்துட்டு நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலியேன்னுட்டு..

என்ன பண்றது. இதுதான் சவுதி சினேகம். ரயில் சினேகம்னு பாலசந்தர் ஒரு சீரியல் எடுத்தாரு. அதே மாதிரி சவுதி அரேபியா சிநேகம சொல்லலாம் போல. ரயில் சினேகம் ஒரு நாள் இரண்டு நாள்னா சவுதி அரேபியா சினேகம் சில வருசம் அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த ஊரில பல வருசம் இருக்கறவங்க கிட்ட கேட்டுப்பாருங்க அவங்களுக்கு பர்மனெண்ட் பிரண்டுனு யாரும் அதிகமா இருக்க மாட்டாங்க.

ஏன் இவ்வளோ பேசறேன் கேக்கறீங்களா.. இப்பகூட நம்ம பிரண்டு ஒருத்தர் ஒரு வாரம் முன்னாடி வெகேஷன் போய்ட்டு இன்னிக்கி மெயில் அட்சிற்காரு "நான் மெட்ராஸ்லேர்ந்து ஆஸ்திரேலியா போறேன்"னு..! அட... வழக்கம்போல சொல்லிட்டு போகலீங்க..!!
posted by சாகரன் @ 8/02/2004 11:57:00 AM   0 comments
Sunday, August 01, 2004
இவர் ஒரு லூசா?
சாதாரணமாக எவர் பற்றியும் கருத்து எழுதும் எண்ணம், வருத்தம், கோபம் இவைகள் எனக்கு வருவதில்லை.ஆனால்.... இவர் குறித்து எரிச்சல் நிச்சயம் வருகிறது. பப்ளிக்காக எழுதிவிட்டு என்னை படிக்காதீர்கள் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார் இந்த ஆசாமி. நியாயமான விமர்சனங்களைக் கூட எதிர்கொள்ள விரும்பாத திமிர். வாய்ப்பிருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால், தான் மிகத் திறமையானவராக நினைத்துக்கொள்ளும் சிறு மதி. எப்பொழுதும் எங்கோ மிதப்பது போல ஒரு தோற்றம் இவர் எழுத்தில். அவ்வப்போது பிரபலமான வெகுஜனங்களுக்கு மிக அறிமுகமான ஏதேனும் எழுத்தாளரை, பிரபலங்களை நக்கலும் கேவலமுமாக சித்தரிப்பது.. இப்படியே செய்து எதிர் வினைகளை ஏற்படுத்தி மகிழும் இவர் இயல்பானவரா இல்லை மன நோயாளியா?

நான் யாரை(சா..Ni) பத்தி சொல்றேன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். மன்னிச்சுக்கங்க என் எரிச்சலை எங்க காட்றது தெரியலை அதான் இங்க எழுதி வைக்கிறேன்.
posted by சாகரன் @ 8/01/2004 12:05:00 PM   3 comments
எப்ப தூங்கறது?
தூக்கத்திற்கும் மனித உடலின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக மருத்துவம் சொல்கிறது!

இது ஒரு மருத்துவக்கட்டுரை அல்ல... மருத்துவ ரீதியாக என்ன பலா பலன்கள் என்று நான் எழுத்ப்போவதில்லை... தெரியவும் தெரியாது..!!

நான் எழுதுவது வேறு விதமானமானது.....

இரவு நெடுநேரம் முழித்திருப்பதும் காலை நேரம் கழித்து சூரியன் சுட்டெரிக்கும் நேரம் விழிப்பதும் இன்று பலருடைய பழக்கம். என்னை உட்பட... இது சரியா என்பதில் எனக்கும் கேள்விகள் உண்டு. தவறு என்று பற்பல நண்பர்களும் நல்லுறவுகளும் புத்தகங்களும் கூறினாலும், தொடருவதில் இடர்பாடு ஏற்படுகிறது என்பது தான் உண்மை.

எந்த ஒரு பழக்கமும் பழக்கமாக மாற 14 நாட்கள் போதும் என்பார்கள்..! அதாவது... 14 நாட்கள் தொடர்ந்து ஒரு பழக்கத்தினை செயல்பாட்டில் கொண்டுவந்தால்... அது நம்மோடு என்றும் இருக்கக்கூடியதாக மாறிவிடுகிறது.... அதே சமயம் தொடர்ந்து இரண்டு அல்ல்து மூன்று நாட்கள் ஒரு பழக்கத்தில் இடைவெளி விட்டால்... அதைத் தொடருவது மறந்துவிடுகிறது..!!

ஒவ்வொருவருக்கும் பழக்கங்களும் மறந்தவைகளும் என்று பட்டியலிட்டால் எத்தனையோ வரும்... அவற்றைப்பற்றி பின்னர் குறிக்கலாம்...

எத்தனையோ முறை... காலை 6 மணிக்கு எழுந்திரிப்பது என்ற பழக்கத்தில் கொண்டுவந்து பின்னர் அது முடியாமல் போனது இப்போது மனதிலாடுகிறது.... ஒவ்வொரு வருடமும் முதல் தேதியில் இந்த விசயத்தை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்று நினைப்பது உண்டு.

இரவு விழிப்பதிலும் சில அட்வாண்டேஜ்கள் இருக்கத்தான் செய்கின்றன... பல நாட்களில் இன்று செய்ய வேண்டும் என்று குறித்து வைத்த சில விசயங்களை செய்ய முடியாமல் போகிறது. அவற்றை முடிப்பதற்கான நேரமாக இரவு தான் கிடைக்கிறது. குழந்தையும் துணையும் உறங்கியபிறகு அமைதியான இரவில் உட்கார்ந்து கொண்டு கணிணியில் வேலை செய்வதோ அல்லது ஏதேனும் படிப்பதற்கோ அந்த நேரம் தான் தோதாக இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்களில் காலையில் எழும் பொழுது ஏண்டா முழிச்சிக்கணும்னு தோன்றுவது தவிர்க்க முடியாததே..!!

சில தினங்களில், இரவு சீக்கிரம் படுத்து காலையில் சீக்கிரம் எழுந்து 'விடிவெள்ளி' பார்த்து எதை செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ அதை செய்ய முடிகிறது... அந்த நாள் உண்மையில் இனிமையாகத் தான் செல்கிறது என்பதை கட்டாயம் புரிந்து கொள்ள முடிகிறது.

கிட்டத்தட்ட குழப்பமாகத்தான் இந்த பதிவை முடிக்கப் போகிறேன். எது சரி என்பதில் எனக்குத் தெளிவில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் அது செல்லட்டும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. இல்லையென்றால் கணிணி துறையினருக்கு இப்படி இருப்பது சகஜம்தான் என்று சப்பை கட்டு கட்ட வேண்டியதுதான்.
posted by சாகரன் @ 8/01/2004 11:11:00 AM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER